இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாகவும், இந்தியத் தேசியத்தின் ஊதுகுழலாகவும் வலம் வருகின்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ‘சர்வதேசியவாதிகள்’”, தமிழ்த்தேசியம்” மீதான அவதூறுகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். ம.க.இ.க. போன்ற போலித்தனமான, முற்போக்கு” வேடமிட்ட ஆளும் வர்க்கக் கைக்கூலிக் கும்பல்களின் இவ்வாறான கூற்றுகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை மேலும் ஒடுக்குவதாய் தான் இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

ஒரு தேசிய இனம், இன ஒடுக்குமுறையின் கீழ் இருக்கும் பொழுது, இரண்டு தீர்வுகளை நாம் முன்வைத்துச் செயல்படலாம். முதலில், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தம்மை ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் துணையுடன், அத்தேசிய அரசைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஓரு புதிய தேசிய அரசை படைக்கலாம். இரண்டாவதாக, ஒடுக்கப்படுகி்ன்ற தேசிய இனம், ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் தேசிய அரசின் கீழ் வாழ விரும்பாத பட்சத்தில், ஒடுக்கப்படும் தேசிய இனம் தமக்கான சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி, தமக்கான புதிய, தனித்த தேசத்தை, தனித் தேசிய அரசை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, ஒடுக்கும் தேசிய இனத்தின் அரசின் கீழிருந்து விடுதலை பெறலாம்.

ஈழத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை அங்கீகரித்துச் செயல்படக்கூடிய, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்களப் பாட்டாளி வர்க்க சக்திகள் வலுவாகவும், வீரியமானதாகவம் இல்லை. சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்குமுறையின் மூர்க்கத்தனங்கள், இதுவரை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வந்திருந்தனவே ஒழிய என்றுமே குறைந்ததில்லை. ஆதலால் தான் ஈழத்தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றிட “தமிழீழம்” என்ற தனியரசைப் படைப்பது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் குறுந்தேசியவாதம் என்று விமர்சிக்கிறது, ஆளும் வர்க்கத்தின் ஒட்டுக் குழுவான ம.க.இ.க.

ஆரிய பார்ப்பனிய இந்தியாவால், தமிழ்நாடு ஒடுக்கப்படுகின்றது. நேரடியான ஆயுதந்தாங்கிய முறையில் அல்லாமல், தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் நிலவுகின்றது. இவ்வாறான, இன ஒடுக்குமுறை தம்மீது ஏவப்படுகின்றது என்ற விழிப்புணர்வு பெறாத நிலையிலேயே பெரும்பாலான தேசிய இனங்கள் இந்தியாவில் ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன.

காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நேரடி ஆயுதந்தாங்கியப் போராட்டம் நடைபெறுவதால், இந்தியத் தேசிய அரசு அதனை ஆயுதந்தாங்கி ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில், இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தமிழ்த் தேசிய அமைப்புகளால் இந்தியத் தேசியத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. எனவே, தமிழ்த் தேசிய சக்திகளை, தமிழ்த் தேசிய அரசியலை, ஆரிய இனவெறி நாடான இந்தியா “பிரிவினைவாதம்” என்றும், “பிராந்தியவாதம்” என்றும் இழிவுபடுத்துகின்றது. “தமிழ்த் தீவிரவாதம்” என்று மக்களுக்கு அச்சமூட்டுகின்றது. இந்தியத் தேசியத்தைத் திரை கிழிப்பது “நாங்க தானுங்கோ” என்று வாய்ச்சவடால் அடிக்கும், ஆளும் வர்க்கத்தின் துணைப் படையான ம.கஇ.க., இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் குரல்களை மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டு வாந்தி எடுக்கின்றது.

தமிழ்த் தேசியத்தை, “பிரிவினைவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். “குறுந்தேசியவாதம்” என்கிறது ம.க.இ.க. “பிராந்தியவாதம்” என்கிறது இந்தியத் தேசியம்.

