இந்தியா ஒரு ஜனநாயக நாடு, மக்களாட்சி நடைபெறும் நாடு எனும் கருத்துக்கள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து வருகிறது சர்வதேச அரங்கில்.

சமீபத்தில் சர்வதேச பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான மூடிஸ், நாட்டின் ஜி.டி.பி-ஐ அழுத்தி சொல்லாமல் மத சகிப்பின்மை நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விடும் என சொல்லியிருப்பது நிச்சயமாக கவலைப்படவேண்டிய ஒரு விஷயம்.

modi rss 620பாசிசம் என்பது வெறியாக மாற்றப்பட்ட தேசியவாதம் அல்ல. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினரை முற்றிலும் அழிக்க நடத்தப்படும் அதிகார குவியல் உள்ள ஒர் அரசியல் முறை. பாசிச முறைக்கு ஒர் அருமையான எடுத்துக்காட்டு ஹிட்லரின் ஆட்சியமைப்பு. அவரது பாசிச ஆட்சிமுறை ஐந்து கட்டங்களாய் பகுக்கலாம்.

ஒன்று, முதற்கட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை.

இரண்டு பாசிச கொள்கை உள்ள இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படல்.

மூன்று, பாசிச அரசியல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றல்.

நான்கு, நாடு முழுவதும் ஒரு குழுவினரை தேசியவாதம், இனவாதம், மதவாதம் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக திரட்டல்.

ஐந்து, சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுதல், அரசின் வன்முறை, சிறுபான்மையினரை வெளியேற்றல்.

ஹிட்லர் கண்ட வழிமுறைகள் இவை தான். ஏனெனில் முதலில் ஹிட்லர், சில வன்முறைகளை யூதர்கள் மீது நாடு முழுவதும் தெரியும்படி அரங்கேற்றினார். இதன் மூலம் யூதர்களுக்கு எதிரானவர்கள் ஒரு அணியில் திரள வாய்ப்பாக அமைந்தது. மேலும் தங்கள் கலாசாரத்தை யூதர்கள் மீது மறைமுகமாக திணிக்க முயற்சித்தார். மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் யூதர்களுக்கு எதிரான அணுகுமுறையை வழக்கமான செயல் ஆக்கியது.

இரண்டாவது ஹிட்லர், தேசியவாத தூபத்தை போட்டு, யூதர்களை ஜெர்மானிய தேசியவாதத்தில் இருந்து பிரித்தார். இது யூதர்களுக்கும் ஜெர்மனிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போன்ற நிலையை ஏற்படுத்தியது. பின்பு தேசியவாதத்தில் ஒன்றுபட்ட மக்களையும், யூதர்களுக்கு எதிராக திரண்ட மக்கள் ஆதரவில் ஒரு அரசியல் இயக்கம் ஆரம்பித்தார்.

மூன்றாவது யூதர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட மக்களையும், யூதர்களைப் புறக்கணித்து தூண்டப்பட்ட ஜெர்மானிய தேசியவாதத்தின் கீழ் ஒன்றுபட்ட மக்கள் ஆதரவின் பேரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஹிட்லர் யூதர்களை அனைத்து விதத்திலும் ஜெர்மானியர்களுக்கு எதிரி எனக் காட்டி அரசியல் நடத்தினார். பின் அரசின் முக்கிய பொறுப்புக்களை யூதர்களுக்கு எதிரானவர்களை பணியமர்த்தினார். இதனால் அரசு இயந்திரத்தில் யூதர்களுக்கு மதிப்பும், நீதியும் கிடைக்காமல் ஒடுக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள், மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவது அல்லது அவற்றின் அதிகாரங்களைக் குறைப்பது. அனைத்து அதிகாரங்களையும் ஒர் மைய அமைப்பிடம் குவிப்பது.

நான்காவது, கிடைத்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி யூதர்களின் கலாச்சாரத்தை முற்றிலும் அழிப்பது. மேலும் யூதர்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள சிறு இயக்கங்களை ஒன்றிணைப்பது. மேலும் மாணவர், தொழிலாளர், நீதித்துறை போன்ற சமூகத்தின் முக்கிய கூட்டமைப்புகளில் யூதர்களுக்கு எதிரானவற்றை நுழைப்பது.

