தொடர்புடைய படைப்புகள்

அமெரிக்கர்களை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நான் அமெரிக்கன் என்று பெருமையோடு சொல்வார்கள்; ஆங்கிலேயர்களை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும், நான் ஆங்கிலேயர் என்று பெருமையோடு சொல்வார்கள்; ஆனால் இந்தியாவில் உள்ள 100 % சதவிகித மக்களும் நான் இந்தியன் என்று பெருமையோடு சொல்வார்களா? உலகில் அடிமைத்தளையில் இருந்து விடுதலையான எந்த நாட்டிலாவது, அந்த நாட்டின் மக்கள், அந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்தது உண்டா? இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் அப்படி ஒரு துர்பாக்கிய சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்றே நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இங்கே ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு உள்ளது.

என் வீடு எப்படி சிறந்த வீடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்படியே என் நாடும் சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்; அதே வேளையில் என் தந்தை சிறந்த தந்தையாக இல்லாத பட்சத்தில் நான் எப்படி என் தந்தை சிறந்த தந்தை என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் என் நாடு சிறந்த நாடாக இல்லாத பட்சத்தில், நான் எப்படி என் நாட்டை சிறந்த நாடு என்று பெருமை கொள்ள முடியும்? ஒரு நாடு சிறந்த நாடாக அல்லது முன்னேறிய நாடாக அல்லது மற்ற நாடுகளுக்கு முன்மாதிரி நாடாக இருக்க வேண்டுமானால் அந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லாவிட்டாலும் நிரம்ப வேறுபாடுகள் இருக்க கூடாது; ஒட்டி உறவாட நெருங்கிய நெருக்கம் இல்லை என்றாலும், நெருங்கவே முடியாத அளவில் முரண்பாடு இருக்க கூடாது!

dalit_child_250வேறுபாடுகள் எல்லா நாட்டிலும் இருந்தாலும், சாதி எல்லா மதங்களிலும் இருந்தாலும் இந்துமதத்தை தவிர வேறு எந்த மதங்கள் சாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இந்தியா மதசார்பற்ற நாடு என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும், இந்தியாவை ஆள்வது இந்துமதமே; இந்தியாவின் பிரிவினைக்கு காரணமும் இந்துமதமே; ஆகவே இந்து மதத்தைப் பற்றியே இங்கே பார்ப்போம்...இந்தியாவில் மட்டுமே வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக நான் சொல்லவில்லை. எல்லா நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, இந்தியாவிலும் இருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளை தவிர்த்து வளர்ந்த நாடுகளிலும், இன்னபிற வளரும் நாடுகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தொழிலைச் சார்ந்தது, வர்க்கத்தைச் சார்ந்தது; ஆனால் இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பு; அதாவது இந்தியாவில் சாதிதான் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்கிறது. பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது!

இந்தியா போன்ற நாடுகளில் பிறப்பின் அடிப்படையில் சாதி தீர்மானிக்கப்படுவதால், சாதியின் அடிப்படையில் தொழில் வரையறுக்கப்படுவதால்தான் இங்கே வர்க்க ஏற்றத் தாழ்வுகள் களைய முடியாத காரணியாக வேர்விட்டு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? அதற்கு கம்பர் சொல்வது....

"வன்மை இல்லை ஓர் வறுமை இல்லையாம்;
திண்மை இல்லையோர் செறுநர் இல்லையாம்;
உண்மை இல்லை பொய் உரை இல்லையாம் ;
ஒண்மை இல்லையல் கேள்வி ஒங்கலால் !"

ஆனால் இந்தியாவில் வன்மை, வறுமை, திண்மை, உண்மை, பொய் உரை, கேள்வி இவை அனைத்தையும் சாதியே தீர்மானிக்கிறது.

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவை வடிவமைத்ததும், இந்தியாவில் முரண்பாடுகளுக்கு வழிகாட்டுவதும் இந்து மதமே! இந்தியா மதச் சார்பற்ற நாடுதான் என்றால் இங்கே இசுலாமியர்கள் ஏன் சிறுபான்மையினர் பட்டியலுக்கு சென்றார்கள்? தலித்துகள் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலுக்கு சென்றார்கள்? வன்மையை இந்துமதம் எப்படி வளர்க்கிறது என்றால் இங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நிகழாதவரை இந்துக்களுக்குள் எந்த ஒட்டும் இல்லை; உறவும் இல்லை! ஒவ்வொரு இந்துவும் தத்தம் சாதியை உயர்ந்தது என்றும், மற்ற சாதிகளை தாழ்ந்தது என்றும் மலிவான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்! சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு பேசும்போது வன்முறை நிகழ்கிறது; அந்த வன்முறையை இந்துமதம் ஊக்குவிக்கிறது! உதாரணம் தருமபுரியில் 300 தலித் குடிசைகள் தீக்கிரையான சம்பவம்.
சில தொழில்களை இழிவான தொழில்கள் என்று ஒதுக்கி தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது திணிப்பதால் அவர்களும் அந்தத் தொழில்களை செய்ய மறுக்கிறார்கள்; வேலை இல்லாததால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் வறுமை குடி கொள்கிறது; அந்த வறுமையை இந்துமதம் வேடிக்கைப் பார்த்து சிரிக்கிறது! இந்து மதத்திலே உண்மை, நேர்மை என்பதே கேலிக் கூத்தானது! வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது போல உயர்சாதிக்காரன் சொல்வதே உண்மையாக இங்கே நிலை நிறுத்தப்படுகிறது. எப்படி என்பீர்களேயானால் இந்தியாவின் உயர் பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்; அது நீதித்துறையானாலும் சரி, ஆட்சி அதிகாரம் ஆனாலும் சரி! ஆட்சி அதிகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கு கொள்ளத்தானே தனித் தொகுதி முறை இருக்கிறதே என்று நீங்கள் வாதிடுவீர்களேயானால், தனித்தொகுதியில் யார் நிற்க முடியும் என்றால் "தேவிக்கு பிரியமானவன் பூசாரி" ஆவதைப் போல சோனியாவுக்கும், அத்வானிக்கும், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேண்டியவர்கள், ஆடுகளைப் போல தலையாட்டுபவர்கள் அங்கே நின்று வெற்றி பெறலாம்! அவர்களால் தலித்துகளுக்கு எவ்வித பிரயோஜனமும் கிடையாது!

பத்திரிக்கைத் துறைகளில் செய்திகளை இறுதி செய்யும் இடங்களில் பார்ப்பனர்களே இருக்கிறார்கள். எந்த செய்தியை உண்மையாக்க வேண்டும், எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். பொய்யான தகவல்களை அளித்தும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிட்டு பொய் உரை எழுதுகிறார்கள். அதனால் நாட்டிலே எந்தவித முன்னேற்றமோ, மக்களிடம் எந்தவித விழிப்புணர்வோ உருவாகவில்லை!

