காட்டுமிராண்டியாகத் தொடங்கி, ஓர் உன்னத நிலையை நோக்கி மனித வர்க்கம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. தன் வாழ்வையும், வளத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், தனக்கான நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கிறது. அப்படித்தான் மொழி-இனங்களாக அமைந்துள்ள மக்கள்சமூகங்கள் பல்வேறு தேசிய இனங்களாகப் பரிணமித்து, இவ்வுலகில் தங்களுக்கான தேசங்களைப் படைத்துக் கொண்டு, தங்கள் வாழ்வியலை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பை நிறுவிக் கொண்டு, ஒரு சுதந்திர வாழ்வை மேற்கொள்கின்றன.

modi 432ஒரு நாட்டில், ஒரு காலக்கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட  ஓர் அரசியல் முறைமை கொஞ்சம்கொஞ்சமாகச் சீரழிந்து, ஒருசாராரின் நலனைப் பேணக் கூடியதாகவும், மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் மாறி விடும் போது, அந்த அரசியலமைப்பு தூக்கி எறியப்பட்டு அல்லது மாற்றி அமைக்கப்பட்டு, புதிய அரசியல்முறை அல்லது அமைப்பு ஒன்று உருவாக்கிக் கொள்ளப்படுகிறது.  வரலாறு முழுவதும் இப்படித்தான் நடந்து கொண்டே இருக்கிறது.

தங்கள் அரசுமுறை என்னவாக இருந்தது, எப்படி மாறிக் கொள்டிருக்கிறது என்பதைப பொதுவாக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஒரு முட்டை சேவல் சேர்ந்த முட்டையா அல்லது சேவல் சேராத முட்டையா என்பது சாதாரணக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. சேவல் சேர்ந்த முட்டை (Diploid) என்பது அடைகாத்து அதிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். சேவல் சேராத முட்டை (Haploid) என்பது ஆம்லேட் போடுவதற்கு மட்டுமே பயன்படும். ஆனால் சாதாரணக் கண்களுக்கு இந்த இரண்டு முட்டைகளும் ஒன்றாகவே தெரியும். ஒரு முட்டை கூழைமுட்டையாக மாறி இருக்கிறது என்பதும் சாதாரணக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அரசியல் அமைப்புகளும் அப்படித்தான். ஒரு சனநாயக அரசு பாசிசமாக மாறுவதும், கூட்டாட்சி முறைமை மெல்லமெல்ல சிதைக்கப்பட்டு ஒற்றையாட்சியாக மாற்றப்படுவதும் வரலாற்றில் நிகழ்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. 

மிகுந்த நம்பிக்கையோடு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு இன்று மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. அது எப்படி இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதோ அது அப்படி இன்று இல்லை. 1946இல் எந்தக் குறிக்கோள்களுடன் எழுதத் தொடங்கப்பட்டதோ, அந்தக் குறிக்கோள்கள் எழுதி முடிக்கும் போது காணாமல் போயிருந்தன. 1950இல், அது என்னவாக இருந்ததோ, அந்த  நிலையிலிருந்து மேலும்  திரிந்து போயிருக்கிறது என்பதுதான் உண்மை.

கட்சிகளின் அடிப்படையில் மக்களுடைய விசுவாசங்கள் பிரிந்து கிடக்கின்றன, அல்லது உறுதிசெய்யப்படுகின்றன.  தங்கள் தலைவர்களை ஏற்றிப் போற்றுவதும், தங்கள் கட்சியை அல்லது தலைவர்களை எவராவது விமர்சித்தால் அவர்களை வசை பாடுவதும்தான் தங்கள் கடமை என்று கருதுகிற உளநிலை இன்று பலரிடமும் காணப்படுகிறது.

அவ்வாறின்றி, அரசியல் நடப்புகளைக் கவனத்தில் கொண்டு, அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் நிறுவனங்கள் தொடக்கத்தில் எப்படி இருந்தன, இப்போது எப்படி இருக்கின்றன, எவ்வகை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, இனி வரும் காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை  அறிவார்ந்த பெருமக்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஒரு கட்சியிடம் அல்லது குறிப்பிட்ட தலைவர்களிடம் தங்களுடைய விசுவாசத்தை நிரந்தரமாக அடமானம் வைத்து விட்டு, அவர்களுடைய தீய செயல்பாடுகளையும் ஆதரிக்கின்ற அடிமையாக இருக்க வேண்டிய தேவை இல்லை.

