கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

தமிழ்நாடு விடுதலைக் கருத்தின் தொடக்க ஆண்டு 1938 ஆக இருந்தாலும், அது தமிழ்த்தேச விடுதலைத் தேவைக்குரிய அரசியலைத் தன் தொடக்கத்திலேயே முன்மொழிந்திடவில்லை.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கிய அந்த முழக்கம் பின்னர் வடநாட்டான் எதிர்ப்போடும், மார்வாடிகள் எதிர்ப்போடும் பிணைந்து படிப்படியாக வளர்ந்தது.

வல்லரசிய எதிர்ப்பு, இந்திய அரசெதிர்ப்பு எனும் தெளிவை அது உருவாக்கிக் கொள்ளவில்லை. மேலும் தன் தேசத்தையே தமிழகமாகவும், திராவிடமாகவும் மாற்றி மாற்றி எண்ணிக் குழம்பியது.

பெரியார் தமிழக விடுதலையை முன்னெடுக்கத் துணியவும் இல்லை; தெளியவும் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகமோ ஒரு காலை இந்தியத்திலும், மறுகாலை தமிழகத்திலுமாக வைத்துத் தன் பயணத்தைத் தொடங்கிய பின்னர் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் எனத் தமிழர்களை இந்தியப் புதைச் சேற்றில் அமிழ்த்தியது.

திராவிடங்களிலிருந்து திமிறிய சிலரும் பின்னர் இந்தியத்தோடு கரைந்து போயினர்.

தூய தமிழ் கருத்திலும், பெரியாரிய அம்பேத்கரிய ஆரிய மற்றும் சாதிய எதிர்ப்பிலும், பொதுவுடைமைக் கொள்கையின் ஒப்புரவிய (சோசலிச)க் கருத்துகளிலும் ஈர்க்கப்பட்ட பாவலரேறுவுக்கு இம் மூன்றின் வழித்தடங்களும் தமிழ்த்தேச அரசியலில் இணைவதாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

எனவே 1959 முதலே தமிழ்நாட்டு விடுதலைக்கென அம்மூன்று வகை இலக்கு நோக்கியும் எழுதவும், முழங்கவும் தொடங்கினார்.

எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அவர் எழுத்தும், செயலும் தடைப்படவில்லை.

தமிழ்த்தேச அரசியலை அதன் இலக்கு நோக்கி முழுமைப்படுத்தி தமிழக வரலாற்றில் முதன் முதலில் முன்னெடுத்துச் செயல்பட்டார் என்பது மட்டுமல்லாமல் இறுதிவரை தமிழக விடுதலைக் குரலின் ஒலி குறையாமல் ஓங்கிச் செயல்பட்ட தாலேயே பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்த்தேசத் தந்தையாக எண்ணத்தக்கவர் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

பாவலரேறுவின் 16வது நினைவேந்தல் நாளில் அவரின் வாழ்வியல் சுவடுகளை அறிந்து கொள்வதோடு, அவரின் கொள்கையை இன்னும் பல படிகள் முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டுமாய்ச் சூளுரை மேற்கொள்ள வேண்டுவது தமிழக இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரின் கடமையும் ஆகும்.

இந்நிலையிலிருந்து பாவலரேறு பெருஞ் சித்திரனார் குறித்து அறிந்து கொள்ளலாம்.

வலுவான, ஏந்தான குமுக அளவில் மேலான வாழ்நிலையிலிருந்து வந்தவராக அல்லாமல் நலிவான, வறுமையான குமுக அடிநிலை வாழ்விலிருந்து பொதுத் தொண்டாற்ற வந்தவரே பாவலரேறு.

இயற்கையின் ஈடுபாடு அவரை இலக்கிய ஆர்வலராக ஆக்கியதுபோல், குமுக அழுத்தம் அவரைக் குமுக அரசியல் போராளியாக மாற்றியது.

பெரியார் கூட்டங்களுக்கும், பொதுவுடைமைக் கட்சிக் கூட்டங்களுக்கும் சென்று ஈடுபாடு கொண்டு கருஞ்சட்டையோடும், செஞ்சட்டையோடும், தன் இளமைப் பொழுதுகளில் வீரார்ந்து நடையிடத் தொடங்கினார்.

1933 இல் பிறந்து, தம் 12 ஆம் அகவையில் "பூக்காரி', "மல்லிகை' எனப் பாவியங்கள் படைக்கத் தொடங்கியவர், தம் 26 ஆம் அகவையில் "தென்மொழி' எனும் தூய தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கினார்.

