சொர்ணமால்யா தேவதாசி முறையை ஒழித்திருக்கக் கூடாது என்று சொன்னாராம். அதற்கு பலர் கொந்தளிக்கிறார்கள்.

ஆனால் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல அறிவுஜீவிகள், சனநாயக சக்திகள், சமூக நலன் விரும்பிகள் கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு கொந்தளிப்பையும் காணோம்.

இதைத்தானே சொர்ணமால்யாவும் சொல்றாங்க. அதுக்கு ஏன் இந்தக் கொந்தளிப்பு?

தேவதாசி முறையும், விபச்சாரமும் அடிப்படையில் வேறு வேறானதா என்ன? தேவதாசி முறைதான் பெண்ணைச் சுரண்டும். ஆனால், விபச்சாரம் பெண்ணை சமத்துவமாகப் பாவித்து சுதந்திரமாக வாழவைக்குமாக்கும்?!!?

தேவதாசி முறை என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்த பார்ப்பனியத்தின் பெண்ணடிமை வடிவம், பெண்ணை ஒரு பாலியல் பொருளாக கருதும் பாலியல் சுரண்டல் வடிவம். அதே காலத்தில் விபச்சாரமும் இருந்திருக்கலாம், ஆனால் தேவதாசி பெண்கள் கடவுளின் சேவகிகள் என்பதால், பார்ப்பனரும், பணம் படைத்தவனும் தவிர வேறு யாரும் அங்கு செல்ல முடியாது என்பதால், அடுத்த கட்ட இடைநிலைசாதியினருக்கு இந்த விபச்சார முறை இருந்திருக்கும். ஆண் படிநிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை திருப்திப் படுத்துவதில் கவனம் செலுத்துவதுதானே ஆணாதிக்க, சாதிச் சமூகம்.

பால்ய விவாகம், பெண்கள் படிப்பதற்கு தடை, வெளியே வரத் தடை, சதி, கைம்பெண் கோலம் பூணச்செய்தல், விதவை மறுமணத்தை தடுத்தல் போன்ற பல்வேறு விதமான கொடூரமான பெண்ணடிமைத்தன வடிவங்களைக் கொண்டிருந்த பழம் சமூகத்தின் வடிவம் அது. அந்தச் சமூகத்தில் தீண்டாமையும், சாதி வெறியும், சாணிப்பாலும், சவுக்கடியும், அக்ரஹாரத்தில் யாரும் நுழைய முடியா நிலையும், இன்னும் பல சமூகக் கொடுமைகளும் முழுவீச்சோடு நிலவின.

ஆனால் இன்றைய சமூக நிலைமை வேறு. இவை எல்லாம் ஒழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகவில்லையெனினும், அளவில் தன்மையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சதி ஒழிக்கப்பட்டு விட்டது. பெண்கல்வி, பால்ய விவாகம், இவற்றில் மாற்றங்கள் வந்துள்ளது. இந்த மாறிய, நவீன சமூகத்தின் பெண் மீதான பாலியல் சுரண்டல் வடிவம்தான் இந்த விபச்சாரம். இந்த சமூக நிலைக்கேற்ப தேவதாசி முறை தன்னை விபச்சாரமாகத் தகவமைத்து நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை மட்டும் தாசித் தொழில் செய்ய வற்புறுத்திய காலம் மாறி இன்று அனைத்துப் பெண்களுக்கும் அந்த வசதியைத் திறந்து விட்டுள்ளது இந்த சமூகம். அவ்வளவுதான்.

அது எந்த வகையிலும் பெண்ணின் சுயமரியாதைக்கு பெருமை சேர்க்கப் போவதில்லை. பெண் மீதான ஆணின் பார்வையை, பெண் என்பவள் பணம் கொடுத்தால் தன் பாலியல் இச்சையைத் தீர்க்கும் ஒரு பாலியல் அடிமை, இயந்திரம் என்று ஆண் கருதுவதை மாற்றப் போவதில்லை.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான விசயத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்காமல், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு மோசமான ஆணாதிக்கப் பார்வை என்பதை அறியாமலேயே பலர் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி வருகின்றனர்.

