மகத்தான அக்டோபர் புரட்சியின் 98-வது ஆண்டு நிறைவு வருகின்ற புரட்சிகர சூராவளிகளுக்குத் தயாராகுவோம்!

இந்தியா உட்பட்ட முழு உலகமுமே கொதிக்கின்ற எரிமலையாக வெடிக்க காத்திருக்கிறது.

october day 1 45025 ஆண்டுகளாகவும் அதற்கு மேலும், முதலாளிகளும் ஏகாதிபத்தியர்களும் முதலாளித்துவ அமைப்பிற்கு மாற்று ஏதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவிலும், முதலாளித்துவ ஏகாதிபத்திய உலகின் மற்ற எல்லா நாடுகளிலும், உழைக்கும் மக்களும் பெருவாரியான மக்களும் அதிகரித்துவரும் சுரண்டலினாலும் ஒடுக்குமுறையாலும் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத சுமையினால் துயருற்று வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் மகத்தான போராட்டங்களாலும் தியாகங்களினாலும் தொழிலாளி வர்க்கம் வென்ற உரிமைகள் எல்லாம் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. “தீவிரவாதத்திற்கு எதிரான போர்”, “தேசப் பாதுகாப்பு”, “தேச ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது” என்ற பெயரில், நம் நாட்டிலும் உலக அளவிலும், அதிகரித்து வரும் பாசிச தாக்குதல்கள் பொது மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ளது.

உண்டாகும் பேரழிவான விளைவுகளை பொருட்படுத்தாமல், மிகச் சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பொருளாதார நெருக்கடியின் சுமையை பலவீனமான அரசுகளின் முதுகில் பலவந்தமாக ஏற்றிவருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் பல தீவிரவாத குழுக்களுக்களை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி நிதி கொடுத்து உள்நாட்டுப் போர்களை கட்டவிழ்த்து விடுகின்றது. மேலும் அது, உலகின் பல நாடுகளில், நேரடியான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தன்னுடைய ஆதிக்கத்திற்கு வரும் சவால்களை தகர்த்தெறிந்து உலகம் முழுவதிலும் தன்னுடைய போட்டியற்ற ஆதிக்கத்தை நிறுவுவதற்கா அது ஒரு மனதாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  

தங்களுடைய சகிக்க முடியாத நிலைமைகளினால் தொழிலாளி வர்க்கம் மற்றும் பொது மக்களின் கோபம் அடிமனதில் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள், அதிகரித்துக் கொண்டு வரும் முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்தும், தேசிய இறையாண்மை மீறப்படுவதை எதிர்த்தும், பாசிசம் மற்றும் ஏகாதிபத்திய போர்களை எதிர்த்தும் மிகப் பெரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள், ஏகாதிபத்தியத்தையும் முதலாளிகளையும் அவர்களுடைய போக்கை இரக்கமின்றி தொடர்ந்து செயல்படுத்துவதிலிருந்து தடுத்து நிறுத்துவதில் தோல்வியடைந்து விட்டது. எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், முதலாளிகளும் ஏகாதிபத்தியர்களும் தான் திட்டத்தைத் தீர்மானிக்கிறார்கள், தொழிலாளி வர்க்கத்தின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்து கொண்டு தான் வருகின்றன என்பதை தொழிலாளர்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர்.

நம் நாட்டின் தொழிலாளர்களும் பொது மக்களும் ஒரு மாற்றைத் தேடுகின்றனர். முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவ - காலனித்துவ மிச்சங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் முடிவு கட்டி, மனிதர்களால் மனிதர்களுக்கு இழைக்கப்படும் எல்லா வகையான சுரண்டலிலிருந்தும் விடுவித்து ஒரு நவீன சோசியலிச இந்தியாவை உருவாக்கும் பாட்டாளி வர்க்க புரட்சியே, அந்த மாற்றாகும்.

அப்படிப்பட்ட ஒரு புரட்சியை இரசியாவில் 98 வருடங்களுக்கு முன், லெனினுடைய போல்சவிக் கட்சியின் தலைமையில் இரசிய தொழிலாளி வர்க்கம் நடத்தியது. முதலாளித்துவ சுரண்டலின் சகிக்க முடியாத நிலைமைகளிலும், முதலாளிகளின் இலாபங்களுக்காக தொழிலாளி வர்க்கம் மற்ற நாடுகளின் தங்களுடைய சகோதரர்களை கொன்று குவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஏகாதிபத்தியர்களுக்கு இடையிலான உலக போரிலும் இரசியாவின் தொழிலாளர்கள் “பட்டது போதும், இனியும் பொறுக்க மாட்டோம்” என்று அறிவித்தனர்.

