காரல் மார்க்சு-200
“சமரசமற்ற விமர்சனம்” என்பதே காரல்மார்க்சின் அறிவுநெறிக் கோட்பாடாக இருந்தது. மூலதனம் மற்றும் முதலாளியம் குறித்த அவருடைய தீவிரமான விமர்சனப் பகுப்பாய்வில், அவற்றை நிலைகுலையச் செய்யும் வகையில் சமரசமற்ற விமர்சனக் கோட்பாட்டைக் கையாண்டார். இதன் காரணமாகவே, காரல்மார்க்சு பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகும், உலக அளவில் செல்வாக்குச் செலுத்துகின்ற அறி வாளர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.
காரல் மார்க்சு அவருடைய கருத்துகளையும் சமரசமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தி, அவற்றுள் எது உண்மை, எது தவறு என்று தன் நுண்ணறிவாற்றலால் ஆராய்ந்து கொண் டேயிருந்தார். எடுத்துக்காட்டாக, 1853இல் காரல் மார்க்சு, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எழுதியவற்றை ஆதார மாகக் கொண்டு, பிரித்தானியக் காலனிய ஆட்சி தன்னை யறியாமலேயே இந்தியாவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் கருதினார். பின்னாளில், 1881இல் நடைமுறை உண்மைகளின் அடிப்படையில் பிரித்தானிய ஆட்சி பழிவாங்குவது போல் இந்தியாவை ஒட்டச் சுரண்டியது என்று எழுதினார். நடைமுறை ஆதாரங்களின் அடிப்படையில் தன் கருத்துகளை உருவாக்குபவராக மார்க்சு எப்போதும் விளங்கினார். அவருடைய எண்ணங்களும் கோட்பாடுகளும் வரலாற்று வழியில் நிகழும் மாற்றங்களுக்கும் புதிய நிலைமை களுக்கும் முகங்கொடுக்கக் கூடியனவாகவே இருந்தன.
காரல்மார்க்சு தன் இளமைக் காலத்தில், கருத்தியல் கோட்பாட்டாளராக இருந்த போது, ஹெகலையும், லூத்விக் ஃபாயர் பாக்கையும், பிற தத்துவவியலாளர்களையும் விமர்சனம் செய்தார். அவரைச் சுற்றியிருந்த சமூக நடைமுறை வாழ்வில் இருந்த கடுமையான பொருளாயத நிலைமைகளை ஆழ்ந்த கவலையுடன் கூர்ந்து ஆராய்ந்தார். அதன் அடிப் படையில் அவருடைய இயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாடுகளை உருவாக்கி னார். அதன்பின் அவருடைய சிந்தனைக் கோட்பாட்டு அணுகுமுறையில் குறிப்பிடத்தக்கதான மாற்றம் ஏற்படாமல் தொடர்ந்தது. உண்மையில் ஒருவரால் இளம் மார்க்சுக்கும், பின்னைய மார்க்சுக்கும் இடையிலான சிந்தனை வளர்ச்சி யின் உறவை உய்த்துணர முடியும். மார்க்சியக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் செருமானியதத்துவமும் பிரெஞ்சு சோசலிசமும், பிரிட்டனின் அரசியல் பொருளாதாரமும் தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதிக் காலத்தில் இரஷ்யாவில் எழுச்சி பெற்றிருந்த மக்கள் நலம் சார்ந்த அரசியலும் மார்க்சின் கவனத்தை ஈர்த்தது.