பார்ப்பனியம் தன் முழுவீச்சோடு இயங்கிய காலத்தில் நிலவிய முறை தேவதாசி முறையெனில், பார்ப்பனிய எதிர்ப்பை வலியுறுத்திய இடைநிலைச் சாதியினர் ஆதிக்கத்தில் விபச்சாரம் நிலை பெற்று விட்டது . இன்று உலகமயமாக்கலினால் ஏற்பட்ட சமூக விளைவில் அது பாலியல் தொழிலாக மாற்றப் பட்டுள்ளது.

அதென்ன மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், பத்திரிகையாளர் என்பது போன்ற தொழிலா பாலியல் தொழில் என்று சொல்வதற்கு? இதற்கு ஒரு இயக்குனர், விபச்சாரம் என்பது வெறும் பாலியல் சார்ந்த விசயமல்ல, அது உளவியல் சார்ந்தது என்றும்,  உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கு விபச்சாரம் இருக்க வேண்டும், அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு கொடுக்க படம் எடுக்கிறார்.

அப்படியென்றால், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கச் சொல்லும் அனைத்து ஆண்களும், தங்கள் வீட்டுப் பெண்களை அந்த பவித்திரமான தொழிலுக்கு அனுப்ப வேண்டியதுதானே? லஞ்சம் கொடுத்தாவது அந்த உளவியல் ஆலோசகர் தொழிலுக்கு சேர்த்து விடவேண்டியது தானே?

எப்படிப் பார்த்தாலும், பெண்ணை தன் இச்சை தீர்க்கும் ஒரு பாலியல் ஜந்துவாக, விற்பனைப் பண்டமாக நடத்துவதுதான் இதன் அடிப்படை. பெண்ணை, ஆணைப்  போன்ற சக மனுசியாக, அறிவும், சுயமரியாதையும், உணர்வும் உள்ள மனுசியாக கருத முடியாத ஆணாதிக்கப் பார்வைதான் இது.

தேவதாசி முறையின் நீட்சியாக உள்ள விபச்சாரம் ஒழிக்கப் படவேண்டும். விபச்சாரத் தடைச் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்று அறிவுஜீவிகள், பெண்விடுதலைப் போராளிகள், சனநாயக சக்திகள், இடதுசாரிகள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள், சமூக நலன் விரும்பிகள் என எல்லாத் தரப்பும் போராடியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் விபச்சாரத்திற்கு, தேவதாசி முறைக்கு, பாலியல் தொழில் என்றொரு புதுநாமம் சூட்டி அதை சட்டப் பூர்வமாக்க சொல்கிறார்கள்.

ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கேவலமான ஆணாதிக்க வழக்கத்தை, சட்டப்பூர்வமாக்கச் சொல்வது சரியானது என்றால், தேவதாசி முறையை ஒழிக்காமல் தொடர்ந்து கடைபிடித்திருக்கலாம் என்று சொர்ணமால்யா சொல்வதும் சரியானதுதான்.