ஐந்தாவது, இறுதியில் தேசியவாதம் இனவாதமாக மாற்றப்பட்டு முடிவில் வன்முறையாக மாற்றம் கொடுக்கப்படுகிறது. முடிவில் யூதர்களை நாட்டை விட்டு அவர்களாகவே வெளியேற செய்வது அல்லது வெளியேற்றுவது. யூதர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்வது. யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகப்படுத்துவது. இறுதில் சிறுபான்மையினர் அற்ற ஓர் முழுமையான ஜெர்மானியர் மட்டும் உரிமையோடு வாழும் தேசத்தை கட்டமைப்பது.

பாசிசம் தன்னை மக்களாட்சியின் பின் மறைத்துக் கொள்ளும் இயல்பு உடையது எனவே மக்களால் எளிதில் பாசிச அரசியல் முறையை கண்டறிய முடியாது. ஒரு விதத்தில் ஹிட்லர் கடுமையான தேசிய பக்தியுடன், தேசிய இன உணர்வை மக்கள் மனதில் வித்திட்டு ஜெர்மனி வளர வழிவகுத்தார் எனினும் எல்லாரும் மக்களே, சம உரிமை அனைவருக்கும் என்பதை மறந்து விட்டதால் பல லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் கடுமையான தேசியப் பற்று, கடுமையான இனப்பற்றாக மாறி வன்முறையைக் கட்டவிழ்த்தது என்பதே ஹிட்லரின் பாசிச ஆட்சி முறை.

ஆனால் இந்தியாவின் பன்முக தன்மைக்கு தீங்கான செயல்கள் பல அரங்கேற்றப்படுகின்றன. தனியாக ஒரு நிகழ்வைக் காணும்போது அது கலவரமாகவோ, குழு விரோதமாக தோன்றலாம். ஆனால் பல நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்தோம் எனில் எவ்வாறு அதில் பாசிசம் மறைந்து வாழ்ந்துவருவதை கண்டறியலாம். ஹிட்லரின் பாசிசம் தேசியம் கலந்த இனவாதமாக இருந்தது. இனங்கள் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் அடையாளமாக இருந்தது. அதனால் அந்தப் பாசிசம் அந்த இனங்கள் வாழும் பகுதிக்கு மட்டும் பொருந்துவதாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பாசிசம்? இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் பாசிசம் தேசியம் கலந்த மதவாதம். மதங்களின் பரவல் அனைத்து நாடுகளில் காணப்படுகிறது என்பதால் அது உலக அமைதிக்கு ஆபத்தானதாக அமையும். ஏனெனில் இந்தியாவில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்படும்போது, அந்த ஒரு பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் நாட்டில் இந்தியாவின் பெரும்பான்மையினர் அங்கு சிறுபான்மையினராக இருப்பதால் ஒடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் எவ்வாறு பாசிசம் கட்டமைக்கபட்டு வருகிறது என்ற வழிமுறைக்கு வருவோம்.

முதலில் ஹிட்லர் ஆட்சியல் நடந்தது போல இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் எனும் அமைப்பு மறைமுகமாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை செலுத்தியது. விளைவாக பாபர் மசுதி இடிப்பு, குஜராத் கலவரம், மும்பை கலவரம், ஒரிசாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் போன்றவை பல உயிர்களைப் பலிவாங்கியது. மேலும் இந்துக் கலாச்சாரமான பசு வழிபாடு, யோகா, புனித கங்கை வழிபாடு போன்றவற்றை மறைமுகமாக மக்களின் மீது திணிக்க முயற்சி மேற்கொண்டது. மாட்டிறைச்சி உண்டதற்காக கொலை, யோகாவுக்கு அமைச்சரகம், கங்கையை தூய்மைபடுத்த திட்டம், சவுதியில் கோவில் கட்ட நிலம் வாங்குதல் போன்றவை. இதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களை ஓர் அணியில் திரள வாய்ப்பளித்தது.

இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு தீவிர தேச பக்த இயக்கமாக காட்டிக்கொண்டு மக்களிடையே இஸ்லாமியர்களை பாகிஸ்தான் தேசத்தின் பிரஜைகள் என பிரச்சாரம் மேற்கொண்டு இஸ்லாமியர்கள் என்றாலே இந்தியாவிற்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள் என்ற பார்வையை மக்களிடையே கொண்டு சேர்த்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சங்க பரிவாரங்களில் ஒன்றான சிவசேனாவும், விஷ்வ ஹிந்து பரிஷித் போன்றவை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இங்குள்ள இஸ்லாமியர்கள் செயல்படுகின்றனர் என்று கூறி அவர்களின் மீது வன்முறையில் ஈடுபடுவது. கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் அத்துமீறல், கருப்பு மை தெளிப்பு மாதிரியான சம்பவங்கள்.

