பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க்காண்பர்
அலகுடை நீழலவர்                           - 1034 குறள்

பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே        - புறநாநூறு - 35

தமிழ் இலக்கியங்கள் போற்றும் உழவர்க்குடி எது? இப்படி ஒரு ஆய்வு தேவையா என ஒவ்வொருவருக்கும் கேள்வி எழக்கூடும். தொல்குடிகள் பற்றிய ஆய்வும் கூட, தொல்லியல் ஆய்வின் ஒரு பகுதிதான். தமிழ் சமூகத்தின் மேலாண்மைச் சாதிகள் உண்மையான ஆய்வுகளை மூடிமறைக்கும் வேலைகளையே இதுகாறும் செய்து வந்துள்ளது.

எழுத்து வரலாறு தெலுங்கர், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அன்றைய சமஸ்கிருத பண்டிதர்களுக்கும், சைவ வேளாளர்களுக்கும்  உழுகுடி மள்ளர் வரலாற்றை எழுத வேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை.

பிரித்தானிய அதிகாரிகள் ஏதாவது எழுதியிருந்தால் அதனைப் பதிப்பிப்கும் அளவுக்கு கல்வி பெற்றோர் எவரும் உழவுக்குடியில் அக்காலத்தில் இல்லை. நாம் இக்கட்டுரையில் உழவர் - மள்ளர் - பள்ளர் - என்றப் பெயர்களை ஆய்வு செய்வதால் தொல்காப்பியம் மருதம் பற்றியும், திணைப் பெயர்கள் பற்றிச் சொல்வதையும் பார்ப்போம்.

தொல்காப்பிய நிலபகுப்பும் காத்தல் தலைவனும் :-

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவறை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே .

இந்த ஐவகை நிலத்தின் காத்தல் தலைவர்கள் உண்மையில் பண்டையக் கால குடித்தலைவராக இருக்கவே வாய்ப்பு உள்ளது. மருதநிலத் தலைவன் "வேந்தன்" என்ற இந்திரன் பிற்காலத்தில் ஆரியக் கடவுள் இந்திரனாக அறியப்படுகிறான். ஆனால் உழவர்க்குடி மள்ளர்கள் இந்திரனை பண்டு தொட்டு கொண்டாடி வருவதும், மள்ளர்கள் தங்களை " தேவேந்திரகுலத்தான் " என அழைத்துக் கொள்வதும் மருதநிலத்துடன் அம்மக்களுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்.

தொல்காப்பியம் :- பெயரியல் 11 > 164 இல் " நிலப் பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே " என்கிறது.

இதன் பொருள் :- திணை சார்ந்தே, குடிப்பெயர் குழுவின் பெயர் அமையும் என்பதாகும். திணைப் பகுப்பு முறையில் மக்களை வகைப்படுத்தும் பொருளதிகாரம் பாடல் 23,

முல்லைத் திணை :-

"ஆயர் வேட்டுவர் ஆடு உத்திணைப் பெயர்

ஆவயின் உருவம் கிழவரும் உண்டு."

பொருள் :- குடிகள் ஆயர் வேட்டுவர் தலைவன் கிழவர் என்பதாகும்.

பொருளதிகாரம் பாடல் 24 ஏனை நிலத்தவர் பற்றியது. இப்பாடல், 23ம் பாடலின் அடியொற்றியே உரையாசிரியர்களால் பொருள் தரப்பட்டுள்ளது.

ஏனை நிலத்தவர் :-

குறிஞ்சி :- குறவன் குறத்தி
பாலை : - எயினர் , எயிற்றி

மருதம் :- உழவன், உழத்தி
நெய்தல் :- நுளையர் , நுளைச்சியர்

மற்றத்திணை மக்களை மேலேக் கண்டோம் அம்மக்களின் சமூக படித்தரம் பண்பாடுகளுடன் வைத்து ஒப்பு நோக்கினால் மற்றத்திணை மக்களுக்கு இணையானவர் பள்ளர் / மள்ளரே. தொல்காப்பிய உரைக் ஆசிரியர்கள் "ஏனோர்" என்பதை உழவர் எனத் தொழிற்பெயரால் குறித்த செயலே பிற்காலத்திலும் அண்மைக் காலத்திலும் " உழவு மரபை "தங்களுடையதாக மாற்ற முயலும் சூழலை உருவாக்கி விட்டது.

