இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சி, சனநாயகம் ஆகியவற்றுக்கு ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் இட்ட வர்கள்கிரேக்கர்கள். ஹீராக்கிளிடஸ், டெமாக்கிரடஸ், எபிகூரஸ் போன்ற பொருள் முதல்வாத அறிவியலாளர்களும், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைகளும், அலெக்சாண்டர் போன்ற மாவீரர் களும் வாழ்ந்த பெருமைக்குரிய நாடாகக் கிரேக்கம் பண்டை நாளில் திகழ்ந்தது.
காரல்மார்க்சு, “எபிகூரஸ், டெமாக்ரிட்டஸ் தத்துவங்களின் ஒப்பீடு” பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
“பண்டை நாளி லேயே கிரேக்கத்தில் மட்டும் அறிவியல் வளர்ச்சி பெற்றிருந்ததற்குச் சுதந்தர சிந்தனைக்கு இடமளிக் கும் சனநாயகம் கிரேக்க நாட்டில் நிலவியிருந்ததே முதன்மையான காரணமாகும்” என்று பெர்ட்ரண்ட் ரசல் கூறியுள்ளார்.
ஆனால் இன்று கிரேக்கத்தில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிக் கட்சி, நாடாளுமன்றம், வெகுமக்கள் ஆகியோரும் கடுமையாக எதிர்த்த போதிலும் சனநாய கத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு, அந்நாட்டின் இறை யாண்மை புதைக்கப்பட்டு, நிதி மூலதன பயங்கரவாதம் தன் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவெனில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்க நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பெருந்தொகையைக் கடனாக அளித்து உதவுவது என்ற பெயரால் இந்தச் சனநாய கப் படுகொலை நடக்கிறது.
ஏற்கெனவே ரூ.16,80,000 கோடிக் கடனில் உள்ள கிரேக்கத்துக்கு, 5.7.2015 அன்று கிரேக்கம் செய்து கொண்ட சரணாகதி ஒப்பந்தப்படி மேலும் ரூ.5,76,000 கோடி அடுத்த மூன்று ஆண்டுகளில் கடனாகத் தரப்படவுள்ளது.
கி.பி.1500க்குப்பின் அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடிப்படையில் உருவான முதலாளியம், தன் இலாப வேட்டைக்காக இந்தியத் துணைக்கண்டம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளைத் தன் சுரண்டலுக்கான காலனிய நாடுகளாக ஆக்கி ஆட்சி அதிகாரம் செலுத்தியது. அய்ரோப்பிய முதலாளிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஏகாதிபத்தியப் போட்டி யின் விளைவாக இரண்டு உலகப் போர்கள் நடந்தன. 1945இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இரு நூறு ஆண்டுகளாக உலகின் வலிமையான பேரரசாக விளங்கிய பிரிட்டன் தன் ஆதிக்கத்தை இழந்தது. முதலாளித்துவ முகாமுக்கு அமெரிக்கா வல்லரசாகத் தலைமை ஏற்றது. முதலாளியத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் அமெரிக்காவின் முன் முயற்சியால் உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ‘காட்’ (ழுஹகூகூ) அமைப்பு முதலானவை உருவாக்கப்பட்டன.
1960க்குள் காலனிய நாடுகள் அனைத்தும் சுதந் தர நாடுகளாயின. எனவே வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகள் முன்போல, மற்ற நாடுகளை நேரடியாக ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆயினும் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரால், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மூலம் கடன் தருவது என்பதன் வாயிலாக அந்நாடுகளின் பொருளாதார, அரசியல் தளங்களில் தம் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கின-அமெரிக்காவின் தலைமையிலான வளர்ச்சி பெற்ற முதலாளிய ஏகாதிபத்திய நாடுகள். பன்னாட்டு முதலாளிய நிறுவனங்கள் இதற்கு ஏற்றதான ஊடக மாகப் பயன்படுத்தப்பட்டன.
1970களில் எரிபொருள் எண்ணெய்யின் கடும் விலை உயர்வால் பல நாடுகளில் பெருமளவில் நிதிப் பாற்றாக்குறை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் கடன் பெறுவதற்கு, உலக வங்கி, பன் னாட்டு நிதியம் மூலம் பல நிபந்தனைகளை விதித்தன. தேசிய இன விடுதலை, சோசலிச சிந்தனை ஆகிய வற்றைப் பரவிடாமல் ஒடுக்குதல், தனியார்மயத்தை ஊக்குவித்தல், மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையைக் குறைத்தல், வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை ஒரு குறிப்பிட்ட அளவுக் குள் கட்டுப்படுத்தி வைத்தல் முதலான நிபந்தனை களுக்குக் கட்டுப்பட்டே மூன்றாம் உலக நாடுகள் கடன் பெற்றன. ஆனால் இவ்வாறு பெறப்பட்ட கடன் தொகை முதலாளிகள், பெரும் வணிகர்கள், பெரும் பணக் காரர்களின் வளர்ச்சிக்கே பயன்பட்டன.