சாதியின் மூலம் வறுமை, வன்மையை மட்டும் இந்துமதம் தீர்மானிக்கவில்லை; தலித்துகளின் விருப்பங்களை, அடிப்படி உரிமைகளைக் கூட தடுக்கிறது. நல்ல உடை அணிய முடியவில்லை, விரும்பிய வாழ்க்கையை வாழ முடிவதில்லை, விரும்பிய தொழிலை செய்ய முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடிவதில்லை! தற்போது கூட ராமதாஸ் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டு வன்னியப் பெண்களை ஏமாற்றுவதாக சொல்கிறார். அவருக்கு வன்னியப் பெண்கள் மீதோ, வன்னிய சமூகத்தின் மீதோ அக்கறை இல்லை; தலித்துகள் நல்ல உடை உடுத்துவது அவரது கண்ணை உறுத்துகிறது, மேலும் தமிழருவி மணியன் இன்னமும் ஒருபடி மேலே சென்று 'தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணக்கிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பெறுமான‌தாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்' என்று வேதனைப் பட்டு இருக்கிறார் ( நக்கீரன் - 29.12.2012 )

தமிழருவி மணியனுக்கு தலித் தலைவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு ஆடை அணிவது பிரச்சனையாக இருக்கிறது. எல்லா தலித் மக்களையும் போல கோவணம் அணிய வேண்டியதுதானே என்பதுதான் அவரது கருத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. மேலும் தருமபுரியில் நடந்த தீவைப்பு சம்பவத்திற்கு சாதி மறுப்புத் திருமணம் தான் காரணம் என்று சொல்கிறார்கள்; ஆனால் அங்கே இருந்த தலித்கள் எல்லோரும் நல்ல நிலைக்கு வளர்ந்தவர்கள்; அவர்களின் வாழும் வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்ள முடியாத உயர் சாதிக்காரர்கள் செய்த நயவஞ்சகமே இதற்குக் காரணம் என்பதற்கு சாட்சி அங்கே கொளுத்தப்பட்ட வீடுகளில் கொள்ளை போன கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகளே.

ambedkar_237_copyஅப்படியே கூட அங்கே நடந்த கலவரத்திற்கு சாதி மறுப்புத் திருமணம் தான் காரணம் என்றால் இந்த கொடுமைக்குக் காரணம் சாதியே; அதன் ஊடாக இந்து மதமே! இந்துமதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறதா? என்றால் இசுலாமிய மதத்திலும் உள்ளது; சீக்கிய மதத்திலும் இருக்கிறது; இன்னபிற மதங்களிலும் உள்ளது! ஆனால் இந்துக்கள் சாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மற்றவர்கள் கொடுப்பதில்லை! ஒரு இசுலாமியரிடம் நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நான் இசுலாமியர் என்று சொல்வார்; அதோடு நமக்கு மனநிறைவு கிடைத்துவிடும். மேலும் அவரிடம் நீ சன்னியா? ஷேக்கா? சையதா? காபுக்கா? பிஞ்சாரியா? என்று கேட்கமாட்டோம். ஒரு சீக்கியரிடம் நீ யார் என்று கேட்டால் நான் சீக்கியர் என்று சொல்வார்; அதற்கு மேலும் அவரிடம் நாம் நீ ஜாதா? ரோடாதா? ஜ்பியா? ராம்தாசியா? என்று கேட்கமாட்டோம். ஆனால் ஒரு இந்துவிடம் மட்டும் நான் இந்து என்று சொன்னாலும் அவன் என்ன சாதி என்று அறிய ஆசைப்படுகிறார்கள். மேலும் சாதிக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை இசுலாமிய மதமோ, சீக்கிய மதமோ சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில்லை; ஆனால் இந்து மதத்தில் சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் சாதியை விட்டு வில‌க்கி வைத்து விடுவார்கள். இதிலிருந்து புரிந்த கொள்ளலாம், இந்துக்கள் சாதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை. இதைவிட இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது, இந்துக்கள் அல்லாதோரின் சாதிக்கு மத ஆதரவு கிடையாது; இந்துக்களின் சாதிக்கு அடிப்படையே மதம் தான்.

இந்து மதத்தில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், குறிப்பாக ஒரு தலித் மற்றொரு உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்வதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் இந்து மதத்திலே ரத்த சொந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்து மதத்தில் சம்பந்தி உறவு என்பது ரொம்ப முக்கியமானது; சம்பந்தியைத் தவிர்த்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் தனக்கு சரி நிகராக அமர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமாக இருக்கமாட்டார்கள் என்று. இதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் எழுப்பிய கேள்வி "தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றால் அவர்களை நாகரிகப்படுத்த ஒரு பாதிரிமார் எடுக்கும் முயற்சியை ஏன் ஒரு இந்து எடுப்பதில்லை? அந்த முயற்சியை ஒரு இந்து எடுத்தால் அவர்கள் நாகரிகம் அடைவார்களா? மாட்டார்களா?" என்று கேட்டு இருக்கிறார்.

புரட்சியாளரின் கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை. எந்த ஒரு இந்துவும் இதற்கு பதில் சொல்லமாட்டான்; தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை; அப்படி அவர்களும் நாகரிகம் அடைந்து விட்டால் அது இந்துக்களுக்கு பெரிய ஆபத்தாக முடியும் அல்லவா! அதனால் அவர்கள் இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள். பள்ளத்தில் விழுந்த ஒருவனை மேலே தூக்க வேண்டுமானால் அவனுக்கு நிகராக நாமும் வளைந்து கொடுத்து, நம்முடையை கையை அவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படித்தான் நாகரிகம் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை தூய்மைப்படுத்த வேண்டுமானால் இந்துக்களும் அவர்கள் இருக்கும் சேரிக்கு செல்ல வேண்டும். அதை இந்துக்கள் விரும்பவில்லை.

மேலும் இந்து மதத்திலே தான் அதிக சாதிக்கலவரங்கள் நிகழ்கின்றன; மேலும் இந்து மதத்திலே உயர்சாதி என்பது பார்ப்பனர்கள் என்று சொல்கிறாகள். ஆனால் இதுவரை பார்ப்பனருக்கும், வன்னியருக்கும் கலவரம் நடந்தது என்றோ, பார்ப்பனருக்கும், பறையர்க்கும் கலவரம் நடந்தது என்றோ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் கண்டதுமில்லை; கேள்விப்பட்டதும் இல்லை; காரணம் இடைநிலை சாதிகள் மோதிக்கொண்டு இருக்கும்வரை பார்ப்பனருக்கு எந்தவிதத் தொந்தரவோ, இந்துமதத்திற்கு எந்த ஆபத்தோ கிடையாது. அதனால் தான் ஊருக்கு ஊரு சாதி; சாதிக்கு பல உபசாதி என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். சாதியை உருவாக்கியது இந்துமதம் என்றாலும், சாதியை மனிதர்களிடம் புகுத்தியது பார்ப்பனர்கள் என்றாலும், பார்ப்பனர்கள் நேரடியாக கலவரத்திலே ஈடுபடுவது கிடையாது. தம் மதத்திலே நடக்கும் கலவரத்தை எண்ணி வெட்கப்படுவதும் கிடையாது; மாறாக வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்கள்; பார்ப்பனர்கள் நலமுடன் இருக்க இடைநிலை சாதிகளைத் தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட‌ சாதி மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நிகழ்த்துகிறார்கள். பார்ப்பனர் ஒருவர் நலமுடன் இருக்க வன்னியரும், பறையரும் மோதிக்கொள்ளலாமா?

தம் மதம் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ, தம் நாடு சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ அவர்களுக்கு கிடையாது; தாம் நலமுடன் இருக்கவேண்டும், தம்முடைய ரத்த சொந்தங்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்ற சுயநலம் மட்டுமே அவர்களுக்கு உரியது! ஒரு சிலருக்காக நாம் பலியாக முடியுமா? அதனால் தான் சொல்கிறோம், சாதி ஒழியவேண்டும் என்று !

