கீற்றில் தேட...

நிதியமைச்சர் 160 நிமிடத்திற்கு ஒரு மிக நீண்ட உரையுடன் மத்திய அரசின் 2020-21 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். வாய்ச்சொல் வீரர்களை வரலாறு மன்னிக்காது என்பது நினைவிலிருக்கட்டும். இன்னொரு இடைத் தேர்தல் வரவிருக்கிறதோ எனத் தோன்றச் செய்யுமளவிற்கு இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையும் ஒரு தேர்தல் பிரசாரமாகவே இருந்தது. இல்லாத பிரதாபங்களை அள்ளித் தெளிப்பதிலே பாதி நேரம் போய் விட்டது.

பாஜக அரசை மக்கள் வெறும் அரசியல் நிலைத்தன்மைக்காக மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும் தான் தேர்ந்தெடுத்தார்கள். மோடியின் ஆட்சியில் நிதி நிறுவனங்கள் ஊழலற்று,மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளதாகவும்,பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என வரிசையாக பொய்மாரி பொழிந்துள்ளாரே தவிர ஒரு முறை கூட பொருளாதாரம் தேக்கமடைந்ததைப் பற்றியோ, நுகர்வுத்திறன், தேவை வீழ்ச்சி, தொழிற்துறை உற்பத்தியின் வீழ்ச்சியையோ, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை குறித்தோ, அதிகரித்து வரும் பொருளாதார சமமின்மை குறித்தோ பெயருக்குக் கூடக் குறிப்பிடவில்லை.

nirmala sitharaman presents budget2020இந்தியாவில் பணமதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி யாலும் பொருளாதாரம் கடுமையாக பாதுக்கப்பட்டுள்ளது என சர்வதேச அமைப்புகளே கருத்து தெரிவித்துள்ளன, மக்களின் நுகர்வுத் திறன் 3% குறைந்து விட்டதாக தேசிய மாதிரி கணக்கீட்டு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. பணக் கையிருப்பு இல்லாமல் மக்களின் நுகர்வுத் திறன் பெருமளவு வீழ்ந்துள்ள நிலையில், நிதியமைச்சரோ, ஜிஎஸ்டியால் தான் மக்களால் 4% கூடுதலாக பணம் சேமிக்க முடிந்ததாகவும், ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறைந்ததால் ரூ1 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் நிவாரணம் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். ஜி.எஸ்.டியால் அரசோ, மாநிலங்களோ இறையாண்மை இழக்கவில்லை, இந்தியாவின் பெருமப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருப்பதாகவும், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும், வங்கிகளின் நிதி நிலை சீரும் சிறப்புமாக உள்ளதாகவும், 2020-11ல் ஜிடிபி வளர்ச்சி 10 சதவீதமாக உயரும் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் ஒரு நல்லரசின் அணிகலன்களாகக் கூறும் பிணியின்மையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தாலும், செல்வத்தை பெருமுதலாளிகள் உருவாகியதாகவும், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கி, விளைச்சலை அதிகரித்து விளைவின்பம் தருவதாகவும், மகிழ்ச்சியை ‘ஈஸ் ஆஃப் லிவிங்க்’ மூலம் வழங்குவதாகவும், ஐந்தாவது அணியான ஏமம் பாதுகாப்பையே பாஜக அரசு முதன்மையாகக் கருதுவதாகவும் மொத்தத்தில் வள்ளுவர் கூறும் நல்லாட்சியையே நரேந்திர மோடியின் பாஜக அரசு தருவதாகவும் கூறி திருக்குறளுக்கு ஒரு முதலாளித்துவ விளக்கம் அளித்து திருவள்ளுவரை பங்கம் செய்துள்ளார். அவரை மட்டுமில்லாமல் ஔவையையும், காளிதாசரையும் கூட விட்டு வைக்கவில்லை.

தற்போது மியூசியங்கள் அமைப்பதற்காக 5 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நிகழ்காலத்தையே வரலாற்றில், நாகரிகத்தின் மிகப் பிற்போக்கான காலகட்டமாக்கி சாதனை புரிந்ததற்காக ஆறாவதாக பாரதிய ஜனதா கட்சிக்கென பிரத்யேகமாக ஒரு மியூசியத்தை ஏற்படுத்த வேண்டும். வருங்கால சந்ததியினர் இப்படியும் ஒரு அரசியல் கட்சி இருந்திருக்கிறதா எனத் திகைத்துப் போவர்கள்.