பின்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியவாதத்திற்குப் பின் ஒன்றிணைந்தவர்களையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஆதரவின் கீழ் ஒர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. (பாரதிய ஜனதா கட்சி). மூன்றாவதாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்களின் ஆதரவும், இஸ்லாமியர்களை புறக்கணித்து தூண்டப்பட்ட தேசியவாதத்தின் கீழ் ஒன்றிணைந்தவர்களின் ஆதரவையும் முழுமையாகப் பெற்று அரசியல் அதிகாரத்தை தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் தலைமையில் கைப்பற்றியது. அந்த தலைமையின் மூலம் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானியர்கள் என இந்திய தேசியவாதத்தில் இருந்து பிரித்து ஆட்சி நடத்துவது. மேலும் அரசின் முக்கிய பொறுப்புக்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களை நியமிப்பது. அதாவது தற்போது உள்ள மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் சில முக்கிய பொறுப்புகளில் இந்துத்துவாவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள், மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது அல்லது அவற்றின் அதிகாரங்களைக் குறைப்பது. அனைத்து அதிகாரங்களையும் ஒர் மைய அமைப்பிடம் குவிப்பது. தற்போது ரிசர்வ் வங்கி கவர்னரின் தன்னாட்சி அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. இது அதிகார குறைப்பு, பறிப்புக்கான ஒரு முன்னோட்டம் ஆகும்.

நான்காவது, கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் கலாசாரங்களை அழித்து இந்து கலாச்சாரத்தை பின்பற்ற வற்புறுத்துவது. தாத்ரி சம்பவம், இந்து மதத்துக்கு எதிராக எழுதுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, எழுத்தாளர் கல்பூர்கி படுகொலை போன்றவை இதை உறுதிப்படுத்தும் செயல்கள் ஆகும். இந்தியா இப்போது பாசிசத்தின் நான்காவது கட்டத்தில் உள்ளது.

ஐந்தாவது, இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது அல்லது இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசு தலைமையிலான வன்முறை என நடத்தி இந்தியாவை முழு இந்து தேசமாக, ஆர்.எஸ்.எஸ் விரும்பிய ஹிந்துராஷ்டிரமாக மாற்றுவதாக இருக்கும். இந்தியா தனது மக்கள் தொகையில் இலட்சக்கணக்கானவர்களை இழக்கும்.

இந்தியாவின் மதச்சார்பின்மை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அரசால் கேள்விக்குறி ஆகுவதை அனைவரும் அறிவீர். ஆனால் அதன் பின் மறைந்து இருக்கும் இந்து தேசம் என்ற ஆபத்தை அறியமாட்டார்கள் பலர்! ஆனால் நிச்சயம் பாசிச இந்தியா உருவாவதைத் தடுக்க முடியும் நம்மால்.

அதற்கான வழிமுறைகள் சில:

செய்தித்தாள்கள் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். சர்ச்சைக்குரிய செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

கல்வி முறையில் மாற்றம். இந்திய வரலாற்றை மதத்தின் வழியே கற்பிப்பதை தவிர்க்க மதச்சார்பின்மையை வளர்க்கும் வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய பாடத் திட்டமாக அமைய வேண்டும்.

வன்முறை எதற்கும் தீர்வு அல்ல என்பதையும் ஒற்றுமையே பலம் என்பதையும் கருவாகக் கொண்ட நல்வழிப்படுத்தும் கட்டாய வகுப்புக்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

காவல்துறை நடுநிலைமையோடு செயல்படவேண்டும்.

அனைத்து சமூகமும் வாழும் வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். ஒரு சமூகத்தினர் மட்டும் பெரும்பான்மையாக ஓர் இடத்தில் வாழ்வதைத் தடுக்க வேண்டும்.

மதக்கலப்புத் திருமணங்கள்

உயர்வகுப்பினர் என்ற முறை சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

முடிவு செய்வீர் ஹிட்லர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா?

- நேதாஜிதாசன்

Pin It