‘தோழா’ – அண்மையில் திரைக்கு வந்த ஒரு படம்.  தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் நம்மூர் கார்த்தியும் நடித்திருப்பார்கள்.  கை, கால்கள் செயல் இழந்த நிலையில் இருக்கும் ஒரு பணக்காரத் தொழிலதிபர் வேடம் நாகார்ஜுனாவுக்கு.  சக்கர நாற்காலியில் தான் படம் முழுக்க வருவார் நாகார்ஜுனா.  அந்த நிலையிலும், டேன்ஸ் ஆடும் ஒரு பெண்ணை இரண்டு நாட்களில் மடக்கிக் காதலித்துக் காட்டுவதாகக் கார்த்தியிடம் பெட் கட்டுவார் நாகார்ஜுனா.  விடுங்கள், நமக்கு எதற்கு சினிமா கதையெல்லாம்?  

woman scaredஒரு பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் - பகலில், பலரும் பார்க்கும்படி.  அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரில், இரயில் நிலையத்தில் வைத்து.  கொலையைப் பார்த்தவர்கள், ஓர் இளைஞன் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பின் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓடியதாகவும் சொல்கிறார்கள்.  அந்த இளைஞன் யார் - அவளின் நண்பனா, காதலனா, உறவினனா, ஒரு தலைக் காதலால் வந்த விபரீதமா - கொலைக்கான காரணம் என்ன - எதுவுமே தெரியவில்லை.  '6.30க்குப் பொண்ண கொண்டு வந்து விட்டேன்.  6.40க்குப் பொணமா பாக்கிறேன்' என்று கதறி அழுகிறார் பெண்ணின் தந்தை.  பத்து நிமிடத்தில் இரத்தக்களறியில் பெற்ற மகளைப் பார்க்கும் அந்தத் தந்தையின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?  விளையாட்டில் கை, காலில் அடிபட்டு வந்தாலே துடிக்கும் பெற்ற மனம், என்ன காரணம் என்றே தெரியாமல், தன் மகள் மட்டும் கொல்லப்பட்டிருப்பதை (அதுவும் கொடூரமாக) எப்படித் தாங்கிக் கொள்ளும்?  

இதையெல்லாம் பற்றி நம்முடைய ஊடகங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.  கொலைகாரனையோ கொலைக்கான காரணத்தையோ கண்டறிய முடியாமல் 'ஸ்காட்லாந்து போலீசு'க்கு நிகரான போலீஸ் என்று சொல்லப்படும் தமிழ்நாடு போலீசே ஒரு வாரம் தவித்துப் போனது.  போலீசுக்கே காரணம் தெரியாத சூழலில், மறுநாளே - 'காதல் தகராறில் ஐடி ஊழியர் படுகொலை' என்று கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியிடுகிறது தமிழ்நாட்டின் மிகப்பெரிய செய்தித்தாள் ஒன்று.  காதலித்த ஒரே குற்றத்திற்காக, தர்மபுரி இளவரசன் தண்டவாளத்தில் வைத்துக் கொல்லப்படுகிறான்.  காதலித்த பெண்ணைக் கரம் பிடித்த தப்பிற்காகப் பட்டப்பகலில், கெளசல்யாவின் பெற்றோராலேயே சங்கர் வெட்டிக் கொல்லப்படுகிறான்.  காதலிப்பது என்பது ஏதோ கொலைக்குற்றம் செய்வதைப் போலவும் தங்கள் சாதியின் பெருமை அதனால் குறைந்து போவதாகவும் சாதித்தலைவர்கள் வன்மம் பேசுகிறார்கள். 'நாடகக் காதல்' என்று சொல்லிச் சாதியின் புனிதம் காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நம்மூரில் பஞ்சமில்லை.    இப்படிக் காதல் என்பதைக் கெட்ட வார்த்தையாக்கி, காதலிப்பவர்கள் கேடு கெட்டவர்கள், கலாச்சாரத்தைக் கெடுப்பவர்கள் என்னும் விதை இங்கே விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  'காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்றதே திருமணம்' என்னும் இலக்கிய காலத்திலா நாம் வாழ்ந்து வருகிறோம்?  