நாம் செய்த தவறுக்கு இதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

Comments

10 comments

10
சாணக்கியன்
எனதருமை சகோதரிகளே. திருக்குரானை கையிலெடுங்கள், புர்கா ஹிஜாப் அணியுங்கள், அல்லாஹ் ஒருவனே துணை நமக்கென்று சொல்லி தலை நிமிர்ந்து கண்ணியத்தோடு வாழுங்கள். எந்த கொம்பனாலும் உங்களை அசைக்கமுடியாது.
ஜோ.தமிழ்ச்செல்வன்
ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற இன்னொரு விபச்சாரத்திற்கு சாணக்கியன் வழி சொல்கிறார்.
ஷாலி
திரு.ஜோ.தமிழ்ச்செல்வன் அவர்களே! விபச்சாரம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?ஒரு ஆண் பெண்ணிடம் பாலியல் இன்பம் பெருவதுதானே? மனைவியிடமும் இதைத்தானே ஒவ்வொரு ஆணும் பெறுகிறான்.ஆகவேதான் சொல்கிறோம் திருமணம் என்பது ஒரு சட்டபூர்வமான விபச்சாரமே! இந்த சட்ட பூர்வ விபச்சாரத்தில் பங்கு பெரும் பெண் மனைவி எனும் அந்தஸ்த்து பெறுகிறாள்.அவளுக்குப்பிறக்கும் குழந்தைகள் தகப்பனின் இனிசியலுடன் சட்டபூர்வ வாரிசாகிறார்கள். இந்த சட்ட பூர்வ விபாசாரம் செய்பவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழலாம்.திருமணம் எனும் சட்ட அந்தஸ்து இல்லாமல் உறவு கொள்ளும் பெண் வேசை பட்டம் பெறுகிறாள்.அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு அப்பன் பெயர் தெரியாத அனாதையாகிறது.ஒரு ஆண் ஒன்றுக்கு மேல் பெண்களை சட்டபூர்வமாக மணந்து அவர்களை நிர்வகிக்க முடியுமானால் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பது,உங்கள் பார்வையில் விபச்சாரமானால் ஆங்காங்கே சின்ன வீடு வைத்துக்கொண்டு சல்லாபிக்கும் கண்ணியமான ஆண்களுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறீர்கள்?
iniyan elango
தாங்களே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் தேவதாசி முறைக்கும் மிகப் பெரிய - மிக அடிப்படையான வேறுபாடு இருப்பதை கட்டுரையாளர் மறந்து விட்டார் - அல்லது வசதியாக மறைக்கிறார். பெண்களை சாதிப் பிறப்பின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக - அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியது தேவதாசி முறை. ஆகவே, தாமாகவே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களையும் தேவதாசிகளையும் ஒப்பிட முடியாது. மேலும், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல வட இந்திய மாநிலங்களில் "தேவதாசி" முறை பல்வேறு வடிவங்களில் இன்னும் இருந்து வருகிறது. பெண் சிறார்களை - பெண் குழந்தைகளை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வகையில் சிறுமிகளாக இருக்கும் போதே பெண் குழந்தைகளுக்கு "பொட்டுக் கட்டி" தேவதாசிகளாக்கும் முறை இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகிறது. இவ்வாறு, பலியாக்காப்படும் சிறுமிகளில் - பெண்களில் ஏறக்குறைய அனைவரும் தாழ்த்தப்பட்ட பின்னணியைச் சார்ந்த பெண்களே!

இந்து மத அடிப்படையில் - சாதி அடிப்படையில் தேவதாசிகளை பாலியல் ரீதியாக சுரண்டிய - சுரண்டி வரும் சமூகக் கனவான்கள், ஆதிக்க சாதி ஆண்கள், பார்ப்பனர்கள் முதலானோர் தேவதாசிகளுக்கு பொருளியல் ஈடு கூட செய்ததில்லை - செய்ய வேண்டியதில்லை . தாமாக விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குக் கிடைக்கும் பொருளியல் ஈடு கூட - ஆதிக்க சாதி ஆண்களின் பாலியல் அரிப்பை "இலவசமாக" தீர்ப்பதற்கு சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் நிர்ப்பந்திக்கப்பட்ட - வற்புறுத்தப்படும் தேவதாசிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. தானாக விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அத்தொழிலில் இருந்து விலகுவதற்கு உரிமை இருக்கிறது; விருப்பப்பட்ட பணத்தைக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. தேவதாசிகளுக்கு இந்த உரிமைகள் இல்லை. சாதி அடிப்படையில் "குலத் தொழிலாக" பாலியல் சுரண்டலுக்கு பலியாகும் வகையில் பாலியல் அவலத்திற்குள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்படும் தேவதாசிப் பெண்களுக்கு அந்த துன்ப வலையில் இருந்து விடுதலை பெறக் கூடிய நிலை, தந்தை பெரியார் மூலமாகவும் - அன்னை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மூலமாகவும் தமிழ் நாட்டில் மட்டுமே வாய்த்திருக்கிறது ! மற்ற மாநிலங்களில் இந்து மதம் - சாதி அமைப்பு ஆகியவற்றால் "ஜோகினி" "எல்லம்மா" என்ற பல பெயர்களில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை கோவில்களில் பாலியல் சுரண்டலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் தேவதாசி முறை தொடர்கிறது!

ஆகவே, வயது முதிர்ந்த பெண்கள் தாமாகவே - விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை காரணமாக வைத்து - சாதி அடிப்படையில் - இந்து மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணியைச் சார்ந்த பெண்களை - மற்றும் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக "தேவதாசி" என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் சமூகக் கயமையை கட்டுரையாளர் சிறுமைப்படுத்துகிறார்.

