மோடியை கண்டிக்காத தமிழக அரசியல் கட்சிகள்

2011 ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மாக்கண்டேய கட்சு அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல் துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் கருத்துச் கொல்லும்போது, போலி என்கவுண்டர் மூலம் அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில் போட வேண்டுமென்று கண்டனம் தெரிவித்தது.

கடந்த 12.8.2011 இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் 18 வய தான அப்பாவி இளைஞர் சந்தேகத்தின் பேரால் பிடிக்கப்படும் ராணுவத்தினரால் ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்படுவதும் அதனை வீடியோவில் பார்த்து கராச்சி ஐகோர்ட் சூயோ மோட்டோ (தன்னிச்சையான) வழக்காக எடுத் துக் கொண்டு அந்த ராணுவ வீரர்களுக்கு கடும் தண்டனை கொடுத்ததாகவும், அந்தத் தண்டனையினை மேல் முறையீடு செய்த ராணுவத்தி னருக்கு அங்குள்ள சுப்ரீம் கோர்ட் அந்தத் தண்டனையினை உறுதி செய்ததாகவும் காட்டினார் கள்.

என்ன தண்டனை எனக் கேட்கிறீர்களா? அந்த இளைஞனைச் சுட்ட இராணுவ வீரர் ஷாஹித் ஜாபருக்கு மரண தண்டனையும், அதற்கு துணையாக இருந்த அறுவருக்கு ஆயுள் தண்டனையும் சம்பவம் நடந்து மூன்று மாதத்திற்குள் வழங்கியதாக பி.பி.சி. ஒளிபரப் பியது.  ஆனால் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ந் தேதி குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்பு போலி என்கவுண்ட்டர் என்ற பெயரில் பல முஸ்லிம் இளைஞர்களைக் கொன்ற காவல்துறையினருக்கும், காவி அரசி யல்வாதிகளுக்கும் இன்னமும் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக அந்த போலி என் கவுண்ட்டர்களை வெளிக் கொண்டு வந்த உயர் காவல்துறை அதிகாரிகள் தான் அங்குள்ள அரசால் பந்தாடப்பட்டுள்ள னர் என்பதை சமீப கால செய்திகள் வெளிக் காட்டுகின்றன.

குஜராத்தில் முஸ்லிம் இனக்கொலை நடந்த சமயத்தில் உளவுப்படை தலைவராக இருந்த ஸ்ரீகுமார் என்ற நேர்மையான அதிகாரி விசார ணைக் கமிஷனிடம் சமர்ப்பித்த தனது அறிக் கையில் இனக் கொலைக்கு குஜராத் அரசும், காவியுடை தலைவர்களும்தான் காரணம் என் றார். அதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட் டது மட்டுமல்லாமல் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய டி.ஜி.பி என்ற உயர் பதவியும் மறுக் கப்பட்டது. அதன் பின்பு அவர் நீதி மன்றத்தினை நாடி தன் உயர் பதவியினை பெற்று ஓய்வும் பெற்ற தோடு மட்டுமல்லாமல் மனித வேட்டைக்கு காரணமானவர்கள் அத்தனை பேருக்கும் தண் டனை பெற்றுத்தராமல் குஜராத்தினை விட்டு போக மாட்டேன் என அங்கே தங்கியுள்ளார் என்றால் அவர் மனத் தைரியம் பாருங்களேன்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலாள எஸ்.ஐ.டி என்ற விசாரணைக் குழு உச்ச நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்த 600 பக்க அறிக்கையில் மோடி அரசின் மீதான குற்றச்சாட்டை மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும், அந்த அரசின் இரண்டு மந்திரிகளான அசோக் பட் மற்றும் ஜடேஜா ஆகியோரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி முஸ்லிம்களின் அபயக் குரலினை கண்டு கொள்ள வேண்டாமென்று கூறியதாக வும் 2011 பிப்ரவரி மாதம் 4ந் தேதியிட்ட ஹிந்து ஆங்கில பத்திரிக்கை சொல்கிறது.