கொரோனா வைரஸ் பிரச்சினையில், மோதி அரசின் அணுகுமுறை சில புரிதல்களைத் தருகிறது.  இந்திய அரசியல் சட்டம் வழங்கிய கூட்டாட்சி முறையைச் சிதைத்து விட்டு, இராபர்ட் கிளைவின் இரட்டை ஆட்சி முறையை (1765) கைக்கொள்ளும் போக்கை நரேந்திர மோதியிடம் காணலாம்.

1946இல், இந்திய நாட்டுக்கு ஓர் உன்னதக் கூட்டாட்சி அரசமைப்பை வழங்கத் திட்டமிட்டு அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கினார்கள். 1950இல், குறைபாடுகள் நிறைந்த ஓர் அரைகுறைக்  கூட்டாட்சி முறையாக இது வடிவெடுத்தது.  பிள்ளையார் பிடிக்கக்  குரங்காகிப் போன கதை பற்றி வயது முதிர்ந்தவர்கள்  பேசிய செய்தி அரசமைப்புச் சட்ட வரைவிலும் உண்மையாயிற்று. இந்தியக் கூட்டாட்சி முறை உருவான போதே, மாநில உரிமைகளும், அதன் வருவாய் வழிகளும் மொட்டை அடிக்கப்பட்டன. இதை அப்போதே பலர் சுட்டிக் காட்டினார்கள். காங்கிரஸ் என்ற ஒரே கட்சியின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் நிர்ணய அவையில், அப்போது இது பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. சொற்ப அதிகாரங்கள் படைத்த மாநிலங்களும், அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மத்திய அரசும் கொண்ட இந்தியக் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகள், மேலும் மேலும் பறிக்கப்பட்டன. மாநிலங்கள் என்பவை மொழி- இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது, அவை வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற குதர்க்கமான வழிகாட்டுதலுடன் பயணிக்கும் கட்சி பாஜக. முன்பு ஆங்கிலேய அரசு இந்தியாவில் நிலவிய மன்னராட்சி அரசுகளை எப்படி நடத்தியதோ,  அதே முறையில்தான் இன்றைய மோதி அரசு மாநிலங்களை நடத்தத் தொடங்கியுள்ளது.

உலகில் அண்டார்டிகா தவிர, அத்தனைக் கண்டங்களையும், கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் தொடங்கி, உலகெங்கும் பரவிப் பல நாடுகளை இன்று ஆட்டிப் படைக்கிறது. மேற்குலக நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தனிமனித இடைவெளியும் ஊரடங்கும் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடிப்படையானவையாகக் கருதப்பட்டு, மக்களால் மறுப்பின்றி. மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட  நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய மாநில அரசுகள் நிதி கோரிக்  கையேந்தி நிற்கின்றன.

இந்தியாவில் மார்ச் 22ஆம் தேதி ஒரு நாள் ஜனதா ஊரடங்கும், அதைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கும், அதைத் தொடர்ந்து மேலும் நீட்டிக்கப்பட்டு மே 3, மீண்டும் மே17, மே 31 வரை தொடர்கிறது,

60 கோடி உடலுழைப்புத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கிய அவர்கள் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் மாநில அரசுகளையே  எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்நிலையில், மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்து கின்றன.

மாநில அரசிடம் நிதி இல்லை. நிதி ஆதாரங்களும் மத்திய அரசால் முன்னமே பிடுங்கப்பட்டு விட்டன. இருந்த கொஞ்சநஞ்ச வரி வருவாய்களையும் இந்திய அரசு ஜி..எஸ்..டி என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக வசூல் செய்து கொள்கிறது. அதில் மாநிலங்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் கிடப்பில் போடுகிறது.

தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகளில் 60 இலட்சம் குடும்பங்கள் முழுக்க, முழுக்க அரசின் உதவியை எதிர்நோக்கி இருப்பவை.  இருப்பதை வைத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது.