அவர் வாழ்ந்த 63 ஆண்டுகளில் பொதுத் தொண்ட ராய்ச் செயலாற்றிய காலங்கள் 1959 தொடங்கி 36 ஆண்டுகளே.

அந்த 36 ஆண்டுகளில் அவரின் செயல்கள் வலிமையானவை; கூர்மையானவை.

பாவலரேறு ஏற்றுக் கொண்ட பழந்தமிழிய மெய்யியல் கொள்கை ஆரியத்தை எதிர்த்தது; மதவியலை மறுத்தது.

“இந்து மதத்திலிருந்து தமிழர்கள் ஒட்டுமொத்த மாக வெளியேற வேண்டும்'' என அறைகூவல் விடுத்ததோடு, பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடினார்; ஆரியப் பார்ப்பானியத்தின் உருவாக்கமான இந்தியத்தை நேரெதிராய் எதிர்த்து நின்றார்.

சைவ, மாலிய மதக் கருத்துகளை மறுத்துத் தமிழர்தம் தூய அறவாழ்வே தமிழரின் மதமாக இருக்க முடியும் என விரித்துரைத்தார்.

இந்தி எதிர்ப்பால் அஞ்சல் துறையில் தான் ஆற்றி வந்த துணை அஞ்சலகர் எனும் அரசுப் பணியை இழந்ததோடு இந்திய எதிர்ப்பால் மிசா, தடா, பிற கொடுஞ் சட்டங்களில் பல ஆண்டுகள் சிறைப்படுத்தப் பட்டார்.

“ஆட்டிப் படைக்கும் அரசுக்கும் ஆரியர்க்கும் ஈட்டியால் செந்தமிழர் தீட்டும் இறுதியுரை'' என்றும், “வேட்டகத்தை எடுத்தால்தான் தமிழகத்தில் விடுதலையே விளையுமென்றால் பூட்டறுக்கப் புறப்படுவீர் தமிழர்களே உரிமை நலம் புதுக்குதற்கே'' என்றும் அவர் தீட்டிய வரிகள் நெருப்பென ஆட்சியரைச் சுட்டெரித்தன.

இருக்கும் நலன்களில் இனநலம் பெரிது என்றும், உமி மலை மேல் ஓரரிசி கண்டாலும் அதை உவந்து போற்றி அரவணைத்து இயங்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.

தூய தமிழ் மீட்பு முயற்சியில் மறைமலையடிகள், பாவாணரின் வழித் தடத்தில் தொடர்ந்தாலும், அம்முயற்சியைப் பேரியக்கமாக்கியவரும், அவ்வியக்கத்தை மொழி நிலையோடு நிறுத்தாமல், இன, நாட்டுரிமை வரை உயர்த்திப் போர் எழுச்சியாய்ச் செயல்பட்டவரும் பாவலரேறுதான்.

"தென்மொழி' எனும் தூய தமிழ் இலக்கிய இதழும், "தமிழ்ச் சிட்டு' எனும் சிறுவர் கலை இதழும், "தமிழ் நிலம்', எனும் அரசியல் இதழும் அவருக்குப் போர்க் கருவிகளாகப் பயன்பட்டன. "தீச்சுடர்' எனும் இடையில் சில காலம் வந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்ததோடு, வானம்பாடி, தென்றல், தமிழகம், வலம்புரி, வல்லமை போன்ற இதழ்களில் எல்லாம் எழுதினார்.

தென்மொழி வறுமையில் உழன்றா லும், அன்றாட காய்ச்சியாக இருந்தாலும், தூய தமிழினத் தொண் டாற்றிய அறிஞர் களுக்கு அருட்கொடை திரட்டி அளித்த பேருள்ளம் கொண்டவராய்த் திகழ்ந்தார். மொழி ஞாயிறு பாவாணர், புரட்சிப் பாவலர் பாவேந்தர் குடும்பம், இந்தி எதிர்ப்புப் போராளி ஈழத்தடிகள், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் குடும்பப் பேணுகைகளுக் காகத் தென்மொழி வழிபுரந்தார்.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் கீழறுத்துக் குலைத்த பின்பும் போராட்ட இளைஞர்களைத் துவளாது நெறிப்படுத்தி னார் பாவலரேறு.

"தமிழக விடுதலைப் படை' எனும் படை கட்டும் முயற்சியை 1967 இல் தொடங்கி அதில் பங்கேற்க விண்ணப்பித்த 96 பேரில் 34 பேரைக் கூட்டிக் குருதிக் கையெழுத்துப் பெற்றார். தமிழகமெங்கும் தமிழக விடுதலையை வலியுறுத்திப் பரப்பல் செய்யும் படைஞர்களாக அவர்கள் செயல்பட்டனர்.