“குறுந்தேசியஇனவெறி” என்கிறது ம.கஇ.க. பார்ப்பன இந்து” பத்திரிக்கை, ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்து என்று தமிழகத்தில் போராடிய அமைப்புகளை, “தமிழ் இனவெறி அமைப்புகள்” என்று மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பன இனவெறியரைக் கொண்டு எழுதியக் கட்டுரையில் வர்ணித்தது. தமிழ் இனத்தின் உரிமையை பேசும் இதே அமைப்புகளை “இனவாத அமைப்புகள்” என்று “இந்து“வின் குரலிலேயே எழுதியவை தான் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயக, கலாச்சாரப் பத்திரிக்கைகள். என்ன ஒரு ஒற்றுமை!

நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரது பேச்சை எடுத்துக் காட்டி, தமிழ்த் தேசியத்தை பாசிசமாக சித்தரித்திருக்க முயன்றிருக்கிறது, ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிகள் இணையதளம்.

மராட்டிய இன உணர்வைக் கையிலெடுத்த ராஜ்தாக்கரே போன்ற பிற்போக்கு பார்ப்பன பாசிச சக்திகளின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டு இன உணர்வைக் கையிலெடுப்பவர்கள் எல்லோருமே பாசிஸ்டுகள் தான் என்றும் நிறுவ முயல்கிறது ம.க.இ.க. பாசிஸ்ட் கும்பல். அவ்வாறெனில், இன்றைக்கு கம்யுனிசத்தின் பெயரால் சீனாவும், கியுபாவும் இன்னபிற கம்யுனிச” நாடுகளும் செயல்படுவதை வைத்து, கம்யுனிஸ்டுகள் அனைவருமே தேசிய இன விடுதலையை “பயங்கரவாதம்“ என்று இழிவுபடுத்தும் பிற்போக்குவாதிகள் தான் என்றால் ம.க.இ.க.வினர் ஏற்றுக் கொள்வார்களா? கம்யுனிசத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் சீனாவில், அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் சனநாயக விரோத அடக்குமுறைகளை கம்யுனிசம்” மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறை என்றால் ம.க.இ.க. ஏற்றுக் கொள்ளுமா?

ம.க.இ.க. போன்ற முற்போக்கு வேடமிட்ட, இந்திய” வெறி பாசிஸ்டுகள் வேண்டுமானால் இவற்றை கூட அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்வர். ஆனால், மார்க்சியத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்ட உண்மையான தமிழ்த் தேசியர்கள் இவ்வாறான திரிபுவாதங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கோடு, அத்தாயகத்தில் வேற்று இனத்தவர்களை குடியமர்த்திடும் ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது தான் அவ்வினத்தின் தற்காப்பாக இருக்க முடியும். இதைத் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் கூறுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தியத் தேசிய வெறியூட்டலால் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய அளவில் குடியமர்ந்து, ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு உயர்ந்தும் நிற்கின்ற அயல் தேசிய இனத்தார்களை வெளியேற்ற வேண்டும் என்ற் நியாயம் இந்தியத் தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல, முற்போக்கு வேடமிடுகின்ற ம.க.இ.க.வின் பார்ப்பனக் கண்களுக்கும் கூட பாசிசமாகத் தான் தெரிகின்றது. ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கில் ஆளும் வர்க்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்களை எதிர்க்கவே கூடாது என்கிறதா ம.க.இ.க.?

“ஆம். எதிர்க்கக்கூடாது தான். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். இங்கு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கட்டும். இவ்வாறான தொடர் வேலைப் பறிப்புகள் மூலம் தான் தமிழ்நாட்டைத் தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மாற்றி, தமிழ்நாட்டில் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்ற நிலையைக் கொண்டு வர முடியும். இவற்றால், தமிழ்நாட்டுத் தமிழன் வேலையிழப்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற அயல் இனத்தாரின் நலன் மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். இங்கு தமிழன் இருந்தால் என்ன வேலையிழந்து செத்தால் என்ன?” என்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். இதனையே வழிமொழிகிறது ம.க.இ.க. இப்படிப்பட்ட ம.க.இ.க. தான் தமிழ்த் தேசியத்தை பாசிசம் என்று உளறித் தள்ளி நடுங்குகின்றது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடாது என்று இப்பொழுது கூக்குரலிடுகின்ற ம.க.இ.க. எப்பொழுதும் போல் இதிலும் இரட்டை வேடதாரிகளாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.