சாதி, சாதிக் கலவரங்களை மட்டும் உருவாக்கவில்லை, பரம்பரை பகையையும் உருவாக்குகிறது; எப்படி என்றால் பண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற "ரோஸ்", "கிராமவெல்" போர்களில் தற்கால ஆங்கிலேயர்களின் மூதாதைகள் இருபிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள்; ஆனால் அவ்வாறு போராடியவர்களின் சந்ததிகள், தற்கால ஆங்கிலேயர்கள் பழங்காலப் போரையே மறந்துவிட்டார்கள்; பழம் பகையை பாராட்டிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்; ஆனால் இந்தியாவில் தற்கால பார்ப்பனர்களின் மூதாதைகள் இதர சாதியினருக்கு செய்த கொடுமைக்கு, தற்கால பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதோரால் பகைமையோடு பார்க்கப்படுகிறார்கள். இன்னபிற உறர்சாதிக்காரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களால் பகைமையோடு பார்க்கப்படுகிறார்கள்! நேற்றைக்கு என் தந்தை பகைமை பாராட்டினார்; இன்று நானும் பகைமை பாராட்டுகிறேன்; நாளை என் மகனும் பகைமை பாராட்டுவான்! இதைத் தான் சாதி விரும்புகிறது; இந்துமதம் விரும்புகிறது.

பார்ப்பனர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; தாழ்த்தப்பட்ட சாதியினரான பறையர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; இன்னபிற இடைநிலை சாதியினரும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; ஆனால் இந்துமதம் எல்லோருக்குமான மதம் அல்ல; இந்துமதம் எல்லோருக்குமான மதமாக இருந்திருந்தால் ஓர் இந்து, இன்னோர் இந்து வீட்டிற்கு தீ வைப்பானா? ஓர் இந்துவின் வாயில் இன்னோர் இந்துவே மலத்தை திணிப்பானா? இப்படிபட்ட அவலங்கள் இசுலாமிய மதத்திலோ, சீக்கிய மதத்திலோ இன்னபிற மதங்களிலோ நடந்தது உண்டா? இந்துக்கள் அல்லாதோரின் மதங்களில் பிரிவினை இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமைக்கு, சகோதரத்துவக்கு வழி செய்ய அந்த மதங்கள் அடிப்படையாக இருக்கின்றன; ஆனால் இந்துமதத்தின் அடிப்படைவாதமே பிரிவினை தான்.

சாதி இன்று பல்வேறு பரிணாமங்களை தொட்டு வளர்ந்து வரும் விஷச்செடி! சாதி ஒழிப்பு இயக்கங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், சனநாயக சக்திகள், மனிதநேய விரும்பிகள் இப்படி எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் சாதியத்தின் மீது இன்னமும் சின்ன சிராய்ப்புக் கூட விழவில்லையே ஏன்? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களின் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சாதியத்தை சாய்ப்பது அல்லது வேரறுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சாய்க்கமுடியாது, வேரறுக்க முடியாது. ஆனால் வளராமல் தடுக்க முடியுமல்லவா? ஏன் வளர்கிறது? நவீன யுக்தியையும் பயன்படுத்தி வளர்கிறதே எப்படி? ஏன்? செல்போன், இணையம், ஐ பேட், இவை எல்லாவற்றிலும் சாதியம் இருக்கத்தானே செய்கிறது. எங்கிருந்து வளர்கிறது? தடுக்க என்ன வழிமுறை இருக்கிறது? என்பது தான் நம்முன் கிடக்கும் மிகப்பெரிய சவாலான கேள்வியும் கூட!

dalit_woman_312சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்களை முக்கியமாக சொல்லலாம். ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது. இந்த எண்ணங்களை இந்துமதம் ஊக்குவிக்கிறது, பயிற்றுவிக்கிறது என்றுகூட சொல்லலாம்.

இந்துமதத்தின் வேதநூல்களில் சாதி மலிந்து கிடக்கிறது; அப்படிப்பட்ட வேதநூல்கள் இறைஅருள் பெற்ற முனிவர்களாலும், மகான்களாலும் எழுதப்பட்டது என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது! சாதியின் மீதான நம்பகத்தன்மையை உருவாக்க, அந்த நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்த்துப் போகாமல் இருக்க, கடவுளின் கிருபை சாதி என்று இந்து மதம் புரளியைக் கிளப்புகிறது. அந்த நம்பிக்கையில், கடவுளின் மீதான பற்றினாலும், அச்சத்தினாலும் இன்று பெரும்பான்மை மக்கள் சாதியை ஆதரிக்கவே செய்கிறார்கள். ஆகவே அவர்கள் பெரும்பான்மையினர் என்று வைத்துக் கொள்வோம். அந்த வகையில் சாதியை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரே ! ஒருசாரார் நடுநிலை வகிக்கிறார்கள். சாதியைப் பற்றி பேசாமல் இருந்தாலே சாதி ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். சாதியை ஆதரிப்பவர்களை விட நடுநிலை என்ற போர்வையில் இருப்பவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அவர்களின் மவுனம் பெரும்பான்மை கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும்; ஏன் எனில் சாதியை விரும்பவில்லை என்றால் எதிர்க்கலாம்; ஆனால் சாதியை எதிர்ப்பவர்களிடமும் பலன் எதிர்பார்ப்பதால் தான் அவர்கள் நடுநிலை வகுக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன இந்தியாவில் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணற்றில் நீர் எடுக்க முடியவில்லை; பொது சாலையில் நடக்க முடிவதில்லை; நல்ல உடை அணிய முடிவதில்லை; நல்ல வாழ்க்கை வாழ முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை; அச்சில் ஏற்ற முடியா எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன; இவை அனைத்திற்கும் காரணம் சாதியே!உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு புரட்சி இதுவரை நடக்கவில்லை; அப்படியானால் இங்கே தூய்மையான ஆட்சி நடக்கிறதா? அப்படி ஒரு புரட்சி நடக்காத வரை இந்தியா எந்த விதத்திலும் முன்னேற வாய்ப்பே இல்லை. அதுபோலவே இங்கே புரட்சி நிகழவும் வாய்ப்பே இல்லை. ஏனெனில் இங்கே சாதி ரீதியாக ஒன்றுபடுவார்கள், மத ரீதியாக ஒன்றுபடுவார்கள். ஆனால் மனிதநேய ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள்.

சாதியை வைத்தே ஒருவனின் நம்பகத்தன்மையை அல்லது அவனது குணாதிசயங்களை தீர்மானிக்கிறார்கள். சாதி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கவில்லை, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது; ஒட்டுமொத்த நாட்டின் பிரிவினைக்கே வித்திடுகிறது; அதனால் தான் இந்தியா இன்னமும் ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தை அடையக்கூட அருகதை அற்றுக் கிடக்கிறது! சாதியின் முன் நீதியே மண்டியிடும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் அரங்கேறா கொடிய நிகழ்வாக இருக்கிறது. இந்தியாவில் ஊழல், கொள்ளை, கொலை, வன்புணர்வு, தீண்டாமைக் கொடுமைகள் இவை அனைத்தும் அன்றாட நிகழ்வாகிவிட்டாலும் ஒட்டுமொத்த தேசமக்கள் ஏன் இதுவரை ஓரணியில் திரளவில்லை? அதற்குக் காரணம் என்ன? அவர்களுக்கு இடையில் இருக்கும் தடுப்புச் சுவர் எது? இவை எல்லாவற்றிற்கும் காரணம் சாதியும் அந்த சாதியை ஆதரிக்கும் இந்து மதமுமே... ஒருநாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும், ஒரு நாட்டின் மக்களைப் பிரிவினைப்படுத்தும் சாதி வேண்டுமா? என்பதை இந்தியா முன்னேற வேண்டும் என்று விரும்புகிறவர்களும், தன்னை இந்து என்று பெருமை பொங்க கூறுபவர்களும் சிந்திக்கவேண்டும்...

