“ஒரே நாடு, ஒரே வரி” என்ற முழக்கத்தை மோடி அரசு கையில் எடுத்து புதிதாக கொண்டு வந்த சீர்திருத்தம் தான் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி). 2017ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி நள்ளிரவு தலைநகர் டெல்லியே பரபரப்பாக காணப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலித்தது. ஒரு புதிய சீர்திருத்த வரி வசூலிக்கும் முறையை அமுல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் புதிய வரி முறை விதிக்கப்படுவதால் நாடாளுமன்ற மையக்கூட்டத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நடந்த விழாவில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நள்ளிரவில் 12 மணிக்கு மணியடித்து அமல்படுத்தப்பட்டது.

modi and nirmala 433விலையேற்றம் மட்டும் தான். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் சரக்கு மற்றும் சேவை வரிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. சரியாக 5 ஆண்டுகள் முடிந்தது எதுவும் நடக்கவில்லை. மாறாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களின் வரி விகிதங்கள் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டது. அதனால் நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்துக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கும் போது ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தொழில்களை பாதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

உலக அளவில் ஜி.எஸ்.டி

இந்தியாவில் வரிகள் இரு வகைப்படும் நேர்முக வரி, மறைமுக வரி. நேர்முக வரி நம் நாட்டில் வருமானத்திற்கு தகுந்தாற் போல் நாம் வரி செலுத்துகிறோம். அரசு பணிகளில் இருப்பவர்கள் தொழில்வரி என்றும் வருமான வரி என்றும் நேரடியாக கட்டுகிறார்கள். அதே போல் மறைமுக வரி நாம் வாங்கும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியையும் சேர்த்து விலை தீர்மானிக்கப்படுகிறது. நாம் அந்த பொருளை வாங்குகிறோம். உலக அளவில் 150க்கும் அதிகமான நாடுகளில் ஜி.எஸ்.டி முறையில் வரி வசூலிக்கப்படுகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் முதல்முறையாக ஜிஎஸ்டி வரி முறையை பிரான்ஸ் நாடு 1954ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதிகப்படியான விற்பனை வரி, மோசடி மற்றும் கடத்தலை ஊக்குவிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அந்நாடு ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியது. பிரான்ஸில் 20 சதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஐரோப்பிய நாடுகளில் 1970 முதல் 1980 காலக்கட்டங்களில் ஜி.எஸ்.டி வரி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. பிரேசில் நாட்டில் 4 சதம் முதல் 25 வரை ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 20 சதவீதமும், கனடாவில் 13 முதல் 15 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது.

நியூசிலாந்து நாட்டில் கடந்த 1986ம் ஆண்டு 10 சதவீத வரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டில் 12.5 சதவீதமும் 2010ம் ஆண்டில் 15 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டது. சீனாவில் வணிகவரி முறையை மாற்றி வாட்வரி அமைப்பை 2016ம் ஆண்டு கொண்டு வந்தனர். சீனாவில் ஒரு சில பொருட்களுக்கு பகுதி ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2000ம் ஆண்டு ஜி.எஸ்.டி 10 சதவீதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு ஜீரோ வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரிவசூல் முறை

உலக நாடுகளில் சராசரியாக 10 சதவீதத்திற்கும் குறைவாக ஜி.எஸ்.டி வரி இருக்கும் நிலையில் நம்நாட்டில் 28 சதவீதம் வரை மோடி அரசு விதித்துள்ளது. கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் இரட்டை ஜிஎஸ்டி வரி வசூல் முறையை கடைபிடித்து வருகிறது. இந்தியாவிலும் மத்திய அரசு, மாநில அரசும் தனித்தனியாக வரி வசூல் செய்து கொள்ளும் முறையை கடைபிடிக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஒற்றை ஜிஎஸ்டி முறையை கடைபிடித்து வருகிறது. கனடாவில் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்திய போது பெரும் எதிர்ப்பு கிளப்பியது. அதன் பின் அரசு இரண்டு முறை வரியை குறைத்தது. சில நாடுகளில் ஜி.எஸ்.டி வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தும் போது மிகக்குறைவாக வரி விகிதங்களை செயல்படுத்தி காலப்போக்கில் வரியை உயர்த்தின. ஆனால் மக்கள் தொகை அதிகமும் வரிவசூல் அதிகமாகவும் கிடைக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி உயர்ந்தபட்சமாக 28 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியால் பாதிப்புகள்

