பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப்பட்டிருப்பவர்.

ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,
ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.

எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஒரு திரைக் கலைஞர்.
எளியவர்கள் பலர் திரைத்துறையில் எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.

தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.
தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.

பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,
பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.

தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்
தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.

இத்தனைப் பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது 'இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடியைப் புகழும் ஒரு நாலாந்திர அரசியல்வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். 'கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பியவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

நரேந்திர மோடி... ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.

இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின் மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய துரோகம்?

குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார் சீமான்.

இத்தோடு நிறுத்தவில்லை அவர். 'அதிமுக ஆட்சியமைத்தால் அது எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 'திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்' என்று பதிலளித்துள்ளார் சீமான்.

ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?

ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி, அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?

தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?

அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?

'தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்' என மோடியை வானளாவப் புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்காளிகள் அவருக்குப் புரியுமா? ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?

குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம் அதிகம் என்றும், கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்தபோது, குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் வங்கிக் கணக்கில் முஸ்லிம்களின் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 88 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.

குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும், வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.

இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?

மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் 'செய்தி'யாக்குகின்றனர்.

நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.

'ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்' என்று, இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும், இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். 'மோடி நல்லவர் என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே சொல்கிறார் பாருங்கள்' என்று மக்களை உசுப்புவார்கள்.

'இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக் கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்' என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.

திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச் சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு சீமான் துணை போகலாமா?

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?

ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள்.[பார்க்க http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10094:2010-07-22-08-38-17&catid=5:interviews&Itemid=296] தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் 'தமிழ் முழக்கம் சாகுல் அமீது'வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும்போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்' என்கிறார் சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை 'நல்லாட்சி தருபவர்' என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?

ராசபக்சேயை தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகந்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ் இயங்குபவர்.

அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதிகாரத்தில் இல்லாதபோதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன் அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி மாறுவாரோ தெரியவில்லை.

சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், 'சீமான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக் காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்' என்றெல்லாம் வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின் வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள் முழு மூச்சாக எதிர்க்கும் கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள் இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?

மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத் தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?

இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம் நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில் தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய் முடியும்போல் தெரிகிறது.

*******

சீமான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.

பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கிய பெரியாரை மறந்தார்.

சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப் பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்; தமிழ்த் தேசியம் என்கிறார்.

சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.

தமிழராய் பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க சீமான் முயல்கிறார்.

அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், 'பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது; மீட்ட பிறகு பேசுவோம்' என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத்தனமானது. இது, 'நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுவோம்' என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின் துரோகத்தைப் போன்றது.

சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர, தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின் பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை.

சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது. பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும், அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர், 'பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது இருந்திருக்கலாம். அவரோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது வழியைக் காட்டினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.

முஸ்லிம்கள் என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால் அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின் அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால், முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.

பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ. வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர் இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, 'பெரியாரும் ராஜாஜியும் போலவே நானும் வாஜ்பேயும்' என்று விளக்கம் அளித்தார் வைகோ.

இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து, நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே பதிலளிக்கின்றனர்.

பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப் போன்றது தானா, 'வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும் மோடிக்குமான உறவு' என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

வைகோ போன்றவர்கள், ஊழலை எதிர்ப்பதிலும், குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட, சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. வைகோ பயணித்த அதே வழித்தடத்தில்தான் இப்போது சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் வைகோவுக்கு ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.

இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார்.

சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: "அன்னா ஹசாரே குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார் என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு. அதை விடக் கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும் ஹசாரே, எப்படி சிறந்தவர்?"

அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.

நன்றி: சமநிலைச் சமுதாயம்.