இப்போது சொல்லுங்கள் ....சாதி ஒழிந்தால் நல்லதா?
ஒழியவில்லை என்றால் நல்லதா?

(உதவிய நூல் : புரட்சியாளர் அம்பேத்கரின் "சாதி ஒழிக்க வழி")

- அங்கனூர் தமிழன் வேலு

Comments

39 comments

39
குருநாதன் சிவராமன்
மிக அருமை!

//சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்களை முக்கியமாக சொல்லலாம். ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது.//

இவை அனைத்துக்கும் இந்து மதம் மட்டுமே காரணம் என்ன சொல்லி முடித்து விட முடியாது.
தனி மனிதனின் மனதும் காரணம்.
சாதியை விட்டு வெளிவர மனமும் இடம் கொடுப்பதில்லை.
சாதி ஒழிப்பை அவரவர் தன மனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
குருநாதன் சிவராமன்
இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவமும் சாதியை ஊக்குவிக்கிறது.
krishna
வெள்ளை சட்டை போட்ட, கருப்பு உள்ளம் கொண்ட அரசியல்வாதிகளே சமத்துவம் வளர பாடுபடுங்கள்.இல்லையேல் எதிர்கால வரலாறூ மன்னிக்காது.
இனியன்
.//தனி மனிதனின் மனதும் காரணம்/// தனிமனிதனின் மனதைக் கட்டுப்படுத்துவது எது மதம்தானே?மனிதனின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுததுவது அவன் சார்ந்த மதமே பெரும் காரணமாக இருக்கிறது. மதம் ஒழிந்த இடமே மானுடம் தழைக்கும் இடம்.

மதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை ஒழித்துவிடலாம் என்பது பகல் கனவே.கடவுள்பற்று,மதப்பற்று, ஜாதிப்பற்றுஇவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்தது ....இதில் எதொன்றின் மீது பற்றுஇருந்தாலும் மற்ற இரண்டையும் நாம் ஆதரிப்பதாகவும் கைக்கொள்ள தயாராக இருப்பதாகவுமே பொருள்படும்.
Guest
கிறிஸ்து ஜாதி பார்ப்பதை வெறுக்கிறார். "உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி" என்று சொன்ன அந்த கருணாமூர்த்தியை புரிந்து கொள்ளாத ***** கிறிஸ்தவர்கள் தான் ஜாதி பார்ப்பார்கள். சகோதரர் அகத்தியன் ([email protected]) 9080490801
[email protected]
தயவு செய்து ,ஜத்திகல்ள் ஊருவவன கதை சொல்ல முடொயும சகொய்ஹரரெ ....
John Paul
சாதி ஒழிப்பை அவரவர் தன மனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை நான் முழு மனதார ஆதரிக்குறேன்.
John Paul
"பார்ப்பனர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; தாழ்த்தப்பட்ட சாதியினரான பறையர்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; இன்னபிற இடைநிலை சாதியினரும் தங்களை இந்துக்கள் என்று சொல்கின்றனர்; ஆனால் இந்துமதம் எல்லோருக்குமான மதம் அல்ல; இந்துமதம் எல்லோருக்குமான மதமாக இருந்திருந்தால் ஓர் இந்து, இன்னோர் இந்து வீட்டிற்கு தீ வைப்பானா? ஓர் இந்துவின் வாயில் இன்னோர் இந்துவே மலத்தை திணிப்பானா? இப்படிபட்ட அவலங்கள் இசுலாமிய மதத்திலோ, சீக்கிய மதத்திலோ இன்னபிற மதங்களிலோ நடந்தது உண்டா? இந்துக்கள் அல்லாதோரின் மதங்களில் பிரிவினை இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமைக்கு, சகோதரத்துவக்கு வழி செய்ய அந்த மதங்கள் அடிப்படையாக இருக்கின்றன; ஆனால் இந்துமதத்தின் அடிப்படைவாதமே பிரிவினை தான்."

இந்த வரிகளை நான் சகோதரர் குருநாதன் சிவராமன் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இந்து மதத்தின் அடிப்படையே சாதி தான். கிறிஸ்துவத்தில் சாதி என்ற ஓன்று இல்லை. ஆனால் கிறிஸ்துவத்தின் பெயரில் கிறிஸ்துவை ஏற்று கொள்ளாத மக்கள் சாதி வேற்றுமை பார்பார்கள். குறிப்பிடத்தக்க காரியம் கிறிஸ்துவத்தில் மக்கள் இப்படி இருப்பதால் தான் கிறிஸ்துவ தலித்துகள் ஒரு சபையில் மற்றும் அதிகமாக இருக்கிறார்கள். கிறிஸ்தவம் எனபது மறை அதனை அதில் வாழும் போலி கிறிஸ்துவர்களை வைத்து அளவிட முடியாது. என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜாண் பால். 8438425642
பெருமாள் தேவன்
சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகள்

1. சாதி ஒழிப்பு என்பது என்ன? அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? அது மத ஒழிப்புடன் தொடர்பு கொண்டதுதானா? அதற்கான காலக்கெடு என்ன? அதில் யாருக்கு என்ன பங்கு உண்டு? போன்றவற்றை தெளிவாக வரையறுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிரதியை இணையத்தில் போட வேண்டும்.

2. தனது சான்றிதழில் சாதி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஒரு 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் தான், சாதி - மதங்களிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்து நோட்டரி செய்து அதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும்.

3. சாதியில் இருந்து வெளியேற முடியாதவர்களை இழிவாக பேசுவதால் முதலில் இவர்கள் தங்களிடம் என்னென்ன தீய பழக்கங்கள் இருந்தன/ இருக்கின்றன. அவற்றை எப்படி/ எத்தனை காலத்திற்குள் விட்டார்கள்/ விட திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிவித்து அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

4. இவர்கள் தங்கள் உறவினர்கள்/ நண்பர்களிடம் சாதி ஒழிப்புக் கருத்துக்களை கூறி அதற்கு என்ன விதமான பதில் கிடைத்தது? அவர்கள் எத்தனை காலத்திற்குள் மாறத் தயார்/ எத்தனை பேர் மாறியுள்ளனர் என்று அறிவிக்க வேண்டும்.

5. தங்களது சொந்த ஊரில், தாங்கள் குடியிருக்கும் தெருவில் சாதி ஒழிப்பு பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த கூட்டத்திற்கு யார் யார் வந்தார்கள்? அவர்களது கருத்து என்ன என்று தெரிவிக்க வேண்டும். இதுபோல ஒரு வருடத்தில் எத்தனை கூட்டங்களை நடத்தினார்கள் என்றும் அவற்றின் பலன் என்னவென்றும் தெரிவிக்க வேண்டும்.

6. அவ்வாறு சாதியிலிருந்து வெளியேறும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா? அந்த பிரச்சனைகளை இவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.

7. தனது ஊரில் தனது பகுதியில் சாதியின் பெயரால் என்னென்ன அவலங்கள் நடக்கின்றன? அவற்றை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுத்தார், அதற்காக அங்குள்ள மக்களை சந்தித்து பேசினாரா? அதற்கு என்ன பலன் கிடைத்ததா என்று தெரிவிக்க வேண்டும்.

8. தனது உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஏதாவது சாதிக் கொடுமைக்கு ஆளாகுகிறார்களா? இல்லை ஆளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிந்து அவருக்கு உதவி செய்கிறாரா என்பது பற்றி விவரிக்க வேண்டும்.