அண்மையில் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகத்தால் “ஈழம் : ஒரு நேர்மையான மீளாய்வு” என்ற புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அப்புத்தகத்தில், “ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370-வது சட்டப்பிரிவு இன்னமும் உள்ளது” (பத்தி 1 முடிவில், பக்கம் 20, மேற்கண்ட நூல்) என்று எழுதியிருந்தது பு.ஜ.

அதாவது, ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும்” என்று பு.ஜ.வும் ம.க.இ.க.வும் நன்கு உணர்ந்திருப்பதாகவும் சொல்கின்றது. மேலும் இந்திய ஆளும் வர்க்கம்தான், இந்தி பேசும் மக்களை காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் குடியமர்த்துவதாகவும் பு.ஜ. கூறுகின்றது. இவற்றிலிருந்து, காசுமீர், வடகிழக்குப் பகுதிகளில் எழுகின்ற தேசிய இன சுயநிர்ணய உரிமைக் குரல்களை முடக்க, அத்தேசிய இனங்களின் தாயகங்களைப் பறித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வருவதை ம.க.இ.க. நன்கு அறிந்தும் வைத்திருக்கிறது.

தற்பொழுது தமிழ்நாட்டில், இந்தி பேசுபவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுதல், கட்டுமானப் பணிகளில் அயல் தேசிய இனத்தவர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படுதல், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நிலங்கள் வாங்குவதிலும், விற்பதிலும், குடியேறுவதிலும் அயல் மாநிலத்தவர்கள் ஆதிக்கம், வட்டித் தொழில், ஆன்லைன் வணிகம், மஞ்சள் வணிகம், துணி விற்பனை, திரைத் தறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அயல் தேசிய இனத்தவர்கள் ஆதிக்கம் என தமிழ்நாடு வேகமாக தம் தனித்தன்மையை இழந்து, தமிழ்நாட்டு நகரங்கள் தமிழர்களுக்கே அந்நியமயமாகி வருகின்ற சூழலைக் காண்கிறோம். சென்னையில் பல அப்பார்ட்மெண்ட்களில் தமிழர்கள் உள்ளே சென்று வரக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மெல்ல அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கக் கோட்டையாக மாறி வருகின்றது.

மேலும், ஈழத்தில் அண்மையில் நடைபெற்ற போர் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வையும், தாம் வாழும் இந்நாடு நம்முடையது தானா என்ற கேள்வியையும் பலமாக எழுப்பியுள்ளது. இவ்வுணர்வலைகளை முனை மழுங்கச் செய்ய வேண்டுமென இந்திய ஆளும் வர்க்கம் விரும்புவதாலேயே இந்திய அரசு இவ்வாறான அயல் தேசிய இனத்தவர் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது. இதனைக் கண்டித்து தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், நாம் தமிழர் இயக்கமும் குரல் கொடுக்கின்றன; குற்றம் சாட்டுகின்றன. இதிலென்ன தவறு கண்டது ம.கஇ.க.?

காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அங்கு வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவது தடை விதிக்கப்பட்டது என்று கூறுகின்ற ம.க.இ.க., காசுமீர் மக்களின் போராட்டம் போல தமிழ்நாட்டில் மக்கள் போராடக் கூடாது என்று தான் விரும்புகிறது. அதனால் தான் அயல் தேசிய இனத்தாரின் ஆக்கிரமிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் மாற்றி மாற்றிக் குரல் கொடுத்து முழுவதுமாக அம்பலப்பட்டு நிற்கிறது ம.க.இ.க.

