பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள அபு பேலஸில் கடந்த 23ந் தேதி இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான பிரசிடெண்ட் அபு பக்கர் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பருக் மரைக்காயரும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இக்பாலும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு  அழைக்கப்பட்டிருந்த நாம், இஃப்தார் நிகழ்ச்சி முடிந்து மக்ஃரீப் தொழுகைக்குப் பின்னர் நீதிபதி இக்பாலைச் சந்தித்தோம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட தினத்தில், வழக்கத்திற்கு மாறாக அவர் நீண்ட உரை நிகழ்த்தியதையும், அதில் தமிழக மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்யும் வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று துவங்கி நீதித்துறையைப் பற்றியும், மக்களுக்கு நீதி வழங்குவதில் பின்பற்றப்பட வேண்டிய நாணயம், நேர்மை போன்ற பல அம்சங்களை குறித்தும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தி இருந்ததை அவருக்கு நினைவு கூர்ந்தோம். மகிழ்ந்து போனவராய் நம்மைப் பார்த்து புன்னகைத்த அவரிடம், நீதித்துறையில் அவர் சமீப காலங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும், அதற்கான அவசியம் என்ன என்றும் கேட்டோம்.

அந்த குறைவான நேரத்திலும் அவர் நம்மிடம், “நான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக இருந்தபோதே நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதற்குக் காரணம் ஜார்கண்ட் மக்களின் துயரங்களை அறிந்ததுதான். குறிப்பாக ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதிகமான வழக்குகள் தேங்கி விடுவதால், தீர்ப்புகள் கிடைக்கத் தாமதமாகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

உங்கள் சென்னையைப் பொறுத்தவரை இது கார்ப்பரேட் வோர்ல்ட். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தளம் அமைத்திருக்கின்றன. அதனால், வழக்குகளுக்கும் பஞ்சமில்லை. நிறைய வழக்குகள்! அவற்றையெல்லாம் தீர்க்க வேண்டுமானால் நீதித்துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்.

குடும்ப நல வழக்குகள் சென்னையில் அதிகரித்து வருவதால், அண்மையில் சனி, ஞாயிறுகளிலும் கோர்ட் இயங்கும் என்று அறிவித்திருந்தோம். அது இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, கூடுதல் கோர்ட்டுகள் அமைத்தால் அது நிரந்தரத் தீர்வாக அமையும் என்று வக்கீல்கள் கருத்து தெரிவித்ததால் கூடுதலாக குடும்ப நல கோர்ட் ஒன்றையும் சமீபத்தில் அமைத்திருக்கிறோம்'' என்று அழகிய உருதுவில் பளிச்செனப் பதிலளித்தார் தலைமை நீதிபதி இக்பால்.

தனது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்புரை ஆற்றிய நீதிபதி இக்பால், “ஏழை - எளிய மக்கள் சிறுபான்மையினரின் நலன்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளில் ஏழை மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பு கிடைத்து விட்டதா என்பதை விட நீதி கிடைத்து விட்டதா என்பதுதான் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தென்படும் நம்பிக்கை. இதனை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்த வேண்டும்'' என்று பேசிய பேச்சு அவர் உண்மையான சமூக அக்கறை கொண்ட நீதிபதி என்பதை பறைசாற்றியது. அதற்கு நிதர்சன சாட்சியமாகவே திகழும் நீதிபதி இக்பால், தலைமை நீதிபதி என்கிறஅதிகார அம்சமோ, பந்தா படாடோபமோ இல்லாமல் சாமானியராக இருப்பதும், புன்னகை மாறாமல் அன்பு ததும்ப பேசுவதும்தான் அவரை மக்கள் நீதிபதியாக அடையாளப்படுத்தியுள்ளது என்பதை அவருடனான சந்திப்பு உறுதிப்படுத்தியது.

- நீதிபதி இக்பால்

Pin It