Comments

19 comments

19
Narasimman
//ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும்// ஈழம் பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சமும் இல்லாமல் எழுதியிருக்கிறார் ஷாநவாஸ். ஒரு இந்துவாக, ஒரு முஸ்லிமாக, ஒரு கிறித்துவனாக‌ எழுத உட்கார்ந்தால் எப்போதும் ஒரு பக்க சார்புதான் வெளிப்படும். விடுதலைப் புலிகள், முஸ்லிம்கள் மோதலை மதரீதியாக சிண்டு முடிக்காதீர்கள். முஸ்லிம்கள் வேற்று மதத்தினர் என்பதற்காக புலிகள் அவர்களை வெளியேற்ற‌வில்லை. புலிகளோடு கடைசிவரை நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள். பிரபாகரனின் உயிர்காக்கும் படையணியின் பேரே 'இம்ரான் படையணி'தான். ஈழத்தில் போராளிகளுக்கும் முஸ்லிம்களுக்குமான‌ பிரச்சினை யார் பக்கம் யார் என்பதில் ஏற்பட்டது. 1984களில் தொடங்கி இலங்கை அரசுடன் முஸ்லிம் தலைவர்கள் நெருக்கம் பேணினார்கள். சிங்கள அரசின் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பேரினவாத அரசு மிக சூழ்ச்சியாக முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் போராளிகளுக்கு எதிராக அவர்களை நிறுத்தியது. இந்த சூழ்ச்சிக்கு இருதரப்பினரும் பலியானார்கள்.
Narasimman
பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டதும், சிங்களப் படையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது முஸ்லிம் ஊர்க்காவல் படை தாக்குதல் நடத்தியதும் யாரும் மறுத்துவிட முடியாது. அப்பாவி மக்கள் மீது இருதரப்பும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு பக்கச் சார்பாக‌ மட்டும் பேசாதீர்கள். அதுகூட பரவாயில்லை. இதை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தாதீர்கள். அங்கு நடந்தது மதச் சண்டையல்ல; விடுதலைக்கான போராட்டம். அதற்குத் தடையாக இருந்தவர்கள் மீது ஒரு ராணுவ அமைப்பு என்ன செய்யுமோ, அதை புலிகள் செய்தார்கள். அது தவறு என்றால், காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது குறித்து நீங்கள் பேசுங்கள்...
Narasimman
புலிகள் செய்த தவறுகளை மறந்து தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். முஸ்லிம் ஊர்க்காவல் படை செய்ததை மறந்து, தமிழ்த் தேசிய அமைப்புகள் பாபர் மசூதி பிரச்சினைக்கும், குஜராத் கலவரத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தது உங்கள் மூளைக்கு உறைக்காதது ஏன்? தமிழ்த் தேசியவாதிகள் யாரும் ஈழ முஸ்லிம்கள் பிரச்சினையை மதப் பிரச்சினையாக பார்க்கவில்லை. உங்களைப் போன்ற கத்துக்குட்டிகள்தான் எல்லா பிரச்சினைகளிலும் மதத்தை உள்ளே நுழைத்து, வேண்டாதொரு அரசியல் குழப்பங்களை உண்டு பண்ணுகிறீர்கள். நடுநிலைமையோடு ஒரு பிரச்சினையை அணுக கற்றுக் கொள்ளுங்கள்...
aathmaarthi
well constructed article.truthfull feelings.powerful wordings.all the best
tamilpriyan