வயது முதிர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை சில மேலை நாடுகளில் உள்ளது போல் சட்ட பூர்வமாக்கி - அவர்களுக்கு பாலியல் நோய் வராமல் தடுக்க வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை - மருத்துவ சிகிச்சை - செய்வதை சட்ட ரீதியாக கட்டாயமாக்கி, அவர்களுக்கு சரியான பொருளியல் ஈடு கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். ஆனால், அதே சமயத்தில் - சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் - ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து விட்ட காரணத்திற்காக - பெண்களின் - விருப்பத்திற்கு எதிராக - பெண்களை - சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்குள் திணிக்கும் தேவதாசி முறையை முற்றிலும் இந்திய நாடு முழுதும் சட்ட ரீதியாக ஒழித்தாக வேண்டிய தேவை இன்றும் இருக்கிறது.

பாலியல் தொழில் செய்ய பெண்களுக்கு சுதந்திர சட்ட உரிமை ஏற்படுத்துவது ஆணாதிக்கத்தை குறிப்பாக - திருமணம் என்ற பாலியல் சுரண்டல் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் ஆண்களின் பாலியல் ஆதிக்கத்தை அழிப்பதற்கு அடிகோலும்.

தேவதாசி முறையை ஒழிப்பது சாதி அமைப்பின் மிக அவலமான ஒரு ஆணாதிக்க - பார்ப்பன ஆதிக்க பாலியல் சுரண்டலை ஒழிக்கும்.

