டெல்லிச் சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அருந்ததி ராய் பிபிசிக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் மற்ற காரணங்கள் நியாயமானதாகப் பட்டாலும், இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு என்று கூறியது மிகவும் கண்டனத்திற்குரியது.

டெல்லியில் நடந்தது என்ன? அந்த மாணவி நடு இரவிலோ, பின்னிரவிலோ வெளியில் சுற்றவில்லை. ஒன்பது மணிக்குத்தான் அதுவும் பேருந்து நிறுத்தத்தில்தான் நின்றிருக்கிறாள். தன்னந்தனியாக அல்ல; தன் நண்பருடன்தான் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். அப்பொழுதுதான் இது நிகழ்ந்துள்ளது. அடுத்த முக்கியமான விசயம், இச்சம்பவம் நாட்டின் தலைநகரத்தில் நடந்துள்ளது. போலீஸ் ஸ்டேசன் கூட இல்லாத, சாதிக்கொடுமைகளும், கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்து கொண்டிருக்கும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் நடந்தது அல்ல இச்சம்பவம்.

எங்க அப்பன் பாட்டன் காலத்திலிருந்தே வாழ்கிறோம்; பூரணகும்ப மரியாதையோடு சாதியைக் கட்டி காப்பாற்றி வருகிறோம் என்ற மனோபாவம் பெருநகரங்களில் குறைந்துள்ளது. படிப்பு, பணி நிமித்தமாக பல இன, சாதி, மதத்தினரும் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அடிப்படையில் வாழும் சூழலுள்ள நகரம் அது. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஐடி தொழில்நுட்பம் சார்ந்த பணி, படிப்பு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது.

மாறிவரும் உலகமயமாக்கலின் காரணமாக பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் அதிகரித்திருக்கும் சூழலில், நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டு பெண்களை முன்பைவிட அதிகமாக வெளியில் அனுப்புகிறார்கள். இந்தச் சூழலில் உருவாகும் கலாச்சாரம் வேறுவிதமானது.

ஆணும், பெண்ணும் சந்திப்பதும், உரையாடுவதும் உடலுறவுக்கு மட்டுந்தான் என்கிற நிலப்பிரபுத்துவ, சாதியக் கலாச்சாரத்திற்கு எதிரான, பெருநகர படித்த நடுத்தர வர்க்கத்தின் ஆண், பெண் நட்புக் கலாச்சாரம்தான் பாலியல் வன்முறையை ஒரு சமூக அநீதியாகப் பார்க்க வைக்கிறது.

தன் சாதிப் பெருமை தன் பெண்ணின் உடம்புக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டும், ஆண்மைதான் வீரம் என்று நினைத்துக் கொண்டும், வேறு சாதிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கினால் கைகொட்டிச் சிரிப்பதும், தன் சாதிப் பெண்ணுக்கு அந்த நிலை ஏற்பட்டால் மூடி மறைத்து பாதுகாப்பதுமாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது.

இப்படிப் பட்ட சூழலில் குறைந்த பட்ச பொருளாதார சுதந்திரத்தோடு பெண் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான, படிப்பு, வேலை இவற்றிற்காக வெளி உலகில் அச்சமின்றி பிரவேசிக்க எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற உரிமைக்காக வெடித்த போராட்டம் இது.

இந்த போராட்டத்தைப் பார்த்து ஒரு காங்கிரஸ்காரர், 'பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றுவதற்கு அல்ல சுதந்திரம்' என்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் இருந்து கொண்டே, அமெரிக்கா அரசுக்கு இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்க பெண்கள் வேண்டுமாம். ஆனால் இரவில் பெண்கள் வெளியில் வருவது ஊர் சுற்றுவதற்காம்.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணும் தன்னுடைய அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என்று யாரையும் 9 மணிக்குக் கூட வெளியில் அனுப்ப முடியாதா என்றும், துணையாகச் சென்ற ஒரு ஆணாகிய தனக்கும் பாதுகாப்பில்லையா என்பதை உணர்ந்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிசம் தெரியாது, வற‌ட்டுத்தனமான வர்க்கப் பார்வை கிடையாது, ஜம்மு, மணிப்பூரில் ராணுவம் செய்ததுகூட அவர்களுக்குத் தெரியாது இருக்கலாம். கைரலாஞ்சியின் சாதி வன்முறைக் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியாதுகூட இருக்கலாம். ஏனெனில் அது அவர்களது பிரச்சினை இல்லை. எல்லா மனிதர்களும், எல்லா வர்க்கமும் தனக்கு நேர்ந்த நேரடி பாதிப்புகள், இழப்புகளிலிருந்துதான் கற்றுக் கொள்வதும், போராடுவதும். அப்படி எழுந்த போராட்டம்தான் டெல்லி போராட்டம்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் தனக்கு போராட ஆட்களில்லாததால், அருந்ததி ராய் போன்ற மனித உரிமைக் காவலர்கள் அவர்களுக்காகப் போராட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி. தன் சக மாணவிக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக, கல்லூரி மாணவர்களின் தன்னிச்சையான எழுச்சிதான் இந்தப் போராட்டத்தின் தொடக்கம். ராணுவமும் போலீசும் செய்கிற பாலியல் வல்லுறவு மட்டுமே மனித உரிமை மீறல் என்பதை எப்படி அருந்ததிராய் போன்றவர்கள் பார்க்கிறார்களோ அதுபோலத்தான் நடுத்தர வர்க்கத்துக்கு இவைதான் பிரதானமாகத் தெரியும்.