தொல்காப்பிய சார்பு பற்றி பலரும் எழுதி உள்ளனர். மறைமலை அடிகள் "சாதி வேற்றுமையும் போலிச்சை வரும் " என்ற. நூலில் வேளாளச் சாதியை மனுவின் படி நிலை வரிசையில் அதாவது " சூத்திரன்" நிலையில் வைத்து உரை எழுதி விட்டதாகச் சாடுகிறார். அதாவது அந்தனர் – அரசர் – வணிகர் – வேளாளர் என்று இளம்பூரணாரும், நச்சினார்க்கினியரும் உரை எழுதி விட்டதாக குறிப்பிடுவார். நாமும் இந்த மனுவாத அடிப்படைகளை ஏற்பதில்லை.

ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி - யும் தொல்காப்பிய சாதிய வரிசை

'மனு'வை ஒத்து அமைந்துள்ளதாக கூறுகிறார். தொல்காப்பியத்தில் இடைச் செருகல் இருப்பதாக கூறும் அறிஞர்களும் உள்ளனர் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பக்தி இலக்கியக் காலத்தில்தான் வெள்ளாளர், வேளாளர் என்றப் பெயர்கள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்திற்குள் வேளாளர், வைசிகன் என்ற சொற்கள் எவ்வாறு வந்து சேர்ந்தன. மேலும் தமிழ் மரபில் அரசன் - தலைவன் எப்போதும் இறை நிலையில் வைத்துப் போற்றப்பட்டு வந்துள்ளான். ஆனால் உரையாசிரியர்கள் "அந்தனர்" ஐ முதன்மைப்படுத்தி உள்ளனர். இது தமிழ் மரபுக்கு மாறானது.

இனி, உழுகுடி ஆய்வைத் தொடர்வோம். சங்க இலக்கியங்களில பறையன் , புலையன், பாணன், என தமிழ்க் குடிகளின் பெயர்கள் உள்ளது. ஆனால் அதனை மறைத்த வரலாறு பார்ப்பன - வேளாளத் தமிழ் அறிஞர்களுக்கு உண்டு. ஆம் அவர்கள் தொகுத்த சென்னைப் பல்கலைக் கழக பேரகராதியில் "பறைய னொழித்தத் தமிழன்" என்று எழுதி வைத்தார்கள்.

இப்படித் தொல்குடிகளை மறைக்க தமிழ் அறிஞர்களுக்கு எதுக்காரணமாக இருந்ததோ, அதுவே உழவுக்குடி மள்ளர் / பள்ளரை மறைக்கவும் காரணியாக இருக்கக்கூடும். அதே நேரம் சுவடிகள், கல்வெட்டுகள் பழந்தமிழில் இருந்தன,

உழுக்குடிகளுக்கோ கல்வி மறுக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்களில் மள்ளர் என்ற பெயர் நிறைய இடங்களில் காணப்படுகிறது. இப்பெயரை மருத நில உழுகுடியான பள்ளருடன் பொருத்தி ஆராயாமல் , தமிழறிஞர்கள் வெறுமனே _ மள்ளர் - வீரர் என எழுதிக் கடந்து விட்டனர்.

சில எடுத்துக் காட்டுக்களை மனதில் இறுத்தி உழுகுடி மரபினைத் தேடுவோம். சங்காலப் பாணர்கள் எங்கே சென்றனர், அவர்களின் கையில் இருந்த யாழ் தமிழ் சமூகத்தின் மேட்டுக்குடியின் இசைக்கருவியாக இன்று மாறியது எப்படி !? குறிஞ்சி நில மகன் "குறவன்" ஏன் இன்று தாழ்வுற்றார் சில இடங்களில் மலம் அள்ளும் தோட்டித் தொழிலைச் செய்கின்றனரே! இந்த நிலைமைகளை நெஞ்சில் இறுத்தி ஆய்வுகளைத் தொடர்வோம். எனவே காலத்தால் முந்திய சங்க சங்க இலக்கியங்கள், மற்ற வழக்காறுகள் தொன் மங்களிலில் இருந்தும் உழவர்க்குடி வரலாற்றைத் தேடுவோம். 