9. ஒரு அமைப்பு - கட்சியில் உள்ளவர்கள், தனது - கட்சியின் தலைவர் சாதி பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளார், அதனை சரியாக கடைப்பிடிக்கிறாரா? என்று பார்த்து அதை தெரிவிக்க வேண்டும். தனது அமைப்பு - தலைவர் அவ்வாறு இல்லாத போது என்ன செய்தார் என்பதை விவரிக்க வேண்டும்.

10. சாதி பற்றிய அரசின் கொள்கை என்ன? அரசாங்கம் சாதியை ஒழிக்க விரும்புகிறதா? அப்படியானால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது அரசாங்கத்திற்கு கடிதமாக எழுதி அனுப்ப வேண்டும். அதற்கான பிரதிகளை இணையத்தில் போட வேண்டும்.

11. இந்தியாவில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் சாதியை ஒழித்து விடலாமா, அதற்கு இந்திய சட்டங்கள் தடையாக இருந்தால் என்ன செய்வார் அல்லது வடமாநிலங்களில் சாதி ஒழிப்பை எவ்வாறு பரப்புவார் என்று விளக்க வேண்டும்.

வேறு ஏதாவது தகுதிகள் இருக்க வேண்டும் என்று கருதினால் நண்பர்கள் அவற்றை சேர்க்கவும்.

இதில் ஒன்றைக் கூட செய்ய முடியாதவர்கள் தயவு செய்து சாதி ஒழிப்பு பற்றி பேசாதீர்கள்.
பெருமாள் தேவன்
அதெல்லாம் சரி, சாதியை மட்டும் ஒழிக்க வேண்டும், மதத்தை விட்டுவிடலாமா?

சாதி ஒழிப்புக்கு தலித்கள் தயாரா? தலித்கள் தங்கள் சாதியை விட்டு வெளியே வரத் தயாராக இருக்கிறார்களா?

இல்லை தலித்கள் தங்கள் சாதியை சான்றிதழில் பத்திரப்படுத்திக் கொள்ள மற்றவர்கள் மட்டும் சாதியிலிருந்து வெளியே வரவேண்டுமா?
பெருமாள் தேவன்
சாதி கெட்டது என்று சொல்லும் தலித்கள் ஏன் முதலில் அதிலிருந்து வெளியே வரக்கூடாது?
பெருமாள் தேவன்
ஜாண் பால் இதைப் பயன்படுத்தி மதப் பிரச்சாரம் செய்கிறார். பாவம் சாதி சர்ச்களைப் பற்றி இவருக்குத் தெரியாது போலும்.
பெருமாள் தேவன்
//ஆனால் இந்து மதத்தில் சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் சாதியை விட்டு வில‌க்கி வைத்து விடுவார்கள். இதிலிருந்து புரிந்த கொள்ளலாம், இந்துக்கள் சாதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை. இதைவிட இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது, இந்துக்கள் அல்லாதோரின் சாதிக்கு மத ஆதரவு கிடையாது; இந்துக்களின் சாதிக்கு அடிப்படையே மதம் தான்.//

சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்துதானே எல்லாரும் சாதியில் இருக்கிறார்கள்? எத்தனை தலித்கள் தங்கள் சமுதாயத்தை பகைத்து வெளியே வரத் தயாராக இருக்கிறார்கள்?

மற்ற மதங்கள் பிரிவினையை அங்கீகரிக்கவில்லை என்றால் ஏன் அந்த பிரிவினைகள் அந்த மதங்களில் இருக்கின்றன?

அந்த பிரிவினை அங்கே தேவைப்படுகிறது என்ற காரணத்தாலேதானே இருக்கிறது? அப்புறம் எப்படி அதைத் தவறு என்று சொல்ல முடியும்? மற்ற மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் சில வேறுபாடுதான். ஆனால் நீங்கள் மற்ற மதங்களை வானளாவ தூக்கி பிடிக்கிறீர்கள்.

அப்படியானால் ஒட்டுமொத்த தலித்களுமே அந்த மதங்களுக்கு மாறிவிட வேண்டியதுதானே?
பெருமாள் தேவன்
//இந்து மதத்தில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், குறிப்பாக ஒரு தலித் மற்றொரு உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்வதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் இந்து மதத்திலே ரத்த சொந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்து மதத்தில் சம்பந்தி உறவு என்பது ரொம்ப முக்கியமானது; சம்பந்தியைத் தவிர்த்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் தனக்கு சரி நிகராக அமர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.//

அதையேதானே தலித்களும் செய்கிறார்கள்? தலித்களே தங்களுக்கு கீழான சாதியினருக்கு தங்கள் பெண்களை கொடுக்க விரும்பாதபோது உயர்சாதிக்காரர்கள் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது?

ஒரு தலித் ரோட்டோரம் வசிக்கும் ஒருவருக்கு தன் பெண்ணை கொடுக்க முன்வருவாரா? நரிக்குறவருக்கு தன் பெண்ணை கொடுக்க முன்வருவாரா?
பெருமாள் தேவன்
--// இதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் எழுப்பிய கேள்வி "தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றால் அவர்களை நாகரிகப்படுத்த ஒரு பாதிரிமார் எடுக்கும் முயற்சியை ஏன் ஒரு இந்து எடுப்பதில்லை? அந்த முயற்சியை ஒரு இந்து எடுத்தால் அவர்கள் நாகரிகம் அடைவார்களா? மாட்டார்களா?" என்று கேட்டு இருக்கிறார்.//

அங்கனூர் தமிழன் வேலுவை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது.

கிறிஸ்தவர்களுக்குத் தேவை ஏழைகள், அனாதைகள், சிந்திக்கத் தெரியாதவர்கள், பிச்சைக் காரர்கள், விலைமாதர்கள். ஏனெனில் அவர்களிடம்தான் மதப் பிரச்சாரம் செய்ய முடியும்.

படித்தவர்கள், பணக்காரர்கள், அறிவாளிகளிடம் மதப் பிரச்சாரம் எடுபடாது. அதனால்தான் ஓஷோவைக் கண்டு திருச்சபை கடுங்கோபம் கொண்டது. ஏனெனில் அவர் பின்னால் சென்றவர்கள் இரண்டாவது வகையினர்.

இதுவெல்லாம் கிறிஸ்தவத்தை புகழும் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

சரி, அதே கிறிஸ்தவம் ஏன் தலித்கள் அனைவர் மேலும் கரிசனம் கொள்வதில்லை. ஏன்னா அவர்கள் மதம் மாற்றத்தை முன்வைத்துத்தான் அனைத்து வேலைகளையும் ஆரம்பிப்பார்கள்.
பெருமாள் தேவன்
//தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை;//

அவர்கள் விரும்பவில்லை என்பதை விட தலித்களே அதற்கு தயாராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதி ஒழிப்புக்காக போராடும் எத்தனை தலித்கள் சக தலித்களின் வாழ்க்கையில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று பார்த்தால் இது உங்களுக்குப் புரிந்துவிடும்.
பெருமாள் தேவன்
//மேலும் இந்து மதத்திலே தான் அதிக சாதிக்கலவரங்கள் நிகழ்கின்றன;//

சாதிக் கலவரங்களை விட மதக் கலவரங்கள் கடுமையானவை என்பது பாவம் தமிழன் வேலுவுக்கு தெரியாது போலும்.

இந்தியா மூன்று துண்டுகளாக காரணமே இஸ்லாம் என்ற மதம்தான். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த பௌத்தம் பர்மாவில் இஸ்லாமியரைக் கொன்று குவிக்கிறது. இதையெல்லாம் வேலு வசதியாக மறந்துவிடுவார்.