மருத்துவ உபகரணங்கள் வாங்க 3,000 கோடி, துயர்தணிப்புப் பொருட்களுக்காக 9,000 கோடி, இவையன்றி உடனடியாக மருத்துவக் கருவிகள் வாங்க 1,000 கோடி,  தமிழக அரசு கோரியது. ஆனால், ஊரடங்கு தொடங்கி 28 நாட்கள் ஆன நிலையிலும், கொரோனா சிறப்பு நிதியில் சல்லி காசு கூட மத்திய அரசு தரவே இல்லை. மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து 510 கோடி ரூபாய் மட்டும் தமிழகம் பெற்றது. தேசிய நலவாழ்வுக் குழும நிதியாக 314 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.  தமிழகத்தின் 39 மக்களவை, 18 மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசே பறிமுதல் செய்து கொண்டது.

பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய வரி வருவாயிலிருந்து, மாநிலங்களுக்கு 46,038 கோடி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 1900 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால், எந்த நிதியும் இன்னமும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. இந்நிலையில் மூன்று முறை வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாநில முதலமைச்சர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசி விட்டார். வெறும் வார்த்தைகளால் மாநில முதல்வர்களை குளிப்பாட்டுவதில் கை தேர்ந்தவராக பிரதமர் மோதி இருக்கிறார். தமிழகத்திற்கு வந்து சேரவேண்டிய, ஜி.எஸ்.டி வரியில் தமிழகத்தின் பங்காகிய 12,763 கோடியையாவது தந்து விடுங்கள் என்று தமிழகம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், மாநில அரசுகளே மக்களுக்கு நெருக்கமாக இருப்பதால், மக்களுடைய பசியைப் போக்குவது, அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வது, மருத்துவ உதவி வழங்குவது, ஊரடங்கை நடைமுறைபடுத்துவது, சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது என்று பல கடமைகளை மாநில அரசுகளே ஆற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் நிதிப் பற்றாக்குறையால் அவை தத்தளிக்கின்றன.  மக்களுடைய எந்தத் தேவையையும் நிறைவு செய்ய வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதேநேரம், நிதிஆதாரங்களும், வரி வருவாயும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளும், பெருமளவில் நோட்டு அச்சிடக் கூடிய அதிகாரமும், உலக அளவில் கடன்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும், இந்திய அரசின்  கையில் உள்ளன. இவ்வாறு பொறுப்பு மாநிலங்களின் கையிலும், நிதித் திரட்சி மத்திய அரசின் கையிலும் உள்ளன. இந்தியாவில் எதிர்பார்த்தபடி, Cooperative Federalism (கூட்டுறவுக் கூட்டாட்சி) செயல்பாட்டில் இருந்திருந்தால் நிதிப் பகிர்வு எப்போதோ நடந்திருக்கும். மாநிலங்கள் நிதிக்காகத் தள்ளாடாது.  ஆனால் கடந்த சனவரி மாதத்திலிருந்தே கொரோனா பாதிப்பை அனுபவித்து வரக் கூடிய இந்திய மக்களின் துயர் துடைக்க, மாநிலங்களுக்கு  நிதி அளிக்க இந்திய அரசு மறுக்கிறது; தாமதப்படுத்துகிறது; நூற்றியெட்டு கேள்விகள கேட்கிறது; மாநிலங்களின் பணிவு பற்றவில்லை என்கிறது.  மாநிலங்கள் தொடர்ந்து கையேந்து கின்றன. 

இப்படி மக்களின் கண்ணீரைக் கண்டு பதறுகின்ற மாநில அரசும், நிதியாதாரங்களைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் இரக்கமற்ற மத்திய அரசும்தாம் இந்தியா என்ற அமைப்பாக இருந்து வருகின்றன. இரக்கம் கொண்டவராகவும், அதிகம் மக்களை நினைத்துக் கவலைப்படுகிறவராகவும் காட்டிக் கொள்வதிலும், உதட்டளவில் சேவை செய்வதிலும் நரேந்திர மோதி கைதேர்ந்தவராக இருக்கிறார். 