இந்தச் சூழலே தெரியாதது போல, 'காதல் தகராறு' என்று செய்தி வெளியிட ஊடகங்களால் எப்படி முடிகிறது?  அதுவும், காதல் தகராறு என்பதை உறுதிப்படுத்தாமலேயே! இந்தக் கொலைக்குக் காதல் தகராறு தான் காரணமாக இருக்கும் என்பது உங்கள் ஊகமாக இருந்தது.    அதற்காக, அதையே தலைப்புச் செய்தியாகச் சொல்லலாமா?  செய்திக்கும் ஊகத்திற்கும் வேறுபாடு வேண்டாமா?  வாட்சப்பில் வதந்திகளைப் பரப்பும் விஷமிகளுக்கும் இது போல் ஊகங்களைத் தலைப்பாக வெளியிடும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.  இருவருமே பொய்யைப் பரப்பிப் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.  அவ்வளவு தான்!  இல்லையா? சொல்லப் போனால், வாட்சப்பில் வதந்தி பரப்புபவரை விட ஊடகங்கள் செய்வது மோசம் - இவர்கள் ஊகத்தைச் செய்தியாக்கி, செய்தியைத் தலைப்பாக்கிக் காசு கல்லா நிரப்பி விடுகிறார்கள் இல்லையா?  நேற்று காதல் தகராறு என்று செய்தி வெளியிட்ட அதே ஊடகங்கள், ராம்குமார் பிடிபட்ட பிறகு, ஒருதலைக் காதல் என்று தங்களை மாற்றிக் கொள்கின்றன.  செய்தியின் தலைப்பு ஒரே நாளில் மாறலாம் – ‘அதானே, இது லவ் மேட்டரு, இந்தப் பொண்ணு எதாவது தப்பு பண்ணிருக்கும்’ என்று டீக்கடைகளில் பலரின் வாய்களுக்குப் பக்கோடாவாக ஸ்வாதியை மாற்றி விட்டார்களே – இதற்கு யார் பொறுப்பு?  

இப்படியெல்லாம் தலைப்புப் போடுவதற்கு முன்பு, ஒரு நிமிடம் அந்தக் குடும்பத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தார்களா?  'நடந்த கொலையால் ஏற்கெனவே பரிதவித்து வரும் என்னை இன்னும் புண்படுத்தாதீர்கள்' என்று பெண்ணின் தந்தை கண்ணீர் வடிக்கிறார்.  'ஸ்வாதியைக் கொன்றதைக் காட்டிலும் அவளுடைய கேரக்டரைக் கொல்வது மோசமானது' என்று நினைவேந்தல் பதாகைகளைச் சுமந்து கொண்டு மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.  இவையெல்லாம் பத்திரிக்கையாசிரியர்களின் காதுகளையும் கண்களையும் எட்டவேயில்லையா?  இல்லை, வேறொரு தலைப்புச் செய்திக்கான வேலையில் அவர்கள் பிசியாகி விட்டார்களா?

சாதிவெறி ஆயிரம் பேரைக் கொல்லும் என்றால், மதவெறி இலட்சம் பேரைச் சாகடிக்கும்.  பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு, முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் மதவாத அமைப்புகள் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகின்றன.  அதன் ஒரு பகுதி தான் குஜராத் கலவரங்கள்.  ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்ட 'குஜராத் கலவரம் - இந்தியாவின் அவமானம்' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயே வெளிப்படையாகச் சொன்னார்.  திருநீற்றோடு ஓர் இந்துவைப் பார்த்தால் 'பக்திமான்' என்று தோன்றுகிறது.  சிலுவை மாலையோடு ஒரு கிறிஸ்தவரைப் பார்த்தால், 'கடவுள் நம்பிக்கையாளர்' என்று மனம் சொல்கிறது.  திருநீறு, சிலுவை மாலையைப் போலத் தான் தாடியும் மழிக்கப்பட்ட மீசையும்!  ஆனால் தாடி, மழிக்கப்பட்ட மீசையோடு ஒரு முஸ்லீமைப் பார்த்தால் 'பக்திமான்' என்றா மனம் ஏற்றுக் கொள்கிறது? 'தீவிரவாதியாக இருப்பாரோ?' என்ற சந்தேகம் வரும் அளவுக்கு நம்முடைய திரைப்படங்களும் ஊடகங்களும்  நம்மைச் செதுக்கி வைத்திருக்கின்றன.  