ஏனெனில் அவரது நோக்கம் சாதி என்ற கட்டமைப்பை குறை சொல்வது.

பாவம், அம்பேத்கர் இப்போது இருந்திருந்தால் பௌத்தத்தின் செயல் கண்டு வருந்தி இருப்பார். தலித்களுக்கு பௌத்தத்தை பின்பற்றக் கூறியிருக்க மாட்டார்.
பெருமாள் தேவன்
// அதனால் தான் ஊருக்கு ஊரு சாதி; சாதிக்கு பல உபசாதி என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். //

சாதியை யாரும் உருவாக்கவில்லை. தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவான இனக்குழுக்கள் அவை.

சாதியால் ஏற்படும் தீமைகளை விட நன்மைகளே அதிகம். தீமைகள் தலித்களை அதிகமாக பாதித்ததால் அதை நீங்கள் சாடுகிறீர்கள்.

மற்றபடி சலுகை என்று வந்துவிட்டால் சாதிக்குத்தான் முக்கியத்துவம் தருகிறீர்கள். மற்றவர்கள் வேறு காரணங்களுக்காக சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பெருமாள் தேவன்
//இந்துக்கள் அல்லாதோரின் மதங்களில் பிரிவினை இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமைக்கு, சகோதரத்துவக்கு வழி செய்ய அந்த மதங்கள் அடிப்படையாக இருக்கின்றன; ஆனால் இந்துமதத்தின் அடிப்படைவாதமே பிரிவினை தான்.//

இது உண்மையானால் ஈரானும் ஈராக்கும் எதற்காக மோதிக் கொண்டன? குர்திஷ் இன மக்கள் ஏன் கொல்லப்பட்டனர்?

கிழக்குப் பாகிஸ்தான் மீது எதற்காக மேற்குப் பாகிஸ்தான் போர் தொடுத்தது?

சும்மா கதை விடாதீங்க, வேலு. நாடு என்று வரும்போது யாரும் மதத்தைப் பார்ப்பதில்லை.
பெருமாள் தேவன்
புத்த மதத்தை கடைப்பிடிக்கும் ஜப்பான் அதே புத்த மதத்தை கடைப்பிடிக்கும் சீனா மீது போர் தொடுத்தது எதற்காக?
பெருமாள் தேவன்
//சாதி ஒழிப்பு இயக்கங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், சனநாயக சக்திகள், மனிதநேய விரும்பிகள் இப்படி எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் சாதியத்தின் மீது இன்னமும் சின்ன சிராய்ப்புக் கூட விழவில்லையே ஏன்?//

சாதி அளிக்கக் கூடிய பயன்களில் இந்த அமைப்புகள் ஒரு சதவீதம் கூட கொடுக்க முடியாது என்பதால்.
பெருமாள் தேவன்
//சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்களை முக்கியமாக சொல்லலாம். ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது. இந்த எண்ணங்களை இந்துமதம் ஊக்குவிக்கிறது, பயிற்றுவிக்கிறது என்றுகூட சொல்லலாம்.//

பாவம் தமிழன் வேலு இந்து மதத்தின் ஒரு புத்தகத்தைக் கூட படிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
பெருமாள் தேவன்
//இந்துமதத்தின் வேதநூல்களில் சாதி மலிந்து கிடக்கிறது; அப்படிப்பட்ட வேதநூல்கள் இறைஅருள் பெற்ற முனிவர்களாலும், மகான்களாலும் எழுதப்பட்டது என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது!//

இந்து மதத்தின் முக்கிய நூலான பகவத் கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரமம் குணம் அடிப்படையிலானது.

அதையே பிறப்பின் அடிப்படையிலானது என்று திரித்து மனு கூறினார்.

மனுவிற்கும் இந்து மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மனு எழுதியது இந்து மத நூலும் கிடையாது. முக்கியமான இந்து நூல்கள் எதுவுமே பிராமணர்களால் எழுதப்பட்டவை கிடையாது.
பெருமாள் தேவன்
//ஏன் எனில் சாதியை விரும்பவில்லை என்றால் எதிர்க்கலாம்; ஆனால் சாதியை எதிர்ப்பவர்களிடமும் பலன் எதிர்பார்ப்பதால் தான் அவர்கள் நடுநிலை வகுக்கிறார்கள்.//

95 சதவீத மக்கள் சாதியில் இருக்கவே விரும்புகிறார்கள். இது தெரியாமல் பிதற்றுகிறார் இவர்.

உண்மையில் சாதி ஒழிப்பு சரியானது என்றால் அது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? அப்படி இல்லையென்றால் மக்கள் விரும்பாத ஒன்றை மக்கள் மீது திணிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
பெருமாள் தேவன்
//சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன இந்தியாவில் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணற்றில் நீர் எடுக்க முடியவில்லை; பொது சாலையில் நடக்க முடிவதில்லை; நல்ல உடை அணிய முடிவதில்லை; நல்ல வாழ்க்கை வாழ முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை; அச்சில் ஏற்ற முடியா எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன;//

இது அத்தனைக்குமே ஆதிக்க சாதியில் இருப்பவர்கள் ஒத்துழைத்தால்தான் மாற்றம் கொண்டு வர முடியும்.

மாறாக சாதியில் இருப்பவர்களை திட்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

அதுவே இன்று தலித்களுக்கு எதிரான கூட்டமைப்பு உருவாக காரணமாக உள்ளது.

மற்றொரு விஷயம், விரும்பிய பெண்களை தலித்கள் மட்டுமல்ல யாருமே திருமணம் செய்து விட முடியாது. திருமணத்திற்கான சமூக கட்டுப்பாடுகள் பல. அதையெல்லாம் மாற்ற முதலில் தலித்கள் தங்களை உயர்த்திக் காட்ட வேண்டும்.
பெருமாள் தேவன்
//இப்போது சொல்லுங்கள் ....சாதி ஒழிந்தால் நல்லதா?
ஒழியவில்லை என்றால் நல்லதா?//

ஒழிந்தால் நல்லது. ஆனால் ஒழிக்க விரும்புவது கெட்டது. அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

சாதியில் இருப்பவர் இருக்கட்டும், சாதியிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறிக் கொள்ளட்டும் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.
பெருமாள் தேவன்
//சாதி எல்லா மதங்களிலும் இருந்தாலும் இந்துமதத்தை தவிர வேறு எந்த மதங்கள் சாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை;//

இந்து மதம் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பிரிவினைகளை ஏற்கிறது. இந்த பிரிவினைகள் எல்லா மதங்களிலும் உள்ளன.
பெருமாள் தேவன்
--//பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது!//

இந்து மதம் கூறும் வர்ணாசிரமம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது பிறவிக் குணத்தை அடிப்படையாகக் கொண்டது.

அது உயர்வு தாழ்வு அடிப்படையிலானது அல்லது. கிடைமட்டமானது. ஆனால் மனு போன்றவர்கள் அதை தவறாக பிரச்சாரம் செய்து அதையே உண்மை என்று நம்ப வைத்துவிட்டனர். இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
பெருமாள் தேவன்
//இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவை வடிவமைத்ததும், இந்தியாவில் முரண்பாடுகளுக்கு வழிகாட்டுவதும் இந்து மதமே! இந்தியா மதச் சார்பற்ற நாடுதான் என்றால் இங்கே இசுலாமியர்கள் ஏன் சிறுபான்மையினர் பட்டியலுக்கு சென்றார்கள்?//

இது போன்ற ஒரு குளறுபடியான சட்டத்தை வடிவமைத்தது அம்பேத்கர்தானே?
பெருமாள் தேவன்
// அந்த வன்முறையை இந்துமதம் ஊக்குவிக்கிறது! உதாரணம் தருமபுரியில் 300 தலித் குடிசைகள் தீக்கிரையான சம்பவம். //

இதுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்? தலித்கள் ஆதிக்க சாதிப் பெண்களை காதலிப்பதும், அவர்களது கருவில் தலித்களின் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பது போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வோரே இது போன்ற குடிசை எரிப்புக்கு காரணமாகின்றனர்.