கவர்ச்சியான, பிரம்மாண்டத் திட்டங்களை அறிவித்து அதற்குரிய நிதி ஒதுக்காமல் சில வருடங்கள் அதையே பிராதபித்து விட்டு, கிடப்பில் போடுவது தான் இவர்களது நடைமுறை. இம்முறை 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஆற்றல் நீர்ப்பாசனக் குழாய்களை அமைத்துத் தருவதாக வாக்களித்துள்ளனர்.112 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி 6425 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்திற்கு 2018-19 விடக் குறைவாக 2300 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு 2018-19ஐக் காட்டிலும் குறைவாக 61500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2018-19ல் 1000 கோடி ஒதுக்கப்பட்ட நபார்ட் வங்கிக்கு தற்போது 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19ல் 1620 கோடி ஒதுக்கப்பட்ட தேசிய நதிகள் தூய்மையாக்கத் திட்டத்திற்கு தற்போது 840 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை சீரமைப்பதற்கான, எந்த திட்டமும் இல்லை, சுற்றுசூழல், வனத்துறைக்கு 4400 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு 22000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

2019-29ல் 397 கோடி ஒதுக்கப்பட்ட சாகர்மாலா திட்டத்திற்கு 297 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19ல் 3200 கோடி ஒதுக்கப்பட்ட ஏழை மக்களுக்கான சமையல் எரிவாயு திட்டத்திற்கு 1118 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ஆட்சித் துறைக்கு 1.23 லட்சம் கோடி, உடல்நலத் துறைக்கு 69000 கோடி, ஸ்வச் பாரத் மிஷன் 12300 கோடி கல்வித் துறைக்கு 93000 கோடி, திறன் மேம்பாட்டிற்கு 3000 கோடி, உள்கட்டமைப்பிற்காக 22000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை தவிர மற்ற பெரும்பாலான துறைகளுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டம் , பிரதம மந்திரி வீட்டுமனைத் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம், முத்ரா கடன் திட்டம் (600 கோடி!), இவை அனைத்திற்குமான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பென்ஷன் தொகைக்கான ஒதுக்கீடு 150 கோடிக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது. மூத்தக் குடிமக்களுக்கு 9500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நுவ்ரிக் யோஜனா எனும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவோ, விவசாயத்தை மேம்படுத்தவோ, மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கவோ, உள் நாட்டுத் தொழிற்துறை உற்பத்தியை மேம்படுத்தவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தப் புதியத் திட்டங்களும் இல்லை. பெரும்பாலான புதிய திட்டங்கள் தனியார் துறையுடன் இணைந்தே (PPP) செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் எவ்வளவு சதவீதம் அரசு பங்கு வகிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

உள்நாட்டில் நுகர்வுத்திறன் வீழ்ந்தால் என்ன, மக்களிடம் உணவுப் பொருட்கள் வாங்க காசு இல்லாவிட்டால் என்ன, வெளிநாட்டு சந்தை இருக்கிறதே வெளிநாட்டு சந்தையின் மூலமாகவும், பங்குச் சந்தையையும், பணக்காரர்களை திருப்தி செய்தால் போதும், நுகர்வின் வீழ்ச்சி சரியாக்கி விடலாம். மக்கள் செத்தால் என்ன, ஏதாவது ஒரு வழியில் சந்தையை இயங்கச் செய்தால் போதும் என்ற அடிப்படையிலே இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

புதியக் கல்வித் திட்டம் வெளிநாட்டுக் கடன், அந்நிய முதலீட்டுடன் ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் காவல்துறை பல்கலைக்கழகம், தடயவியல், சைபர் தடவியல் பல்கலைக்கழகம் ஆகியவைத் தொடங்கப்படவுள்ளன. ஏகலைவா மாதிரிப் பள்ளிகளையும் தொடங்க உள்ளனர். பெட்டி பச்சோ திட்டத்தினால் தான் இன்று பெண்குழந்தைகள் பள்ளி சேர்ந்துள்ளதாகவும், கல்வியில் ஆண் பிள்ளைகளை விட முன்னணியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில் மேட்டுக்குடிகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் நேரடி வருவாயின் மூலமே பெருமளவு நிதி பெற வேண்டும். சென்ற ஆண்டை விட இதுவரை வரிவருமானம் 8.3% குறைந்துள்ள நிலையிலும் நேரடி வருவாயைப் பெருமளவு குறைத்திருக்கிறார்கள். புதிய நேரடி வருவாய் வரியமைப்பில் 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சத்திற்குள் வருமானம் பெறுபவர்களின் வருமான வரி புதிய திட்டத்தில் 20% லிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 7.5 லட்சம் முதல் 10 லட்சத்திற்குள் வருமானம் பெறுபவர்களின் வருமான வரி புதிய திட்டத்தில் 20% லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களின் வருமான வரி புதியத் திட்டத்தில் 30%லிருந்து 20% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 12.5 லட்சம் முதல் 15 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களின் வருமான வரி புதிய திட்டத்தில் 30% லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசிற்கு 40000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு 1.5 லட்சம் கோடி வருவாய் குறைந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஈவுத்தொகை பகிர்மான வரியை நீக்கிவிட்டார்கள் இதனால் அரசுக்கு 25000 கோடி வருமான இழப்பு ஏற்படும். சேவை நிறுவனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்துள்ளனர்.