"உழவு" என்பதன் வேர் உழக்கு - உழக்கி என்பதாகும் இதோ:

" கடி அரணம் பாயா நின் கை புனைவேழம்
தொடியா மணலின் உழக்கி (கலி.202)

"கயிறு இடு கதச் சேப் போல் மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் " அகநாநூறு 36."

தொல்காப்பியமும், நிகண்டுகளும் மருத நில மக்களை பின்வருமாறு வகைப்படுத்தி உள்ளன:-

தொல்காப்பியம் - உழவர், உழத்தி

திவாகர நிகண்டு - அருந்திரல் வீரர்க் பெருந் தானைத்தாரர்க்கும் வீரர் எனப் பெயர்.

பிங்கல நிகண்டு - செருமலைவீரர்க்கும், திண்ணியர்க்கும், மருத நில மாக்களுக்கும் மள்ள ரெனப் பெயர்
நாம தீப நிகண்டு - மருத நிலமாக்களாக களமர் மள்ளர், உழவர், பள்ளி, பள்ளர், மள்ளி, கடைஞர்.

பண்டைய கால மருத நிலங்கள், ஆற்றங்கரையோரம் அமைந்திருந்தது. சதுப்பு நிலங்கள் காயல்கள் அருகிலே தான் நெற்பயிர் விளைவிக்கப்பட்டது. வயலில் நீர் எப்போதும் நிறைந்திருந்தது. நிலத்தில் இருந்து நீரை வடித்து விடுவதே அவர்களுக்குப் பெரும் பாடாய் இருந்திருக்க வேண்டும். மருத நில வயலில் முதலை, நீர்நாய், ஆமை, மீன்கள், பாம்பு, பறப்பனவும் ஊர்வனவும் இயல்பாக வசித்தன.

நீர் நிறைந்த சதுப்பு நில வயல் எருமைகளைக் கொண்டு " உழக்கப்பட்டது" சங்க பாடல்கள் எருமைகளை காரான், பகடு, போத்து எனக் குறிப்பிடுகின்றன. எப்போதும் நீர் நிறைந்த வயலை முல்லை நில எருதுகள் கொண்டு "உழக்க" முடியாது. இன்றும் சேரநாட்டிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் எருமைகளைக் கொண்டுதான் வயல் "உழக்கப்படுகிறது" .

பழங்கால மருத நிலத்தில் வயலில் நிறைந்துள்ள அடி வண்டலை நீருடன் கலக்கி சேறாக்க வேண்டும், இச்செயல்பாடு தான் " உழக்குதல்" எனப்பட்டது. மருதத் திணை சங்கப் பாடல்களில் "எருமை" யே சிறப்பித்துக் பாடப்பட்டுள்ளது. எருமைகளைக் கொண்டு வயல் "உழக்கி" சேறாக்கி (மள்ளல்) பண்படுத்தியவர் மள்ளர்.

மள்ளரே! சேற்றுழவர் தற்காலத்தில் உழவுத் தொழில் செய்வோரை குறிக்கும் "வெள்ளாளர்" பிற்கால வழக்கு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அதற்கு ஆதாரமாக திருக்குறளைக் கூறலாம். திருக்குறளில் உழவு என்ற சொல் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது.

மருத நிலத்தில் தொடக்க காலத்தில்எருமைகள் கொண்டு வயல் 'உழக்கப்பட்டதற்கு' ஆதாரமானப் பாடல்கள்:-

நற்றிணை :- 60 , 80 , 120 .
ஐங்குறுநூறு:- 93 , 94, 95 .
அகநாநூறு :- 46 , 56 , 146 .