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசும் போது கூட, 'இந்தியா எல்லாருக்குமான நாடு.  நாங்கள் மதத் துவேசம் காட்ட மாட்டோம்.  எங்களுக்கு எம்மதமும் சம்மதம்' என்று உறுதி கூற வேண்டிய நெருக்கடி பிரதமருக்கே இருந்தது.  அந்த அளவுக்கு நம் நாட்டின் பெயர் வெளிநாடுகளில் கெட்டுப் போயிருக்கிறது.  நடந்திருக்கும் கொலையின் இரத்தக் கறைகள் காய்வதற்கு முன்பே, இது ‘ஜிகாதி ஸ்டைல் கொலை’, ‘நடந்த கொலை ஐ எஸ் தீவிரவாதிகளின் வீடியோக்களைப் பார்த்த ஒருவர் தான் செய்திருப்பார்’ என்று மறைமுக மத துவேஷ செய்திகளை இந்துத்துவா இணையத்தளங்கள் பரப்பி வருகின்றன.  கொலை செய்தவர் பெயர் பிலால் மாலிக் என்று முகநூலில் செய்திகளைப் பரப்புகிறார்கள்.  புகழ் பெற்ற பள்ளிக்கூடத்தைச் சென்னையில் நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஜாதி வெறியோடு கூடிய முகநூல் பதிவைப் பகிர்ந்து கொள்கிறார்.  ‘நான் வெளியிட்ட கருத்துகள் என்னுடையவை அல்ல.  ஆனால் அந்தப் பதிவின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு தான்’ என்று எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு கேசுவலாகப் பதில் சொல்கிறார்.  

கொலையானவர் குடும்பம் படும் பாடு என்ன, இந்தக் கொலை என்ன மாதிரியான விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் – இவை பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் இந்தக் கொலையை எப்படி மதவெறியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தலாம் என்று யோசித்து விஷ விதையைத் தூவுபவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா?  ‘எரியும் வீட்டில் உருவிய வரை லாபம்’ என்று செத்த வீட்டிலுமா உங்கள் குரூரப் புத்தியைப் புகுத்துவீர்கள்?  

ஒரு கொலை – பகலில், பலர் பார்க்கும்படி, ரயில் நிலையத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரிலேயே நடந்திருக்கிறது.  கொலையாளி எல்லோர் முன்னிலையிலும் தப்பி ஓடி இருக்கிறான்.  இங்கு விவாதிக்க வேண்டிய விஷயங்கள் – கொலையானவரின் சாதியும் கொலை செய்தவரின் மதமுமா?  இல்லையே!  

  • இரயில் நிலையங்களில் ஏன் பாதுகாப்பு இல்லை?  பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.  அரசு ஏன் போதுமான அளவு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்த யோசிக்கிறது?  அரசு வேலைவாய்ப்புகளை அடியோடு குறைத்து விட்டு குற்றங்கள் நடக்கின்றன, அரசு அலுவலகங்களில் வேலை மந்தமாக நடக்கிறது என்று குற்றம் சுமத்தினால் அதற்கு யார் பொறுப்பு?  அரசு தானே!  போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை அமர்த்தச் சொல்லி, அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் அமைதி காப்பது ஏன்?  

