farmers punjabஜன. 26, குடியரசு நாளில் டெல்லியில் இரண்டு பேரணிகள் நடப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாக இருக்கும். முப்படை அணி வகுப்போடு நடக்கும் அரசு பேரணியோடு அரசுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடக்கப் போகிறது.

டெல்லி நகரத்துக்குள் 100 கிலோ மீட்டர் தூரம் நுழைவதற்கும் பேரணி நடத்துவதற்கும் விவசாயிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

உலக நாடுகள் இதை வியப்பாகவே பார்க்கும்! இப்படி குடியரசு நாளில் அரசுக்கு எதிராக விவசாயிகள் அணி வகுப்பும்  நடப்பதைப் பார்த்து இந்தியாவில் நடக்கும் ஆட்சி எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யப் போகின்றனர்.

பெரும்பான்மை எண்ணிக்கையை சர்வாதிகாரப் பாதைக்குப் பயன்படுத்தும் மக்கள் விரோத செயல்பாடுகளை உலக நாடுகள் எள்ளி நகையாடும் என்பது பற்றி இந்த ஆட்சிக்கு எந்தக் கவலையும் இல்லை. மதவெறிக் கொள்கைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்ட ஆட்சிகளின் பண்பு இப்படித் தான் இருக்கும்!

விவசாயிகளின் போராட்டம் 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு போராட்டம் நடந்ததாகத் தெரியவில்லை.

போராட்டக் களத்தில் வன்முறை தலைதூக்கி  விடக் கூடாது என்பதில் போராடும் விவசாயிகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கையும் கவனமும் தான் இதற்கு அடிப்படையான காரணம்.

அமைதி வழியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்ட வடிவங்கள் மிகவும் வலிமையானவை. தமிழ்நாட்டில் பெரியார் அத்தகைய போராட்டங்களைத்தான் நடத்திக் காட்டினார். தன்னல மறுப்போடு அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு எதிர் வழக்காடுதல் இல்லாத அமைதி வழியே பெரியாரின் போராட்ட முறையாக இருந்தது.

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சியை சென்னையில் ‘முரளி கபே’ ஓட்டல் முன் பெரியார் இயக்கம் ஓராண்டு தொடர்ந்து நடத்தியது. தோழர்கள் கைதானார்கள். இது ஒரு உதாரணம்.

அதே அணுகுமுறைதான் இப்போது விவசாயிகளின் போராட்டத்திலும் காண முடிகிறது. அதன் காரணமாகத்தான் ‘குடியரசு’ நாளிலேயே விவசாயிகளின் பேரணியையும் அனுமதிக்கும் நிலைக்கு நடுவண் அரசு தள்ளப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது; ‘குடியரசு’ நாளில் நாட்டின் பொருளாதார சீர்கேட்டையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாகி வரும் சூழலில் பா.ஜ.க. ஆட்சி பன்னாட்டு நிறுவனங்களை வளர்த்து விடுவதற்கும் அரசுத் துறைகளை தனியார் மயமாக்குவதற்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டங்களையும் வேளாண் பாதுகாப்பையும் சீர்குலைப் பதற்குமே திட்டங்களைத் தீட்டி வருவதோடு மதச் சார்பின்மை கொள்கையைக் குழி தோண்டி புதைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

2020ஆம் ஆண்டின் உலக பசி பட்டினி அட்டவணையில் உலகிலுள்ள 107 நாடுகளின் மத்தியில் இந்தியா 94ஆவது இடத்துக்கு சரிந்திருக்கிறது. இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மய்யம் (CMIE) 2019 டிசம்பரில் அளித்திருந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 2020 டிசம்பரில் நாட்டில்

1 கோடியே 70 இலட்சம்  பேர் வேலையிலிருந்து வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் வேலையின்மை சதவீதம் 9.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020இல் இந்தியாவில் பணக்காரர்கள் அதாவது பல கோடிக்கு உரிமையுள்ள பில்லியனர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து 90 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

கொரானாவால் சமூகமே முடங்கியபோது, 4234 கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கைகளை ஆராயும்போது, அவைகளின் நிகர இலாபம் 569 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல், இந்த கம்பெனிகள் செப்டம்பர் காலாண்டில் தொழிலாளர்களுக்கு  அளித்து வந்த ஊதியத்தை பாதியாகக் குறைத்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடம், பிரதமருக்கு தனி விமானம் என்று பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப் படுகிறது.

இராணுவத்துக்கு ரூ.3.37 இலட்சம் கோடி செலவிடும் இந்தியா, அதில் கால் பங்கைக்கூட மருத்துவத்துக்கு செலவிடுவதில்லை. நடப்பு நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட் டிருப்பது ரூ.69,000 கோடி (மொத்த ஜி.டி.பி. எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் ஒரு சதவீதம்கூட இல்லை. 0.3 சதவீதம் மட்டுமே).

10,000 பேருக்கு 6 மருத்துவர்கள் என்ற அடிப்படையிலேயே மருத்துவர் விகிதாச்சாரம் உள்ளது. ஒரு இலட்சம் பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்ற வீதத்திலும், 2046 பேருக்கு ஒரு படுக்கை என்ற வீதத்திலுமே மருத்துவ வசதி உள்ளது.

தமிழ்நாடு மட்டும் ஓரளவு முன்னணியில் உள்ளது. இது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை ‘இந்து’ ஏட்டின் வணிகப் பகுதியில் முகம்மது ரியாஸ் என்பவர் எழுதியிருக்கிறார். கட்டுரையின் இறுதிப் பகுதியில் ஒரு முக்கிய கருத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்:

“இந்தியா என்ற நாடு சமத்துவமின்மையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினப் பாகுபாடு என்ற சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகள் சரி செய்யப்படாமல் எந்த வளர்ச்சியும் இங்கு சாத்தியமில்லை. அந்த வகையில் இந்தியா பொருளாதாரக் கட்டமைப்பை மட்டுமல்ல, சமூகக் கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கிறது” என்று முடிக்கிறார்.

இந்த நிலையில்தான் குடியரசு தின கொண்டாட்ட இராணுவ அணி வகுப்பும் அதே நாளில் அரசுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் அணி வகுப்பும் நடக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It