மள்ளர் எருமைகளைக் கொண்டு வயலை உழக்கியதற்கு ஆதாரமானப் பாடல்கள்:-

நற்றிணை :- 260,340 ,280 .
குறுந்தொகை : - 90 , 31 , 34,
அகநாநூறு:- 276 , 316, 248 .

ஒரு மருத நிலப் பாடல் இதோ:-

அகநானூறு :- 46.

"சேற்று நிலை முனைஇய செங்கண் காராண் 
 ஊர் மடி கங்குலில் நோற்றானைப் பரிந்து
 கூர்முள்வேலி கோட்டின் நீக்கி
 நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய "

பொருள்:- எருமை - காராண் கயிறை அறுத்துக் கொண்டு விளைந்த நெல் வயலில் ஓடும் போது மீன்கள் அஞ்சி ஓடுவது குறித்தப் பாடல் , இம்மாதிரி மருத நிலக் காட்சிகளில் எருமை, நீர் வளம், சேற்றுழவர் - மள்ளர் காட்சிகளைக் காண முடியும். பாடலின் கருப்பொருள் பற்றிய ஆய்வை நாம் செய்யவில்லை, மாறாக காட்சி மாந்தரின் பெயர் - வினைகளையே ஆய்வு செய்கிறோம். கீழே எருமை, சேற்றுழவர் - மள்ளர் வாழ் நிலைக் காட்சிப் பாடல்கள்: -

நற்றிணை 290 , சில வரிகள்.

" வயல்வெள் ஆம்பல் சூடு தரு புதுபூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சல்
ஒய் நடை முது பகடு ஆரும் ஊரன், "

இப்பாடலில் முது பகடுஎருமையாகும்.

அகநாநூறு 316 :-

" ஈர்ந்தண் எருமைச் சுவல் படு முதுபோத்து
தூங்குசேற்று அள்ளல் துஞ்சி பொழுதுபட
பைந் நிண வராஅல் குறைப் பெயர்ந்து
குரூஉக் கொடிப் பகன்றைசூடி , மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புதுதரும் ஊரன்

பொருள்:- மூதூர் = மதுரையில் போர் செய்யும் மள்ளரைப் போன்ற எருமை சேற்றில் இருந்து எழுந்து வருகிறது. இப்பாடலின் வழியாக மள்ளர் போர் வீரராகவும் இருந்தார் என்பதை அறிய முடியும். 

அகநானூறுப் பாடல் :- 346

"கள்ஆர் உவகை கலிமகிழ் உழவர்
காஞ்சி அம் குறுத்தறி குத்தி , தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன்பல மிடைத்து,
பெருஞ்செய் நெல்லின் பாகவல் போத்தி ,
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கி பைப்பயக்
பார்வல் இருக்கும் பயம்கேள் ஊர!"

பொருள்:- கள்ஆர் உவகை கலிமகிழ் உழவர் - பள்ளர் / மள்ளரை குறிக்கும்.

கள்ளுண்ட பள்ளர் காஞ்சி மரத்துண்டுகளை வயலில் குறுக்காக அடுக்கி வயலில் நீரைத் தேக்வார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட தேங்கிய நீரில் இருந்து வழிந்தோடும் தண்ணீரில் துள்ளி வரும் மீனைக் கொத்தித் தின்ன கொக்கு மெல்ல மெல்ல அருகே வரும் .

நற்றிணைப் பாடல் 260 :-,

"கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முனைகிய
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது "

இப்பாடல் வரிகளின் பொருள் : தடி கொண்ட மள்ளரின் நடையை ஒத்த எருமை என்பதாகும்.

"நற்றிணைப் பாடல் 60 மருத நிலப் பள்ளரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டும், அதனை முழுமையாக தருகிறேன்.

"மலை கண்டன்ன நிலைபுணர் நிவப்பின்

பெருநெற் பல்கூட்டு எருமை உழவ !
கண்படை பெறாஅது, தண்புலர் விடியல் ,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு
கவர் படுகையை கழும மாந்தி ,
நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்தநின்

நடுநெரொடு சேறி ஆயின், அவண
சாயும் நெய்தலும் ஓம்புமதி, எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே .

