நரோடா பாட்டியா வழக்கில் இருந்து பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தளைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 68 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதிமன்றத் தீர்ப்புகளை உற்று நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்காது. சட்டப்படியே சட்டத்திற்கு சங்கு ஊதப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் பேரதிர்ச்சி என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கின்றது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக சங்கிக் கும்பலால் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இனப் படுகொலையின் போது, நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.

maya kodnani and babju bajrangiஇந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் சிறுவர் சிறுமியர் ஆவார்கள். இப்படுகொலையின் பொழுது கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, குற்றுயிராகக் கிடந்தவர்களின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர்.

பல பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தீவைத்துக் கொல்லப்பட்டனர். இப்படி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களுள் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கவுசர் பானுவும் அடக்கம்.

இந்தப் படுகொலைகளுக்கு மூளையாக செயல்பட்டதாக நரோடா பாட்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயா கோட்னானி, குஜராத் மாநில பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், கலவரம் செய்தல், கொடூர ஆயுதங்களைக் கொண்டு கலவரம் செய்தல், கொலை சதி, கலவரத்துக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2012 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக், எப்படி மோடி அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது என்பதை அம்பலப்படுத்தினார். இந்தப் படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டினார்.

பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 2008ம் ஆண்டு குஜராத்தை ஆண்ட மோடி அரசு மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தது.

நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் உதவியாக இருந்ததையும், பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டதையும் முதலில் நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் புகார் கூறியும் குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்ஐஆரில் மாயாவின் பெயரே இடம் பெறவில்லை என்பதையும் அம்பலப்படுத்தினார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, மாயா கோட்னானி பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது அவரை உடனே இடமாற்றம் செய்து விட்டது மோடி அரசு.

இருப்பினும் நரோடா பாட்டியா வழக்கில், மாயா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்புகள் அடங்கிய அத்தனை தகவல்களையும் அப்படியே நானாவதி கமிஷன் முன்பும், யுசி பானர்ஜி கமிட்டி முன்பும் சமர்பித்ததன் மூலம் மாயா கோட்னானியின் இந்து மதவெறி அம்பலத்திற்கு வந்தது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு மாயா கோட்னானியை விடுதலை செய்ததோடு, பாபு பஜ்ரங்கியை மட்டும் குற்றவாளியென அறிவித்தது.

அதே போல உடல்நிலையைக் காரணம் காட்டி, பாபு பஜ்ரங்கிக்கு பிணை வழங்கும்படி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2019 ஆண்டு அவனை பிணையில் விடுவித்தது.

குஜராத் படுகொலைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒன்பது வழக்குகளில் நரோடா பாட்டியா படுகொலை வழக்கும் ஒன்று. முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே ராகவன் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் போலீசார் என 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

14 ஆண்டுகளுக்கு முன்பு 2009ல் தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை, கடந்த 5ம் தேதி முடிந்தது என இதனை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கே.பக்ஷி அறிவித்தார். அதன்படி மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 68 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள்.

தீர்ப்புக்கான எந்த காரணத்தையும் நீதிபதி எஸ்.கே.பக்ஷி வெளியிடவில்லை என்பதில் இருந்தே அவர்கள் வழக்கம் போல மோடியின் ஆசியுடன் விடுதலையாகி இருக்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதிபதி விடுதலை உத்தரவு பிறப்பித்தவுடன், குற்றக் கும்பலின் உறவினர்களும் ஆதரவாளர்களும் "ஜெய் ஸ்ரீராம்" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

சங்கிகள் எப்படி எல்லாம் நீதிமன்றத்தையும் அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி இதற்கு முன்பு தப்பித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் ஒரு கொடூர தொடர் கொலைகளை பற்றிய சீரியல் கதைகளையே அது விஞ்சிவிடும்.

முன்னதாக குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மை வெளியே கசியவே சோராபுதீனை போலி மோதல் மூலம் கொல்ல வன்சாரா என்ற அதிகாரியை நியமித்தார்.

வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் கொன்றது மட்டுமல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டுக் கொன்றார்.