  • முன்பெல்லாம் பணியழுத்தம் காரணமாகத் தற்கொலைகள், மன நோய்கள் என்பன தனியார் துறையில் மட்டும் நடக்கும்.  ஆனால், அரசுத் துறைகளிலும் அது சர்வ சாதாரணமாகி வருகிறது.  பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்த டிரைவர்கள், மன அழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள் போன்ற செய்திகளை அன்றாடம் பார்க்க முடிகிறது.  இப்படிப்பட்ட பணிச்சூழலில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எப்படி இந்தக் கொலையில் குற்றவாளியைத் திறம்படப் பிடிக்க முடியும்?  இதைப் பற்றி எத்தனை ஊடகங்கள் பேசுகின்றன?   

  • இரயில் நிலையங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் போன்ற கருவிகள் பொருத்தப்படவில்லை?  கருப்புப் பூனைப்படை என்பதும் ஏ முதல் இசட், இசட் பிளஸ் வரை உள்ள பாதுகாப்புகளும் அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தானா?  சாதாரண மக்களுக்கு ஒரு கான்ஸ்டபிள் கூடக் கிடையாதா?  

  • ஒரு பக்கம் 26 நிமிடத்தில் 20 செயற்கைக்கோள்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது இந்திய அரசு.  ஆனால் இன்னொரு பக்கம், அரசின் கீழ் உள்ள ரயில் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு ஏன் – பல ரயில் நிலையங்களில் கழிவறைகளே இல்லை.  ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் – உள்ளே இருக்குமாம் ஈறும் பேனாம்’ என்பது போல் இருக்கும் இந்த நிலையை அல்லவா ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க வேண்டும்?  

  • சிசிடிவிக்கள் பொருத்தப்படுவது என்பது நிரந்தரத் தீர்வல்ல.  அத்தனை சிசிடிவிக்கள் பொருத்தப்பட்ட மும்பையில் தான் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.  சிசிடிவிக்கள் குற்றம் நடந்த பிறகு, குற்றவாளிகளைப் பிடிக்க உதவுமே தவிர, போன உயிரையும் இழந்த உறவுகளையும் திரும்பத் தருமா?  

  • ஒரு பெண்ணைக் கொலை செய்யும் அளவு வக்கிர எண்ணம் கொண்ட ஒருவன், அந்த எண்ணத்தைச் செயல்படுத்தியிருக்கிறான்.  இன்னமும் இதே போன்ற எண்ணத்துடன் எத்தனை பேர், தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த வடிகால் இல்லாமல் சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?  அவர்களைத் திருத்த என்ன செய்யப் போகிறோம்?

  • பசுவின் கன்றுக்கு அநீதி என்ற போது தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனைப் படித்த நாட்டில், பக்கத்தில் கொலை நடந்தும் உறைந்து போய் உதவாமல் இருந்த சமூகத்தை எப்படி மாற்றப் போகிறோம்?  இதைப் பற்றிய விவாதங்களை அல்லவா ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்?  

  • வீரப்பனிடம் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காகக் காட்டிற்கு அனுப்பப்பட்ட தமிழக அரசின் தூதர்களில் ஒருவர் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  2000ஆம் ஆண்டு அவரைத் தூதராக நியமித்தது தமிழக அரசு.  2001ஆம் ஆண்டு கோபியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “வீரப்பன் சிங்கப்பூருக்கோ,மலேசியாவிற்கோ சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறதே?” என்று  அவரிடம் கேட்டார்கள்.  ஒரு குழந்தையிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் கூட ‘வீரப்பன் காட்டுக்குள் தான் இருக்கிறார்’ என்று சொல்லும்.  இதே பதிலைத் தான் அவரும் சொன்னார்.  

செய்தியாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்குச் சொன்ன சாதாரண பதிலை வைத்து ”குற்றவாளி இருக்கும் இடம் தெரிந்தும் அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை” என கூறி அவர் மீது கேஸ் போட்டு சிறையில் அடைத்தார்கள்.  ஆனால், ராம்குமார் பிடிபடுவதற்கு முன்னரே, ‘இந்தக் கொலையைச் செய்தவர் பிலால் மாலிக் தான்’ என்று சொன்ன நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  குறைந்த பட்சம் ‘சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து கலவரத்தைத் தூண்டியதற்காகவும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்காகவும் அவர் கண்டிக்கப்பட வேண்டாமா?  