பொருள் :- பெரிய நெற்கூடுகளையும், எருமைகளையும் உடைய உழவனே! தூங்காமல் விழித்திருந்து விடியலில் கரிய கண்களையுடைய வரால் மீன் துண்டுகளுடன் சோறு விரும்பி உண்பவன், நீ சோற்று மயக்கம் அடைந்தாலும் உன் உழத்தியோடு சேற்றிலே நாற்று நட செல்வாய் அங்கு சேற்றிலே வளமான கோரரைகள் நிறைந்திருக்கும். அக்கோரைப் புற்களை அகற்காதே அது உன் உழத்திக்கு ஆடையும், வளையலும் செய்யவும் உதவிடக் கூடும். ஏற்கனவே எருமை உழவர் மள்ளர் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன். இதோ மள்ளர் வாழ்வியல் காட்டும் மற்றொரு நற்றிணைப் பாடல் 280: -

"கொக்கினுக்கு ஒழித்த தீம் பழம், கொக்கின்
       கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பற்
       தூங்கு நீர்க்குட்டத்துத் துடுமென வீழும்
       தன் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
       புலவாய்! என்றிதீ தோழி! புலேவன்
       பழனயாமை பாசறைப் புறத்துக்
       கழனி காவலர் சுரிநந்து உடைக்கும்
       தொன்று முதிர்வேளிர் குன்றூர் அன்ன"

பொருள்:- மாமரத்தினின்றும், ஆழமான வயல் நீரில் துடும்மென மாம்பழம் விழும், அத்தைய ஊரும் - வயலும் உடையவன் தலைவன். வயலில் உள்ள ஆமையின் பசுமையான ஒட்டின் மீது, வயலைக் காவல் செய்யும் உழவர் வளைந்த சுழியை உடைய நத்தையை உடைத்து உண்ணுகின்ற பழைமையான குன்றூர். நத்தையை உடைத்து உண்ணும்தொன்று முதிர் வேளிர் பள்ளர் / மள்ளர் தான்.

இனி, மள்ளர் என்ற சொல் பற்றிப் பார்ப்போம். தொல்காப்பியம் 8-7 அதிகாரம் மல்லல் வளனே என்கிறது. அதாவது மல்லல் என்ற சொல் வளத்தைக் குறிக்கும். மள்ளர் விளைவித்துக் குவித்தனர். மல்லலை அள்ளிக் கொடுத்தவர் வள்ளல். வள்ளல் ஒரு "மருத திணைச் சொல் ". பள்ளரும் / மள்ளரும் ஒருவரே
என்பதற்கு தமிழகத்தில் பக்தி இலக்கிய காலத்தில் எழுதப்பட்ட பாடல்களிலும், பிற்காலத்தில் எழுதப்பட்ட பள்ளு நூல்களிலும், ஆதாரங்கள் உண்டு.

01 - திருச்செங்கோடு பள்ளுப் பாடல், விருதப் பாடல் 143

               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்றும் தாழ்ச்சி
                     ஒன்றும் இல்லாமல் எங்கும்
                     மள்ளர்கள் செல்வமாக
                     வாழ்ந்தவர் இருக்கும் போது
                     கள்ளம் எதார்த்தம் எல்லாம்
                     கண்டதிகாரம் செய்யும்
                     வெள்ளை மெய் உடையார் பண்ணை
                     பண்ணை விசாரிப்பாளன் தோன்றினாரே!

02 முக்கூடல் பள்ளு செய்யுள் 12 "

மள்ளர் குலத்தில் வரினும் இரு

பள்ளியர்க் கணவன் எனின்

பாவனை வேறாகாதோ

கள்ளப்புள் வாய் கிழிந்த காரழகர்
கொள்ளத் தமது குடித்தரங்கள் கூறினாரே !