களை எடுக்கிற பெண்களும் ஆதிவாசிகளும் தங்கள் குடும்பத்திற்குள்ளே கூட ஆண்களின் வல்லுறவுக்கு ஆளாகி எதிர்க்கவே திராணியின்றி இருக்கையில் குறைந்த பட்ச சுதந்திரம் உள்ள நடுத்தரவர்க்கம்தான் இது போன்ற பிரச்சினைகளுக்குப் போராட முடியும், இதுதான் சமூக யதார்த்தம்.

இது போன்ற நடுத்தர வர்க்கத்தின் போர்க்குரலால் உருவானதுதான் டாக்டர் முத்துலெட்சுமி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு முறை, ராஜாராம் மோகன் ராய் கொண்டு வந்த சதி ஒழிப்பு, குழந்தைத் திருமணம் ஒழிப்பு, இன்று பயன்படும் வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பெண்கள் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை ஒழிப்புச் சட்டம் என்று கூறலாம். இந்த சட்டங்கள் எல்லாம் கிராமத்தில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கப் பெண்களுக்கும் முழுமையாகப் பயன்படுகிறதா என்ன? அவ்வாறில்லை என்பதற்காக அவற்றை தூக்கி எறிந்து விட முடியுமா? போலீசும், ராணுவமும் நாள்தோறும் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பது எந்த நம்பிக்கையில்? இந்த அரசாங்கத்தை, அதன் சட்டத்தையும் மதித்துதானே? இந்த அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கிறவர்களால், இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நடுத்தரவர்க்கத்தின், பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை எப்படி இப்படி பொறுப்பற்று விமர்சனம் செய்ய முடிகிறது?

நேரடியாக ஆதிவாசிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும், விளிம்பு நிலையினருக்கும் பயன்படும் சட்டங்களும், போராட்டங்களும் தான் மதிப்பு மிக்கவை. அவற்றினால் மட்டுமே வராலாறு முழுக்க, சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்வது மார்க்சியத்தை, கம்யூனிசத்தை வறட்டு சூத்திரமாகப் பார்ப்பதன் விளைவு.

சமூக மாற்றத்தை விரும்பும் கருப்பு, சிவப்பு கட்சிக்காரர்கள், தேசிய உணர்வாளர்கள், அறிவுஜீவிகள், ஜனநாயக சக்திகள் என அனைவருமே சாதி, வர்க்கம் ஒழிந்து சமத்துவ சமூகம் வரும்போது பாலியல் வன்முறையற்ற சமூகம் உருவாகும் என நம்பிக்கொண்டு பாலியல் வன்முறை என்கிற கேடுகெட்ட செய்லை பொருட்படுத்தாமல் இருந்து விட்டனர். ஆபாசப் படங்கள், விளம்பரங்கள், பெண்ணை ஒரு பாலியல் ஜந்துவைப் போல் சித்தரிக்கும் திரைப்படங்கள், மத சாஸ்திரங்கள், இலக்கியங்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பது பெண்கள் அமைப்புகளின் பொறுப்பு, அதில் தங்களுக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று இருந்து விட்டனர். (மணிப்பூரில் பெண்கள் மீதான ராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு எதிராக அங்கும் பெண்கள் மடடும்தான் போராடினர்.) இந்த வரலாற்றுத் தவறின் மோசமான விளைவுதான் இன்று அக்கொடூரச் செயலுக்கு மரண தண்டனை கேட்டுப் போராடும் இந்தக் கொந்தளிப்பு.

நாம் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றே கவனிக்காமலோ ஒதுக்கித் தள்ளிய பிரச்சினை, ஒரு தரப்பினரால், தன்னிச்சையாக, உணர்வுப் பூர்வமான போராட்டமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்கிற சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு அதன் ஆரம்ப அடிச்சுவடியான அரசு, அதிகார வர்க்கம், போலீஸ், ராணுவம் செய்யும் வன்முறைகள் மட்டுமே வன்முறை என்றும், சாதியாலும் வர்க்கத்தாலும் ஏழ்மையில் உள்ளவர்களின் பிரச்சினை வெளியுலகிற்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும், சாதாரணமானவர்களுக்குக் கூடத் தெரிந்த இந்த விசயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல் கூறிக் கொண்டு திரிவதும் கம்யூனிசத் தத்துவத்தை மிக மொன்னையாகப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான்.

இது வரையில் இந்தியாவில் கோவில் திருவிழாவைத் தவிர, வேறு எதற்கும் இவ்வளவு பெருந்திரளான கூட்டத்தை ஒரு பொதுவிசயத்திற்கான போராட்டத்திற்குப் பார்த்த‌தில்லை. தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கிற அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தவிர, இந்த போராட்டம் தான், ஆண்களோடு பெண்களும் சரிசமமாக கலந்து கொண்ட போராட்டம். பெண்கள் மீதான வன்முறையை தன் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினையாக புரிந்து கொண்டு ஆண்களும், பெண்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட தன்னெழுச்சியான போராட்டம். பல முறை தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகையை வீசியும் எல்லாவற்றையும் தாண்டி பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதி, இனம், மதம், மொழி, பால் கடந்து ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைக்காக, பெண்ணுரிமைக்காக ஆண்களும் பெண்களும் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

