1. தமிழ்த் தேசிய இனத்தினரைத் தமிழர் என்று பதிவிடும் நிலை உருவாக்க வேண்டும்.. 

2. தமிழ்நாட்டு இலச்சினையில் குமரி ஐயன் திருவள்ளுவர் சிலையையோ அல்லது திருக்குறள் பொத்தகத்தையோ இடம் பெறச் செய்ய வேண்டும்.. 

3. தமிழ்நாடு நாள் விழாவைவும் தமிழ்நாட்டிற்கெனக் கொடியையும் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.. 

1. தமிழன் என்று பதிவு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்..

உலகில் உள்ள மக்கள் அனைவராலும் தாங்கள் சார்ந்த மொழித் தேச அடையாளத்தைப் பதிவு செய்து கொள்ள முடிகிறது. சீன மொழியினர் தங்களைச் சீனர்கள் என்றும், ஜெர்மானிய இனத்தினர் ஜெர்மானியர்கள் என்றும் பிற இனத்தவர் அனைவரும் அவரவர்கள் இனத்தினைப் பதிவை செய்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஒபாமா அமெரிக்கக் குடிமகனாக பதிவு செய்து கொண்டிருந்த அதே போது தன் தேசிய இனமாக (நேஷனாலிட்டி) கென்யன் - என்றே தன் இனத்தைத் தன்னுடைய பிறப்புச் சான்றிதழிலே பதிவிட்டிருக்க முடிந்தது. ஆனால் நாமெல்லாம் தமிழர்களாக மிக நீண்ட நெடிய மரபினம் சார்ந்தவர்களாக இருந்த போதும் நம் தேசிய இனத்தின்வழி நம்மைத் தமிழர்கள் என்று பதிவு செய்து கொள்ளுகிற உரிமை இல்லாமல் கிடக்கிறோம்.

நாமெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்தியக் குடிமக்களாக இருப்பது என்பது வேறு. ஆனால் அதற்காகத் தமிழர்கள் இந்தியர்களாக ஆகிவிட முடியாது. தமிழர்கள் மட்டுமல்லர் இந்தியாவில் இருக்கிற இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லாத வேறு எந்த மொழித் தேசிய இனத்தினரும் இந்தியர்களாக ஆகிவிட முடியாது.

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகள் ஆகின்றனர்.. வங்காள மொழியினர் வங்காளிகள் ஆகின்றனர்.. தெலுங்கு மொழியினர் தெலுங்கர் ஆகின்றனர்.. பஞ்சாபிய மொழியினர் பஞ்சாபியர் ஆகின்றனர்.. அப்படியான வகையில் இந்தி மொழியினரே இந்தியராகின்றனர்.. எனவே, தமிழர்களை இந்தியக் குடிமகன் என்று இந்திய அரசியலில் சட்டத்தின் அடிப்படையில் எழுதுகிற அதேபோது தமிழர் என்று தேசிய இனத்தின் (நேசனாலிட்டி) வழிப் பதிவு செய்கிற வகையில் பிறப்பு, இறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் என அனைத்து இடங்களிலும் பதிந்திடும் நிலையை உருவாக்க வேண்டும்..

2 தமிழ்நாட்டு இலச்சினையில் குமரி ஐயன் திருவள்ளுவர் சிலையையோ அல்லது திருக்குறள் பொத்தகத்தையோ இடம்பெறச் செய்ய வேண்டும்..

இக்கால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு அரசின் இலச்சினைகடந்த 1947-இல் அன்றைய முதலமைச்சர் ஓமந்தூரார் அவர்களால் முன்மொழியப்பட்டு 1949 இல் இந்திய அரசால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.TamilNadu Logoஅதில் திருவல்லிபுத்தூர் கோயில் கோபுரம் அமைக்கப்பட்டது.. அதன் கீழ் சத்யமேவே ஜெயத்தே என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. மேற்புறத்தில் ஆங்கிலத்தில் கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ் - எனப் பெயர் இருந்தது.. அதன் பின்னர் 1967 -இற்குப் பிறகே அண்ணா அவர்களால் கவர்ன்மென்ட் ஆப் மெட்ராஸ் என்பது தமிழ்நாடு அரசு என்றும் சத்தியமேவே ஜெயத்தே என்பது வாய்மையே வெல்லும் என்றும் தமிழில் மாற்றப்பட்டன..