அவர்கள் முதலில் வெறுக்கப்பட்ட சாரின் ஆட்சியை தூக்கி எறிவதற்காக புரட்சியில் வெகுண்டு எழுந்தனர். பிறகு இரசியாவின் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களைத் தூக்கி எறிவதற்காக மீண்டும் ஒரு முறை புரட்சியில் திரண்டெழுந்தனர். 1917 நவம்பர் 7-ஆம் தேதி, சோவியத்துகள் என்று அழைக்கப்படும் தொழிலாளர்களின் உழவர்களின் மற்றும் படைவீரர்களின் புரட்சிகர குழுக்கள் ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். இந்த புரட்சிகர குழுக்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் ஒரு புதிய அரசை நிறுவினர்.

இந்தப் புதிய அரசு தொழிலாளி வர்க்க சர்வாதிகார அரசாக இருந்தது. அதாவது, உழைக்கும் உழவர்களின் கூட்டோடு தொழிலாளி வர்க்க ஆட்சியாக அது இருந்தது. சுரண்டும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாக அது இருந்தது. புரட்சிகர தொழிலாளர்களும் படை வீரர்களும் முதலாளிகளின் மற்றும் நிலபிரபுக்களின் சக்திகளை போரிட்டு வந்த அந்த நேரத்திலும் அவர்களுடைய புரட்சிகர அரசு பல ஆணைகளைப் பிரகடனப்படுத்தியது. அது, தொழிலாளர்கள் உழவர்களின் செயலால் இந்த பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்று காட்டியது.

புரட்சிகர அரசாங்கம், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் அனைத்து சுவடுகளிலிருந்தும் உழவர்களை விடுதலை செய்தது. முன்னர் சாரின் இரசியாவால் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்தை அது பிரகடனம் செய்தது. அந்த தேசங்கள் தாங்கள் விரும்பும் வழியில் நடை போடலாம் அல்லது பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமையை தக்க வைத்துக் கொண்டு புதிய சோவியத்து சோசியலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

14 ஏகாதிபத்திய சக்திகள் ஒன்று சேர்ந்து தொழிலாளர்கள் விவசாயிகளின் புரட்சியை நசுக்குவதற்கு தங்கள் இராணுவங்களை அனுப்பி முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் படைகளுக்கு ஆதரவு கொடுத்தனர். நான்கு ஆண்டுகள் நடந்த, இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில், ஏகாதிபத்தியர்களும் முதலாளிகளும் நிலபிரபுக்களும் தோற்கடிக்கப்பட்டனர். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், போல்சவிக் கட்சியின் வழிகாட்டுதலில் தாங்கள் நிறுவிய புதிய புரட்சிகர அரசை பாதுகாக்க, சாரின் இரசியாவின் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் கைகோர்த்து நின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருளாதாரப் போக்கை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை புதிய அரசு உடனடியாக எடுத்தது. அனைத்து பெரிய தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வங்கிகள் மற்றும் ரயில்வேவை தேசியமயமாக்கியது. உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் முக்கிய கருவிகள் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, அவை சமூக கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டன. வெளிநாட்டு வாணிகமும் உள்நாட்டு மொத்த வணிகமும் தேசியமயமாக்கப்பட்டன.

சோவியத்து அரசு உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை நிலைமைகளை மனிதர்கள் வாழுவதற்கு உகந்ததாக உறுதி செய்தது. தொழிலாளர்கள் பட்டினியால் வாடும் அந்த நிலைமைகளைத் தவிர்ப்பதை உறுதி செய்வதற்காக பொது விநியோக அமைப்பை உருவாக்கியது. பள்ளி கல்வி எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்யப்பட்டு கட்டாயமாக்கப்பட்டு, எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர்கள் உழவர்களின் புதிய அரசு, வாக்களிப்பதற்கான உரிமை உள்ளிட்ட சமத்துவ உரிமையை பெண்களுக்கு அதிகாரபூர்வமாக வழங்கியது மட்டுமல்லாமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது. மண வாழ்க்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே அதே உரிமைகளைப் பெறுவதற்கான உறுதி செய்யப்பட்டது. தாய்மார்கள் வேலைக்குச் செல்ல ஏதுவாக, குழந்தை பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட்டன. தொழிற்சாலைகளிலும் வேலை இடங்களிலும் பொது மக்கள் உண்பதற்கான இடங்கள் நிறுவப்பட்டன. குடியிருப்புப் பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்க்கப்பட்டது.