அந்நிய நிதி முதலீடுகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளித்துள்ளார்கள். தொடக்க நிறுவனங்களுக்கு 7 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட வரிவிலக்கை 10 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளனர். அதைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை 25 கோடியிலிருந்து 100 கோடியாக அதிகரித்துள்ளனர். கார்ப்பரேட் பத்திரங்களில் 9% வரை அனுமதிக்கப்பட்ட அந்நிய முதலீடு 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கருவூலப் பத்திரங்களில் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதிக்கடன் பிடித்த வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கடன் பத்திரங்களுக்கான பிடித்தவரி 4% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி சேவை மையத்தில் பட்டியிலிடப்பட்டப் பத்திரங்களுக்கான வரிப்பிடித்தம் 5% லிருந்து 4% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை நட்டத்தில் மூழ்கடித்த அரசு 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுத் துறை நிறுவனங்களை வலுப்படுத்தவோ, மூலதனத்தை அதிகரிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை. மாறாக இந்த நிதி ஆண்டில் 1.05 லட்சம் கோடி மதிப்பிற்குஅரசு பங்குகளை தனியார்மயப்படுத்தப் போவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எல்.ஐ.சியின் பங்குகளையும் ஐ.டி.பி.ஐ வங்கியின் அரசு பங்குகளையும் தனியார்மயப்படுத்த உள்ளது.

நிதிநிலை அறிக்கையில் உள்ள எண்மதிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் நிதி நிலை மேலாண்மை(FRBM) சட்டத்திற்கு இணக்கமான முறையில் நிதி நிலை அறிக்கைப் பெறப்பட்டதாகவும் உறுதியளித்தார். விவாதத்தை ஆரம்பித்தவர்களும் நிதியமைச்சரின் கூற்றுக்கு மாறாக எதுவும் கூறவில்லை. நிதி நிலை மேலாண்மை சட்டத்திற்கு இணக்கமான முறையில் எண்மதிப்புகள் மாற்றப்பட்டுள்ளன என்பதே விவாதத்திற்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2020-21 நிதியாண்டிற்கு மொத்தமாக 3042230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தந்துள்ளார்கள் இதற்கான வருவாயை எங்கிருந்து பெறப்போகிறார்கள்.

கார்ப்பரேட் வரி, நேரடி வரியைப் பெருமளவு குறைத்த பொழுதும் அதைக் கணக்கில் கொள்ளாமல், அதற்கு தகுந்தாற் போல் அரசின் வருவாய் குறைக்கப்படாமல் அதிகபடுத்தியே காட்டப்பட்டுள்ளது. சென்ற வருடத்திலும் நிதி நிலை அறிக்கையில் உள்ளதைக் காட்டிலும் குறைவாகவே நிதி ஒதுக்கிய நிலையில் இந்தாண்டும் நிதிநிலை அறிக்கையில் வருவாயை ஊதிப் பெருக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

ஐந்து சதவீதத்தை விட அதிகமாயுள்ள வழக்கம் போல் பல வழிகளில் பட்ஜெட்டுக்கு வெளியே ஒளித்து மறைத்து நிதிப்பற்றாக்குறை 3.8% ஆகக் காட்டப்பட்டுள்ளது.2018-19 நிதி நிலை அறிக்கையில் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறுவதாக நிர்ணயிக்கப்பட்ட 57,004 கோடி ரூ திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 1,72,698.96 கோடி ரூ அதிகரித்துள்ளது. 2020-21க்கான நிதி ஒதுக்கீட்டில் 1,86,100.00 கோடி ரூபாய் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்தே பெறப்படும் எனக் காட்டப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில் 6.1%. ஏற்கெனவே கடனில் உள்ள, பொதுவிநியோகத்துறை, இந்திய உணவுத்துறை நிறுவனம் மேலும் கடனில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

குடிமக்களின் தனிப்பட்ட பொருளாதாரத்தையும், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாகவும், சமூக அக்கறையுடன், மனிதநேயத்துடன் நலிவுற்ற பிரிவுனரின் வாழ் நிலையை மேம்படுத்துவதாகவும் உருவாக்கப்பட்டதாக நிதி நிலை அறிக்கை என்று நிதியமைச்சர் கூறினார். மக்களின் வருமானத்தையும் வாங்கும் திறனையும் அதிகரிப்பதற்கான நிதி நிலை அறிக்கை என்றும் கூறினார். ஆனால் .அதற்கு முற்றிலும் முரணாகவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக பெரும் வேதனையை அளிக்கிறது. மக்களின் வாழ் நிலையை மேலும் வதைக்க உள்ளது. இந்த நிதிநிலைஅறிக்கை பங்கு சந்தையையும், பணக்காரர்களுக்காகவும் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தின் தற்சார்பையும், நிலைத்தன்மையையும் அழித்து இந்தியாவை ஊக நிதி சார்ந்த குமிழிப் பொருளாதாரமாக்கும் வழியிலே தள்ளியுள்ளது இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்த பாஜகவையும், நவீனதாராளமயக் கொள்கைகளையும் புறக்கணிப்போம். மக்கள் போராட்டத்தால் தீர்வு பெறுவோம்.