ஓர் எழுத்துத் தான் ஒலிக்கக் கூடிய கால அளவில் (மாத்திரை) நீண்டு ஒலித்தலே அளபெடையாகும். அளபெடையானது இரண்டு வகைப்படும். உயிர் எழுத்துக்கள் தன் கால அளவில் நீண்டு ஒலித்தல் உயிரளபெடையாகும். ஒற்று எழுத்துக்கள் தன் கால அளவில் நீண்டு ஒலித்தல் ஒற்றளபெடையாகும். உயிரளபெடை குறித்த செய்திகளை ஆய்ந்து நோக்குவதே இப்பகுதியாக அமைந்துள்ளது.

உயிரளபெடை:

உயிரளபெடை என்பது செய்யுளில் இசை குறையும் இடத்தில், நெடில் தன் ஓசையில் நீண்டு ஒலிப்பதாகும், “இசைகெடின் மொழி இடை, கடை நிலை நெடில் அளபெழும்” (நன். எ:36) என்று நன்னூலார் கூறும் கருத்து இதுவேயாகும்.

சொல்லில் உயிரளபெடை நிகழ்தலை அறிவதற்கு அவற்றின் பின்னர் அவ்வவ் நெடிலுக்கு இனமாகிய குறிலெழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வரும். “அவற்றவற்றினக் குறில் குறியே” (நன். எ:36) என்ப­திலிருந்து இது புலனாகின்றது.

தொல்காப்பியர் (எ:5) “மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே” எனக் குறிப்பிடுகின்றார். இதனால் மூன்று மாத்திரை அளவு ஒலித்தல் ஓரெழுத்தின் இயல்பு அன்று என்பது அவரது கருத்தாக அமைகின்றது. ஆயினும் அடுத்த நூற்பாவில்,

“நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்”                                                                                            (தொல்:எ:6)

எனத் தெரிவிக்கின்றார். அளபெடையினைக் கவனத்தில் கொண்டே இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் நன்னூலார் “மூன்று உயிரளபு” (நன். எ:44) என உயிரளபெடையானது மூன்று மாத்திரை ஒலிக்கக்கூடிய எழுத்தாகக் கூட்டிக் காட்டுகின்றார்.

இக்கருத்திற்கும் மேலாகத் திருக்குறளில் “சேறாஅஅய்” (திருக்:1200) என உயிரளபெடை நான்கு மாத்திரை அளவாய் ஒலிப்பதையும் காண முடிகின்றது.

தொல்காப்பியர், நன்னூலார், திருவள்ளுவர் இவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் வழி தமிழில் எந்த ஒரு எழுத்தும் தனித்து மூன்று மாத்திரை பெறுவதில்லை என்பதுவும் ஆனால் நெடில் தன் மாத்திரையிலிருந்து அளபெடுக்குமாயின் தன் இனக்குறிலுடன் சேர்ந்தே மூன்று மாத்திரையாகவோ, நான்கு மாத்திரையாகவோ ஒலிக்கக் கூடும் என்பதுவும் தெளிவாகின்றது.

நன்னூலார் (நன். எ:36) உயிரளபெடை சொல்லின் முதல், இடை, கடை எனும் மூவிடங்களிலும் நெடில் ஏழும் அளபெடுக்கும் என்கின்றார். ஆதலால் உயிரளபெடையின் விரியினை இருபத்தொன்று எனத் தெரிவிக்கின்றார். இவ்விடத்தில் நன்னூலுக்கு உரை எழுதும் பெரும்பான்மையான உரையாசிரியர்கள் (விருத்தியுரை, காண்டியுரை, மயிலைநாதருரை) கருத்து மாறுபடுகின்றனர்.

உரையாசிரியர்கள் நெட்டெழுத்தேழும் மூவிடத்தும் அளபெடுக்குமாயின் உயிரளபெடை இருபத்தொன்று எனும் கருத்திலிருந்து மாறுபட்டு, அதற்கான காரணத்தைக் குறிப்பிடுகையில் ஔகாரம் மொழி முதலில் மட்டுமே இடம்பெறும். சொல்லின் இடை, கடை ஆகிய இரு இடங்களிலும் ஔகாரம் அளபெடுக்காது. ஆதலின் இவ்விரு இடங்களையும் நிறைவு செய்யும் வகையில் உரையாசிரியர்கள் இன்னிசையளபெடையையும், சொல்லிசையளபெடையையும் சேர்க்கின்றனர்.

ஔகாரம் மொழி இடை, கடை, ஆகிய இடங்களில் வருவதில்லை என்பதனை வலியுறுத்தி அவ்விடங்களில் இன்னிசையளபெடையினையும், சொல்லிசையளபெடையினையும் சேர்த்ததுடன் நன்னூலார் இன்னிசையையும், சொல்லிசையையும் இணைத்தே அளபெடையின் விரியினை இருபத்தொன்றாகக் குறிப்பிட்டுள்ளார் எனப் பெறவைக்கின்றனர்.