காரல்மார்க்சு “மூலதனம்” நூலில் பொதுவான கருது கோள் என்பதிலிருந்து குறிப்பிட்ட ஒன்றை ஆராய்ந்து அதன் மெய்ப்பைக் கண்டறிதல் என்கிற ஆய்வுமுறையைக் கையாண்டிருப்பார். இந்த ஆய்வு முறையானது பின்னாளில் அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் மேலும் மேலும் மெய்மைக்கு மிக நெருக்கமாகச் செல்லுதல் (Successive approximations) என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக நகரும் இந்த ஆய்வு முறையானது பொதுவான கருதுகோள் என்பதி லிருந்து ஒரு திட்டவட்டமான மெய்மையைக் கண்டறிகிறது. இந்தப் பகுப்பாய்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பொதுவான கருதுகோள் கைவிடப்படுகிறது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்வும் இயற்கையில் அல்லது சமூகத்தில் காணப்படும் மெய்ம்மையை அல்லது நிகழ்வை விளக்கு வதற்கான கோட்பாடு உருவாக்கத்தை உந்திச் செலுத்துகிறது. இத்தகைய பகுப்பாய்வு, நடைமுறை வாழ்வில் முதன்மை யான கூறுகளைக் கண்டறிந்து, அவற்றை மேலும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த உதவுகிறது. எடுத்துக்காட்டாக, இந்த முறையில் காரல்மார்க்சு மூலதனம் முதல் பாகம் நூலில் மூலதனத்துக்கும் கூலி உழைப்புக்குமான உறவை ஆராய்ந் திருக்கிறார். முதன்மையானது என்னவெனில், மார்க்சின் ஆய்வு முறையின் அச்சாணியாக இருப்பது, அது வரலாற்று ரீதியானதாக இருப்பதே ஆகும்.
ஒரு குறிப்பிட்ட-திட்டவட்டமான சமுதாய உறவு நிலவும் சமுதாயத்தில், மாற்றத்திற்கான நடைமுறை மனிதர்களின் செயல்பாடுகளால் உண்டாக்கப்படுகிறது. கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட சமுதாயத்தின் சூழ்நிலையின் வரம்புகளுடனேயே சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். வரலாற்று ரீதியில் முதலாளியம் எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந் தறியாமல், முதலாளியம் என்பது தனியான ஒன்றாக இருக்க முடியாது. மேற்கு அய்ரோப்பாவில் முதலாளியம் குறித்த மார்க்சின் மூலக்கருவாக இருப்பது, முதலாளியம் எவ்வாறு உருவானது, தற்போது எவ்வாறு அது செயல்படு கிறது, அதன் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதாகும்.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற சக்திகளுக்கும் மாற்றத்தை எதிர்க்கின்ற-தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்கிற சக்திகளுக்கும் இடையில் எப்போதும் பதற்றமான முரண்பாடு நிலவுகிறது. இந்த இரண்டு சக்திகளுமே வரலாற்று ரீதியில் சமூகத்தில் உருவான வைகளாகும். இதுவே போராட்டமும் அய்க்கியமும் எனப் படுகிறது. இந்தப் போராட்டம் முற்றி, மாற்றத்துக்கான சக்திகள் வெற்றி பெறும் போது, சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்கின்றன. காரல்மார்க்சு 1860களில் மூலதனம், முதலாளியம் குறித்து செய்த விமர்சனப்பகுப் பாய்வுகள் இன்றும் புரட்சிகரமான வைகளாக நீடிக்கின்றன. ஆயினும் அதன்பிறகு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து மீளாய்வு செய்வதன் மூலம் மேம்படுத்தல் என்று காரல் மார்க்சு கையாண்ட ஆய்வு முறையை நாம் பின்பற்ற வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. வறட்டுச் சூத்திரமாக மார்க்சு தன்னுடைய கோட்பாட்டை வகுக்க வில்லை. மாறுகின்ற வாழ்நிலைக்கு முகங்கொடுத்து மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கோட்பாட்டின் உட்கிடக்கை ஆகும். எனவே மார்க்சியக் கோட்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதற்காக, மார்க்சியக் கண்ணோட்டத்துடன் மார்க்சியத்தை நாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே மார்க்சின் எதிர்பார்ப்பாகும்.