ஆனால் அந்தப் பிரச்சாரத்தைப் பற்றி நீங்கள் ஏதாவது சொன்னதுண்டா? அதை விட்டுவிட்டு குடிசை எரித்ததை மட்டும் பேசுகிறீர்கள். இதுதான் தலித்களின் இரட்டை வேடம்.
பெருமாள் தேவன்
//சில தொழில்களை இழிவான தொழில்கள் என்று ஒதுக்கி தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது திணிப்பதால் அவர்களும் அந்தத் தொழில்களை செய்ய மறுக்கிறார்கள்; வேலை இல்லாததால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் வறுமை குடி கொள்கிறது; அந்த வறுமையை இந்துமதம் வேடிக்கைப் பார்த்து சிரிக்கிறது! //

இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் கோடிக்கணக்கில் கொட்டி தலித்களை முன்னேற்றுகின்றனவா?

மதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்? அவனவன் தன் பிழைப்பைப் பார்த்தால் அவனது வருவாய் பெருகும், குடும்பம் முன்னேறும். நாடார்களுக்கு எந்த மதம் உதவியது? அவர்களும் தலித்கள்தானே? ஏன் மற்ற தலித்களால் அவர்களைப் போல முன்னேற முடியவில்லை?

முன்னேற்றத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்ட நாடார்களின் முன்னேற்றம் போதாதா?
பெருமாள் தேவன்
//ஆட்சி அதிகாரம் ஆனாலும் சரி! ஆட்சி அதிகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கு கொள்ளத்தானே தனித் தொகுதி முறை இருக்கிறதே என்று நீங்கள் வாதிடுவீர்களேயானால், தனித்தொகுதியில் யார் நிற்க முடியும் என்றால் "தேவிக்கு பிரியமானவன் பூசாரி" ஆவதைப் போல சோனியாவுக்கும், அத்வானிக்கும், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேண்டியவர்கள், ஆடுகளைப் போல தலையாட்டுபவர்கள் அங்கே நின்று வெற்றி பெறலாம்! அவர்களால் தலித்துகளுக்கு எவ்வித பிரயோஜனமும் கிடையாது!//

தலித்களுக்கு என்ன விதமான அரசியல் உரிமை பயன் தரும் என்கிறீர்கள்? இரட்டை வாக்குரிமை கொடுத்தால் தலித்களின் அரசியல் உரிமை மீட்கப்பட்டுவிடும் என்று கருதுகிறீர்களா?

இல்லை. ஒட்டுமொத்த அரசியலையும் தலித்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்கிறீர்களா?
பெருமாள் தேவன்
//அவர்களின் வாழும் வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்ள முடியாத உயர் சாதிக்காரர்கள் செய்த நயவஞ்சகமே இதற்குக் காரணம் என்பதற்கு சாட்சி அங்கே கொளுத்தப்பட்ட வீடுகளில் கொள்ளை போன கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகளே.//

ஹாஹாஹா என்ன முரண்?

குடிசைகளில் கோடிக்கணக்கான பணம் இருந்ததாம்.

அவ்வளவு பணக்காரர்கள் ஏன் குடிசைகளில் வாழ்கிறார்கள்?
பெருமாள் தேவன்
சாதி ஏன் தேவை? - மீள் பதிவு

1. சாதிக்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே குறிப்பிட்ட சாதியினரே ஆட்சிக்கு வருகின்றனர்.

2. சாதி இல்லை என்ற போர்வையை பயன்படுத்திய திராவிடர்கள் தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தனர்.

3. அன்னிய ஆசாமிகள் அதிகாரத்தைப் பெற்றதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தங்கள் நலனை இழந்து நிற்கிறார்கள்.

4. சாதி தீயது என்று பல நூற்றாண்டுப் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதை விட்டு வெளியேறுவதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று ஏதாவது ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளதா?

5. சாதி அவ்வளவு தீயதா என்பதே சந்தேகம்தான். அம்பேத்கரை உருவாக்கிய மகாராஷ்டிராவால் அடுத்த தலைமுறைக்குள் ஏன் இந்த சாதி ஒழிப்பை எடுத்துச் செல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் சாதி ஒழிப்பு என்ற பேச்சே இல்லை. இத்தனைக்கும் இங்கு 40 % தலித்கள் இருக்கிறார்கள்.

6. எனவே இந்த பிரச்சாரமே பொய்யானது. தவிர்க்க வேண்டியது.

7. சாதிகளால் உள்ள தீண்டாமை போன்ற பிரச்சனைகளை அந்த சாதிகளில் உள்ளவர்களின் உதவியோடுதான் ஒழிக்க முடியும். அதற்கு கண்டிப்பாக சாதி தேவை. சாதியை ஒழிக்க முடியாத நிலையில் அவர்களை ஒதுக்கிவிட்டு அவற்றை போக்க முடியாது.

8. சாதிகளில் இருக்க விரும்புபவர்கள் அதிலேயே இருக்கட்டும் என்று சொல்லும் கருத்துச் சுதந்திரம் சாதி ஒழிப்பாளர்களிடம் இல்லை.

9. இவர்கள் தங்களது கருத்தையே திணிக்க விரும்புபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சாதியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கவே தயாராக இல்லை. அப்படியுள்ள அவர்களின் சர்வாதிகாரப் போக்கு எப்படி ஜனநாயக முறையாகும்?

10. இதெற்கெல்லாம் மேலாக இவர்களிடம் சாதி/ மத ஒழிப்புக்கான உருப்படியான திட்டம் இல்லை.

11. சாதி ஒழிப்பாளர்களின் அடையாள ஒழிப்பு, மக்களின் சுய தன்மையை ஒழித்து அவர்களை போராட விரும்பாத மக்களாக மாற்றிவிட்டது.

12. கிறிஸ்தவர், முகமதியர், தலித் போன்றவர் அடையாளத்துடன் செயல்படும்போது ஆதிக்க சாதியினர் தங்கள் அடையாளத்தை பயன்படுத்துவது அவர்களின் சாதி வெறியை காட்டுகிறது என்பது போன்ற தவறான கருத்துக்கள்.

13. தன் கருத்துக்களை மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதை அறிந்துதான் பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. மேலும் ஜனநாயக அரசியலமைப்பையே குறை சொல்ல ஆரம்பித்தார். இதையே இன்றைய பெரியார்வாதிகளும் செய்து வருகிறார்கள். இது தற்போதைய சமுதாயத்தில் சாதி வெறியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தீண்டாமையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

14. வெறும் பிரச்சாரத்தின் மூலமாகவே சாதி வேறுபாட்டை களைய முயல்வது ஏற்கனவே உள்ள அரசியல் சிக்கல்களோடு சமுதாயச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

15. எந்தவொரு முற்போக்குவாதியுமே தங்கள் கருத்து இதுதான், உங்கள் கருத்து என்ன என்று சாதி/ மதங்களில் இருப்பவர்களிடம் பேச தயாராக இல்லை.