இநதப் போராட்டத்திற்குக் காரணமான, டெல்லியில் நடந்த அந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவற்றை நாம் ஆராய வேண்டும் என்பதில் மறுப்பேதுமில்லை. இவ்வளவு வன்மமாக ஒரு பெண்ணை தாக்குவதற்குப் பின் உள்ள அரசியல், கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, உளவியல் கூறுகள் ஆராயப்பட வேண்டியவை. ஆனால், (அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா அநீதிகளுக்கும் எதிராக, ஒரு நாள் பொறுக்கமுடியாத கோபம் பிறிட்டுக் கிளம்பும் என்கிற புரிதல் இன்றி) இது வரை நடக்காத வன்முறையா இந்தப் பெண்ணுக்கு நடந்து விட்டது என்றும், இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூப்பாடு, கொந்தளிப்பு என்றும், இந்த போராட்டமே அவசியமற்றது என்றும் கூறுவது சமூக நலனுக்கு விரோதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Comments

23 comments

23
Guest
//சமூக நலனுக்கு விரோதமானது// என அருந்ததி ராய் கூற வில்லை.
இராமியா
அருந்ததிராய் என்ன கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் டெல்லியில் நடந்த போராட்டம் ஒருதலைப்பட்சமானதே. பாலியல் தாக்குதலுக்கு உட்பட்ட அந்தப் பெண் தன் வாக்கு மூலத்தில் அவளைத் தாக்கியவர்கள் இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆடவனுடன் தனியாக என்ன வேலை என்று கேட்டதாகக் கூறியுள்ளார். இதிலிருந்து அந்தக் கயவர்கள் மதத் தீவிரவாதிகள் என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் போராட்டத்தில் அதே மதத் தீவிரவாதிகளும் ஈடுபட்டு இருந்தனர். எந்த ஒரு குற்றத்தையும் அதன் உள்நோக்கத்தை (மொடிவெ) வைத்தே ஆராய வேண்டும். ஆனால் இந்தப் போராட்டக்காரர்கள் இந்தப் பாலியல் தாக்குலுக்கான உள்நோக்கத்ததைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி இருக்கையில் இந்தப் போராட்டக்காரர்களை அருந்ததிராய் விமர்சித்ததற்கு ஏன் கோபப்பட வேண்டும்?
viyasan
//இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆடவனுடன் தனியாக என்ன வேலை என்று கேட்டதாகக் கூறியுள்ளார். இதிலிருந்து அந்தக் கயவர்கள் மதத் தீவிரவாதிகள் என்று தெரிந்து கொள்ளலாம்//
எந்த‌ மத‌த்தீவிர‌வாதிக‌ள் என்று நீங்க‌ள் குறிப்பிட‌வில்லை. :-) LOL
viyasan
-"Saudi religious leader calls for gang rape of Syrian women. The cleric specified that the “intercourse marriages” last only a few hours “in order to give each fighter a turn."-

ச‌வூதி அரேபியாவின் பிர‌ப‌ல‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌த் த‌லைவ‌ர் சிரியாவின் பெண்க‌ளைக் கூட்டாக‌க் க‌ற்ப‌ழிப்ப‌த‌ற்காக‌ ( gang rape) ஃபாட்வா (ம‌த‌க்க‌ட்டளை) அறிவித்திருக்கிறார். சிரியாவில் போராடும் இஸ்லாமிய‌ வீர‌ர்க‌ள் (“warriors of Islam )பாலிய‌ல் இன்ப‌மில்லாமல் க‌ளைப்ப‌டைவ‌தாக‌வும் அது அவ‌ருக்கு மிக‌வும் க‌வ‌லை த‌ருவ‌தாக‌வும் தெரிவித்த‌ அந்த‌ ம‌த‌குரு ம‌ணித்தியால‌ங்க‌ள் ம‌ட்டும் நீடிக்க‌க் கூடிய‌ “intercourse marriages.” பாலுற‌வு மண‌ங்க‌ளை(க‌ற்ப‌ழிப்புக‌ளை) அனும‌திக்கும் வ‌கையில் அந்த‌ ம‌த‌க்க‌ட்ட‌ளையை அறிவித்திருக்கிறார்.

அந்த‌ ம‌த‌குரு முக‌ம்ம‌த் அல்‍ ஆரிஃப், ச‌வூதி அரேபியாவின் பிர‌ப‌ல‌மான‌ ம‌த‌த்த‌லைவ‌ர், அவ‌ர் அறிவித்துள்ள‌ ம‌த‌க்க‌ட்ட‌ளை அல்ல‌து ஃபாட்வாவில், இஸ்லாமிய‌வீர‌ர்க‌ள் சிரியாவின் பெண்களையும், சிறுமிக‌ளையும் கூட்டாகக் க‌ற்ப‌ழிக்க‌ வேண்டுமென்ப‌தாக‌த் தெளிவு படுத்தியுள்ளார். அதாவ‌து அவர் அனும‌திக்கும் பாலுற‌வு திரும‌ண‌ங்க‌ள், ஒவ்வொரு இஸ்லாமிய‌ போராளிக்கும் க‌ற்ப‌ழிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌மளிக்கும் வகையில் ஒரு சில‌ ம‌ணித்தியால‌ங்க‌ள் ம‌ட்டுமே நீடிக்கும். இவ்வ‌கையான‌ க‌ற்ப‌ழிப்புத் திரும‌ண‌த்துக்கு 14 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌ பெண்க‌ளையும், சிறுமிக‌ளையும் ம‌ண‌ப்பெண்க‌ளாக்க‌லாம்.