அமெரிக்காவுக்குச் சமமான வல்லவராக விளங்கிய சோசலிச சோவியத் ஒன்றியம் 1990இல் சிதறுண்டது. உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா உருவானது. எனவே அய்ரோப்பிய முதலாளிய நாடுகள் அமெரிக் காவின் வல்லரசிய ஆதிக்கத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக 1992இல் அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் என்கிற அமைப்பை உருவாக் கிக் கொண்டன. மேலும் அமெரிக்க டாலரின் ஆதிக் கத்தில் சிக்காமல் தவிர்த்திட, அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்துக்கும் பொதுவான யூரோ எனும் செலாவணி நாணயத்தையும், அய்ரோப்பிய மத்திய வங்கியையும் உருவாக்கிக் கொண்டன.
2001 சனவரியில் கிரேக்கம் அய்ரோப்பியப் பொருளாதார மண்டலத்தில் சேர்ந்தது. 2002 முதல் 2007 வரையிலான காலத்தில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோவின் மதிப்பு உயர்ந்திருந்தது. அதனால் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது. கிரேக்கமும் கடன் உதவிகள் மூலம் வேகமான வளர்ச்சி கண்டது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்தப் பொரு ளாதார வளர்ச்சி 4.3 விழுக்காடாக இருந்தது. அதே சமயம் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.1 விழுக்காடாக இருந்தது.
கிரேக்கத்தில் நுகர்வு கலாச்சாரம் மேலோங்கியது. அரசும் ஊதாரித்தனமான செலவினங்களைச் செய்தது. தேவைக்கு அதிகமாக இராணுவத்திற்குச் செலவிட்டது. கிரேக்கத்திடம் தற்போது 1300 பீரங்கிகள் உள்ளன. இது இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது இருமடங்காகும். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ழுனுயீ) 6.2 விழுக்காடு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதற்காகச் செல விட்டது. அத்துடன் பண்டைய பெருமையைப் பீற்றிக் கொள்ளும் நோக்கில் 2004ஆம் ஆண்டு ஏதென்சில் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில் பெருந்தொகை செலவானது. மேலும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால், உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (ழுனுயீ) வேளாண்மையின் பங்கு வெறும் 3,4 விழுக்காடாகச் சரிந்தது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16 விழுக்காடாகச் சுருங்கியது. ஆனால் ஒரு சிறு பகுதியி னர்க்கு மட்டுமே நல்ல சம்பளமும், கொழுத்த இலாபமும் தரும் சேவைத் துறையோ 80 விழுக்காடாக உயர்ந்தது.
2007இல் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2008 செப்டம்பரில் புகழ்பெற்ற லேமென் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது. மேலும் பல நிறு வனங்கள் திவாலாயின. இதன் தாக்கம் அய்ரோப்பிய நாடுகளிலும் பரவியது. பணப்புழக்கம் சுருங்கியது. அதிக அளவில் கடன்பெற்று ஊதாரித்தனமாகச் செலவு செய்து கொண்டிருந்த கிரேக்கப் பொருளாதாரம் நிலை குலைந்தது. இதனால் கடன் தவணைகளை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிதி நெருக்கடி ஏற்பட்டது.
1990களில் தனியார்மய, தாராளமய, அந்நிய நாட்டு மூலதனக் குவிப்பால் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்சு முதலான நாடு களில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏறப்ட்டது. இந்நாடுகளை ‘ஆசியப்புலிகள்’ என்று முதலாளிய ஊடகங்கள் போற்றின. ஆனால் 1997இல் இந்நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட் டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க, உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் மேலும் சந்தையைத் தனியார் முதலாளிகளுக்குத் தடையின்றித் திறந்து விடுவதற்கான கடுமையான நிபந்தனைகளின் பேரில் மீண்டும் கடன் தந்தன. தென்அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதுபோன்ற நிலை மைகள் ஏற்பட்டன.