16. தலித்களை மற்ற சாதியினர் சமமாகவே நினைக்காத நிலையில் அவர்களிடம் பெண் கட்ட வேண்டும் என்பது போன்ற பிரச்சாரங்கள் விரும்பத்தகாத விளைவுகள் நடந்தேற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

17. தலித்களின் தேவை என்ன சாதி ஒழிப்பா, சமூக அங்கீகாரமா என்பதை சாதி ஒழிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

18. இப்படி இருக்கும்போது சாதி ஒழிப்பு என்பது ஆதிக்க சாதிகளை மட்டுமே ஒழிப்பது, மத ஒழிப்பு என்பது இந்து மதத்தை மட்டுமே ஒழிப்பது என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் தங்கள் அடையாளங்ளை பத்திரப்படுத்திக்கொள்ளும்போது இந்துக்கள் என்ன ஆவார்கள்? அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? இதை தெளிவுபடுத்த வேண்டும்.

19. முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பில் காட்டும் ஆர்வத்தை தீண்டாமையை ஒழிக்க காட்டுகிறார்களா என்பது சந்தேகமே.

20. சாதி/ ஒழிப்பாளர்கள் சாதி/ மதங்களில் உள்ள நல்ல தன்மைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்களே, ஏன்?

21. சாதி/ மதங்களில் உள்ளவர்கள் ஏன் அதிலிருந்து வெளியேற தயங்குகின்றனர் என்பதை கண்டுபிடிக்காத வரை அவர்களை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. நாங்கள் பிரச்சாரம் செய்தே அதைச் செய்வோம் என்றால், அந்த பிரச்சாரம் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அந்த விளைவுகளை சந்திக்க சாதி தேவை.

22. கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் என்றால் நாகரீகமாக இருப்பார்கள், ஆதிக்க சாதியில் இருப்பவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற சிந்தனையை பிரச்சார சாதி ஒழிப்பு ஏற்படுத்தியுள்ளது.

23. சாதி/ மத ஒழிப்புக்காக சமமான கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படாத வரை அதை ஏற்க முடியாது.

24. மற்றபடி வெறுமனே சாதி ஒழிப்பு பிரச்சாரம் மட்டுமே செய்தால், அதற்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு சாதி தேவை.

25. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாதி ஒழிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என்றைக்கு சமநிலை ஏற்படுகிறதோ அன்றிலிருந்து சாதி ஒழிப்பை மேற்கொள்ளலாம். அது வரை சாதி தேவை, இருக்கும்.

26. சாதி / மத ஒழிப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சாதி/ மதங்களுக்கு மட்டும் தீங்கு இழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

27. சமூகவியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்களின் குழுக்களின் உதவியோடு சாதி/ மத ஒழிப்புக்கான பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் திட்டங்களை தீட்ட வேண்டும்.

28. சொத்துரிமைக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை. வாரிசு இல்லாத சொத்துக்களை அரசுடைமையாக்கலாம். அந்த சொத்துக்களை ஆய்வின் அடிப்படையில் சொத்து இல்லாதோருக்கு வழங்கலாம்.

29. அறிவுப்பூர்வமான, ஏற்கத் தக்க சாதி / மத ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க முன் வராதவரை சாதி/ மதம் தேவை.

30. சாதி/ ஒழிப்பு பற்றி ஒவ்வொரு கட்சியும், அரசாங்கமும் தனது கொள்கையை வெளியிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அவற்றை ஏற்றுக் கொண்ட பின்னரே அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

ஹ்ட்ட்ப்://பெருமல்தெவன்.ப்லொக்ச்பொட்.இன்/2012/12/ப்லொக்-பொச்ட்_2201.ஹ்ட்ம்ல்
muthukrishnan
Nice comment Mr.perumal devan
John Paul.
அன்பு பெருமாள் தேவன் அவர்களுக்கு," ஜாண் பால் இதைப் பயன்படுத்தி மதப் பிரச்சாரம் செய்கிறார். பாவம் சாதி சர்ச்களைப் பற்றி இவருக்குத் தெரியாது போலும்." என்று கூறுகிறீர்கள். சாதி சர்ச்கள் இல்லை என்று கூறவில்லை. மிக மிக அதிகமாகவே இருகின்றது. "இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவமும் சாதியை ஊக்குவிக்கிறது." என்ற சிவராமன் அவர்களுக்கு நான் அளித்த பதில் தான் முன்பு எழுதியது. கிறிஸ்தவத்தை நான் இந்த கட்டுரைக்கு எடுத்துகொள்ள தேவை இல்லை. சாதி தான் இந்த பதிப்பில் முக்கியமாக பேசவேண்டியது. நீங்கள் கூறும் நடுநிலை கருத்துக்களை மனதார நான் ஏற்கிறேன். கிறிஸ்துவர்கள் என்ற பெயரில் வாழ்பவர்களும் சர்ச்களுக்கு தவறாமல் செல்பவர்களும் கிறிஸ்தவர்கள் எனபது தவறு. கிறிஸ்தவம் காட்டும் பாதையில் நடப்பவனே கிறிஸ்தவன். கிறிஸ்தவம் எந்த நிலையிலும் சாதியை ஊக்குவிக்கவில்லை. இரத்தத்தில் சாதி வெறி அதிகம் இருக்கும் மக்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அதிகம் உள்ளனர். ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை. மனதில் கிறிஸ்து காட்டிய வழிகளை பின்பற்றுபவனே கிறிஸ்தவன். சாதி கிறிஸ்தவ மதத்தில் இல்லை கிறிஸ்தவன் என்று தங்களை அடையாள படுத்தி பசுதோல் போர்த்தி இருக்குமோநாய்களாய் வாழ்ந்துவருபவர்களிடம் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இஸ்லாத்திலும் இதே நிலை தான். இருந்தாலும் கிறிஸ்தவம், இஸ்லாம், இன்ன பிற மதங்கள் பரவிய பிறகு சாதி தீயின் வீரியம் குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாது. அன்புடன் மா.ஜான் பால். 8438425642
jebastin.v
your command its right
jebastin.v
congratulation, perumal devan your points are correctand more than except you perumal devan
suresh
இந்தப்பதிவின் ஆசிரியர் (கட்டுரையாளருக்கு) எனது புரட்சிகரமான வாழ்த்துக்கள்!

பதிலிடுகிறேன் என்று வழக்கமான பிதற்றல்களை இங்கே பதிப்பித்திருக்கும் பெருமாள் தேவன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!

இந்து மதத்தின் சாதி, வருண பாகுபாட்டைக் கேள்விகேட்டு, பிற மதங்களில் அது இல்லையா என்பதைத்தவிர, சொந்த மதத்திற்கான பொறுப்புணர்வோடு பதிலளித்த யோக்கியன் இதுவரை இல்லை!

உன் மதத்தில் சாதி, வருண கட்டுமானம் அழுத்தமாக இருப்பது குறித்து அறிவு நாணையத்துடன் பதில் சொல். நாங்கள் சாதி - மதம் கூடாது என்றுதான் சொல்லுகிறோம். பிராக்கெட்டில் (இந்து மட்டும்) என்று எங்கேயும் குறிப்பிடுவதில்லை.

பௌத்தத்தை இந்த இழி மதங்களோடு ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. இந்து மதத்தின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தி வேரறுத்தது பௌத்தம்தான். இந்து மதத்தை கோட்பாட்டளவில் எதிர்த்து ஆண்மையோடு நின்றது பௌத்தம்தான்.

(கட்டுரையாளைன் இந்த கட்டுரையினை நாங்கள் எடுத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம், அவருடைய பெயருடன். அனுமதிப்பார் என்ற நம்பிக்கையுடன்)

தோழமையுடன்,
சுரேஷ்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.