பருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம் விவசாயத்தின் திசைப் போக்கே இதன் மூலக்காரணம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையான வளர்ச்சி மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை 2030-க்குள் எட்டுவதாக பிரதம மந்திரி மோடி உறுதியளித்துள்ளார்.
17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் இரண்டாவது, பசி பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதையும், உணவு பாதுகாப்பை அடைவதையும், ஊட்டச்சத்தை அதிகரிப்பதையும், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நோக்கத்திற்கு பிரதமர் கொடுத்துள்ள உத்திரவாதம், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட பாசாங்குத்தனத்தையும் மோசடியையும் நடத்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அவர்கள் அப்பட்டமாக பொய்களை வாரி இறைத்து உன்னதமான அறிவிப்புக்களால் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு பாசிப்பருப்பு, உளுந்து
எல்லா மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான விவசாய வளர்ச்சியை அடைவதற்காக போடப்பட்ட 65 ஆண்டு கால பொருளாதார திட்டங்களுக்கு பிறகு 2015-இல் உண்மை என்னவென்றால், அடிப்படை உணவுகளாகிய பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை பெருவாரியான இந்திய மக்கள் நமக்கு எட்டாததாக நிலைமைகள் உள்ளன. இன்று, புரத சத்தின் அடிப்படை மூலமான பருப்பு வகைகளின் கிடுகிடு விலை ஏற்றம், உழைக்கும் மக்கள் அதை உட்கொள்ளும் அளவை மேலும் வெட்டிக் குறைக்க நிர்பந்தப்படுத்துகிறது.
இந்திய மக்களுக்கு பருப்பு வகைகள் புரதச் சத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. பருப்பு சாதமோ அல்லது பருப்பு ரொட்டியோ தான் நம் நாட்டு பெருவாரியான மக்களுக்கு முக்கிய உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு புரதம் முற்றிலும் அவசியம். தாய்மார்கள் தேவையான அளவை விட குறைவாக புரதத்தை உட்கொள்வது, குழந்தைகள் சுகாதாரத்தில் அழிவுகரமான விளைவுகளை உண்டாக்கும். ஊட்டச் சத்தின்மையால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முன்னோடி நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பது பொது அறிவே. எடைக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகத்திலேயே முதல் வரிசையில் உள்ளது. இது நம்முடைய தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு தீவிர உடல்நல பேராபத்துகளை விளைவிக்கக் கூடியது.
இந்தியா தான் இதுவரை உலகத்தின் மிக அதிகமான பருப்புகளின் உற்பத்தி இடமும் அதன் நுகர்வோர் உள்ள இடமும் ஆகும். அவற்றுள் – துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியன பருப்பு உற்பத்தியிலும் நுகர்ச்சியிலும் பெரும்பான்மை வகிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு, பருப்பு புரத சத்தின் நுகர்ச்சி தொடர்ச்சியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக, அது 1961-இல் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 70 கிராமாக இருந்தது, 2001-இல் 30 கிராமாக குறைந்துள்ளது.
2011-இல் அது 43 கிராமாக சிறிது ஏற்றமடைந்த போதும், அப்போதிலிருந்து அது தேக்கமடைந்து இப்பொழுது குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் 80 கிராமுக்கு பதிலாக இப்பொழுது அது 37 கிராமாக உள்ளது. நம் மக்களில் ஏழைகள் உட்கொள்ளும் உண்மையான நுகர்வு இந்த சராசரியை விட மிகக் குறைவாகவே உள்ளது.
இப்படி பருப்புகளின் பற்றாக்குறை நீண்டகாலமாக இந்தியாவில் இருந்து வருகிறது. உற்பத்தி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே தேக்கமடைந்துள்ளது. தொடர்ச்சியாக விலைகள் ஏற்றமடைந்து கொண்டே வந்துள்ளன. அதனுடன் அவ்வப்போது வியாபார ஏகபோகங்களால் சரக்குகள் வேண்டுமென்றே பதுக்கி வைக்கப்பட்டும் கையாடப்பட்டும் திடீர் விலை ஏற்றங்களையும் ஏற்படுத்தப்படுகிறது.
உற்பத்தி வெறும் 15% மட்டுமே குறைந்துள்ள இந்த நேரத்தில், சில்லரை விலைகள் 100%-க்கும் மேல் ஏறிவிட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் கடந்த அரசாங்களிலிருந்து எந்த விதத்திலும் வித்தியாசமாக இல்லை. அது விலைகள் உச்சத்தை அடையும் வரை வேடிக்கை பார்த்திருந்தது. பிறகு, அது பற்றாக்குறையான மழையே, விலை ஏற்றத்திற்கும் பருப்புகளின் உற்பத்தி குறைவிற்கும் காரணம் என பழி சுமத்தியது.