கடன்பெற வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஒரு நாட்டைத் தள்ளுவது; பிறகு தனியார்மயத்தை, தாராளமயத்தை ஊக்குவிக்கும் நிபந்தனைகளை விதிப்பது; இதன்மூலம் மக்கள் நலத்திட்டங்களை அரசு கைவிடச் செய்வது; அந்த நாடு வட்டியைக் கூட கட்ட முடியாமல் தவிப்பது; மீண்டும் நிபந்தனைகள் மூலம் கடன் தந்து நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதாக நாடக மாடுவது என்பது 1960க்குப்பின் உலக முதலாளியம் கையாண்டுவரும் இலாபவேட்டை நடைமுறை உத்தி யாகும்.
கடந்த அய்ம்பது ஆண்டுகளில் ஏகாதிபத்தியக் கடன் நச்சுவலையில் ஆசிய, தென்அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளே சிக்கி வந்தன. ஆனால் அண்மையில் இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அய்ரோப்பிய நாடுகள் இக்கடன் வலையில் சிக்கின. ஆயினும் கிரேக்க நாட்டிற்கு ஏற்பட்டது போன்ற கொடிய அவலநிலை அந்நாடுகளுக்கு ஏற்படவில்லை.
2007ஆம் ஆண்டு முதலே கிரேக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அந் நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டின் வரவு-செலவு கணக் கில் பொய்யான தகவல்களைத் தந்து, நிதி நெருக்கடி இல்லாதது போலக் காட்டி வந்தனர். ஆனால் 2009 அக்டோபரில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிரதமர் பாப்பாண்ட்ரூ, நிதிக்கணக்கில் செய்துவந்த தில்லுமுல்லுகளைக் கண்டறிந் தார். உண்மையான நிதி நிலைமையை வெளியே கொண்டுவந்த போதுதான், கிரேக்கம் திவால் நிலை யில் இருப்பது அம்பலமானது. பெரு முதலாளிகளுக் குக் கொள்ளை இலாபம் தரும் தன்மையில் உருவாக் கப்பட்டுள்ள தனியார் மயம், தாராளமயத்தை ஒரு நாட்டில் செயல்படுத்தும் போது அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தினரும், ஆட்சியாளர்களும், உயர் அதிகாரி களும் இக்கொள்ளையில் பங்குபெறுகின்றனர். இதற்காக நிதிமுறைகேடுகளும் ஊழல்களும் நடக்கின்றன என்பது பொது விதியாகவே உள்ளது.
கிரேக்கத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக என்று கூறி அய்ரோப்பிய ஒன்றிய ஆணையம், அய்ரோப்பிய மய்ய வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய மூன்று அமைப்புகளும் (இவை ‘மும்மூர்த்திகள்’ - ‘கூசடிமைய’ எனப்படுகின்றன) கூடிப் பேசி, 2010 மே மற்றும் 2012 மார்ச்சு ஆகிய இரு தடவைகள் பல நிபந்தனைகளை விதித்துக் கடன் கொடுத்தன.
ஆனால் கிரேக்கத்தின் நிதி நிலை மேலும் சரிந்தது. 2010ஆம் ஆண்டு கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ழுனுயீ) 226 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) யூரோவாக இருந்தது. கடன் தொகை 330 பில்லியன் யூரோவாக இருந்தது. கடன் பெற்ற அய்ந்து ஆண்டுகளுக்குப்பின் கடன் தொகை 320 பில்லியன் யூரோவாக இருக்கிறது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 178 பில்லியன் யூரோவாகக் குறைந்துவிட்டது. கடன் நிபந்தனையின் படி, மொத்த உற்பத்தி மதிப்பில் 15.6 விழுக்காடாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2014இல் 2.5 விழுக்கா டாகக் குறைக்கப்பட்டது.
இளைஞர்களில் 50 விழுக் காட்டினர் வேலையில்லாதவர்களாயினர். நாட்டில் உற்பத்தி சுருங்கியதால் வேலையின்மை அதிகமாகி மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. நாட்டின் வருவாயில் பெரும்பகுதி வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் திருப்பிச் செலுத்துவதற்கே செலவாகிறது. இது ஒருவகையான கந்துவட்டி போன்றதே. அசலைவிட பல மடங்கு வட்டியை அளிக்க வேண்டியிருப்பதால் ஒருபோதும் தலைதூக்க முடியாத நிலையே நீடிக்கும்.