தமிழக வராற்றிலேயே தமிழ்நாடு விடுதலையை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் மூன்று மாநாட்டை நடத்தியவர் பாவலரேறுவே.

திருச்சி, மதுரை,சென்னை ஆகிய ஊர்களில் 1971, 72, 75 களில் மாநாடுகள் நடத்தப் பெற்றன.

அம்மாநாடுகளை நடத்துவதில் பாவலரேறு எதிர்கொண்ட நெருக்கடிகள் கடுமையானவை.

திருச்சி மாநாட்டில் தமிழக விடுதலைப் போராட்டத்திற்கான திட்டத்தை வகுத்துப் போராட்ட அறிவிப்பு செய்தார் பாவலரேறு.

மதுரை மாநாட்டிற்குப் பெரியாரைத் தலைமை தாங்க அழைத்திருந்தார் பாவலரேறு. மாநாட்டு ஊர்வலம் தொடங்குகையில் வந்திருந்து, பிறகு வருவதாகக் கூறிச் சென்றார்.

மாநாடு நடப்பதற்கு முன்னரே சென்று கொண்டி ருந்த விடுதலை மாப்படையான பேரணியைத் தடை செய்து சிறைப்படுத்தியது தமிழக அரசு. திராவிடர் கழகத்தினர் 93 பேர் சிறைப்பட்டதாகச் செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டன.

அவர்கள் திராவிடர் கழகத்தினர் அல்லர் எனப் பெரியார் மறுத்தார்.

அதன் பிறகு தடை மீறி மாநாடு நடத்தியதாக பாவலரேறு உள்ளிட் டுப் பலர் சிறைப் படுத்தப்பட்டனர்.

சென்னையில் நடந்த மூன்றாம் மாநாட்டினை நடத்த முயன்ற 24 பேர் 52 நாட்கள் சிறையி லடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் வந்தனர்.

தென்மொழிப் போர்ப்படை, மறவர்களைக் குலைப்பதற்கென்றே முரசொலி அடியாரை அனுப்பி தமிழக விடுதலையை விட்டு விட்டு மாநில சுயாட்சி கேட்பதாக எழுதித் தரச் சொல்லி சீர்குலைக்க முயன்றார் கலைஞர் கருணாநிதி.

சிறைப்பட்டோரிடையே அடியார் செய்த செப்படி வித்தைகளையெல்லாம் விரிவாகத் தென்மொழியில் பிறகு எழுதினார் பாவலரேறு.

ஆக, தமிழக விடுதலைக்கென பாவலரேறு எடுத்த முயற்சிகளுக்கு இந்திய அரசு தடையாக இருந்தது என்பதை விடத் திராவிடக் கட்சிகளே பெருந் தடைகளாக இருந்தன.

“தமிழனைப் பிறர் யாரும் தாழ்த்தவில்லை; அவன் தம்பியே தாழ்த்துகின்றான்! தமிழனைப் பிறர் யாரும் வீழ்த்தவில்லை; அவன் தனையனே வீழ்த்துகின் றான்!'' என மனம் வருந்தினார் பாவலரேறு.

மொழிஞாயிறு பாவாணரைத் தலைவராக ஏற்ற உலகத் தமிழ்க் கழகத்திற்குப் பொதுச் செயலராக இருந்து பணியாற்றினார் பாவலரேறு. பின்னர் அதில் ஏற்பட்ட தன்முனைப்பு காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக விலகியவர், 1980 களில்உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.

மொழி, இனம், அரசியல், பொருளியல், அறிவியல், கலை இலக்கியம், பண்பாடு எனும் ஏழு துறைகள் வழியான உரிமை எழுச்சிக்கு அவ்வமைப்பு பாடாற்றும் என்பதாக அறிவித்து அதன் முதல்வராகச் செயலாற்றினார்.

அதன் தொடர்ச்சியிலேயே அன்றைய அளவில் தமிழக விடுதலையை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேச அரசியலுக்கு வந்த தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.க. (மா.இலெ) மறுசீரமைப்புக் குழு, மற்றும் முனைவர் சாலை இளந்திரையனார் நடத்திய அறிவியக்கப் பேரவை, அறிஞர் வே.ஆனைமுத்து நடத்திய பொது சமஉரிமைக் கழகம் ஆகிய கட்சிகளை, இயக்கங்களை அணிசேர்த்து தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அமைத்து அதன் அமைப்பாள ராகிப் பாவலரேறு செயலாற்றினார்.