தேவதாசி முறை - இந்து மத சாதி அமைப்பின் - சாதி ஒடுக்கு முறையின் வெளிப்பாடு. தாமாக விருப்பப்பட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு - தேவதாசி என்ற சாதி ஒடுக்குமுறையை ஒப்பிடுவது கட்டுரையாளரின் அறியாமையை காட்டுகிறது.
RRaj
"சாணக்கியன்" நல்ல நியாயம் பேசுறிங்க நீங்க........... அது எப்படி ஆண் மட்டும் 10 கல்யாணம் செய்து கொள்ளலாம், ஆனால் பெண் செய்தால் பாவம், ஆண் மட்டும் அடுத்த மதத்தில் உள்ள பெண்களை கல்யாணம் செய்து கொள்ளலாம் ஆனால் பெண் செய்தால் பாவம்.. இது ஆணையும் பெண்ணையும் சமமாக சொல்ல வில்லை.... பெண்ணை ஆணிடம் இருந்து தாழ்த்தி தான் சொல்லுகிறது....
Natarajan
தமிழக கோவில்களில் கற்பக்ரிஹதில் நுழைந்து பூசை செய்யும் உரிமை பார்ப்பன சாதிக்கு மட்டுமே உள்ளது. ஆதலால் பார்ப்பன சாதி பெண்களே தேவதாசிகளாக இருக்க வேண்டும்.
THAMIZHAGAN
vibacharam vazhga engireer. appdiyanal keetru oru vibachara viduthi nadaththalam.
ஷாலி
நவீன கலைக்கோயில் எனப்படும் சங்கீத,நாட்டிய ,திரைப்பட துறைகளின் மூலவர்களாகவும்,உற்ச்சவர்களாகவும் அவாள் இருந்து, இந்த சேவையை தமிழ் மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தொடர்ந்து செய்து வருவது திரு.நடராஜன் அறியவில்லையா?
indiragandhi alangaram
நண்பர், இனியன் இளங்கோ! அணுவைத் துளைத்து ஆய்வு செய்வது போல விபச்சாரத்தையும், தேவதாசி முறையையும் நீங்கள் என்னதான் ஆய்வு செய்தாலும், ஆயிரம் வித்தியாசங்களைக் கண்டறிந்தாலும், அந்த இரு முறைகளுக்கும் அடிநாதமாக இருப்பது ஒரே ஒரு விசயம்தான். அது பெண்ணை பாலியல் பண்டமாக, விற்பனைப் பண்டமாக பார்க்கிறது என்பதுதான். அது எந்த வடிவத்தில் எந்தப் போர்வையில் வந்தாலும பெண் என்கிற முறையில், பெண்சமத்துவத்தை கோருகிறவள் என்கிற முறையிலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் சமத்துவத்தை வாயளவில் பேசிக் கொண்டு தங்கள் குடும்பப் பெண்களை பத்திரமாக வைத்துக் கொண்டு விபச்சாரத்தை அங்கீகரிக்கும் ஆண்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. வயது முதிர்ந்த, விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் எல்லாம் விரும்பி அந்தத் தொழில் செய்வது போலவும், அவர்கள் விரும்பினால், அந்தத் தொழிலை விட்டு விட்டு வந்து சமூகத்தில் சராசரியாக வாழ வழி இருப்பது போல்வும் ஒரு சனநாயக மாயையை உருவாக்குகிறீர்கள். யதார்த்தம் அப்படி இல்லை. விரும்பாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏராளம். உங்களைப் போன்றவர்களுக்கு அது சாதியின் பெயரால் பார்ப்பனியத்தின் பெயரால் நடக்காததால், விபச்சாரம் சனநாயக வடிவம் போல் காட்சியளிக்கிறது. உண்மை அதுவல்ல. இன்று விபச்சாரத்தில் சிலர் விரும்பி ஈடுபடுவது போல, அந்தக் காலத்திலும் கூட, சில பெண்கள் தேவதாசி முறையில் விரும்பி இணைந்திருந்திருப்பார்கள். அந்த அடிப்படையில் தேவதாசி முறையை அங்கீகரிப்பீர்களா? பெரியாரின், டாக்டா.முத்துலட்சுமியின் தேவதாசி முறையை எதிர்த்த போராட்டம், உண்மையிலேயே சரியான முறையில் நகர்ந்திருந்தால் அது விபச்சார ஒழிப்பாக பரிணமித்திருக்கும். ஆனால் நடந்தது வேறு. இன்றும் கூட பொட்டுக் கட்டுதல் போன்ற முறை இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறை வடிவில் நிலவுகிறது என்பதற்காக, அதை ஒழிக்கும் பொருட்டு, அதற்கு மாற்றாக விபச்சாரத்தை பாலியல் தொழில் என்று சட்ட அங்கீகாரம் அளிப்பதால், பெண் சமத்துவம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. அதில் காசு கொடுத்து காமத் தணிப்பு செய்யும் கேவலமான ஆணின் உணர்வுக்கு, மதிப்புக் கொடுக்கும், ஆணாதிக்க உணர்வுதான் வெளிப்படுகிறது. என்னைப் பொறுத்த வரை இந்த இரண்டு முறையுமே பெண்ணின் சுயமரியாதைக்கு, பெண் விடுதலைக்கு எதிரானவை, என்கிற அடிப்படையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!ஒழிக்கப் பட வேண்டியவைதான்!!
indiragandhi alangaram
நண்பர் தமிழ்மகன், ஏன் தப்புத் தப்பாக புரிந்து கொண்டு பதில் இட்டு இருககிறீர்கள்? தலைப்பு “ விபச்சாரம் வாழ்க!!! தேவதாசி முறை ஒழிக!!!“ . சிலர் தேவதாசி முறை மட்டும் ஒழிய வேண்டும், ஆனால், விபச்சாரம் இருக்க வேண்டும், என்று கருதுகிறார்கள். அதற்காக கிண்டலாக விபச்சாரம் வேண்டும், தேவதாசி முறை மட்டும் ஒழிய வேண்டுமாக்கும்.!!!
கழுதை .......ல் முன்னது என்ன, பின்னது என்ன? எல்லாம் பெண்ணைக் காமப் பண்டமாகப் பார்ப்பதன் வெளிப்பாடுதான் என்ற பொருளில் தான். கிண்டலாக இந்தத் தலைப்பை வைத்துள்ளேன். ஆனால், நீங்கள் தவறுதலாக, அதாவது நானும் கீற்றும் விபச்சாரத்தை ஆதரிப்பதாக புரிந்து கொண்டீர்கள். இரண்டுமே பெண்ணை பாலியல் பண்டமாகப் பார்ப்பதன் வெளிப்பாடுதான். தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது போலவே விபச்சாரமும் ஒழிக்கப் பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.