மூலதனம் முதல் பாகம் வெளியிடப்பட்டு 150 ஆண்டுகளாகிவிட்டன. அதன்பின் குறிப்பிடத்தக்க வகையில் மாற் றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் மார்க்சு உருவாக்கிய கோட்பாடுகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. முதலாளியம் உண்மையில் இப்போது உலகளாவிய நிலையில் செயல்படுகிறது. உலக முதலாளிய அமைப்பில் வளர்ச்சி பெற்ற நாடுகள் அதன் மய்யப் பகுதியாக உள்ளன. விளிம்பு நிலை நாடுகளும், மய்யத் திற்கும் விளிம்புக்கும் இடையில் உள்ள நாடுகளும் பொரு ளாதாரம், அரசியல், இராணுவம் ஆகியவற்றில் வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகளுக்குப் பணிந்து நடக்கும் நிலையிலேயே இருக்கின்றது. விளிம்பு நிலை நாடுகளிலும், இடைநிலை நாடுகளிலும் மூலதனத்தின் சுரண்டல் மிக அதிக அளவில் இருக்கிறது. முதலாளிய உற்பத்தி முறையின் உபரியில் பெரும்பகுதியை ஆளும் வர்க்கத்தினரும் படித்த மேட்டுக்குடியினருமே பெறுகின்றனர். இந்தச் சுரண்டல் அமைப்பின் அச்சாணியாக இவர்கள் இருக்கின்றனர்.
வளர்ச்சி பெற்ற மய்ய நாடுகளில் ஏற்படும் பொருளா தாரத் தேக்கம் (பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைதல், வேலையின்மை அதிகரித்தல் அல்லது ஊதியம் குறைதல்), பெருமளவிலான வணிகத்தையும் தொழிலையும் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் பரவுதல், மூலதனக் குவிப்பு நடவடிக்கை என்பது வெறும் பணத்தின் குவிப்பாக மாறுதல் ஆகிய வற்றின் காரணமாக பெரிய, கிட்டத்தட்ட இறையாண்மை கொண்டது போன்ற நிதி நிறுவனங்கள் உலக அளவில் உண்மையான பொருளாதாரத்தையும், நாடுகளின் நிறுவனங் களையும் மேலாதிக்கம் செய்யும் வல்லமையைப் பெறுகின்றன. இவ்வாறான நிதி நிறுவனங்களின் மேலடுக்கானது உண்மையில் உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கிறது. நிதி பங்குச் சந்தையின் ஊகங்களை இவைகளே உருவாக்குகின்றன. இவற்றின் வருவாயை மேலும் இலாபம் தரக்கூடிய வகையில் முதலீடு செய்ய முடியாத நிலையில், ஊக விளையாட்டான பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.
அதேசமயம், உலகின் உண்மையான பொருளாதார நடவடிக்கையில், விளிம்பு நிலை மற்றும் இடைநிலை நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்குச் செல்வதற்குக் கடுமையான தடைகள் விதிக்கப் படுகின்றன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனம், ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்துகொண்டு விளிம்பு நிலை - இடைநிலை நாடுகளின் தொழில்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அவற்றில் பணிபுரியும் தொழிலாளர் களின் உழைப்பை மலிவான கூலியில் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டுகிறது. உலக அளவில் நுகர்வோரை மய்யப் படுத்தி இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலிப் பிணைப்பில் உழவர்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். உழவர்களால் சந்தையில் எத்தகைய செல்வாக்கும் செலுத்த முடியாது என்ற நிலையைப் பயன்படுத்தி, உழவர்களைப் பலவகையிலும் மூலதனத்துக்கு அடிபணியச் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன.