அய்யா வணக்கம் தங்கள் கட்டுரை படித்தேன் சீமான் மோடியை பற்றி அப்படி கூறினார். 1 லட்சம் கோடி கடனாக இருந்ததை மாற்றி 1 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளார்.அந்த மண்ணையும் மக்களையும் நேசித்ததால் தான் இது முடிந்தது என்று கூறினார்.அவர் அங்கே இருக்கிற இந்துகளுக்கு மட்டும் முதலீடு செய்யவில்லை நாட்டின் பெயரில் செய்துள்ளார் அந்த நாட்டில் முஸ்லீம் இருக்கின்றார்களா இல்லையா? விபி சிங் பிரதமராக ஈழ பிரச்சினையில் கலைஞர் சொல்வதை செய்கிறேன் என்றார் .பந்து என்னிடம் இல்லை என்று பந்தாட்டம் ஆடினாரா இல்லையா? ஜெ இன்று சொல்வதற்கு கருத்து சொல்வதா இல்லை 2002 சொல்வதற்கு இன்று எதிர்ப்பு தெரிவிப்பதா.இன்று ஓட்டிற்காகவாது அவரது நிலைப்பாடு மாறுகிறது .எதிர்கட்சியாக இருந்தபோது 7லட்சம் மக்களை திரட்டி போராடிய மு.க இப்போது போரை நிறுத்த ஏன் கூட்டத்தை திரட்டவில்லை.தேவரை சீமான் பேசுவது தவறில்லை அரிஜன மக்களை தனது தலைமையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியுள்ளார் உங்கள் வசதிக்கு அதை மறைத்து விடுவீர்கள். பெரியாரைப்போல தனது சொத்துக்களை வீரமணி போன்ற கள்வர்களிடம் கொடுக்காமல் தனது இனத்தை சார்ந்த ஏழை எளியவர்களுக்கு கொடுத்ததற்காக பாரட்டலாம்.ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு கொளத்தூர் மணி அண்ணனே உச்ச நீதி மன்றம் செல்ல வைத்தாரா இல்லையா வீரமனி .மு.க. இன்று விடுதலைப்புலிகளை எதிர்க்கிறாறே அவரை நீங்கள் ஆதரிக்க சொல்லலாமா? இட ஒதிக்கீட்டை சாதி வாரியாக ஒதுக்ககூடாது .பொருளாதார அடிப்படையில் தான் ஒதுக்கவேண்டும்.உயர்சாதிபட்டியலில் உள்ளவர்கள் படிப்பதற்கு கூட பணம் இல்லாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அணைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டார் மு.க யாராவது ஆகியுள்ளார்கலா? அர்ச்சகருக்கு படித்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் உங்களுக்கு தெரியுமா? அம்மா பார்ப்பன் ஆனால் இவர் தமிழின தலைவர் பதவியில் அமர்த்தியிருக்கலாமே! பார்வதியம்மாளுக்கு சிங்களவன் கூட அனுமதி வழங்கி மருத்துவத்திற்காக அனுப்பி வைத்தானே மு.க.ஏன் அனுமதிக்கவில்லை வந்ததே தெரியாது என்கிறார் பிறகு எப்படி இவர்க்கு கீழ் உள்ள காவல் துறை அங்கே குவிந்தது.டக்ள்ஸ் தேவானந்தாவை கைது செய்ய ஏன் டில்லி செல்லவில்லை இவரைபோலவே கடிதம் எழுதியதா இல்லையா.காங்கிரஸ் தி.மு.க கூட்டணி உடையும் தருவாயில் இருக்கும்போது நடந்த பத்திக்கையாளர் சந்திப்பில் கை சின்னத்திற்கு எதிராக சூரியன் நின்றால் அதற்கு வாக்கு கேட்பேன் என்று கூறினார்.அதையும் நீங்கள் மறைத்து விட்டீர்கள். அம்மா தீர்மானம் 2002 போட்டபோது சீமான் அதை எதிர்த்து பேசினார்.தமிழ்ச்செல்வன் மறைவிற்கு கவிதை எழுதிய மு.க வை எதிர்த்து அம்மா அறிக்கை விட்ட போதும் சீமான் அம்மாவை எதிர்த்து பேசினார்.இப்போது விடுதலைப்புலிகளை மு.க.எதிர்தார் சீமான் மு.க.வை எதிர்க்கிறார்.பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார் ராஜாஜி யோடு ஏன் நெருக்கம் காட்டினார்.தமிழை ஏன் காட்டுமிராண்டி மொழி என்று கூறினார்.சீமான் சொல்லியுள்ளார் அம்மா ஆட்சி வந்தாலும் இந்தசீமான் இருக்கப்போவது சிறை தான் என்று.அதனால் சீமான் கை யை வீழ்த்தவே இலைக்கு ஆதரவு கோரினார் என்பதுதான் உண்மை
செந்தில் குமார்
தமிழ் பிரியன் அவர்களே அந்த கடடுரையாளர்ருக்கு மிக சரியான முறையில் பதில் அளித்துள்ளீர்கள்

அணைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டார் மு.க யாராவது ஆகியுள்ளார்கலா? அர்ச்சகருக்கு படித்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் உங்களுக்கு தெரியுமா? அம்மா பார்ப்பன் ஆனால் இவர் தமிழின தலைவர் பதவியில் அமர்த்தியிருக்கலாமே!

இந்த இடம் அருமை
Guest
Hi ஆளூர் ஷாநவாஸ்,

இலங்கை தமிழர்களின் நிலைமை தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு ஒட்டு அரசியல்.
அப்போது தி.மு.க இப்போது சீமான்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு பிரச்னையே இல்லை என்பது போல சீமான் அரசியல் பேசுவார்.
சீமான் ஒரு குழப்பவாதி இல்லை தெளிவான ஏமாற்றுக்காரர்.
சிலரை எல்லா நேரங்களிலும் ஏமாற்றலாம் எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்றலாம் ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லோரையும் ஏமாற்ற்ற முடியாது.
நாம் தமிழர் ஏர் டெல்லுக்கு எதிராக ஒரு போராட்டம் அறிவித்தபோது ஒரு கட்டுரை எழுதினேன்.

please click here for the article ...
http://is.gd/LLkpy6
Thennarasu
Vanakkam,

Peranbu konda annan thiru.seeman avarkalukku,

Neengal pirantha paditha adhe ilaiyankudi mannil irundhu, ungalin pechukalai thodarnthu kettukondum, ungalin eluthugalai thodarnthu padithu varum oru anbu thambi...

Kolai veriyan rajapakse kku nigarana, thulium kuraiyatha narendira modiyai pugalnthathaga mele sollapattirukkum karuthukkal anaithum unmaiyenil...!!!!????

Migavum varuthapada vendia, vedhanai pada vendia, ottumotha thamil iname thangalai miga chirantha parapuraiyalanaga, thiranaivalanaga, poraliyaga parkindradhu...

Idhu sampanthamaga thiru.seeman, thiru.sahul hameed matrum nam thamilar iyakkathin sarpaga kattayam vilakkam alikka vendum idhe keetru inaya thalathin vayilagave...
durai ilamurugu
பின்னூட்டுங்களைக் கூட தணிக்கை செய்வது சரியன்று
தேவேந்திரர்
கட்டுரை ஆசிரியருக்கு வணக்கம்.
உச்சநீதி மன்றத்தின் ஒரு தீர்ப்பில் தலித் என்ற வார்த்தையை இனி யாரும் பயன்படுத்தக் கூடாதென்று
கூறியுள்ளது. உயர் சாதி என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டத்தால் தலித் என்று
இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பத்திரிகை ஊடகங்கள் தான் சாதி திமிரோடு எழுதுகிறார்கள் என்றால்
படித்தவர்களும் அதை பயன்படுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
இனி தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டர்கள் என்று நம்புகிறேன்.
durai ilamurugu
தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்."

இவர்கள் எல்லொரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே நெடுமாறனை ஏன் விட்டு விட்டிர்கள் என்று தெரியவில்லை? தஞ்சைத் தமிழ்தேசியவாதிகள் இந்துத்வா ஆதரவை பழமைப்போற்றுவது போல் செய்கிறார்கள் எ கா ராசராசசோழன் புகழ் பாடுவது, தில்லை சிற்றம்பல படி ஏறபோராடுவது அவர்களின் சாதியமும் இந்து ஆதரவு உணர்வும் வெளிப்படையாக தெரியவில்லை1
கொளத்தூர் மணி அவர்கள் விடுதலைப்புலிகளின் முசுலீமெதிர்ப்புக் குறித்து என்ன சொல்லி இருக்க்கிறார்? 2லடசம் இசுலாமியர்களை இரண்டு நாளில்துரத்தியைதைக் கண்டித்து இருக்கிறாரா?
தமிழ்ப்ரியன்
அய்யா தங்களது கட்டுரையில் 2002 ல் அம்மா பிரபாகரனை தூக்கில் போட சொன்னார்.அவரை சீமான் எப்படி ஆதரிக்கலாம் என்று கேட்டுள்ளீர்கள் பல வருடங்களுக்கு முன் திருகுர்ரான் க்கு முன்னுரையோ தெளிவுரையோ எழுதிய அய்யா பால் தாக்ரே வை அன்று ஆதரித்தீர்கள்.இன்று இந்துத்வாதி என்கிறீர்கள்.அதுபோலதான் கலைஞர் அன்று விடுதலைப்புலிகளை ஆதரித்தார்.சீமானும் ஆதரித்தார்.இன்று எதிர்க்கிறார் சீமானும் எதிர்க்கிறார்.டெசோ மாநாட்டில் இந்திய உளவுதுறை போராளிகுழுக்களை பிரிக்கமுயல்கிறது என்று எந்த கலைஞர் கூறினாரோ அவரே இன்று சகோதரயுத்ததால் தான் பிரபாகரன் வீழ்ந்தார் என்கிரார்.அவரை எப்படி ஆதரிப்பது.அன்று எதிர்த்த அம்மா இன்று ஆதரிக்கிறார் அதனால் சீமான் ஆதரிக்கிறார்.நீங்கள் எப்படி பால்தாக்கிரேயை அன்று ஆதரித்துவிட்டு இன்று எதிர்க்கிறீர்கள்.ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை நாம் எடுத்து கொள்ளலாம்.அய்யா உங்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.
Che Quevera
மோடி இஸ்லாம் மக்களுக்கு செய்தது தவறுதான், அதில் எந்த மாற்று கருத்துமில்லை.... ஆனால் தற்போது, அவர் செய்யும் திட்டபணிகளில் எவ்வித குறையும் இல்லை, அதை சீமான் மேற்கோள் கட்டியது தவறே இல்லை, இதை சொல்வதால் நங்கள் மோடி ஆதரவாளர் இல்லை, இன்று அவர் செய்வது சிறப்பாக உள்ளது என்றுதான் சொல்கிறோம். தவறு செய்தவன் கடைசி வரை குற்றவால்லியவே பார்ப்பேன் என்று நீங்கள் சொன்னால் - அது தங்களது இருமாப்பையே காட்டும். நான் மும்பையில் உள்ளபோது, ஒரு இஸ்லாம் நண்பர் பகிர்ந்த செய்தி "கலவரத்தின் பொது நங்கள் எல்லாம் குஜராத்தை விட்டு விட்டு இங்கு வந்து விட்டோம், ஆனால் இன்று அவர் குஜராத்தை முன்னேற்ற வழியில் கொண்டு செல்வதை பார்க்கும் பொது, மீண்டும் அங்கே செல்ல விரும்புகிறேன்" - இது மிகைபடுத்தப்பட்ட வாக்கியம் அல்ல.. ஆகையால், தங்களிடம் ப்ளாக் இருக்கிறது என்று சகட்டுமேனிக்கு எழுதி தள்ளாதீர்கள்.... பிறகு ஒருவனும் தங்கள் ப்ளாக் கை தீண்ட மாட்டன். நடுநிலையோடு செயல்படுங்கள்.
steve
I do not know much about Gujarath politics but i know Mr Naranthra Moodi is a good politician. Seeman supporting him nothing to do with our Tamil politics. I bet the author of this article would be muslim or has some sort of conspiracy theory behind him.