முன்னமே குறைபாடுள்ளதும், மத்திய அரசிடமே பெரும்பான்மை அதிகாரங்களைக் குவித்திருப்பதுமான கோளாறான  இந்தியக் கூட்டாட்சி முறை இப்போது  இன்னுமதிகக் குறைபாடுள்ளதாகிக் கிட்டத்தட்ட தன் ஆன்மாவை இழந்து விட்டது. கூட்டாட்சித் தத்துவத்திலிருந்தே முற்றிலுமாக மாறுபட்டுப் போன அமைப்பாக உருமாறி விட்டது. அரசியல் சட்டத்தின் வரைவை மாற்றி விடாமல், உள்ளீட்டை ஓசைப்படாமல் மாற்றி வருகிறது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அரசு. 

இங்கு ஒர் " இரட்டை ஆட்சி முறை" (Diarchy or Dual Government)  நிலவுகிறது. இரட்டை ஆட்சிமுறை என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி  வங்காள நவாபுகளுடன் நடத்திய  பிளாசிப் போர் - 1757, பக்சார் போர் - 1764 ஆகியவற்றுக்குப் பிறகு, 1765இல் முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலம் கையொப்பமிட்ட அலகாபாத் உடன்படிக்கைக்குப் பிறகு,   கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள ஆளுநர் இராபர்ட் கிளைவ் புகுத்திய ஆட்சிமுறையாகும்.

1757ஆம் ஆண்டு வங்காளத்தில் பிளாசிப் போர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் இடையில் நடைபெற்றது. ஆங்கிலேய ஆட்சி உருவாக்கத்தின் முதற்படி இதுவாகும். இப்போரில் சிராஜ்-உத்-தௌலாவின் தளபதியாக இருந்த மீர் ஜாபர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி கர்னல் இராபர்ட் கிளைவுடன் இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு, போரில் தன் படைப் பிரிவுகளைத் தாக்குதலில் ஈடுபட்டு விடாதபடி பார்த்துக் கொண்டார். மீர் ஜாபர் மற்றும் ஆங்கிலேயப் படைத் தளபதி கர்னல் கிளைவின் கூட்டுச் சதியின்படி, வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா தோல்வியுற்றார். ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி  மீர் ஜாபரை வங்காளத்தின் நவாப் ஆக்கியது. ஆனால் விரைவிலேயே அவர் நீக்கப்பட்டு,  மீர் காசிம் வங்காள நவாப் ஆக்கப்பட்டார். ஆனால் மீர் காசிம் தன் படைப் பிரிவுகளை பலப்படுத்தத் தொடங்கினார். இதனால் ஆத்திரமுற்ற கிழக்கிந்திய கம்பெனி மீர் காசிமை மாற்ற விரும்பியது. 1763 இல் மீர் காசிம், அயோத்தி நவாப் ஷூஜா உத் தௌலாவிடம் அடைக்கலமானார். வாரிசு உரிமைப் பிரச்சினையால் டெல்லியை விட்டு வெளியேறிய முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலம் அயோத்தி நவாபிடம் வந்து சேர்ந்தார். இரண்டாவது ஷா ஆலம், மீர் காசிம் ஆகியோர் துணையுடன் அயோத்தி நவாப் ஷூஜா உத் தௌலா ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த வங்காளத்தின் மீது படையெடுத்தார். 1764இல் பக்சார்  என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள். 

இறுதியாக 1765 அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்படி முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலம், வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளில் நேரடியாக வரிவசூல் செய்து கொள்ளும் திவானி (Diwani) உரிமையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்தார். அலகாபாத்தில் தங்கியிருக்கக் கூறப்பட்ட ஷா ஆலம் ஆண்டுதோறும் 26 இலட்சம் கம்பெனியிடமிருந்து பெற்றுக்கொள்வது என்பதும் உடன்பாடானது. (இப்போது ஜி.எஸ்.டி.யை இந்திய அரசு வசூலித்துக் கொள்வது என்றும், அதில் மாநிலத்துக்கு ஒரு சிறு பங்கை அளிப்பது என்றும் ஏற்கப்பட்டிருப்பது போல்). இப்போரில் ஈடுபட்ட ஷூஜா உத் தௌலா அயோத்தியைத் திரும்பப் பெற 56 லட்சம் ரூபாய் போர் இழப்பீடாகக் கம்பெனிக்குக் கொடுத்தார்.