தற்போது மூலதனத்தின் செயல்பாடும், மூலதனம் மற்றும் முதலாளியம் குறித்த விமர்சனப் பகுப்பாய்வும், காரல்மார்க்சின் மூலதனம் முதல், இரண்டாம், மூன்றாம் பாகங்களில் கூறப்பட்டுள்ளதிலிருந்து வேறுபட்டதாக இருக் கின்றன. இவை பற்றி விரிவாக எழுத இடமில்லாத காரணத் தால், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கூறுகள் பட்டியலாகத் தரப்படுகிறது:
உலக அளவில் வர்க்கங்கள் பற்றிய ஆய்வு; தொழிலாளர் சக்தியின் மதிப்பு மற்றும் மய்ய, இடைநிலை, விளிம்பு நாடுகளில் தொழிலாளர்களின் கூலியில் உள்ள பெரிய வேறுபாடுகள்; ஏகாதிபத்தியக் கட்டமைப்பு கொண்ட சந்தையில் உபரிமதிப்புப் பங்கிடப்படல் அடிப்படையிலான மதிப்புக் கோட்பாடு, ஏழை உழவர்களும் சிறு உற்பத்தியா ளர்களும் மூலதனத்தால் சுரண்டப்படல்; சரக்கை மறு உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட கூலி தரப்படாத வீட்டு வேலை உழைப்பு, பாட்டாளி வர்க்கமாக்குவதால் பெரும் பான்மையினரை அதிகாரமற்ற நிலைக்குத் தள்ளுதல், குறைந்த கட்டணத் தொகை செலுத்தி இயற்கை வளங் களைக் கைப்பற்றல், இயற்கை நீடித்து நிலைத்திருக்க இயலாத வகையில் அதைச் சுரண்டுவதும் உற்பத்தியின் கழிவுகள் - நுகர்வின் கழிகளை இயற்கை மீது குவிப்பதும்; சூழலியல் ஏகாதிபத்தியம்; நிதி சார்ந்ததாக்குவது, நிதியியல் மேல் கட்டுமானம் மற்றும் ‘உண்மையான’ பொருளாதாரத் துடன் அதற்குள்ள உறவும் அதன்மீது ஏற்படுத்தும் தாக்கமும்; மூலதனக் குவிப்புக் கோட்பாடு - அது மூலதனப் பொருள்கள் நிதி மூலதனம் ஆகிய இரண்டையும் கணக்கில் கொள்வதுடன், அவற்றின் இடையுறவையும் கருத்தில் கொள்வதாயிருத்தல்; மூலதனத்தின் மீது அரசியல் அதிகாரம் செலுத்தக் கூடிய அரசு என்பதன் நிலை; குடிமை அரசு; இராணுவ மயமாக்கலும் ஏகாதிபத்தியமும்; முதன்மையான முரண்பாடும் மிக முதன்மையான முரண்பாடும்; சோசலிச சமுதாயப் புரட்சி.
மார்க்சு பிறந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மார்க்சின் சிந்தனை முறையை, ஆய்வு முறையை-அதாவது இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் இந்த உலகிற்கு மறு விளக்கம் செய்ய வேண்டி யது நம்முன் உள்ள சவாலாகும். இந்த நடைமுறையில் நாம் பெற்றுள்ள பழைய விளக்கங்கள் குறித்தும் திறனாய்வு செய்ய வேண்டும்.
வரலாறு நெடுகிலும் பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கும் ஆற்றலாக இருந்து வந்துள்ளது என்கிற வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை எந்திரத்தன மாகப் பின்பற்றும் போக்கைக் கைவிடுவதற்கான உரிய நேரம் இது. இந்த உலக உருண்டையில், மனித இனம் வாழ்கின்ற வரையில் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாடு பொருந்தும் என்கிற கூற்று ஏற்க முடியாததாகும்.
இந்த உலகம் குறித்து மறு விளக்கம் செய்வதும், சோசலிச சமூகப் புரட்சி மூலம் மாற்றியமைப்பதும் நம்முன் உள்ள பெரும் அறைகூவலாகும். இதை எதிர்கொண்டு, உடனடியாக செய்து முடிக்க வேண்டியது நம் கடமையாகும். ஏனெனில் மூலதனமும் முதலாளியமும் எந்த எதிர்ப்பும் இல் லாமல் தன் போக்கிலேயே போனால் மனித சமுதாயத்துக்கு மற்றொரு 200 ஆண்டுகள் கிடைக்காமல் போகக்கூடும்.
நன்றி : எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 2018 மே 5.
தமிழாக்கம் : க. முகிலன்