உரையாசிரியர்களின் கருத்தினை ஏற்று பாடநூல்களில் உயிரளபெடை மூவகைப்படும் எனவும், அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை எனப் பதிப்பித்து வெளியிடுகின்றனர்.

தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் உயிரளபெடை மூவகைப்படும் என்று எங்கும் பேசவில்லை.

இக்கட்டுரையில் உரையாசிரியர்களின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு உயிரளபெடையானது செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூவகையாகப் பகுத்தாராயப்படுகின்றது.

செய்யுளிசையளபெடை:

செய்யுளிசையளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையும் இடத்து அவ்வோசையை நிறைவு செய்யும் வகையில் நெட்டெழுத்துத் தன் மாத்திரை­யிலிருந்து அளபெடுத்து அவ்வோசையை நிறைவு செய்வதாகும். ஆதலின் இவ்வளபெடையானது இசைநிறையளபெடை எனவும் அசைநிறையளபெடை எனவும் அழைக்கப் பெறுகின்றது.

செய்யுளிசையளபெடை செய்யுளில் பயின்று வருவதை அடிப்படையாகக் கொண்டு அதனை இருநிலைகளில் பகுத்துக் காணலாம்.

வெண்பாவில் செப்பலோசையும், இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையுமே இடம் பெறுதல் வேண்டும். வெண்பாவில் இவை தவிர்த்த வேறு ஓசைகளோ, தளைகளோ இடம் பெறுவதில்லை.

“தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

 வாஅய்மை வேண்ட வரும்” (குறள்:364)

இவ்வெண்பாப் பாடலில் தூய்மை, வாய்மை என்ற சொற்கள் அளபெடுக்கா நிலையில் மாமுன் நேராக, நேரொன்றாசிரியத் தளையும், அகவலோசையும் பெறுகின்றன. ஆனால் அளபெடுக்கும் நிலையில் தூஉய்மை, வாஅய்மை என்றாகி காய் முன் நேர் பெற்று வெண்சீர்வெண்டளையும், செப்பலோசையும் பெற்று, ஓசையும் தளையும் நிறைவு செய்யப் பெறுகின்றன.

இவ்வாறு இரண்டு சீர்கள் இயையும் பொழுது அச்செய்யுட்குரிய ஓசையும் தளையும் குறைவுபடும் நிலையில் அதனைச் சரிசெய்ய அளபெடுத்து வருதல் ஒரு நிலையாகும்(ஓசையை/இசையைச் சரி செய்வதினால் இசைநிறையளபெடை எனப் பெயர் பெறுகிறது).

“தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

 பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்:55)

இவ்வெண்பாப்பாடலில் இரண்டாம்சீர் ஓரசைச் சீராக அமைய, அவ்விடத்திலுள்ள (தொழாள் - தொழாஅள்) நெடில் அளபெடுத்து ஈரசைச் சீராக மாறி அசையைச் சரிசெய்கின்றது. இவ்வாறு வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச் சீர் அல்லாத சீர்களில் ஓரசையே சீராக அமைந்து அசை கெடும் நிலையில் அக்குறைவினைப் போக்க அளபெடுத்து நிறைவு செய்தல் மற்றொரு நிலையாகும்(அசையைச் சரி செய்வதினால் அசைநிறையளபெடை எனப் பெயர் பெறுகிறது).

இன்னிசையளபெடை:

இன்னிசையளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிமையான ஓசை தருதல் பொருட்டு குறில் நெடிலாக விகாரமடைந்து, பின்னர் நெடில் தன் மாத்திரையிலிருந்து அளபெடுத்தலேயாகும்.

குறில் எந்நிலையிலும் அளபெடையாக வராது என்பதனைத் தெளிவுபடுத்தும் வகையில் தொல்காப்பியரும், நன்னூலாரும் “நெடில் அளபெழும்” என்றே குறிப்பிடுகின்றனர். எனவே குறில் நெடிலாக விகாரம் அடைந்து பின்னரே அளபெடுக்கும் என்பது பெறப்படுகின்றது.

(எ-டு) கெடுப்பதூஉம் - குறள்:15 கொடுப்பதூஉம் - குறள்:1005

துன்புறூஉம் - குறள்:94

உடைப்பதூஉம் - குறள்:1079

இனிததூஉம் - குறள்:230

இழத்தொறூஉம் - குறள்:940

இன்னிசையளபெடை இடம்பெறும் இடங்களைக் கூர்ந்து நோக்கின் “ஊ” எனும் நெடில் மட்டுமே அளபெடுக்கும் நிலையினைக் காணமுடிகின்றது. மேலும் இன்னிசையளபெடை அமையும் சீரானது மூவசைச் சீராகவே எல்லா இடங்களிலும் அமைந்துள்ளது. (ஈரிசையாக இடம்பெறின் அஃது செய்யுளிசையளபெடையாகும்).