சோவியத் சட்டத்தின் கீழ் மனசாட்சிக்கான உரிமை உறுதி செய்யப்பட்டது. சோவியத் யூனியனின் குடிமக்களுக்கு பேச்சுரிமையும் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் இதழ்களை நடத்துவதற்கும் உரிமை இருந்தது. தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டும் “உரிமை” மட்டுமே ஒழிக்கப்பட்டது. தன்னார்வ அடிப்படையில் சோவியத்து ஒன்றியத்தோடு இணைந்த தேசங்கள், அவர்களுடைய சொந்த அரசியல் சட்டம், இராணுவ படைகள், நிர்வாக அமைப்பு ஆகியவற்றை வைத்திருந்தனர். அவர்கள் சோவியத்து யூனியனுடைய கொடியோடு தங்களுடைய தனிப்பட்ட கொடியையும் வைத்திருந்தனர். சோவியத்து யூனியனின் பல்வேறு மக்களுடைய மொழிகளும் கலாச்சாரமும் விரைவாக வளர்ச்சி அடைந்தன. சோவியத்து யூனியனின் மக்களுக்கு இடையிலான நட்புறவும் அதைப் போலவே விரைவாக வளர்ச்சி அடைந்தது.

போரின் பேரழிவிற்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், உழவர்களை கூட்டுறவு விவசாயம் செய்ய ஊக்குவிக்கும் பணியை சோவியத்து அரசு எடுத்துக் கொண்டது. டிராக்டர்கள், மற்ற இயந்திரங்கள், உரங்கள், மின்சாரம் மற்ற தேவைகள் போன்ற இடுபொருட்களை கூட்டுப் பண்ணைகள் அமைப்பதற்காக தொழிலாளர்கள் விவசாயிகளின் அரசு தாராளமாக வழங்கியது.

இதற்கு கைமாறாக, கூட்டு பண்ணைகள் தாங்கள் உற்பத்தி செய்ததில் ஒரு பங்கை தொழிலாளர்கள் விவசாயிகளின் அரசிற்கு தந்தன. தொழிற்சாலைகளைப் போலவே வேளாண்மைப் பயிர்களிலும் அரசின் திட்டப்படி எது எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது செயல்படுத்தப் பட்டது. அதன் நோக்கம் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் பொருளாதார நிலைமைகளை தொடர்ந்து அதிகரிப்பதாக இருந்தது. 1935-இல் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சோசியலிச சமுதாயம் கட்டியமைக்கப் பட்டிருந்தது. இதற்கு மகத்தான போராட்டங்களும் தியாகங்களும் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், தொழிலாளர்களின் மற்றும் உழவர்களின் உள்நாட்டு மற்றும் வெளியிலிருந்த பகைவர்கள் முதலாளித்துவத்தை மீட்டு தொழிலாளர்களையும் உழவர்களையும் சுரண்டி கொள்ளையடிக்கும் தங்கள் கனவை எப்போதும் விட்டு விடவில்லை.

1936-இல், சோவியத்து யூனியன் தனக்காக ஒரு புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டது. அந்த அரசியல் சட்ட வரைவு ஆவணத்தின் மீதான விவாதத்தில் சோவியத்து யூனியன் முழுவதும் பங்கு பெற்ற பிறகே முடிவில் அது அங்கீகரிக்கப்பட்டது. சோவியத்து யூனியனின் 1936 அரசியல் சட்டமே உலகில் இதுவரை எழுதப்பட்டவற்றில் மிகவும் முன்னேறிய அரசியல் சட்டமாக உள்ளது.

அது எல்லா வயது வந்தவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்தது மட்டுமில்லாமல், இறையாண்மை உண்மையில் மக்களிடமே இருப்பதை உறுதி செய்வதற்கான செயல்முறைகளையும் அது நிறுவியது. மக்களே வேட்பாளர்களைத் தீர்மானிக்கவும், வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் செய்தனர். தங்கள் வேலைகளை சரிவர செய்யாத பிரதிநிதிகளை மக்கள் திருப்பி அழைக்கவும் செய்வர். சட்ட வரைவை முன்வைக்கும் உரிமையையும் மக்கள் தங்களிடம் வைத்துக் கொண்டனர்.

1930-களில் முழு முதலாளித்துவ உலகமும் நெருக்கடியில் சிக்கியிருந்த போது சோவியத்து யூனியன் மேலும் மேலும் வலிமை பெற்று வீரநடை போட்டுக் கொண்டிருந்தது. சோவியத் மக்களின் மகத்தான ஒற்றுமையை இரண்டாம் உலகப் போரின் போது காண முடிந்தது. நாசி பாசிசத்தை தோற்கடிப்பதில் உலக மக்களை வழிநடத்தி முன்னணியில் நின்று தீர்மானகரமான பங்கை சோவியத்து யூனியன் ஆற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அக்டோபர் புரட்சி காட்டிய வழியில் பீடுநடை போடத் தொடங்கின.

இன்று சோவியத்து யூனியன் சிதறுண்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ளன, உலக அளவில் புரட்சியின் பின்னடைவை இது குறிக்கும். ஆரம்ப கால கட்டுமானம் முடிந்தவுடன் சோசியலிச சமுதாயத்தை எதிர்கொண்ட புதிய பிரச்சனைகளை தீர்க்க, குருஷேவ் தலைமையிலான சோவியத்து யூனியனின் கம்யூன்ஸ்டு கட்சியின் (சிபிஎஸ்யூ), தலைமை மறுத்தது தான் சோவியத்து யூனியன் வீழ்ந்ததற்குக் காரணமாகும்.