வங்காளத்தின் திவானி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் வரிவசூல் செய்ய  ரேசா கான் என்ற ஒரு டெபுடி நவாபை நியமித்தனர். அதேநேரம், நிர்வாகம், நீதி போன்ற  பிரச்சினைகளை வங்காள நவாப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வரிவசூல் உரிமையைக் கைப்பற்றிக் கொண்ட கம்பெனிக்கு  எந்தக் கடமையும் இல்லை. வரிகளைக் கூட்டி, கம்பெனிக்கு இலாபம் காண்பதிலேயே அது குறியாக இருந்தது. ஆனால், மக்களின் பிரச்சினைகளைச்  சந்திக்க வேண்டிய வங்காள நவாபிடம் நிதி ஆதாரங்கள் கிடையாது. இப்படி, கடமை ஒருவரிடமும், நிதி மற்றொருவரிடமுமாக -  ஓர் இரட்டையாட்சி (Dual Government) வங்காளத்தில் உருவாக்கப்பட்டது.

இன்று மக்களைக் காக்கும் பொறுப்பு மாநிலங்களிடமும், நிதி ஆதாரங்கள்  மத்திய அரசிடமும் இருப்பதை ஒத்ததாகவே அது இருந்தது. இதன் விளைவு பயங்கரமானது.

1770ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம் ஏராளமான உயிர்களைக் காவு கொண்டது. இந்தப் பஞ்சம் மொகலாயப் பேரரசுக்கு சாவுமணி அடித்தது. 1770 வங்காளப் பஞ்சத்தின் போது, கீழ் கங்கை சமவெளிப் பகுதிகளில், அதாவது இன்றைய மேற்குவங்கம், வங்காளதேசம், ஒடிசா, பீகார் ஆகிய பகுதிகளில் ஒரு கோடி மக்கள் பசியால் இறந்தனர். பிளாசி, பக்சார் போருக்குப் பின் வருவாயைக் கூட்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி  நிலவரியைக் கூட்டியது. உணவுப் பயிர்களுக்கு பதில் அவுரி மற்றும் பணப் பயிர்களுக்கு கம்பெனி நிர்வாகம் ஊக்கம் கொடுத்தது. இதனால் 1768-69 ஆகிய ஆண்டுகளில் அரிசி விளைச்சல் குறைந்தது. வறட்சியும் சேர்ந்து கொண்டது. இதனால் 1770ஆம் ஆண்டு வெடித்த பஞ்சத்தில் மாண்ட ஒரு கோடி மக்கள் கிழக்கு இந்தியப் பகுதியில் வங்க ஆட்சிக்குட்பட்ட மக்கள்தொகையில்  மூன்றில் ஒரு பங்கு ஆவர்.  ஆனால் இப்பிரச்சினையைத் தீர்க்கவும், வறட்சியை எதிர்கொள்ளவும், மக்களுக்கு உணவளிக்கவும் கிழக்கிந்தியக் கம்பெனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நிதியாதாரம் அதன் கையில்தான் இருந்தது. 

நிதி ஆதாரங்களை இழந்து விட்ட வங்காள நவாபால் மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை. இதையே காரணம் காட்டி 1772இல் வங்காளத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கிழக்கிந்தியக் கம்பெனி கொண்டுவந்தது. 1793இல் நிசாமத் உரிமை என்று சொல்லப்படுகிற நிர்வாகம், நீதி வழங்குதல், மற்றும் படைப்பிரிவுகள் வைத்திருத்தல் ஆகியவற்றையும் நவாபிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனி பறித்துக் கொண்டது. வங்காள நவாப் ஒரு பென்சன்தாரர் ஆனார்.

கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், வங்காள நவாபிக்கும் இடையிலான உறவை ஒத்ததாக, இந்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவு மாற்றம் பெற்று வருகிறது.

மாநில அரசிடம் நிதி இல்லை. நிதி ஆதாரங்களும் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு விட்டன. இருந்த கொஞ்சநஞ்ச வரி வருவாய்களையும் கைப்பற்றிக் கொண்ட இந்திய அரசு, ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக வசூல் செய்து கொள்கிறது. அதில் மாநிலங்களுக்குத் தர வேண்டிய பணத்தையும் தராமல் கிடப்பில் போடுகிறது. இருப்பதை வைத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முயற்சி செய்கிறது.