  • ‘மருத்துவமனையில் இருக்கும் ராம்குமார் எப்படி உங்களை நியமித்தார்?’ என்று ராம்குமாருக்காக வாதாடிய வக்கீலைப் பார்த்து அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறார்.  மருத்துவமனையில் இருக்கும் ராம்குமாரால் பேச முடியாது என்றால், கழுத்து  அறுபட்ட நிலையில் இருந்த ராம்குமார் எப்படி ‘நான் தான் ஸ்வாதியைக் கொன்றேன்’ என்று பேசியிருப்பார்?  

  • தேர்தல் முடிந்து ஒரே மாதத்தில் கொலை நடந்திருக்கிறது.  உயர்நீதிமன்றமே இந்தக் கொலை வழக்கைத் தானாக முன்வந்து கையில் எடுத்திருக்கிறது.  அந்த அளவு பரபரப்பான இந்தக் கொலை பற்றி (காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற) முதலமைச்சரோ அமைச்சரவை சகாக்களோ மெளனம் காப்பது ஏன்?  இரங்கல் அறிக்கை வெளியிடக்கூட மனமில்லையா?  இதை ஏன் ஊடகங்கள் சுட்டிக் காட்டி அரசைக் குட்டவில்லை?  

  • ஸ்வாதி கொலையைச் சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து எடுத்ததன் விளைவு தான் – விசாரணையில் நடந்த அதிரடி மாற்றங்கள் எல்லாம்.  உயர்நீதிமன்றமும் அமைதியாக இருந்திருந்தால் போலீஸ் இவ்வளவு வேகம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே!  ஆனால், ஸ்வாதி கொலையைத் தானாக முன்வந்து எடுத்த நீதிமன்றம், தர்மபுரி இளவரசன் கொலையையோ, உடுமலை சங்கர் கொலையையோ, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலையையோ ஏன் அப்படி முன்வந்து எடுக்கவில்லை என்பது பற்றிய விவாதங்கள் ஏன் நடத்தப்படவில்லை.  

  • ஸ்வாதியின் செல்போன் சிக்னலை வைத்தே காவல்துறையால் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் ராம்குமாரைச் சுற்றி வளைத்துப் பிடிக்க முடிகிறது.  ஆனால், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் – வாட்சப் மெசேஜ்கள் மூலம் போலீசுக்கே சவால் விட்டுக் கொண்டிருந்தார்.  அப்படியிருந்தும் யுவராஜ் தானாகச் சரணடையும் வரை, போலீசால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.  ஏன் இந்த முரண்பாடு?  

  • ராம்குமார் வீட்டின் முகப்பு, பின்பகுதி, தாய், தங்கைகள், அவர்களின் படிப்பு, வேலை என்று ‘சென்சேஷன்’ செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஸ்வாதி கொலை நடந்த சில நாட்களிலேயே குடிபோதையில் ஆடம்பர காரை அதிவேகமாக ஓட்டி நடந்த முனுசாமியைக் கொன்ற ஐஸ்வர்யாவைப் பற்றி ‘பிரபல தொழிலதிபரின் மகள்’ என்பதோடு நிறுத்திக் கொண்டன.  