To be honest Seeman so far is an unspoiled and truly a genuine politician. May be if the author decide to read this out on a Friday jumma prayer he might get some support from some misguided muslim brothers.

In my honest opening the article is bit of a bullshit and bit of borning and bit of irrelevant and bit of trying to misguide tamil people.
durai ilamurugu
மோடியின் முன்னேற்றப்பதைக் குறித்து மேத்தா படேகார் அவர்களிடம் கேளுங்கள். நர்மதை ஆற்றைக் கைது செய்து பழங்குடிகளை வன்புணர்ச்சி செய்து குசராத்தை "முன்னேற்றீய" விதம் குறித்து விலாவரியாக சொல்லுவார் அதைகைய முன்னேற்றம் தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை அதை செய்யாத கருணாநிதி குற்றவாளிதான்
durai ilamurugu
குமுதத்தில் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத ஆரம்பித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் எமக்குத் தோன்றிய சில கருத்துகள்.
1. அதில் அண்ணா,அண்ணா என்று 'யாரையோ' அழைக்கிறார். அவரது இருப்பிடத்தைப் போலவே தன்னுடைய அறையில் மூங்கிலால் செய்யப்பட்ட மர நாற்காலியை வைத்துள்ளதாகவும் கூறுகிறார். அந்த அண்ணன் யார்? அறிஞர் அண்ணாவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கேற்றால் போல் அறிஞர் அண்ணாவின் புகைப்படமும் கட்டுரையின் நடுவில் இடம் பெற்றுள்ளது.

2. நாம் தமிழர் இயக்கம் அடித்த முதல் அடியிலேயே காங்கிரசு இயக்கம் முற்றிலும் சுருண்டு போய்விட்டது என்று எழுதுகிறார். ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. முதல் அடி? அப்படி என்றால் பாராளுமன்றத் தேர்தலில் (2009ல்) இளங்கோவன், தங்கபாலு தோற்றது தங்களால் தான் என்று முழங்கியது.???? முதல் அடி அல்ல. இரண்டாவது அடி நண்பரே.

