மண்மொழி இது 33வது இதழ். முந்தைய 32வது இதழ் வெளிவந்த அடுத்த மாத இறுதியிலேயே அதாவது ஒரு மாத இடைவெளியிலேயே இது வெளிவருகிறது.

கடந்த இதழ் நாலு வார்த்தையில், தேர்தல் அநேகமாய் மே மாதத்தில் வரலாம் என்கிற அநுமானத்தில் அதற்குள் மண்மொழி ஒன்றோ இரண்டோ வரும் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 13இலேயே தேர்தல் என்றதால், அதற்குள் நம் நிலைப்பாட்டை விளக்கி ஒரு இதழாவது கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற முனைப்பில், முந்தைய இதழ் சூட்டோடே இந்த அடுத்த இதழும் கொண்டு வரப்படுகிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில் மண்மொழியின் நிலைப்பாடு பற்றி கடந்த இதழில் எழுதியிருந்த கருத்துகள் அனைத்தும் பலருக்கும் உடன்பாடே. ஒரு சிலர் மட்டும் சில மாற்றுக் கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். அதன் தொடர்பாக இந்த இதழில் மேலும் சில விளக்கங்கள் தந்துள்ளோம். இதிலும் பலருக்கும் உடன்பாடு இருக்கும் என்றே நம்புகிறோம்.

காரணம் நாம் வெவ்வேறு அமைப்புகளில் இயங்கினாலும் நமது நோக்கமெல்லாம் தமிழகத்தில் ஒரு தமிழ்த்தேச எழுச்சியை ஏற்படுத்துவதே. அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே தவிர இருக்கும் எந்த அணிக்கும் வால் பிடிப்பதோ வக்காலத்து வாங்குவதோ அல்ல என்பதால் நம் நிலைப்பாட்டில் தெளிவுடனேயே இருக்கிறோம்.

ஆனால் இந்த தொலைநோக்குத் திட்டத்தோடு நாம் வாளாயிருந்து விடக்கூடாது. இருக்கிற குறைந்த பட்ச சனநாயகக் கட்டமைப்பில், அந்த சனநாயக அமைப்பின் செயல்பாடுகளை நாம் இயன்றவரை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள, அந்த நோக்கில் என்ன செய்யலாம் என்கிற முயற்சியிலேயே வர இருக்கிற தேர்தலில் காங்கிரஸ், திமுக நிற்கிற தொகுதிகளில் அவற்றை எதிர்த்து நிற்கிற வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும். அதன்வழி காங்கிரசை தமிழகத்திலிருந்து முற்றாக வீழ்த்த வேண்டும், தமிழினத் துரோக, குடும்ப ஆதிக்க ஊழல், திமுக ஆட்சியை அதிகாரத்தில் இருந்து இறக்கவேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கிறோம்.

நாம் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளதுபோல இந்த இரண்டாவது கருத்தில் சிலருக்கு சில நெருடல்கள் இருக்கலாம். அதற்கான விளக்கங்களும் உள்ளே கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். எனவே நியாய உணர்ச்சி, நேர்மை உணர்ச்சி, சனநாய உணர்வு கொண்டவர்கள் நன்கு சிந்தித்து அவரவர்கள் மனச்சாட்சிப்படி செயல்படட்டும். எதுவும் நிர்ப்பந்தமோ கட்டாயமோ அல்ல. ஒரு கருத்து என்ற அளவிலான வெளிப்பாடு மட்டுமே இது. அவ்வளவே.

கடந்த இதழுக்கும், இந்த இதழுக்கும் இடைப்பட்ட காலத்தில் வைகோ அதிமுக அணியைவிட்டு வெளியே வந்தது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் இந்த நிகழ்வு என்னவாக மாறும் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், இது என்னவாக மாறவேண்டும் என்கிற நம் விருப்பங்களை, எதிர்பார்ப்புகளை இதழில் இதற்காகச் சிலப் பக்கங்களை ஒதுக்கிச் சொல்லியிருக்கிறோம். தேர்தல் முடிவுகளையட்டி இது எப்படி அமையும் என்பதை இப்போது எதுவும் சொல்லமுடியாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வேறு என்ன, இதழ் பற்றிய கருத்துகளை பலரும் தொலைபேசியில் பேசுவது, தெரிவிப்பதோடு முடித்துக் கொள்கிறார்கள். ஒரு அஞ்சல் அட்டை வாங்கி நாலு வரி எழுதிப் போடுங்கள். அதை அச்சேற்றினால் மற்றவர்களும் பார்க்க ஏதுவாக இருக்கும் என்றால், பலருக்கும் சுணக்கமாக இருக்கிறது. என்ன செய்வது, எதையும் கசக்கி முகர முடியாது. எனவே, அவரவரால் என்ன முடியுமோ அதன்படி இயங்கட்டும். செயல்படட்டும். நம்மால் என்ன முடியுமோ அதை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்பதுதானே பொருத்தமாயிருக்க மு¬யும். சரியா.

நல்லது. தேர்தலுக்குப் பிறகு அடுத்த இதழில் சந்திப்போம்.

- இராசேந்திர சோழன்

Pin It