03 கம்ப இராமாயணம் - ஆற்றுப்படலம் - செய்யுள் - 18 :-

நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
காத்த கால் மள்ளர் வெள்ளக்
கலிப்பறை கறங்க கை போய்ச்
சேர்ந்த நீர்த் திவலை பொன்னும்
முத்தமே திரையின் வீசி
நீத்தம் ஆன்று , அலைய ஆகி
நிமிர்ந்து பார்கிழிய நீண்டு
கொத்த கால் ஒன்றின் ஒன்று
குலம் எனப் பிரிந்தது அன்றே "

பொருள்:- உழவு மள்ளர் நீர்வரவைக்கண்டு ஆரவாரப் பறை முழங்கி மகிழ்வை வெளிப்படுத்தும் காட்சி .நிலத்தைக் கிழித்துக் கொண்டுப் பாயும் நீர்ப் பல வாய்க்கால்களை உண்டு பண்ணுவது போல மள்ளர் குடி பல கிளைகளை உடையது. மற்றொரு கம்ப இராமயணப் பாடல்.

" நெடும் படைவாள் நாஞ்சில் உழு
நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின் ,
கடும்பகடு படி கிடந்த கரும் பரம்பின்,
இன மள்ளர் பரந்த கையின் ,
படுங்கமல மலர் நாறு முடிகிடந்த ,

பொருள் :- இராமாயணப் போர்க்காட்சியை மள்ளர் / பள்ளர் மருத நிலச்சேற்றில் பணி செய்வதைப் போன்று உளதெனக் கூறுகிறார். கம்பர் இவ்வாறு மருத நில உழவரை மள்ளர் எனக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். பிற்காலத்தில் தமிழ் அறிஞர்கள் மள்ளர் தான் உழவர் என ஏன் எழுதவில்லை என்றுக் கேள்வி எழுகிறது. 

பெரிய புராணம் :-

                     சேக்கிழார் - உழுதசால் மிகவூறித்
                     தெறிந்த சேறு இழுது செய்யுனுள்
                     இந்திரத் தெய்வம் தொழுது நடுவார்,

பொருள் : - இந்திரத் தெய்வம் தொழுது நாடுவார் எனக் குறிப்பது ,மள்ளர் நாற்று நடுதலையே ! தமிழ் நாட்டில் தொன்மையான இந்திர / வருணன் வழி பாடு செய்து வருபவர் பள்ளர்களே. அடுத்த இந்த சிலப்பதிகார ஆதாரம் போலித் தமிழறிஞர் களையும் , வரலாற்று ஆசிரியர்களையும் அம்பலப்படுத்தி விடும். தமிழர்களின் ஒப்பற்றக் காப்பியமான சிலப்பதிகாரம் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதன் கதைக் களம் ஐவகைத் திணைகளிலும் நடப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


1 - குறிஞ்சி :- வஞ்சிக் காண்டம் சேரநாடு - குன்றக் குரவை - குறவர்
 தொல்குடியின் சிறப்பு இயல்புகள.
2 - முல்லை :- ஆய்ச்சியர் குரவையில் இடையர் / ஆயர் சிறப்புகள் .
3 - பாலை :- வேட்டுவ வரியில் எயினர், வேடர் சிறப்புகள்.
4 - மருதம் :- நாடுகாண் காதை - உழவர் , உழத்தியர் - ஏர்மங்கலப் பாடல் - வரிகள் 125- 135.
5- நெய்தல் :- புகார்ப் பட்டினம் இந்திர விழா அரசன் முதல் ஆண்டி வரையும் - கானல் வரிப்பாடலில் பரதவர்களையும் சிறப்பித்து பாடி உள்ளார். இவ்வாறு ஐந்து திணைகளையும், மக்களையும் தொல்காப்பிய இலக்கணத்துடன் இளங்கோவடிகள் கதை மாந்தர்களாகப் பாடி உள்ளார். மற்ற நான்கு திணை மாந்தர்களை பாடியது போலவே மருத நில உழவர் பள்ளர்ப்பற்றியும் பாடி உள்ளார்.

நாடுகாண் காதை வரிகள் 125- 135 மள்ளர் / உழவர் ஏர்மங்கலப் பாடல் பாடி பொன்னேர்பூட்டி உழவுத்தொழில் துவக்கும் காட்சிகளைவிவரித்து உள்ளார்.