3. காங்கிரசு 5 சட்டமன்ற தொகுதிகளில் வென்றுள்ளது. ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது எப்படி? தினகரன் செய்தித் தாளில் சீமான் அளித்த நேர்காணல் நினைவுக்கு வந்தது. இந்த 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் இயக்கத்தினரும், சீமானும் யாது காரணம் பற்றியோ தேர்தல் பணி ஆற்றவில்லையாம். அதனால்தான் 5 இடங்களில் வென்றுள்ளனர் என்பது தான் அந்த செய்தி.
ஏனோ தெரியவில்லை ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அது போகட்டும் இவர்கள் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தேர்தல் பணி ஆற்றாத விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடம் கூட பெறாமல் போனது ஏன்?

4. நெருப்பைப் பற்றி அவர் சொன்னது வியப்பாய் இருந்தது." நெருப்பு ஒன்றுதான் எதனுடன் இணைந்தாலும் அதன் சுயத்தன்மையை இழக்காது." நீருடன் சேர்ந்தால் நெருப்பு என்ன ஆகும்.? நண்பர் தான் விளக்கவேண்டும்.

5. சீமான் ,"வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் "என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். அடுத்ததாக "வென்றது பார்ப்பனீயம்! துணை நின்றது நாம் தமிழர் இயக்கம்" என்று அவரோ அல்லது வேறு யாருமோ எழுதக்கூடும்!

கொசுறு: அண்மையில் ஆதித்தனார் பிறந்த நாள் விழாவின் போது இன உணர்வாளர்கள் படை சூழ பா. ஆதித்தனார்சிலைக்கு சீமான் மாலை சூட்டி உணர்ச்சிப் பேருரை ஆற்றினார். (செய்தி. நன்றி தினத்தந்தி).
sayanthan
well said tamilpryan,there are lot people who hates that soosai anna didnt call them and said what he said,seeman wants congress to be not there he done what he have to do will don seeman we are behind you.
Leo
குரை கூர 1000 வாய்கல் வரும், ஆனால் உங்கலை போன்ரரு போரட யார் வருவர்... சீமான் வாழ்க
சாரல்
//இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?

ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள்.[பார்க்க ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.கேட்ரு.சொம்/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=10094:201007௨208௩8௧7&சடிட்=5:இன்டெர்விஎந்ச்&ஈடெமிட்=296] தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் 'தமிழ் முழக்கம் சாகுல் அமீது'வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும்போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?//

வரலாறு தெரியாமல் நீங்கள் கதைப்பது தவறு. புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று மட்டுமே சொல்கின்ற நீங்கள், அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன என்ற வரலாற்றை தெரியாமல் உளறக்கூடாது.

அஸ்ரப் தனது அமைப்பினுாடகாக மட்டு, அம்பாறை மாவட்டங்களில் நடத்திய பல படுகொலைகளின் தொடர்ச்சியாகவும், யாழ்க்காணத்தில் அவ்வாறன சம்பவங்களை அவர்கள் திட்டமுடுகின்றார்களோ, என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம், முஸ்லீம் இளைஞர்கள் யாழுக்கு வந்ததும், பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டதுமே யாழ் முஸ்லீம்களின் வெளியேற்றமாகும். ஆனால் அன்று வெளியேற்றியபோது, எந்த முஸ்லீம் உறவுகளுக்கும், உடல்ரீதியான காயங்களோ, எதுவுமே ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் அஸ்ரப் அவர்களின் திட்டத்தின்படி ஏதாவது கலவரம் ஏற்பட்டிருந்தால் நிச்சயம், யாழ்ப்பாணத்தில் பல முஸ்லீம்களும், தமிழர்களும் கொல்லப்பட்டிருப்பர். அக்காலத்தில் ஒவ்வொரு தனி முஸ்லீம்களையும் அடையாளம் கண்டு பரிசோதிப்பதற்கு புலிகளிடம் ஆட்கள் அப்போது இருக்கவில்லை. இருந்த பலர் போர்க்களத்தில் காவலுக்கு நின்றார்கள்.

ஒரு தலைவனால் அதிகபட்சமாகச் செயற்படுத்தக்கூடிய வலுவாக இத்தெரிவே இருந்திருக்கலாம். தவிர, அக்காலத்தில் கிழக்குப்பகுதிப் போராளிகள் படுகோபத்தோடு இருந்திருந்தார்கள். தங்களின் உறவினர் , மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல்...

வெளியேற்றத்தின்போது மீண்டும் உள்ளே விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றே சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அதற்கான காலம் கனிவதற்கு முன்பாக சிங்கள அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.