இந்நிலையில், 2015 சனவரியில் கிரேக்கத்தில் நடந்த பொதுத்தேர்தலில், இடதுசாரி சிந்தனை கொண்ட, நாற்பது அகவையினரான அலெக்சிஸ் சிப்ரஸ், மக்கள் விரோத கடன் நிபந்தனைகளை நீக்குவதாக வாக்குறுதி அளித்தன் பேரில் ஆட்சியில் அமர்ந்தார். முந்தைய ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினார். குறைக்கப்பட்ட ஓய்வூதியத் தை மீண்டும் உயர்த்தினார். ஆனால் பெருமுதலாளிய நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்தி நாட்டின் வருவாயைப் பெருக்க முடியவில்லை. எனவே கடன் தவணைக் கழுத்தில் சுருக்குக் கயிறாய் நெருக்கியது.
‘மும்மூர்த்திகள்’ மேலும் கடன் தருவதற்குப் புதிய நிபந்தனைகளை விதித்தனர். பேச்சுவார்த்தை நடந்தது. சூன் 30-க்குள் ரூ.10,500 கோடி அளவிற்கான தவணையைக் கட்ட முடியாமல் கிரேக்கம் திணறியது. நிபந்தனைகளை ஏற்க மறுத்து பிரதமர் அலெக்சிஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினார். மேலும் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ஏற்பதா? வேண்டாமா? என்று 5.7.2015 அன்று கிரேக்கத்தில் அரசு மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தியது. 70 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று வாக்களித்தனர். இந்நிலை யில் முன்பே ஒத்துக்கொண்ட கடன்தொகையும் கிரேக் கத்துக்கு அம்மூன்று நிறுவனங்களால் நிறுத்தப்பட்டது. நிதிநெருக்கடி மேலும் முற்றியது.
செய்வதறியாது திகைத்த பிரதமர் அலெக்சிஸ் புதிய கருத்துருக்களுடன் மூன்று நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை நாடினார். 17 மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் 13.7.2015 அன்று ஒரு சரணாகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த மக்கள் நலத்திட்டங்களைக் கூறி அலெக்சிஸ் ஆட்சிக்கு வந்தாரோ அவற்றை ‘அம்மும்மூர்த்திகளிடம்’ பலியிட்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார். மக்கள் மீது கூடுதலாக வரி விதித்தல், மீண்டும் ஆட்குறைப்பு செய்தல், ஓய்வூதியத்தைக் குறைத்தல், 50 பில்லியன் யூரோ மதிப்புள்ள அரசின் சொத்துகளை விற்றல் என இச்சரணாகதி ஒப்பந்தப் பட்டியல் நீள்கிறது.
கிரேக்கத்தை ஆளும் கட்சியும், நாடாளுமன்றமும், மக்களும் ஒரே குரலில் ஏகாதிபத்தியம் விதிக்கும் நிபந் தனைகளை ஏற்கமாட்டோம் என்று உரத்து முழங்கிய போதிலும், அந்த நிபந்தனைகள் திணிக்கப்பட்டுள்ளன எனில் இது என்ன சனநாயகம்? இது பச்சையான பணநாயகம் தானே!
பன்னாட்டு நிதியம் கிரேக்கத்தின் கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்தால்தான், கிரேக்கத்தால் மீண்டெழ முடியும் என்று கருத்துரைத்தது. ஆனால் பெரிய அளவில் கடன் கொடுத்த செருமனி இதை ஏற்க மறுத்துவிட்டது - தன்னுடைய சொந்த வரலாற்றை மறந்து! முதல் உலகப் போருக்குப் பின்னும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னும் செருமனி பலமுறை கடன் குறைப்புகளையும், தள்ளுபடிகளையும் அனுபவித்தது. 1950இல் செருமனியின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 60 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட்டது.
கிரேக்கத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு முதியவர் தன் கையில் ஏந்தியிருந்த பதாகையில், “நாங்கள் ஒட்டு மொத்த அய்ரோப்பாவுக்கும் நாகரிகத்தையும் பண்பாட் டையும் கொடுத்தோம், இன்றைக்கு நாங்கள் வீழ்ந்து விடாமல் நிற்க, கேவலம் இந்தக் கடன் விஷயத்தில் அய்ரோப்பா கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?” என்று எழுதப்பட்டிருந்தது.
ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சி மன்றாடுவதால் எப்போதும் ஒரு பயனும் ஏற்பட்டதில்லை. எதிர்த்து நின்று போராடுவதன் மூலம் மட்டுமே உழைக்கும் மக்கள் தங்கள் விடுதலையைப் பெறமுடியும் என்பது வரலாறு காட்டும் பேருண்மையாகும்.