முக‌ம்ம‌த் அல்‍ ஆரிஃப் என்ற‌ ம‌த‌குரு முன்பும் அவ‌ர‌து பெண்க‌ளுக்கெதிரான‌ வ‌ன்முறையைத் தூண்டும் க‌ருத்துக்க‌ளுக்காக‌ க‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. அண்மையில், சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌, அவ‌ரை சுவிற்ச‌ர்லாந்துக்குள் நுழைந்து சுவிஸ் இஸ்லாமிய‌ ம‌ன்ற‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌த‌ற்கு சுவிஸ் அர‌சு த‌டைவிதித்த‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

வீடியோவை இங்கு காண‌லாம்:

http://viyaas.blogspot.ca/
இராமியா
திரு.வியாசன் அவர்களே! இக்குற்றம் செய்த கயவர்கள் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த மதத் தீவிரவாதிகள் என்று புரிந்து கொள்வது மிகவும் எளிமையானதே ஆகும்.
viyasan
/// இக்குற்றம் செய்த கயவர்கள் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த மதத் தீவிரவாதிகள் என்று புரிந்து கொள்வது மிகவும் எளிமையானதே ஆகும். ///

உல‌க‌ம் முழுவ‌தையும் சாதி, ம‌த‌, இன‌ பேத‌மின்றி அதிர்ச்சியிலாழ்த்திய‌ இந்த‌க் கொடிய‌ க‌ற்ப‌ழிப்பு ச‌ம்ப‌வ‌த்துக்கு ம‌த‌ப்பூச்சுப் பூசுவ‌து வெறும் கோண‌ங்கித்த‌ன‌மாகும். இந்தும‌த‌த்தை விட‌ இஸ்லாத்தில் பெண்களுக்கு அதிக‌ள‌வில் க‌ட்டுப்பாடுக‌ள் உண்டு என்ப‌து யாவ‌ரும் அறிந்த‌ விட‌ய‌ம். இந்த‌ப் பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள் முஸ்லீம்க‌ளாக‌ இருந்தால், அவ‌ர்க‌ளெல்லோரும் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ள் என்று இராமியா அவ‌ர்க‌ள் கூறுவாரா? இல‌ங்கையின் கிழ‌க்கு மாகாண‌த்தில் இல‌ங்கை இராணுவ‌த்தாலும், முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ராலும் ச‌த்துருக்கொண்டான், வீர‌முனை, துறைநீலாவ‌ணை, போன்ற‌ கிராம‌ங்களில் நூற்றுக்க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர், சில‌ கிராம‌ங்க‌ள் தமிழ‌ர்க‌ள் எவ‌ருமில்லாத‌ வ‌கையில் அழித்தொழிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சிங்க‌ள‌ இராணுவ‌மும் முஸ்லீம் ஊர்காவ‌ல்ப‌டையின‌ரும் இணைந்து த‌மிழ்ப்பெண்க‌ளை அக‌திமுகாம்க‌ளிலிருந்து க‌ட‌த்தின‌ர், அக‌தி முகாம்க‌ளிலிருந்த‌ செஞ்சிலுவைப் ப‌ணியாள‌ர்க‌ளால் கூட‌ த‌மிழ்ப்பெண்க‌ள் க‌ட‌த்தலைத் தடுக்க‌ முடிய‌வில்லை.க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளில் யாரும் உயிருட‌ன் திரும்பிவ‌ர‌வுமில்லை, அப்ப‌டியானால் அந்த‌ முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ரெல்லாம் ஜிகாதிக‌ள் அல்ல‌து இஸ்லாமிய‌ ம‌த‌ தீவிர‌வாதிக‌ள் என்று இராமியா கூறுவாரா?
viyasan
தில்லியில் ந‌ட‌ந்த‌‌ க‌ற்ப‌ழிப்புக்கு ம‌த‌ப்பூச்சு முனையும் இராமியா அவ‌ர்க‌ளை நினைத்தால் என‌க்குச் சிரிப்ப‌தா அழுவ‌தா என்று தெரிய‌வில்லை. சுவீட‌ன் நாட்டின் வ‌ராலாற்றிலேயே ந‌டைபெற்றிராத‌ க‌ற்ப‌ழிப்பு என‌ வ‌ருணிக்க‌ப்ப‌ட்ட‌து ஏப்ர‌ல் 2012 இல‌ ஏழுக்கும் அதிக‌மான‌ ஆப்கானிய‌ அக‌திக‌ளால் இருப‌த்தொன்ப‌து வ‌ய‌து சுவீட‌ன் நாட்டுப் பெண்ணை 7 ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌க் கூட்டாக‌க் க‌ற்ப‌ழித்த‌ ச‌ம்ப‌வ‌ம். இவ்வ‌ள‌வுக்கும் அந்த‌ப் பெண் அக‌திக‌ளுக்கு உத‌விக‌ள் செய்ப‌வ‌ர். அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்துக்கு யாராவ‌து ம‌த‌ப்பூச்சுப் பூசினால் எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மோ அது போன்ற‌து தான் இராமியா அவ‌ர்க‌ளின் க‌ருத்துமாகும். தில்லியில் பெண்ணைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள், 9 ம‌ணிக்கு மேல் ஒரு ஆட‌வ‌னுட‌ன் ஏன் த‌னியாக‌ சுற்றுகிறார் என்று கூறிய‌தை விட‌ மோச‌மான‌ இன‌வெறிக்க‌ருத்துக்க‌ளையும், கெட்ட‌ வார்த்தைக‌ளையும் ஆப்கானி அகதிக‌ள் பேசியுள்ளார்க‌ள். அத‌ற்காக‌ அந்த‌ப் பெண்ணைக் க‌ற்ப‌ழித்த‌ இஸ்லாமிய‌ ஆப்கானிய‌ர்க‌ளையெல்லாம் மதத் தீவிர‌வாதிக‌ள் என்பாரா இராமியா என்ப‌தை அறிய‌ மிக‌வும் ஆவ‌லாக‌ உள்ள‌து : )

http://www.youtube.com/watch?v=rSOOsmv7A_I
raja
"கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லா விஷயங்களையும் போன்று இந்த
விஷயத்திலும நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?

காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரி போலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..

கர்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக ஆதிவாசிகளுக்கும், தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும்,ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராகஅவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவிட்டுள்ளனர்..
thangapandian
மிடில் கிளாஸ் போராட்டம் என்று சொலலி தெலுங்கான போ ராட்டத்தைஎதிர்த்தார்கள் .. அன்னாஹசறேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தார்கள். இப்பொது இந்த பாலியல் கொடுமையை எதிர்த்த போராட்டத்தையும் எதிர்கிறார்கள். அருந்ததி ராய் உள்ளிட்டு சில
வறட்டு கம்யூனிஸ்ட் களும் இந்த மிடில் கிளாஸ் எதிர்ப்பு பேசுகிறார்கள். மிடில் கிளாஸ் இந்த நாட்டின் எதிரிகளா அல்லது மக்கள் விரோதிகளா என்ன? இது ஒரு 'அறிவாளிகளின்' பூமராங் தாக்குதல்.. தங்களுக்கு எதிராகவே வீசுகிறார்கள்
thangapandian
சிறப்பு.. வாழ்த்துக்கள் இந்திரா.
இராமியா
நண்பர் வியாசன் அவர்களே! ஏன் தேவையில்லாமல் ஆத்திரப்படுகிறீர்கள்? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலம், அடாத செயல் செய்த கயவர்கள் மதத் தீவிரவாதிகள் என்று காட்டுகிறது என்று கூறினால், பாலியல் தாக்குதல் தொடுப்பவர்கள் அனைவரும் மதத் தீவிரவாதிகள் என்று கூறுவதாக எப்படி நினைக்க முடிகிறது? ஒவ்வொரு குற்றச் செயலுக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்நோக்கங்கள் இருக்கலாம். எந்த ஒரு குற்றச் செயலுக்கும் - வியாசன் அவர்கள் குறிப்பிடும் குற்றச் செயல்கள் உட்பட -உள்நோக்கம் என்ன என்று பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும். டெல்லி சம்பவத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் குற்றச் செயலின் உள் நோக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் போராடு‌வதைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அவ்வளவு தான். இதில் ஆத்திரப்படுவதற்கு என்ன இருக்கிறது?
seyed muhammed
வியாசன் நன்றி!நன்றி!!நன்றி!!!
டில்லி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொலையும் செய்தது ஹிந்து தீவிரவாதிகள் என இந்தியா அறியாத தாங்கள் மட்டும் அறிந்த செய்தியை எழுதியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி!
பெண்களை அடிமைகளையும் விட தாழ்ந்த நிலையில் வைத்து பார்க்கும் ஹிந்து கலாச்சார பண்பாடை நச்சென்று புரிய வைக்கும் டில்லி வன்புணர்ச்சி சம்பவத்தை ஹிந்து தீவிரவாதிகள் தான் செய்தார்கள் என உலகறிய செய்த வியாசருக்கு நன்றியோ நன்றி!நன்றி!!நன்றி!!!
karuthaan
அம்மா!இன்றுள்ள சூழலில் மக்கள் போராட வருவதே பெரிய விசயம் அப்படி போராட வருபவர்களை கொச்சை படுத்துவது சரியானது அல்ல அருந்ததி ராய் அவர்கள் என்ன கருத்து சொன்னார் என்று நீங்கள் குறிப்பிட வில்லை மேலும் அருந்ததி ராய் COMMUNISTUM அல்ல அவர் ஒரு சமூக ஆர்வலராக கருத்துகளை தெரிவிக்கிறார் பெரும்பான்மை அடிப்படை மக்களின் துன்பங்களை பார்த்து வரும் அவருக்கு இது பெரிதாக தெரிய வில்லை போலும்.................. மேலும் அரசும் இப்படி பட்ட அமைபாக்க படாத போரட்டங்களை தான் விரும்புகிறது இது போன்ற போரட்டங்களை எளிதில் நீர்த்து போக செய்ய அரசால் முடியும் ஆகவே சமூக மாற்றங்களை விரும்பும் அமைப்புகள் இது போன்ற போரட்டங்களை புறகனிகாமல் இவற்றுக்கு ஆதரவளிக்கவும் வழிநடத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் .................................. பின்னூட்டங்களில் கருத்து தெரிவிபவர்கள் வியாசன் போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் மைய பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றி விடுவதே இவர்களின் பணியாகும்
viyasan
செய்ய‌து முகம்ம‌துக்கு த‌மிழைப் ப‌டித்துப் புரிந்து கொள்ள‌ முடியாத‌து இப்பொழுது தான் தெரிகிற‌து. யாரோ த‌மிழில் எழுதிக் கொடுப்ப‌தைத் தான் இங்கு ப‌திவு செய்கிறார் போலும். :-))

(இஸ்லாமிய‌ முக‌மூடி முக்காட்டு(புர்க்கா) த‌டையை நாடுமுழுவ‌தும் ப‌ர‌வ‌லாக்க‌ வேண்டுமென க‌னேடிய‌ அர‌சிட‌ம் கோருகிற‌து க‌னடா முஸ்லீம் காங்கிரஸ்.)