மாநிலங்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால் ஜி.எஸ்.டி முறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்தார். ஆண்டுக்கு 9,570 கோடி இழப்பு ஏற்படும் என்று கருதினார். ஆனால் அவருடைய இறப்புக்கு பிறகு, தமிழக அரசு  ஜிஎஸ்டி-க்கு ஒப்புதல் வழங்கியது. இப்போது, மாநிலங்கள் என்பவை ஜி.எஸ்.டி வரிவசூல் செய்து இந்திய அரசுக்குக் கொடுக்கக் கூடிய முகமைகளாகத்தான் இருக்கின்றன. மாநில அரசுகளுக்கு இனி வரி விதிப்பு அதிகாரம் கிடையாது. வரியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு நாடாளுமன்றமும், சட்டமன்றமும் வழங்கி விட்டன.

நிதி கோரிக் கையேந்தும் மாநிலங்களுக்கு நிதியளிப்பைத் தாமதப்படுத்தும் இந்திய அரசு, தங்களைக் கேட்காமல் மாநில அரசுகள் ஒரு துரும்பைக்கூட அசைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. மார்ச் 24 அன்று மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு, ஏப்ரல் 30ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படும் என்று சில மாநிலங்கள் அறிவித்தன; மே 1ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படும் என்று சில மாநிலங்கள் கூறின. ஆனால் மாநிலங்கள் கூறுவதைத் தான் ஏற்கக் கூடாது; தான் கூறுவதைத்தான் மாநிலங்கள் ஏற்கவேண்டும் என்ற அகம்பாவ உணர்வோடு, மத்திய அரசு மே  3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்தது. அது என்ன ஒரு நாள் வித்தியாசம்? அதையொட்டியே அனைத்து மாநிலங்களும் அறிவிப்புகள் செய்தன.  

இந்நிலையில்,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்கள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி அவற்றை மோதி அரசு கெடுபிடி செய்கிறது. மாநிலங்கள் கோரிய நிதியை வழங்க முன்வராத மோதி அரசு, கெடுபிடி செய்வதில் முனைப்புக் காட்டி, மாநிலங்களை வம்புக்கு இழுக்கிறது. 

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதில் முறையாக செயல்படவில்லை என்றும், ஆகவே அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி, ஆறு மத்திய உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.

மத்திய பிரதேசத்தில் இந்தூர்;  மராட்டியத்தில் மும்பை, புனே: ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்; மேற்குவங்கத்தில் கல்கத்தா, ஹௌரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைக் குற்றம் கூறாமல், பாதிப்பு குறைந்து இருக்கும், பா.ஜ.க.ஆட்சி செய்யாத மாநிலங்களைக் குறை கூறுகிறது. பாதிப்பு குறைவாக இருக்கும் மேற்கு வங்கத்தை வன்மத்தோடு குற்றம் சாட்டுகிறது.

 மத்தியப் பிரதேசத்தில் இப்போது நரித்தனமான  வேலைகளைக் கைக் கொண்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  அங்கு பா.ஜ.க. பெரும் பான்மையை நிரூபிப்பதில சிக்கல் உள்ளது. ஆகவே, மத்திய அரசின் நேரடி ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருக்கலாம்.

மத்திய பிரதேசத்தில் 1,552 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; 74 பேர் இறப்பு. மராட்டியத்தில் பாதிப்பு 5218,  இறப்பு 732;

 மேற்குவங்கத்தில் பாதிப்பு 423, இறப்பு 15:

 ராஜஸ்தானில் பாதிப்பு 1659, இறப்பு 25. நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மாநிலமான குஜராத்தில் கொரோனா பாதிப்பு 2178, இறப்பு 90. இதைப்பற்றி மோதி வாயே திறக்கவில்லை.