வன்சாரா, சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் மட்டும் அல்லாமல் இஷ்ரத் ஜகான், ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நான்கு பேர்களை லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் மோடியை கொல்வதற்காக குஜராத்துக்கு வந்ததாகவும் பொய்யான குற்றம் சாட்டி போலி என்கவுன்டர் செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளியாவார். இவர் ஏற்கெனவே மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

மேலும் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, 2014 ஆம் ஆண்டு அவர் மீதான அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்பதால் இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

மும்பை சி.பி.ஐ நீதிமன்றத்தில் முதலில் இந்த வழக்கை விசாரித்து வந்த ஜே.டி. உத்பத், அமித்ஷா வழக்கில் ஆஜராகாமல் ஏமாற்றுவதை தொடர்ச்சியாக கண்டித்ததால் காரணம் ஏதுமின்றியே 2014 ஜூன் 26 ஆம் தேதி பூனா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு அடுத்து இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட நீதிபதி லோயா அவர்களும் அமித்ஷா மும்பையிலேயே இருந்து கொண்டு வழக்கில் ஆஜராகாமல் ஏமாற்றுவதைக் கண்டித்தார். அமித்ஷாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கக் கோரி அவர் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டார்.

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான மோகித்ஷா மூலம் 100 கோடி ரூபாய் பேரமும் பேசப்பட்டது. ஆனால் வழக்கில் நேர்மையாக நடந்து கொண்டதால்,  2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

லோயாவுக்கு அடுத்து இந்த வழக்கில் ஆஜரான எம்.வி. கோசாவி பொறுப்பேற்ற பதினைந்தே நாளில் அமித்ஷாவை விடுவித்து அவரை உத்தமர் ஆக்கினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் லோனே என்பவர் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 10 வது அமர்வுக்கு மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.எம். சந்திரகௌடரிடம் ஒதுக்கப்பட்டது. திட்டமிட்டே வழக்கை முடித்துக் கட்டுவதற்காக இந்த வழக்கு 10 வது அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் ஒதுக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால்தான் மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது; அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை; வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது; அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இறுதியாக நீதிபதி லோயா இயற்கையாகவே மரணமடைந்தார் என உச்சநீதிமன்றம் அருள்வாய் மலர்ந்தது.

இந்த வழக்குகள் மட்டும் அல்லாமல் காவி பயங்கரவாதிகள் தொடர்புடைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இதே போக்கையே கடைபிடித்தன. மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ஆசிமானந்தா உட்பட 5 பேரை விடுவித்தது ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்.

ஆசிமானந்தாவை மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்த என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவீந்திரா ரெட்டி தீர்ப்பு கொடுத்த சில மணி நேரங்களில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதில் தன்னுடைய ராஜினாமாவுக்கும் தான் கொடுத்த தீர்ப்புக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவ அதிகாரி கர்னல் புரோகித்துக்கு எதிராக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோகினி சாலியன் தன்னிடம் இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கையாளுமாறு தேசிய புலனாய்வு சிறப்பு விசாரணை அதிகாரி வேண்டுகோள் வைத்தாக குற்றம்சாட்டினார். இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

காவி பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு சிறப்பு விசாரணை நீதிமன்றங்களில் நடந்த அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது. ஆசிமானந்தாவுக்கு மட்டும் அல்லாமல் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் வழக்கிலும் என்.ஐ.ஏ இதே போலத்தான் நடந்து கொண்டது. தற்போது அவர் போபால் மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார்.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்ப வேண்டும் என்றும் இனி யாரும் கூப்பாடு போட முடியாது.

சங்கிகளின் ஆட்சியில் சட்டம் என்பது பாசிசத்தை அரங்கேற்றவும், அதை எதிர்ப்பவர்களைக் கொல்லவும் சிறையில் அடைத்து சித்தரவதை செய்யவும் மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சங்கிகளின் ஆட்சி இந்தியாவில் நீடித்தால் நீதிமன்றங்களே கூட சங்கிகளுக்கு கொல்வதற்கான உரிமத்தை அளிக்கும் கொலைக்களங்களாக மாற்றப்படலாம்.

- செ.கார்கி

Pin It