பிற மொழி மாநிலங்களில் உருவாக்கப்பட்ட இலச்சினைகள் பல அந்தந்தமொழி மாநில அடையாளங்களைச் சொல்லுகிற படி அமைக்கப்பட்டிருக்கிறது. கேரளத்தில் 1962 இல் அமைக்கப்பட்ட கேரள அரசு இலச்சினை யானைகளை இணைத்த தோற்றத்தை வெளிப்படுத்திக் காட்டி வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டின் இலச்சினையில்தான் இந்திய அரசின் கொடி அமைக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.. வேறு எந்த மாநில இலச்சினைகளிலும் இந்திய அரசின் கொடி இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இந்நிலையில் திருவில்லிபுத்தூர் கோயிலின் சின்னத்தைத் தமிழ்நாட்டை அடையாளப்படுத்துகிற சின்னமாக எண்ண முடியாது. மதச்சார்பற்ற திருவள்ளுவர் அறநெறிக்குட்பட்ட வள்ளலாரின் சமயச்சார்பற்ற நீண்ட நெடிய வரலாற்று வழிபட்ட தமிழ்நாட்டைத் திருவில்லிபுத்தூர் கோயிலைக் காட்டிச் சுருக்குவது தமிழ்நாட்டின் மதிப்பையே குறைப்பது..

தமிழ்நாட்டிற்குரிய இலச்சினை அடையாளத்தைச் சமயம் சார்ந்த அடையாளமாகக் குறிப்பிடுவது மிகவும் தவறானது.. தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றையே மடை மாற்றுவதாகும்..

எனவே தமிழ் நாட்டிற்குரிய இலச்சினையில் தமிழர்களின் அறவுணர்வைக் காட்டும் திருவள்ளுவரின் உருவமோ அல்லது திருக்குறள் நூலின் அடையாளமோ அமைப்பதே சரியானதாகும். எனவே தமிழ்நாடு அரசு அதிலும் உடனடியாகக் கவனம் செலுத்தி மாற்றி அமைக்க வேண்டும்..

3. தமிழ்நாடு நாள் விழாவைவும் தமிழ்நாட்டிற்கெனக் கொடியையும் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்..

மிக நீண்ட நெடிய பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அரசு சார்ந்த பெரும் நிலப்பரப்பாகத் தமிழ் கூறும் நல்லுலகம் என்கிற அளவில் தமிழ்நாடு அரசு உருவாக்கம் பெற்றிருந்த நிலையில்.. இறுதியாகப் பிரித்தானியருக்கு அடிமைப்பட்ட பின்னர் இந்திய அரசு உருவாக்கத்திற்குள் அடைக்கப்பட்டு விட்டது..

இந்திய அதிகார அரசுக்கு அடிமைப்பட்டுப்போன தமிழ்நாடு மீண்டும் தன்னைத் தமிழ்நாடு என்கிற அளவில் மாற்றிக் கொள்ளவே அரும்பாடு பட்டது..

தமிழ்நாட்டிற்கெனத் தனிக் கொடியை உருவாக்கவும், தமிழ்நாட்டிற்கான நாளாக ஒரு நாளை அமைத்துக் கொண்டு பெருவிழா நடத்தவும் வழியற்றுப் போனது..

தமிழ் ஆர்வலர்களின் அறிஞர்களின் பெரு முயற்சிகளுக்குப் பின்னர் சில அடையாளங்கள் பெறப்பட்டாலும் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழாவாக, மக்கள் விழாவாகக் கொண்டாடுகிற ஓர் பேரெழுச்சி நாள் அறிவிக்கப்படவில்லை.

அத்தகைய ஒரு விழா நாளை அரசு அறிவிப்பதோடு கொண்டாடவும், தமிழ்நாட்டிற்கேன ஒரு கொடியை மக்கள் கொடியாக அறிவிக்கவும் வேண்டும்..

கர்நாடகமும் பல வட மாநிலங்களும் அவ்வாறு அறிவித்திருக்கிற பொழுது தமிழ்நாடு பின்தங்கி இருப்பது சரியற்றது..

இந்த மூன்று கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மிக விரைவில் படிப்படியாகநிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சுயமரியாதை என்கிற தமிழர்களிடையே தன்மான உணர்ச்சி இருக்க வேண்டும்என்று சொன்னால் மேற் குறிக்கப்பட்டிருக்கிற இந்த மூன்று அடையாளங்களும் தமிழர்களின் தன்மான உணர்ச்சிகானவை என்பதை யாரைக் காட்டிலும் தமிழ்நாட்டு அரசினர் உணர முடியும்..

எனவே, இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு தமிழர்களின் தன்மான உணர்ச்சிக்குரிய இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இந்த மூன்று செயற்பாடுகளும் தமிழ்நாட்டரசால் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என அனைவரும் வலியுறுத்துவோம்.

பொழிலன்

Pin It