பல மாநிலங்களை விட குறைவான அளவிற்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் மேற்கு வங்கத்தை விடுவதாக இல்லை இந்திய அரசு.  மத்திய உயர்மட்டக் குழுக்களை அதிரடியாக, பகை நாட்டில் சிறப்பு ஆயுதப்படைகளை இறக்குவதைப் போன்று  விமானத்தில் கொண்டுசென்று இறக்குகிறது. "ஆய்வு செய்ய, மேற்குவங்க மாவட்டங்கள் உட்பட வேறு மாவட்டங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என்று தெரியவேண்டும்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். "இந்த நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்குப்  பொருத்தமற்றது" என்று குற்றம் சாட்டுகிறார். 

இப்போது நான்கு மாநிலங்களுக்கு, ஆறு உயர்மட்ட குழுக்களை விமானம் மூலம் கொண்டு இறக்கி விடும் போது, மரியாதை நிமித்தமாகக் கூட முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. "இந்திய அரசு தன்னிச்சையாக ஊரடங்கு பற்றி மதிப்பிடுவது விரும்பத்தக்கதல்ல" என்று மம்தா கூறுகிறார். "இந்த குழுக்கள் தேவையான  உத்தரவுகளைத் தரும்" என்று மத்திய அரசு கூறுகிறது. 

உள்துறை அமைச்சர் மதியம்  1.00 மணி அளவில் உயர்மட்டக் குழு வருவது குறித்து வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவிப்பதற்கு முன்பாகவே, கல்கத்தா விமான நிலையத்தில் அக்குழு வந்து இறங்கியிருந்தது. ஒரு மாநில முதல்வருக்கு உரிய மரியாதையைத் தரக்கூட மோதி அரசு தயாரில்லை.  ஏப்ரல் 19ஆம் தேதி, வங்காள அரசின் தலைமைச் செயலருக்கு உயர்மட்டக் குழு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இது குறித்து செய்தி வந்துள்ளது. இது ஏற்கப்பட்ட மரியாதை நடைமுறைகளுக்கு  முற்றிலும் எதிரானது; கூட்டாட்சி முறைக்கும் எதிரானது. பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் முறையாக நடக்கவில்லை என்று கூறி, அவற்றுக்குக் கிடுக்கிப்பிடி போட்டு, குற்றம் கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறது மத்திய அரசு.

மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர், "இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை இப்படித் தனித்து அழுத்தத்திற்கு  உள்ளாக்குவது முறையல்ல, " என்று கூறுகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுத்து நிறுத்த உரிய வகையில்  செயல்படாத குற்றத்தை மோதி அரசு முன்னமே செய்துள்ளது. கொரோனா தாக்குதல் இந்தியாவில் தொடங்கி இரண்டு மாத காலம் எதுவும் செய்யாமல் காலத்தை விரயம் செய்து, இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முக்கியக் காரணமானது மோதி அரசு. இப்போது, மாநிலங்கள் கோரும் நிதியைத் தாமதப்படுத்துகிறது. இதன் மூலம் கொரோனா இறப்புகளையும் பட்டினிச் சாவையும் மோதி அரசு ஊக்குவிக்கிறது. 

இரட்டையாட்சியின் விளைவான, 1770 வங்காளப் பஞ்சத்தின் போது, நிதியற்று நின்ற வங்காள நவாபின் நிலையும், இன்று கொரோனா பாதிப்பின் போது நிதி கோரிக் கெஞ்சி நிற்கும் மாநிலங்களின் நிலையும் ஒன்றாகவே உள்ளன. நிதியாதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு, பட்டினியில் சாகும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த  இராபர்ட் கிளைவ் உருவாக்கிய இரட்டையாட்சியின் ஆங்கிலேய கிழக்கிந்தியத் கம்பெனியின் போக்கும், இப்போது மாநிலக் கோரிக்கைகளை ஏற்காமல் அடாவடி செய்யும் மோதி அரசின் போக்கும் ஒன்றாகவே உள்ளன. 

இந்தியாவுக்கு விடுதலை வந்திருக்கலாம். ஆனால், மாநிலங்களும், மக்களும் ஆங்கிலேயர் காலத்தில் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை கொரோனா புரிய வைத்திருக்கிறது. அப்படியென்றால், வந்தது யாருக்கான விடுதலை என்ற கேள்வியையும் கொரோனாவே எழுப்புகிறது.