ஆதலின் இன்னிசையளபெடை என்பது ஓசை இனிமை ஒன்றிற்காக மட்டுமே உகரம் விகாரமடைந்து ஊகாரமாகி அளபெடுத்து மூவசைச் சீராக செய்யுளில் இடம் பெறும் என்பது தெளிவாகின்றது.

சொல்லிசையளபெடை:

சொல்லிசையளபெடை என்பது சொல் தனக்குள்ளே மாறுபாடு அடைய அளபெடுத்தலாகும். அதாவது பெயர்ச் சொல் வினையெச்சமாக மாற்றமடைவதற்காக நெடில் அளபெடுத்தலாகும். இவ்வாறு அளபெடுக்கும் நிலையில் சொல்லானது வடிவ மாற்றம், பொருள் மாற்றம், தன்மைமாற்றம் எனும் மூவகை மாறுபாட்டினை அடைகின்றது.

“குடிதழீஇக் கோலோச்சும்” - குறள்:1009 இங்கு தழுவி எனும் சொல்லானது தழீஇ என மாற்றமடையும் நிலையில் வரிவடிவ மாற்றமடைந்துள்ளதைக் காண முடிகின்றது.

“வரனசைஇ இன்னும் உளேன்” - குறள்:1199 நசை எனும் சொல் விருப்பம் என்று பொருளைத் தரும். ஆயினும் நசைஇ என அளபெடுக்கும் நிலையில் விரும்பி என்ற வினையெச்சப் பொருள் மாற்றம் அடைகின்றது.

“உரனசைஇ உள்ளம்” - குறள்:1199 நசை எனும் சொல் பெயர்ச்சொல் எனும் தன்மை­யிலிருந்து மறைந்து வினையெச்சத் தன்மையாக மாற்றமடைகின்றது.

இச்சொல்லிசையளபெடையாக இலக்கியங்களில் ஈ,ஐ எனும் இரண்டு நெடில்கள் மட்டுமே அளபெடுத்து மூவசைச் சீராகவே வருதலை அறியமுடிகின்றது. (இ என முடிவடையும் மூவசைச் சீர் சொல்லிசையளபெடையாகும் -- ஈரசைச் சீராகின் அது செய்யுளிசையளபெடையாகும்.)

முடிவுரை:

நன்னூலார் இலக்கணம் இயற்றும்போது வடமொழியினையும் கருத்தில் கொண்டுள்ளார் என்பதற்கு நமக்குப் பதவியல் பகுதி சான்றாகின்றது. தொல்காப்பியர் “யகரம் ஆவோடல்லது மொழி முதலாகா” (தொல். எ:65) எனத் தெரிவிக்கின்றார். ஆனால் நன்னூலார் “அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ யம் முதல்” (நன். எ:49) என வட மொழி மரபினை ஏற்று இவ் ஆறு எழுத்துக்களுடனும் சேர்வதைச் சான்றுகாட்டுகின்றார். (யவனர், யானை, யுகம், யூகி, யோகி, யௌவனம்).

ஔகாரத்தின் வருகை பற்றிக் குறிப்பிடும் நன்னூலார் “ஔவும் முதலற்றாகும்” (நன். எ:40) எனக் கூறுகின்றார். அவரே சொல்லின் இறுதி நிலை பற்றித் தெரிவிக்கும்போது “உயிரெழுத்துப் பன்னிரண்டும் மொழியீறாகும்” (நன். எ:52) எனக் குறிப்பிடுகின்றார். சொல்லின் இறுதியாக ஔகாரத்தைக் குறிப்பிடுவதும் வட மொழி மரபினைக் கருத்தில் கொண்டதேயாகும்.

எனினும் “ஔவும் முதலாற்றாகும்” என்ற நன்னூலார் கருத்தினை வலியுறுத்தி ஔகாரத்தின் இடை, இறுதிநிலைகளுக்குப் பதிலாக உரையாசிரியர்கள் இன்னிசையளபெடை­யினையும், சொல்லிசையளபெடையினையும் இணைத்து உயிரளபெடை இருபத்தொன்று என நிலைநாட்டுவது உரையாசிரியர்கள் தம் நுண்ணாய்வின் வெளிப்பாடாகும்.

துணைநூற் பட்டியல்:

  1. நன்னூல் உரை - விருத்தியுரை, கண்டிகை உரை, மயிலைநாதர் உரை, முனைவர் பெ.சுயம்பு உரை, முனைவர் அழகேசன் உரை
  2. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  3. திருக்குறள் - பரிமேலழகர் உரை

- முனைவர் செ.கஸ்தூரி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி.

Pin It