காசுமீரைப் போல தமிழ்நாட்டில் குரல்கள் எழுந்தால் அதனை மட்டும் “பாசிசம்” என்று புளுகி ம.க.இ.க. வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் தமிழ்த் தேசியத் தாயகப் பறிப்புத் திட்டத்திற்கு துணைபோவது ஏன்? தமிழ்நாட்டை ஆக்கிரமித்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் மார்வாடி குசராத்தி சேட்டுகள் குறித்து நீங்கள் என்றாவது வாய்த் திறந்திருக்கிறீரா? இது குறித்து ம.க.இ.க. வின் விமர்சனம் என்ன? காசுமீருக்கும் வடகிழக்கு தேசிய இனங்களுக்கும் ஒரு நீதி, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு நீதியா? இது தானே ம.க.இ.க.வின் மனுநீதி”. இதனால் தானே நாங்கள் ம.க.இ.க.வை பச்சைப் பார்ப்பனியக் கட்சி என்கிறோம்.

சிங்கள இனவெறி அரசு தமிழ் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் குடியமர்த்தப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். காசுமீரில் இந்தி பேசுபவர்கள் குடியேற்றப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். ஆனால், தாம் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசத்தில் மார்வாடி, வந்தால் என்ன குசராத்தி வந்தால் என்ன, அவர்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் தானே என்று பேசுமாம். ம.க.இ.க.வின் மனுநீதி”ப் பார்வை அப்பட்டமாக சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வந்தேறிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இதுவரை ம.க.இ.க. என்னென்னப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது? ம.க.இ.க.வில் உள்ள தமிழர்கள் இக்கேள்வியை ஏன் அதன் தலைமைக்கு எழுப்பவில்லை?

உலகிலேயே பெரிய சனநாயகவாதி போலும், முற்போக்குவாதி போலவும் வேடமிடுகின்ற ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக் கொண்ட அமைப்பு தான் என்பது பலருக்குத் தெரியாது. இதோ அது குறித்த தகவல்....

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் “வெளியாரை வெளியேற்றுவோம்!” என்ற மாநாடு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வணிகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட அயல் தேசிய இனத்தாரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு நடக்கக் கூடாதென முட்டி மோதிக் கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர் பார்ப்பன பாசிஸ்டுகளாக பா.ச.க.வினர்.

ஏனெனில், இம்மாநாட்டின் நோக்கமே, அவர்கள் கட்டி அழுது கொண்டிருக்கிற பார்ப்பன பனியாக்களின் பாசிச இந்தியாவிற்கு வெடி வைப்பதாக இருந்தது. பார்ப்பனர்களின் மலக்கழிவான தினமல(ம்)ர் நாளேடு அலறித் துடித்தது. மாநாட்டை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டுத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. இந்து - இந்தி - இந்தியத் தேசியத்திற்கு உலை வைக்கும் இம்மாநாட்டிற்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகளான தினமல(ம்)ரும் பா.ச.க.வும் எப்படி துடித்தனவோ, அதே அளவில் துடித்தவர்கள் தான் ம.க.இ.க.வினர். ம.க.இ.க.வினரால் ஓடுகாலிகள்” என்று விமர்சிக்கப்படும், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியினரும், இச்சமயத்தில் ம.க.இ.க.வினருடன் இணைந்து கொண்டு வேலை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இம்மாநாட்டிற்கு எதிராக செய்த பெரும் புரட்சிகர” நடவடிக்கை என்ன தெரியுமா?

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குழுமியிருந்த தோழர்களிடம் போய் “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு இனவெறிக் கட்சி. வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கட்சி. எனவே அதிலிருந்து வெளியேறுங்கள்” என்ற பாணியில் ஒரு துண்டறிக்கை கொடுத்தனர், இந்தப் புரட்சி”யாளர்கள்.

அத்துண்டறிக்கையில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? அயல் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், தமிழ்த் தேசிய இன உழைக்கும் மக்களும் இணைந்து சர்வதேசியப் புரட்சி பற்றி தான் பேச வேண்டுமாம். ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனத்தின் உரிமைகளை அபகரிப்பதைப் பற்றிப் பேசினால் அது வர்க்க ஒற்றுமைக்கு பின்னடைவை ஏற்படுத்துமாம். அடேங்கப்பா..! இவர்களின் சர்வதேசிய”க் கண்ணோட்டத்தை பார்த்து நமக்கு சிரிப்புத் தான் வருகின்றது.