  • ஸ்வாதி கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.  காஞ்சிபுரத்தில் மேல் மாடியில் இருந்து நாய்க்குட்டி ஒன்றை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கி வீசுகிறார், அதை இன்னொரு மாணவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆசிரியை நந்தினி வழிப்பறிக் கொள்ளையர்களால் ஏற்பட்ட விபத்தில் உயிரை விட்டிருக்கிறார்.  “கொள்ளையனை பிடித்து அடித்திருக்கிறார்களே தவிர, எனது மகளை தூக்க யாரும் வரவில்லை.” என்று கண்ணீர் வடிக்கிறார் நந்தினியின் அப்பா வடிவேல்.  நந்தினியைக் காப்பாற்ற முன்வராத சமூகம், அதே இடத்தில் கொள்ளையனின் வண்டியைக் கொளுத்தியிருக்கிறது.  குடிபோதையில் ஆடம்பர கார் ஓட்டி முனுசாமி என்ற தொழிலாளி 15 அடி தூக்கி வீசப்பட்டு இறந்திருக்கிறார்.  விபத்துக்குப் பிறகும் காரை ஓட்டிய ஐஸ்வர்யா, காரை நிறுத்தாமல் வேகமாகத் தப்பிப் போயிருக்கிறார்.  

  • உயிரைக் காப்பாற்றும் தொழிலைச் செய்ய வேண்டிய மருத்துவ மாணவர்கள் நாயின் உயிருடன் விளையாடுகிறார்கள்.  உயிருக்குப் போராடும் பெண்ணைக் காப்பாற்றாமல் தன்னுடைய வெறியைத் தீர்க்க, கொள்ளையனின் வண்டியை எல்லோரும் சேர்ந்து கொளுத்துகிறார்கள்.  ஒருவரை இடித்துக் கொன்ற பிறகும் காரை நிறுத்தாமல் இளம்பெண் ஒருவர் தப்பிக்கப் பார்க்கிறார்.  இப்படிப்பட்ட சமூகத்திடம் இருந்து எப்படி நல்ல இளைஞர்கள் உருவாக முடியும்? முல்லைக்குத் தேர் தந்த பாரி வாழ்ந்த ஊர் இது, பார்க்கும் போதே கொலை நடந்தாலும் ‘நமக்கென்ன?’ என்று ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது.  இப்படி நம்முடைய சமூகம் மாறியதன் பின்னணி என்ன?  

  • கல்வி என்பது மனிதனைப் பக்குவப்படுத்த என்ற நிலையை மாற்றிப் பணம் சம்பாதிக்கத் தான் கல்வி, என்ற நிலையை உருவாக்கியதால் தான், சமூக விழுமியங்கள் ஏதும் இல்லாத மனிதர்கள் உருவாகிறார்கள் என்பதைப் பற்றியும் கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்த்ததன் விளைவு தான் இது என்பதையும் எப்போது ஊடகங்கள் பேசப் போகின்றன?  

இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் - பதிலே இல்லாமல் பல்லிளிக்கின்றன.  ஆனால், நம்முடைய ஊடகங்களுக்கோ கொல்லப்பட்டவரின் காதல் கதையும் கொலையாளியின் சாதியும் மதமுமே முன் வந்து தொலைக்கின்றன.  கொலை செய்த இளைஞன் 'கொல்லப் போகிறேன்' என்ற தீர்மானத்துடன் தான், அரிவாளுடன் ஸ்வாதியைப் பார்க்க வந்திருக்கிறான்.  அவன் செய்தது - திட்டமிட்ட படுகொலை என்றால் -  பேச வேண்டியவற்றைப் பேசாமல் வாய் மூடி மெளனித்து – விற்பனைக்காகவும் வெற்றுப் பரபரப்புக்காகவும் ஸ்வாதியின் கேரக்டரையும் ஜாதியையும் மதத்தையும் பயன்படுத்திச் செத்த வீட்டில் சடலத்தின் இரத்த வாடை மறைவதற்குள் இந்த ஊடகங்கள் செய்யும் மலிவான  அரசியலுக்கு என்ன பெயர் வைப்பது?    

தவறான செய்தியைப் பரப்பிய செய்தி நிறுவனங்களும் இணையத்தளங்களும்:

http://www.dailythanthi.com/News/India/2016/06/24105630/Engineer-woman-killed-in-dispute-of-love.vpf

https://hinduexistence.org/2016/06/25/is-infosys-swathi-actually-murdered-by-a-jilted-love-jihadi/

(புதிய வாழ்வியல் மலர் ஜுலை 16-31 இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்)

- முத்துக்குட்டி

Pin It