http://viyaas.blogspot.ca/
viyasan
இராமியா அவ‌ர்க‌ளே,

ஆப்கானிய‌ இஸ்லாமிய‌ அக‌திக‌ளால் கூட்டாகக் க‌ற்பழிக்க‌ப்ப‌ட்ட‌ சுவீடிஸ் பெண் கொடுத்த‌ வாக்குமூல‌மும் தான் அந்த‌ ஆப்கானிய‌ர் ம‌த‌வாதிகள் என்ப‌தைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌, முஸ்லீம‌ல்லாத‌ பெண்க‌ளை விப‌ச்சாரிக‌ளாக‌ நினைக்கும் க‌லாச்சார‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌ அந்த‌ நாட்டு வ‌ழ‌க்க‌றிஞ‌ர்கள் கூட‌ சுவீட‌ன் நீதிம‌ன்ற‌த்தில் கூறியிருக்கிறார்க‌ள். அப்ப‌டியிருந்தும் அவ‌ர்க‌ளுக்கு யாரும் இஸ்லாமிய‌ ம‌த‌வாதிக‌ள் என்று பெய‌ர் சூட்டி அவ‌ர்க‌ளின் ம‌த‌த்தை இழிவுப‌டுத்த‌வில்லை. தில்லியில் க‌ற்பழிக்க‌ப‌பட்ட‌ பெண் கூறிய‌ எந்த‌ வாக்குமூல‌த்திலிருந்து அவ‌ர்க‌ள் இந்து ம‌த‌வாதிக‌ள் என்று நீங்க‌ள் தீர்மானித்தீர்க‌ள் என்ப‌தை த‌ய‌வு செய்து விள‌க்க‌வும்.
rajan
மத வெறியர்கள் கர்பழிக்கவும் செய்கிறார்கள் போராடவும் செய்கிறார்கள் மக்கள் மட்டும் இன்னும் அடயாளம் தெரியாமல் அவர்களை வழிபடுகிரார்கள் என்பது மட்டுமே உன்மை.
இராமியா
திரு.வியாசன் அவர்களே! உங்களுக்கு என்ன பிரச்சினை? டெல்லியில் நடந்த பிரச்சினை பற்றிப் பேசும் போது வேறு பிரச்சினையைப் பேசி ஏன் திசை திருப்புகிறீர்கள்? நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகளைக் குறித்துப் பேசக் கூடாது என்றோ அப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடாது என்றோ யார் சொன்னது? எந்தக் குற்றச் செயலுக்கும் உள்நோக்கம் இருக்குமே? அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு எதிராகப் போராட மக்களை அணி திரட்ட வேண்டும் என்றால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
இராமியா
திரு.வியாசன் அவர்களே! டெல்லி சம்பவத்தபை் பற்றிப் பேசும் பொழுது வேறு சம்பவங்களைப் பற்றிப் பேசி நீங்கள் தான் திசை திருப்புகிறீர்கள். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தில் இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆடவனுடன் உனக்கு என்ன வேலை என்று அந்தக் கயவர்கள் கேட்டதாகக் கூறி இருக்கிறாள். இத்தகைய மனோபாவம் மதத் தீவிரவாதிகளுக்குத் தான் இருக்கிறது. இதில் இந்து, இஸ்லாம், கிருத்தவம் என்ற வேறுபாடு இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் வளர்த்து எடுக்கப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் நஜிபுல்லா கொல்லப்பட்ட பின், அங்கு பெண்களுக்கு இந்த கதி தான் ஏற்பட்டது. இங்கு மைசூரிலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுகளுக்கு இதே கதி தான் ஏற்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரக்ளில் ஒருவரான ஓவியா நாகர்கோவிலில் பணியாற்றிக் கொண்டு இருந்த போது இரவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்து போது ஒரு மதத் தீவிவாதி இதே வினாவைத் தான் கேட்டானாம். ஆகவே பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலம் அந்தக் கயவர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்வது எளிதே ஆகும். அதாவது ஆகவே இச்சம்பவத்திற்கு எதிராகப் போராட நினைப்பவர்கள் அதன் அடிப்படைக் காரணமான மதத் தீவிர வாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு? இது எப்படி திசை திருப்பலாகும்? திசை தெரியாமல் போராடுபவர்கள் சரியான திசையில் போராட வேண்டும் என்று தானே பொருள்படும்? ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சுவீடனில், இலங்கையில் நடந்த சம்பவங்களை இத்துடன் முடிச்சு போடுகிறீர்கள். இது திசை திருப்பல் இல்லையா? சுவீடனில் இலங்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி அப்படி ஒரு அக்கறை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றிய போராட்டத்தை நீங்கள் முன்னெடுக்கலாமே? இலங்கையில் நடந்த சம்பவத்தின் உள்நோக்கம் மதத் தீவிர வாதம் அல்ல; சிங்கள இனத் தீவிர வாதம் என்பதைக் குழந்தை கூட அறியும். அதை மதத் தீவிர வாதத்துடன் ஒப்பிட்டு திசை திருப்புவது நீங்கள் தான். டெல்லி சம்பவத்ததை மதத் தீவர வாதப் பிரச்சினையாக மாற்ற விரும்பவில்லை. ஆனால் அது மதத் தீவிர வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் காட்டுவதைத் தெளிவுபடுத்தி அச்சம்பவத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் மதத் தீவிர வாதத்திற்கு எதிராகப் போராடுவது தான் சரியாக இருக்கும் என்று சுட்டிக் காட்டினால் அது திசை திருப்பல் அல்ல. சரியான திசையில் வழிப்படுத்துதலே ஆகும்.
viyasan