மார்வாடியும் குசராத்தியும் இந்தியர்கள் தானே” என்று பார்ப்பன பனியாக்கள் எழுப்பும் குரலுக்கு, மார்க்சிய சாயமடித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கொண்டு அதற்கு மேக் அப் போட்டு வந்து நிறுத்தியது, ம.க.இ.க.வும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியும். மார்க்சியத்தை வெறும் வறட்டுவாத சூத்தரமாக கருதுகின்ற மனோபாவமும், தான் சார்ந்து நிற்கின்ற இந்தியத் தேசியக் கருத்தியலும் தான் ம.கஇ.க. போன்ற மார்க்சிய லெனினியக் குழுக்களை வழிநடத்துகின்றது. இதனால் தான், இக்குழுக்கள் மார்கசியம் வலியுறுத்துகின்ற உண்மையான சர்வதேசியத்தை மூடி மறைத்துக் கொண்டு, புதியதொரு கற்பனாவாத சர்வதேசியக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றனர். பார்ப்பன இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களின் வேலைகளை பிடுங்கிக் கொள்ளும் பொருட்டு செயல்படுகின்ற அயல் தேசிய இனங்களுக்கு முதலில் இவர்கள் சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுக்கட்டும்.

ம.க.இ.க.வினர் “மார்வாடிகள் தமிழகத்தில் தொழில்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையோ அந்த ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதையோ நாங்கள் மறுக்கவில்லை” என்றும் தாம் வெளியிட்ட அத்துண்டறிக்கையில் எழுதியிருந்தனர். அதாவது அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கத்தை இவர்கள் மறுக்கவில்லை என்பார்களாம். அதே ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினால் அதை பாசிசம் என்பார்களாம். என்ன ஒரு நியாயம்...! மனுநீதி” நியாயம்!

ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்ற ஓட்டுப் பொறுக்கி சந்தர்ப்பவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல ம.க.இ.க.வினர் என்பதனை இச்செய்திகள் அம்பலப்படுத்துகின்றன.

கலப்பு மணங்கள் சாதியை ஒழித்துக் கட்டுமாம். கலப்பு இனங்கள் இனத்தை ஒழித்துக் கட்டுமாம். சர்வதேசியவாதி எழுதித் தீர்த்திருக்கிறார். எப்பேர்பட்ட அறிவியல் ரீதியான ஆய்வு. ஒருவனுக்கு கீழ் இன்னொருவன் அடிமைப்பட்டே கிடக்க வேண்டும் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலான சாதியும், தமக்கென தனித்த பண்பாடு, வரலாறு, மொழி கொண்ட ஓர் தேசிய இனமும் ஒன்றாம், ம.க.இ.க.வினர் பாடமெடுத்திருக்கின்றனர். அப்படியெனில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்று ம.க.இ.க.வினரின் அலறல்களைப் போல, சாதிய சுயநிர்ணய உரிமைகளையும் இவர்கள் அங்கீகரிப்பார்கள் போலும். சாதியைப் போலவே இனமும் ஓர் ஒடுக்குமுறைக் கருத்தியல் என்று மார்க்சிய வேடமிட்டுக் கொண்டு எழுதுகின்ற ம.க.இ.க. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடாலுக்குத் தானா? உங்களது அணித் தோழர்களை தேற்றி வைப்பவதற்காக மட்டும் தானா?

மார்க்சியத்தை முன்னிறுத்திக் கொண்டு, போலி வேடந்தரித்து நிற்கின்ற ம.க.இ.க. போன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்புகளை, முற்போக்கு வேடமிட்ட இந்திய” வெறி பாசிஸ்டுகளை தமிழ்த் தேசியர்கள், உணர்வாளர்கள் புறந்தள்ள வேண்டும். ம.க.இ.க. போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். பாசிசத்தை நோக்கி பயணமெடுப்பது தமிழ்த் தேசியமல்ல, ம.க.இ.க. போன்ற ஆரிய இந்திய” வெறி அமைப்புகளே என்று உணர வேண்டும்.

- அதிரடியான்

Pin It