சோவியத்து சமுதாயத்தில் சுரண்டும் வர்க்கங்கள், வர்க்கங்களாக இல்லை என்ற உண்மையை கொண்டு, சிபிஎஸ்யூ 1956-இல் நடந்த அதனுடைய 20-ஆவது காங்கிரசில் வர்க்க போராட்டம் இனிமேலும் வளர்ச்சிக்கு அடிப்படையாக இல்லை என்று அறிவித்தது. 1936 அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்ட பொழுது எதிர்பார்த்தவாறு, மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்குவதற்காக, பாட்டாளி வர்க்க தலைமையை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, குருஷேவ் தலைமையிலான சிபிஎஸ்யூ “அனைத்து மக்களின் கட்சி” என்றும், “அனைத்து மக்களின் அரசு” என்றும் கருத்துக்களை முன்வைத்தனர். உழைக்கும் மக்களை அமைதிப்படுத்தி தூங்க வைப்பதற்கும், அதே சமயம் ஒரு புதிய சலுகை பெற்ற அரசியல்வாதிகள் தோன்றுவதற்கும் முதலாளித்துவத்தை மீட்பதற்கும் இந்த முழக்கங்கள் வழிவகை செய்தன. தேசங்களின் சுய நிர்ணய உரிமையை மதித்து அதை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, சோவியத்து தலைமை இரசிய பேரினவாதத்தை உள்நாட்டில் தூண்டி விட்டும், “வரையறுக்கப்பட்ட இறையாண்மை” என்ற கருத்தை வார்சா ஒப்பந்தத்தின் மற்ற உறுப்பு நாடுகளிடையே ஊக்குவித்தும் வந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் சோவியத்து யூனியன் சோசியலிச போர்வையில் ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக உருமாறி உலக ஆதிக்கத்திற்கு அமெரிக்காவுடன் போட்டி போட்டது.

oct day 2 450வருகின்ற புரட்சிகர சூறாவளிகளுக்கு நாம் தயாராகும் வேளையில், மகத்தான அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளை உயர்த்திப் பிடிப்பது மிக முக்கியமாகும். தொழிலாளி வர்க்கத்தின் உறுதியான புரட்சிகர கட்சியின் தலைமையின் கீழ், தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களின் சோவியத் பிரதிநிதிகளது கைகளில் அனைத்து அதிகாரத்தையும் ஒப்படைத்தது தான், சோசலிச கட்டுமானத்தின் ஆரம்ப கட்டத்தில், சாதித்த வெற்றியின் அடிப்படையாகும். எந்த பாதையில் மேற்கொண்டு வளர்ச்சியை காண்பது என்பது 1936 அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட போது தெளிவானது.

மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் இறுதி நோக்கத்தை அடைவதற்காக, தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் முன்னணிப் பங்கை மேம்படுத்துவது என்ற திசையிலும், நிர்வாகத்தில் உழைக்கும் மக்களின் பங்கை அதிகரிப்பது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

ஆனால், 1956-க்கு பின்னர் நடந்தது என்னவென்றால், தீர்மானிக்கும் எல்லா அதிகாரமும் கட்சியிலும் அதன் அரசியல் தலைமைக் குழுவிடமும் மேலும் மேலும் குவிக்கப்பட்டு புதிய சலுகை பெற்ற வகுப்பினர் தோன்றலாயினர், வேலையின்மையும் மற்ற முதலாளித்துவத்தின் கேடுகளும் தலைதூக்கியது, உழைக்கும் மக்கள் அரசிலிருந்து மேலும் மேலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர், இவற்றின் விளைவாக, இறுதியில் சோவியத்து யூனியனே வீழ்ச்சியடைந்தது.

முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் உலகை பேரழிவுப்பாதைக்கு இழுத்து செல்வதிலிருந்து உலகைக் காப்பாற்ற, இன்று சூழ்நிலை இரண்டாவது சுற்று பாட்டாளி வர்க்க புரட்சிக்காக கூக்குரலிடுகிறது. மார்க்சிச-லெனினிய பாதாகையின் கீழ், புரட்சி மூலம் இந்திய சமுதாயத்திற்கான சோசியலிச பாதையை திறந்து விட நாம் அணிவகுப்போம். கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையை மீட்டு, மக்களை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான கருவியாக இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட கொடிப்படைக் கட்சியை கட்டியமைக்கப் பாடுபடுவோம்.  

மகத்தான அக்டோபர் புரட்சி வாழ்க!

Pin It