திரு. இராமியா அவ‌ர்க‌ளே, ஆட‌த்தெரியாத‌வ‌ள் மேடை ச‌ரியில்லை என்றாளாம். கேட்ட‌ கேள்விக‌ளுக்குப் ப‌தில் சொல்ல‌த் தெரிய‌வில்லை, நான் திசைதிருப்புகிறேனாம். இந்த‌ப் பிர‌ச்ச‌னையைத் திசைதிருப்ப‌ முனைந்த‌தே நீங்க‌ள் தான். தில்லிக் க‌ற்பழிப்புக்ககுக் கார‌ண‌மான‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்பட‌ வேண்டுமென்ப‌தில் யாருக்குமே மாற்றுக் க‌ருத்து கிடையாது, இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌ம் முழுவ‌துமே அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென‌ ஒப்புக் கொள்கிற‌து. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு ம‌த‌ச்சாய‌ம் பூசி, பிரச்ச‌னையைத் திசைதிருப்பி அதை ஒரு ம‌த‌ப்பிர‌ச்ச‌னையாக்க முனைந்த‌வ‌ர் நீங்க‌ள். க‌ற்பழித்த‌வ‌ர்க‌ள் எல்லாம் இந்துக்க‌ள் என்ற‌ வ‌கையில், இந்த‌க் க‌ற்பழிப்புச் ச‌ம்ப‌வ‌த்துக்கு இந்துச் சாய‌ம் பூசுவ‌து உங்க‌ளுக்கு ஒரு கிளுகிளுப்பைத் த‌ந்திருக்க‌லாம் அல்ல‌து கீற்றில் அப்ப‌டியான‌ இந்து எதிர்ப்புக் க‌ருத்துக்களை யாரும் எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று நீங்க‌ள் எண்ணியிருக்கலாம். இந்த‌க் கொடிய‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு எந்த‌ ம‌த‌ச்சாய‌ம் பூசுவ‌தும் த‌வ‌று என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும். ஆனால் நீங்க‌ள் "திரு.வியாசன் அவர்களே! இக்குற்றம் செய்த கயவர்கள் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அந்த மதத் தீவிரவாதிகள் என்று புரிந்து கொள்வது மிகவும் எளிமையானதே ஆகும்." என்று என‌க்குப் ப‌தில‌ளித்திருந்தீர்க‌ள், அத‌னால் தான், என்னுடைய‌ கேள்வி என்ன‌வென்றால் தில்லியில் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள் ம‌த‌வாதிக‌ளென்றால், சுவீட‌னில் க‌ற்பித்த‌வ‌ர்க‌ளும், ஈழ‌த்தில் கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ்ப்பெண்களை அகதி முகாம்களிலிருந்து சிங்க‌ள ராணுவத்துட‌ன் சேர்ந்து க‌ட‌த்திச் சென்று க‌ற்ப‌ழித்துக் கொலையும் செய்த‌ முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையின‌ரும் ம‌த‌வாதிக‌ள் அல்ல‌து ஜிகாதிக‌ள் என்ப‌தை நீங்க‌ள் ஒப்புக் கொள்கிறீர்க‌ளா என்ப‌து தான். அத‌ற்கு விடைய‌ளிப்ப‌தை விட்டு, நான் பிர‌ச்ச‌னையைத் திசை திருப்புவ‌தாகச் சொல்வ‌தற்கு உங்க‌ளுக்கு வெட்க‌மாக‌வில்லையா. நான் கோப‌ப்ப‌டுவ‌தாக‌க் க‌தை விடுவ‌தை விடுத்து, நாங்க‌ள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் விட‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.
Sukdev
டெல்லி கேங் ரேப் சம்பவத்ததுக்கு நியாயப் பூச்சு வழஙுவதையே மதவாதிகள் செய்து வருகிறார்கள். மோகன் பகவத் பேட்டி அதனையே உணர்த்துகிரது. எனவே ராமியா கூற்றில் நியாயம் உள்ளது.
viyasan
திரு. இராமியா அவ‌ர்க‌ள் ஆழ‌ம் தெரியாம‌ல் காலை விட்டு விட்டு, விள‌க்கம் கேட்டால் வெறும் ச‌ப்பைக்க‌ட்டுக் க‌ட்டுகிறார். ஓரு பெண்ணைக் கொடூர‌மாக‌ க‌ற்ப‌ழித்த‌ காமுக‌ர்க‌ள் "இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆடவனுடன் உனக்கு என்ன வேலை" என்று கேட்டார்க‌ளாம், அந்த‌ ஒரு கார‌ண‌த்தை வைத்துக்கொண்டே, ஒரு ஆய்ந்த‌றிந்த‌ 'க‌விஞ‌ரும், எழுத்தாள‌ருமாகிய‌' இவ‌ர் உட‌ன‌டியாக‌ ஆராயாம‌லேயே அவ‌ர்க‌ள் ம‌த‌த்தீவிர‌வாதிக‌ள் தான் என்ற‌ முடிவுக்கு வ‌ந்து விட்டாராம். இவ‌ர் த‌லைவ‌ராக‌ இருக்க‌வேண்டிய‌ இட‌ம் இந்திய உள‌வுத்துறையென்று தான் முதலில் நினைத்தேன், உண்மையில் இவ‌ர் அமெரிக்காவின் எஃப். பி. ஐக்கு த‌லைவ‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌வ‌ர், சும்மா கீற்றில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிற‌து. இவ‌ரின் க‌ருத்துப்ப‌டி ஒரு உண்மையான‌ இந்துத்துவா காமுக‌ன் அல்ல‌து இஸ்லாமிய‌த்துவா காமுக‌ன் எவனாவ‌து இந்த‌ 9 ம‌ணிக் கேள்வியைக் கேட்காம‌ல் க‌ற்ப‌ழித்து விட்டுப் போனால் அவ‌னை ம‌த‌த்தீவிர‌வாதியாக‌ இவ‌ர் க‌ருத‌மாட்டார் போலிருக்கிற‌து. உண்மையில் தில்லியில் அந்த‌ப் பெண்ணைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள் ம‌த‌த்தீவிர‌வாதிக‌ளா அல்ல‌து அந்த‌க் க‌ற்ப‌ழிப்பு ச‌ம்ப‌வ‌த்துக்கு ம‌த‌த்தீவிர‌வாத‌ம் அடிப்ப‌டையாக‌ உள்ள‌தா என்ப‌தை அறிய‌ அந்த‌க் காமுக‌ர்க‌ளின் பின்ன‌ணி, அவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் அல்ல‌து அவ‌ர்க‌ளுக்கும் ஏதாவ‌து ம‌த‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தொட‌ர்புண்டா என்ப‌தை ஆராய்ந்த‌பின் தான் அவ‌ர்க‌ளை ம‌த‌த்தீவிர‌வாதிகள் தான் என்ற‌ கூற‌லாமே த‌விர‌ "இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆடவனுடன் உனக்கு என்ன வேலை" என்று கேட்ட‌ கேள்வியை ம‌ட்டும் அந்த‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது என்ப‌தை ஒரு குழ‌ந்தை கூட‌ இராமியா அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கியிருக்கும்.
viyasan
கீற்றில் க‌சாப்புக்காக அழுத‌வ‌ர்க‌ள் ஏன் றிசானாவுக்காக‌வும் அழவில்லை?