முன்னணிக்கும், உறுப்பு இயக்கங் களுக்கும் இடைப் பட்ட நெருக்கடிகள் மற்றும் த.பொ.க. வுக்கும் இ.பொ.க. மறுசீரமைப்புக் குழுவுக்கும் இடைப்பட்ட முதன்மை முரண்பாட்டைக் கையாளுவதில் ஏற்பட்ட கருத்து முரண்கள் முன்னணியைப் பின்னுக்கிழுத்தன.

அதேபோல் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறைப்பட்டிருந்த தமிழ் உணர்வாளர்கள், மக்கள் நலப் போராளிகளை எல்லாம் விடுதலை செய்ய வலியுறுத்தி "ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டியக்கத்தை' புலவர் கலியபெருமாளுடன் இணைந்து தொடங்கி னார். அதில் பல்வேறு அமைப்புகளை ஒருங் கிணைத்து இயக்கி மாநாடுகள் நடத்தப் பெற்றன.

சாதிப் புழுக்கள் நெளிந்திடும் மொத்தைச் சாணித் திரளைகள் நாம் எனச் சாதி இழிவைச் சாடி அதை ஒழிக்க சட்ட வழிக்குட்பட்ட சில மாறுதல்கள் கொண்ட திட்டத்தை முன்வைத்தார்.

தமிழ் மொழி, இன, நாட்டு முயற்சிகளை முன்நிறுத்தி பாவலரேறு எடுத்த முன் முயற்சிகள் பல்வேறு நெருக்கடியான சூழல்களில் நடைபெற்றன என்பதைக் கவனித்தாக வேண்டும்.

இந்திய அரசு எதிர்ப்பை முதன்மைப்படுத்திப் போராடுகிற பெரும் திட்டப் பணிகளைச் செய்ததோடு, தென்மொழி எதிர்கொண்ட அரசியல் அமைப்பில் நெருக்கடிகள் அதிகம்.

தமிழ்த்தேசக் கருத்தையே முற்றிலும் மறுத்து எதிர்த்த பொதுவுடைமைக் கட்சிகளை அரசியலாக எதிர் கொண்டது, தமிழிய உணர்வோடு இயைந்து சிந்திக்காத திராவிட கழகத்தோடு அரசியலாக உறவும் மறுப்பும் கொண்டது, இந்திய அரசை, இந்திய எதிர்ப்பை, வடநாட்டு எதிர்ப்பை தேர்தல் நலனுக்காகப் பொய்மையாய்ப் பேசிவந்த தி.மு.க.வை மறுக்கவும் சில நேரங்களில் காக்கவும் செய்தது எனும் இக்கட்டுகள் தென்மொழிக்கு இருந்தன.

எனவே அது, பொதுவுடைமையை ஏற்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளைச் சாடியது.

பெரியாரைத் தமிழ்நாட்டு விடுதலைப் போராட வலியுறுத்தி அழைத்தது.

தமிழ்நாடு விடு தலைப் போராட்டத் திற்கு நாள் குறியுங் கள். உங்கள் தலைமையில் நாங்கள் வருகிறோம் என அழைப்பு விடுத் தது.

வடபுயல் தடுக்கும் சுவரெனத் தமிழக நலனுக்காக தி.மு.க.வைக் காக்க எண்ணிய பாவல ரேறு தமிழின விடு தலை உணர்வுக்கு முனைப்பு காட்டாத அதைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்.

மிசாவின் நெருக்கடியில் ஓராண்டு சிறையில் இருந்து வந்த பின்பு தன் கொள்கை உறுதியில் பாவலரேறு மாறவில்லை.

“இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கம். இந்துமதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும், அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமை யிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.''

 எனும் தன் கொள்கைத் தெளிவை உறுதிவாய்ந்த உணர்வோடு தென்மொழி இதழின் முகப்பிலேயே வெளியிட பாவலரேறு தயங்கியதில்லை.

தமிழக விடுதலை வேட்கையில் ஆழ்ந்திருந்ததால் தான் அவரால் தமிழீழ விடுதலைக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் ஆழ்ந்து இயங்க முடிந்தது.

தமிழீழ விடுதலைக்குக் கருத்தளவில் மட்டு மல்லாது, தமிழகம் நோக்கி வந்த போராளியர்க்கு 70 களின் பிற்பகுதி முதலே புகலிடமாகத் தென் மொழியை அமைத்துக் கொடுத்த வகையில் தமிழீழ விடுதலைக்குத் துணையாக நின்றார்.

நெருக்கடியான நேரங்களில், யாரும் பேச அஞ்சிய போதுகூட, “இதோ நான் ஒருவன் இருக் கிறேன், எனைச் சிறை செய்யினும் செய்க. ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன், என் தலை கொய்யினும் கொய்க'' என்று வீறுரையாற்றினார்.