 " கருங்கை வினைஞரும் களமருங்கூடி

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்

கடிமலர் களைந்து முடி நாறு அழுத்தித்

தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்த்து

சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
       செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழங்கொடி அறுகையும் குவளையும் கலந்து

விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார் உடைப்பனர் போல பழிச்சினர் கைதொழ

ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்"

பொருள் :- வலிமையான கைகளையுடைய வினைஞரும் களமருங் ஆர்ப்பரித்து எருமைகளை ஒட்டும் ஒலியும் உழத்தியர் வயலில் பூத்துக் கிடக்கின்ற களைகளை அகற்றி நாற்றுகளை அழுத்தி நடுகின்றனர் அப்பெண்களின் மார்பு , தோள்களில் சேறுபடிகின்றது. அக்கோலத்துடன் கள்ளை அருந்தி இருப்பதனால் ஏற்படும் மயக்கத்துடன் கண்கள் சிவந்து சிற்றின்ப மொழிப் பாடலை மள்ளர் பெண்கள் /கடைசியர் களிப்போடு பாடுகின்றனர்.

இப்பாடலதான் "பள்ளுப் பாடல்கள்" தோற்றங் கொள்வதற்கு மூலமாக இருந்தது என்றுக் கூறும் அறிஞர்களும் உளர்.செந்நெல் கதிரோடு அருகம்புல்லையும், குவளை மலரையும் தொடுத்த மாலையை மேழியில் சூட்டி, கை கூப்பித் தொழுது நிலத்தைப் பிளப்ப வர் போல் " பொன்னேர் பூட்டி நிற்போர் / உழவர் மள்ளர் ! பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டொலியும் " இப்பாடலில் களமர் / கடைசியர் என குறிப்பிடப்படுவது பள்ளர் / மள்ளர்களையே.

இந்த பொன்னேர் பூட்டும் மரபு இன்றைய நாளிலும் மள்ளர்களிடமே உள்ளது. சித்திரை மாதம் ஈசுவரன் கோயில்களில் பள்ளர்கள்தான் " பொன்னேர் பூட்டி உழும் " நிகழ்வை நடத்துகிறார்கள். கோவை - பேருர் பட்டி ஈசுவரன் கோயில் பொன்னேர் பூட்டும் விழா சிறப்பான எடுத்துக் காட்டாகும்.
மள்ளர் குறித்த. மற்றொரு சிலப்பதிகாரப்பாடல் வரிகள்.

" வயல் உழை நின்று வடக்கு வாயிலுள்
அயராணி மந்தை ஆடிய கடையமும், "

பொருள் :- வாணன் நகர் வடக்கு வாயிலில் இந்திராணி - கடைசியர் / பள்ளி -வடிவெடுத்து ஆடிய கடையக்கூத்து. 

வாசகர்கள் கவனிக்வும் இந்திராணி உழத்தி வடிவங் கொண்டு மள்ளர்ப் பெண் வடிவங் கொண்டு தான் ஆடுகிறார். வேளாளப் பெண் வடிவங் கொள்ளவில்லை.! மேலும், வஞ்சிக் காண்டம் நீர்ப் படைக் காதையில் வடவரை வென்று வஞ்சிக்குத் திரும்பிய சேரன் செங்குட்டுவனை வாழ்த்தி மருத நில உழவரும், முல்லை நில ஆயரும் ஆற்றுப்படுத்தி வரவேற்கும் காட்சியில், இளங்கோ வடிகள் மள்ளரைத் " தொடுப்பு ஏர் உழவர் " என்றுக் குறிப்பிடுவதை அறிஞர்கள் கவனிக்க வேண்டும்.  