எல்லைக‌ட‌ந்து இந்தியாவுக்குள் நுழைந்து, நூற்றுக்க‌ண‌க்கான‌ அப்பாவி இந்திய‌ர்க‌ளைக் கொன்றொழித்த‌ க‌சாப்புக்காக‌ ப‌த்தி ப‌த்தியாகஎழுதி அவனை ஒன்றும‌றியாத‌ அப்பாவியாக‌, சிறுவனாக‌ எல்லாம் கீற்றில் வ‌ர்ணிக்க‌ முனைந்த‌வ‌ர்க‌ள் எவ‌ருமே, உண்மையான‌ அப்பாவிபெண்ணும், வயிற்றுப்ப‌சிக்காக‌ வய‌தைக் குறைத்துப் போட்டு ச‌வூதி அரேபியாவுக்கு வேலை தேடிப் போய், ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ச் சிறைவாச‌ம் அனுப‌வித்த‌ பின்பும் குரூர‌மாக‌, இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளின்ப‌டி த‌லை துண்டிக்க‌ப்பட்டு படுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ றிசானாவுக்காக‌ கீற்றில் யாரும் அழுவ‌தைக் காண‌வில்லை என்ப‌தை நினைக்க‌ வேத‌னையாக‌ உள்ள‌து. உண்மையில் என‌க்கு முஸ்லீம்க‌ளிட‌ம் எந்த‌ வித‌ காழ்ப்புண‌ர்ச்சியும் கிடையாது, இப்ப‌டியான‌ ம‌னிதநேய‌ம‌ற்ற‌ அர‌புக்க‌லாச்சார‌ம் த‌மிழ்நாட்டில் திட்ட‌மிட்டுப் ப‌ர‌ப்ப‌ப்ப‌டுகிற‌து, த‌மிழ் முஸ்லீம்க‌ள் அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌டுகிறார்க‌ள், அதைத் த‌மிழ‌ர்க‌ளனைவ‌ரும் ஒன்றிணைந்து எதிர்க்க‌ வேண்டும் அல்ல‌து ஈழ‌த்தில் த‌மிழர்க‌ளுக்கு நேர்ந்த‌ க‌தி த‌மிழ்நாட்டில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏற்படும் என்ப‌து தான் என்னுடைய‌ க‌ருத்தாகும்.

http://viyaas.blogspot.ca/
இராமியா
நன்றி திரு.வியாசன் அவர்களே! \தில்லியில் அந்த‌ப் பெண்ணைக் க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள் ம‌த‌த்தீவிர‌வாதிக‌ளா அல்ல‌து அந்த‌க் க‌ற்ப‌ழிப்பு ச‌ம்ப‌வ‌த்துக்கு ம‌த‌த்தீவிர‌வாத‌ம் அடிப்ப‌டையாக‌ உள்ள‌தா என்ப‌தை அறிய‌ அந்த‌க் காமுக‌ர்க‌ளின் பின்ன‌ணி, அவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் அல்ல‌து அவ‌ர்க‌ளுக்கும் ஏதாவ‌து ம‌த‌ தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தொட‌ர்புண்டா என்ப‌தை ஆராய்ந்த‌பின் தான் அவ‌ர்க‌ளை ம‌த‌த்தீவிர‌வாதிகள் தான் என்ற‌ கூற‌லாமே// என்று சரியான வழியைக் கூறி இருக்கிறீர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.