முன்பாகத் தென்மொழி தடை செய்யப் பெற்ற பொழுது கூட தென்மொழியின் பணியைத் "தமிழ்ச்சிட்டு' செய்யும் என்பதாக அறிவித்துப் பணி தொடர்ந்தார்.

“தென் மொழியைக் கண்ணொளியை மூச்சுயிர்ப் பைச் சாகும் வரைத் தொண்டடெனவே ஆற்றி வருவேன்; வாழ்வு தீர்ந்து விடின் வேற்றுடலம் மாற்றி வருவேன்'' என்கிற வகையில் அவரிடம் அத்துணை உறுதியும் முனைப்பும் இருந்தது.

அறிவிலே பெரு நெருப்பாய் அனல் கக்கி எழுதி, போராடி இயங்கினாலும் அவர் அன்பிலே மழை நீராய்க் குளிர்ச்சியுடையவர். இயற்கை அவரின் உள்ளத்தில் அருவியாய்க் கொட்டியதால் அவரின் இலக்கியங்கள் கழக இலக்கியங்களுக்கு ஒப்பானவையாக உயர்ந்து நின்றன.

நூறாசிரியம், ஐயை, பாலியக் கொத்து, எண்சுவை எண்பது, கற்பனை ஊற்று, உலகியல் நூறு, மகபுகுவஞ்சி போன்ற பல இலக்கிய ஆக்கங்கள் செழுமையான சிறப்பு கொண்டவை.

அவரின் ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், செயலும் செயல் திறனும், இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள் போன்ற ஆய்வுக் கட்டுரைகள் தமிழுக்கும் தமிழருக்கும் அரணாகப் பயன்படுவன.

பாவலரேறுவின் எழுத்தாற்றல், உலகத்து தமிழர்களை எல்லாம் வெகுவாய் ஈர்த்தது. அதனால் மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, இங்கிலாந்து, செருமணி, இலங்கை என அயல் நாடுகள் சென்று அனல் பரப்பினார்.

எத்தகைய அடித்தளமும் இல்லாமல், தம் அரசுப் பணியையும் இழந்து, ஆள் போல் பரவி, அருகு போல் வேரூன்றித் தமிழ்ப் பேரினத்திற்கு அவர் ஆற்றிய பெரும் ஆக்கங்கள் தமிழக ஈடேற்றத்திற்குக், கிடைத்த பெரும் போர்க் கருவிகள்.

இருப்பினும் தென் மொழியின் பணி நடுத்தர வகுப்பினரையே சார்ந்திருந்தது. அவர்களைச் சார்ந்தியங்குகிற வகையிலேயே பாவலரேறு அவர்கள் மொழி, இன, நாடு எனும் முப்படிக் கொள்கை கொண்டிருந்தார்.

தமிழக விடுதலைக்கான தலையாய அடித்தட்டு மக்களைத் திரட்டுவதற்கான வகையில் தென்

மொழி திட்டமிடவில்லை. எனவே பாவலரேறுவின் கருத்துகள் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வில்லை.

"தென்மொழி நிலத்தில் நன்றாக வளர்ந்தவர்கள் எல்லாம் அவரவர் தனி நலன்களுக்குப் பயன்பட்டுக் கொண்டவர்களே அல்லாமல் நாட்டு நலன் நோக்கியோ, மக்கள் நலன் நோக்கியோ சென்று பணி செய்யவில்லை'' எனப் பாவலரேறு வருந்தவும் செய்தார்.

இருப்பினும் அவரின் தனிப்பட்ட வருத்தமாகவே அது அமைந்ததே அல்லாமல், அவரால் அவ்வருத் தத்தை நீக்கும் வகையில் செயல் திட்டத்தை அளிக்க முடியவில்லை என்பதே தென்மொழி வரலாற்றில் குறைபாடு.

மற்றபடி, தமிழ்த்தேச வரலாற்றில் சூறைக்காற்றாய்ச் செயல்பட்ட தென்மொழியின், பாவலரேறுவின் பணிகளோ தமிழ்த்தேச இயக்கங்களுக்கு இளைஞர் களுக்குக் கலங்கரை விளக்கமாய் என்றும் நின்றொளிரக் கூடியது.

எனவே, தமிழ்த்தேச விடுதலை அரசியல் களத்திற்குத் தந்தையாக எண்ணத்தக்க பாவலரேறு வின் நினைவையேந்தவும், அவரின் கொள்கை வழித் தடத்தில் மேலும் முன்னேறவும் செய்வோம்.