பக்தி இலக்கியங்களில் மள்ளர் / பள்ளர் :-

தமிழகக் கோயில்களில் உழவுக்குடி பள்ளர்க்கு "மரியாதை" வழங்கப்படுகிறது. பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பேரூர் பட்டீசுவரன் கோயில் நெல்லையப்பர் ஆலயம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், குறிப்பிடத்தக்கன. இன்னும் கோயில்கள் இருக்கக் கூடும். இந்த கோயில் மரியாதை என்பது தமிழகத்தில் கோயில் - நிலம் – பள்ளர் உழவராக பிரிக்க முடியாத வாழ்வியலைக் கொண்டிருந்தனர் என்பதன் அடையாளமாகும்.

பேரூர் பட்டி ஈசுவரன் கோயில்:-

கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட பேரூர்ப் புராணம், 19 வது படலத்தில் ஈசுவரனும் - உமையம்மையும், பள்ளன் - பள்ளி, அதாவது உழவன் உழத்தி வேடமிட்டு பக்தர்களுக்கு காட்சி அருளியதாக கூறப்பட்டுள்ளது. அப்பாடல்கள்:- 28, 29, 25, அது "போதிய அம்பலத்து ஆடுவார் பள்ளனாய்ப் புகுந்து" என்ற பாடல் வரிகளுடன் முடிகிறது. இப்பாடல் கூறும் உண்மை உழவும் – பள்ளரும் பிரிக்க முடியாதவர்கள்.

பழனி மலை முருகன் கோயில் ஆவணம்:-

பழனி மலை முருகன் கோயில் தேவேந்திரப் பள்ளர் பட்டயம் 69 வகையான " நெல் " வகைகளை குறிப்பிடுகிறது . பள்ளர் தான் தொன்மையான உழவு மள்ளர் அதனால் தான் நெல் வகைகளை தேவேந்திரப் பள்ளர் செப்பேட்டில் பதிவு செய்துள்ளனர். 

தொல்காப்பியம் - உழவர் , உழத்தி ,
திவாகர நிகண்டு - மள்ளர் ,
பிங்கல நிகண்டு - மள்ளர் ,
நாம தீப நிகண்டு - மள்ளர் , உழவர் ,
பள்ளர் , களமர், கடைஞர்,

சங்க இலக்கியங்கள்:- களமர் , மள்ளர் ,கடைசியர் , கள்ஆர் உழவர் , எருமை உழவர், தொன்று முதிர் வேளிர்.

சிலப்பதிகாரம் :- கருங்கைவினைஞர், களமர், சின்மொழிக் கடைசியர், கடையர்.

பள்ளு பாடல்கள்:-  பள்ளர், உழவு மள்ளர்.

கம்ப இராமாயணம் :- மள்ளர்.
பேரூர்ப்புராணம் :- பள்ளன்.
பெரிய புராணம் :-  இந்திரத்தெய்வம் தொழுது நடு வார் (பள்ளர்)

கட்டுரையில் விளக்கப்பட்ட பாடல்களில் பள்ளர்கள் எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர் என மேலேக் காணும் பட்டியல் விளக்கும்.

இந்த ஆதாரங்களைக் கொண்டும் இன்றைய நாளிலும் உழுவுத் தொழிலை மட்டுமே குலத்தொழிலாக செய்து வரும் பள்ளர்கள் மட்டுமே! தமிழ் சமூகத்தின் தொல்குடி உழவர் என்ற முடிவுக்கு வரலாம்.

துணை நூல் பட்டியல் : -

திருக்குறள்
கம்ப இராமாயணம் .
குறுந்தொகை
நற்றிணை
சிலப்பதிகாரம்
அகநாநூறு
திருச்செங்கோட்டு பள்ளு
பேரூர் வரலாறு
பழனி வரலாற்று ஆவணம்
யாழ்ப்பாண அகராதி
திருவேட்டை நல்லூர் -
ஐனார் பள்ளு,
முக்கூடல் பள்ளு
பெரிய புராணம் .
கொங்கு நாடு , வீ.மாணிக்கம்
கோயில் - நிலம் - சாதி - பொ.வேல்சாமி. 
பழந் தமிழக வரலாறு - கணியன் பாலன்.
 சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் - மறை மலை அடிகள்.

- கிருட்டிணன்.ஆ 

Pin It