இந்திய அரசாங்கம் பருப்பு வகைகளை விரைவில் இறக்குமதி செய்யும் என்று எல்லோருக்கும் தெரிய வந்ததனால், சர்வதேச சந்தையில் பருப்பு விலைகள் ஏற்றம் கண்ட பிறகு, 5000 டன்கள் துவரம் பருப்பையும் 5000 டன்கள் உளுத்தம் பருப்பையும் இறக்குமதி செய்வோமென அரசாங்கம் அறிவித்தது. இதன் பின்னர் பருப்புகளின் பதுக்கல்காரர்களுக்கு எதிராக பொதுமக்களின் கூக்குரல் பலமான பிறகு, மிகவும் காலம் கடந்து, அக்டோபர் கடைசி வாரத்தில், 75,000 டன் பருப்பை பதுக்கல்காரர்களிடமிருந்து கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்தது!
இது பனிமலையின் நுனி மட்டுமே என்பது தெரிந்ததே. மிக முக்கியமாக, மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட இந்த இரு நடவடிக்கைகளுமே பருப்புகளின் சில்லரை விலைகளில் எந்தவொரு வித்தியாசத்தையும் கொண்டு வரவில்லை. இந்த நேரத்தில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200 மேலும், மற்ற பருப்புகளின் விலை மிகவும் அதிகமாகவும் விற்கப்பட்டு வருகிறது.
பற்றாக்குறையான பருப்பு உற்பத்தியும் தொடர்ச்சியான விலை ஏற்றமும் கொண்ட சூழ்நிலை, மோசமான திட்டமிடலினாலோ அல்லது பாதகமான வானிலை அல்லது இயற்கை அழிவுகளாலோ ஏற்பட்டவை அல்ல. பருப்பு வகைகளின் உற்பத்தியை எப்படிப் பெருக்குவது என்ற தொழில்நுட்ப அறிவு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. பெரும்பான்மை மக்களின் தேவைகளை பணயம் வைத்து சிறுபான்மையினரின் பேராசையை நிறைவேற்றும் முதலாளித்துவ பொருளாதாரப் போக்கின் விளைவு தான், இந்த நிலைமையாகும். உழைக்கும் மக்களின் வயிறுகளை நிறப்புவதற்காகவோ அல்லது அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவோ விவசாயம் ஒழுங்கமைக்கப்பட வில்லை.
இந்திய அரசு, உழவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதில்லை. மாறாக, விவசாய விளைபொருட்களின் வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் ஒரு சந்தையில், உழவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டுமென அது நிர்பந்தப் படுத்துகிறது. நீண்ட சேமிப்பு ஆயுள் கொண்ட பருப்பு வகைகள், இந்த வர்த்தக ஏகபோகங்களின் முன்னுரிமை பெற்ற சரக்குகளாக விளங்குகிறது. உழவர்களிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி, சரக்குகளை தேக்கி வைத்து, விலைகள் உயரும் வரை காத்திருந்து, பின் பெரும் இலாபத்தை அவர்கள் ஈட்டுகின்றனர். அவர்கள் விவசாய பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதிலும், மகத்தான இலாபங்களை ஈட்டுகின்றனர்.
இந்திய அரசு இப்படிப்பட்ட மக்களுக்கு எதிரான பொருளாதாரப் போக்கை கட்டிக் காத்து வருவதில் உறுதியாக நிற்கிறது. உழவர்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது நகர்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு ஊட்டசத்து கிடைக்காமல் இருந்தாலோ அதற்குக் கவலையில்லை. விவசாய வர்த்தக ஏகபோகங்களின் அதிகபட்ச லாபம் ஈட்டும் பேராசையை நிறைவேற்றுவதில் மட்டுமே அது அக்கறை கொண்டுள்ளது. இந்த அரசை நிர்வகிப்பதற்காக அதிகாரத்திற்கு வரும் எல்லா கட்சிகளுமே மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை அவசியமாகக் காக்க வேண்டியுள்ளது.
நம் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் போராட்டம், இன்றுள்ள அரசை, விவசாயம் உள்ளிட்ட முழு பொருளாதாரத்தின் போக்கையும் மக்களின் தேவையை நிறைவு செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் ஒரு புதிய அரசால் மாற்றும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அரசு, நம் மக்களின் ஊட்டச் சத்துத் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவிற்கு பருப்பு வகைகளையும் பிற விவசாய பொருட்களையும் உற்பத்தி செய்யுமாறு, உழவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவ வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தையும், உள்நாட்டு மொத்த வர்த்தகத்தையும், மொத்த சில்லரை வர்த்தகத்தையும், அரசு தன் கைகளில் எடுத்துக் கொண்டு, அவற்றை சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
விவசாய உற்பத்தியை இலாபகரமான விலைக்கு கொள்முதல் செய்வதை அது உறுதி செய்ய வேண்டும். மேலும் நவீன மற்றும் அனைவருக்குமான பொது விநியோக அமைப்பினால் எல்லா அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நல்ல தரத்திலும் தேவையான அளவிலும் கட்டுபடியாகக் கூடிய விலைகளிலும் உழைக்கும் மக்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒட்டித் தொழிலாளர்களும் உழவர்களும் தங்கள் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்.