கோத்ரா ரயில் சம்பவத்திற்கு பின்பு மோடிக்கு முஸ்லிம் தீவிரவாதிகளால் ஆபத்து என்று பொய்யான தகவலை சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர் சொராபுத்தீன், அவரு டைய மனைவி கவுசர் பீவி மற்றும் அவருடைய நண்பனும் போலி என்கவுண்ட்டரின் ஒரே சாட்சியுமான பிரஜாபதி யும் போலி என்கவுண்ட் டரால் கொல்லப்பட்டார் கள். அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று அதன் உத்தரவு மூலம் எஸ்.ஐ.டி என்ற சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

அதன் பலனாக குஜராத்தின் முன்னாள் உள் துறை அமைச்சர் அமித்ஷா, டி.ஐ.ஜி வன்சரா, ஐ.பி.எஸ் அதிகாரிகளான சுடசாமா மற்றும் விபுல் அகர்வால், இன்ஸ்பெக்டர் ஆஷிஸ் பாண்டியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கோத்ரா ரயில் விபத்தினை விசாரிக்க நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது.

அதன் பின்பு நடந்த சம்பவங்களை விசாரிக்க பானர்ஜி கமிட்டி அமைக்கப்பட்டது. சமீப கால 2ஜி வழக்கு, காமன் வெல்த் போட்டிகள், லோக் ஆயுக்தா வரைவுச் சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசிற்கு பாரா ளுமன்றத்திலும் மற்றும் வெளியேயும் உள்ள நெருக்கடியினை சாதகமாமக பயன்படுத்தி குஜராத் அரசுக்கு எதிராக சாட்சி சொன்ன ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரிகளான ராகுல் சர்மா, சஞ்சய் பட், ரஜ்னீஷ் ராய் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியிருக்கிறது குஜராத் மாநில அரசு.

மேற்குறிப்பிட்ட ஐ.பி.எஸ் உயர் அதிகாரிக ளின் மனுக்களால் குஜராத் கலவரத்தில் காவிக் குண்டர்கள் அரசு ஆதரவுடன் ஆடிய கோரத் தாண்டவம் வெளி உலகிற்கு வந்து விட்டதே என்று ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்கள் அந்த அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு தண்டனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆணித்தரமான செய்திகளை ஊடகங்கள் தருகின்றன.

இலங்கையில் போராளிகளை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்பட்டது. அதன் அத்து மீறல்களை ஐ.நா. சபை விசாரிக்க ஆணையிட வேண்டும், இலங்கை அரசிற்கு பொருளாதார தடை வேண்டும் என்று தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் சொல்கின்றன. அத்துடன் சமுதாய இயக்கங்க ளில் சிலவும் இணைந்து குரல் எழுப்பியுள்ளன. அதனை யாரும் மறுக்க முடியாது, தடுக்க முடியாது. ஆனால் இந்தியாவிலேயே, உள்ள குஜராத் மாநிலத்தில் போலியான காரணங்கள் சொல்லி மனித வேட்டைகள் மூலம் அப்பாவி முஸ் லிம்கள் 2000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்னமும் பல இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் சொத்துகளை இழந்து அகதிகளாக இருக்கின்ற னர். அந்த வெறியாட்டத்திற்கு இங்கே உள்ள எந்த அரசியல் கட்சி யாவது கண்டனம் தெரிவித்தது உண்டா? அல்லது பகிரங்க விசா ரணை என்று இலங்கை விஷயத் தில் கேட்பதுபோல கேட்டதுண்டா? அல்லது தனது கண்டனக்கனைக ளையாவது வீசியது உண்டா? முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் இறப்பதற்கு முன்பு குஜராத் கலவரத்தினை அறிந்து கண்ணீர் விட்டதாக சொல்லிய பிற காவது பாராளுமன்றத்தில் குஜராத் அரசினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது உண்டா? அல் லது பதவியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம் விசாரணை செய்ததுண்டா?

இதுபோன்ற கலவரங்களை அடக்கத்தான் மத்திய அரசு மதவாத கலவர தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறது அதனை சங்பரிவார் சிந்தனையாளர்கள் எதிர்க்கிறார்கள். ஐ.பி.எஸ் அதிகாரிகளான ராகுல் சர்மா, சஜ்சய் பட், ரஜ்னீஷ் ராய் பேன்றவர்கள் குஜராத்தின் இனக் கலவரத்திற்கு காரணமானவர்க ளின் முகத்திரையினை கிழிக்க கிளம்பியிருக்கிறார்கள். அவர்களின் வாயிலாக ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் எந்த வகை யில் குஜராத் மனித படுகொலைக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்ற வண்டவாளம் தண்டவாளத் தில் ஒரு நாள் ஏறப்போவது திண்ணமே!

- டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பி.ஹெச்.டி., ஐ.பி.எஸ்., (ஓய்வு)