சாலையோரத்தில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வரும் மக்களின் வயற்றில் அடித்துள்ளது ஜிஎஸ்டி. அவர்கள் விற்பனை செய்யும் கடலை மிட்டாய், பிஸ்கட், பால், தயிர் உள்ளிட்ட பல பொருட்கள் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் விலை அதிகரித்துள்ளது. பெரும் தொழிலதிபர்கள், அவர்களின் தொழில்களுக்கு குறைந்தபட்ச வரி விகிதமும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தொழில்களுக்கு அதிகபட்ச வரிவிகிதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, ஏழையாக இருக்கிறான். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாகவே மாறுகிறார்கள். வாட் வரி விதிப்பு முறையில் வரி விலக்கு பெற்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முறையில் 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது என்று சிறு தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை அறைக்கு வரி, பிணத்தை எரிப்பதற்கு வரி, பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது. காசோலை, அஞ்சலக சேவைகள், வங்கி சேவைகள், ஓட்டல் அறை வாடகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள் தங்கும் அறைக்கும் ஏழைகள் தங்கும் அறைக்கும் ஒரே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பேனா மை, கத்தி, பேப்பர் கத்தி, பென்சில், சார்ப்னர், எல்.இ.டி லைட்டுகள், அரிசி, கோதுமை மாவு, பருப்பு, அப்பளம், பன்னீர், தயிர், மோர், தேன், இறைச்சி, உலர் காய்கறிகள், பொறி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

பம்பு செட்டுகள், செயற்கை உறுப்புகள், உபகரணங்கள், பால் இயந்திரங்கள், கிரைண்டர், சாலை, பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மயான கட்டுமானம் போன்ற ஒப்பந்தங்களுக்கு 12 சதத்திலிருநது 18 சதவீதமாக ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டுள்ளது. சிறு தொழில்களில் தீப்பெட்டி தொழில் முக்கியமானது. இதில் 80 சதவீதம் பெண்கள் பணிபுரிகிறார்கள். கோவில்பட்டி சாத்தூர், சிவகாசி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட தமிழகத்தில் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் வடமாநிலங்களுக்கு குறிப்பாக குஜராத், டில்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீப்பெட்டி சார்ந்த மரக்குச்சி, பேப்பர், அட்டை கம்பெனிகள், மெழுகு, வஜ்ஜிரம் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இப்போது ஜி.எஸ்.டியால் தொழிற்சாலைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பல ஆடம்பர பொருட்களுக்கு குறைவான அளவில் ஜி.எஸ்.டி வரி விதித்திருக்கிறது. தங்கத்திற்கு வெறும் 3 சதவீதம் வரியும், வைரத்திற்கு 1.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக அளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ், மதுபானம் உள்ளிட்டவைகள் ஜிஎஸ்டி யிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரே நிலையில் ஜி.எஸ்.டி மூலம் வரிவசூல் செய்யப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அப்படி இருக்கும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வரி வசூல் என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. கோடீஸ்வரர்கள் மற்றும் வசதியானவர்கள் வரி கட்டுவதில் பிரச்சனை இருக்காது. ஆனால் கோடான கோடி ஏழை எளிய மக்கள் வரி செலுத்துவதில் மிகப் பெரிய நெருக்கடி மற்றும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே, எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி முறையை கைவிட வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வரிகளை கோடீஸ்வரர்களுக்கு உயர்த்த வேண்டும். அவர்களுக்கு வழங்கும் சலுகைகளை கைவிட வேண்டும். மோடி அரசு கடைபிடித்து வரும் ஜி.எஸ்.டியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. எல்லாவற்றிற்கும் வரி என்ற நிலை அதாவது பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி, சோற்றுக்கும் வரி என்கிற போக்கு சர்வாதிகாரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி வரி வசூல் முறையில் ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பி.பெருமாள்

Pin It