கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமச்சீர் கல்வியும் சமச்சீரற்ற (மாணவர்) சமூகமும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 10 அன்று, பத்தாம் வகுப்பு மாணவன் பாலமுருகனும் (வயது 15), ஆறாம் வகுப்பு மாணவன் செல்வமும் (வயது 12) பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்தில் ஏறியிருக்கிறார்கள். அப்போது தெரியாமல் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ள, செல்வம் பாலமுருகனை சாதிப் பெயர் சொல்லி திட்டியிருக்கிறான். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு நடந்ததை பாலமுருகனின் தாயே விவரிக்கிறார் : “அடுத்த ஒரு மணி நேரத்தில் செல்வத்தின் அப்பா, என் வீட்டுக்கு வந்து என் மகன் பாலமுருகனின் கையை முறுக்கி நெஞ்சில் குத்தினார். அப்போது குளித்துக் கொண்டிருந்த நான், என் மகனைக் காப்பாற்ற குறுக்கே புகுந்தேன். அப்போது என்னைப் பிடித்திழுத்து, என் ஆடையை உருவி, அவர் என்னை நிர்வாணப்படுத்தி விட்டார்.” பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, செல்வத்தின் தந்தை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் (‘குமுதம் ரிப்போர்ட்டர்', 27.8.2009).

இதேபோன்று மாணவர்களிடையே நடைபெற்ற சாதி மோதல்களை இவ்விதழ் பட்டியலிட்டிருக்கிறது : முதுகுளத்தூரில் உள்ள விளக்குளத்தூர் கிராமத்தில் மறைந்த தலித் தலைவரின் சுவரொட்டியை பள்ளி மாணவர்கள் சிலர் கிழித்தெறிய, 7.8.2009 அன்று இருப்புக் கம்பி மற்று உருட்டுக் கட்டைகளுடன் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பில் முடிந்திருக்கிறது. அதில் வினோத் என்ற மாணவனின் கைவிரல் உடைந்தது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் உள்ள வருசநாடு கிராமத்தில், குறிப்பிட்ட சாதி மாணவர்கள் மற்ற மாணவர்களை ‘அண்ணன்' என்றுதான் கூப்பிட வேண்டுமாம். சத்துணவு சாப்பிடும்போது அவர்களுக்கு தனி வரிசையாம். இதை மறந்துவிட சரண்ராஜ் என்ற மாணவன், சக மாணவனை ‘டேய்' என்று அழைக்க, அவன் பள்ளத்தில் தள்ளப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறான்.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் உள்ள ஒரு பள்ளியில், குறிப்பிட்ட சாதி மாணவர்கள் மேல் சட்டையைப் பெரிதாக அணிய வேண்டும். ‘இன்' பண்ணக் கூடாது, ‘பெல்ட்' கட்டக் கூடாது என்பதெல்லாம் விதிமுறை. இதை மீறிய ராமன் என்ற மாணவன் கல், மூங்கில், கொம்பு, காம்பஸ் போன்ற வற்றால் தாக்கப்பட்டு இறந்தே போய்விட்டான். மல்லூர் காவல் நிலையத்தில் இதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில், ஒரு பள்ளி ஆசிரியர் தலித் மாணவர்களை ‘மைனஸ்' என்றும், சாதி இந்து மாணவர்களை ‘பிளஸ்' என்றும்தான் அழைப்பாராம். இப்பிரச்சினை பெரிதாக வெடித்து, சாதி மோதல் ஏற்படும் நிலையில், அப்பள்ளி ஆசிரியர் மாற்றப்பட்டுள்ளார். சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணமிது. ஆனால் இச்சமச்சீர்க் கல்வி, மாணவர்களிடையே வேரூன்றியிருக்கும் ஜாதிய எண்ணங்களை வேரறுத்து, சமத்துவத்தை வளர்க்குமா?

ஜாதிக் கூடங்களில் கற்றுத் தரப்படும் கல்வி

தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலியில் ‘ஜாதி கவுரவம்' எந்தளவுக்கு எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' (5.9.09) ஏட்டில் விரிவான கட்டுரை ஒன்றை, கோகுல் வண்ணன் என்ற பத்திரிகையாளர் கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் : “வெறும் விளையாட்டு தொடர்பானவற்றில் மட்டுமல்ல, இயல்பான சமூக உறவுமுறைகளில்கூட, ஜாதி கவுரவம் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்களிடம் மேலதிகப் பங்கு வகிக்கிறது. சிறு வயதிலிருந்தே ஒருவர் சாதி அடையாளத்தை உள்வாங்கிக் கொள்கிறார். பாளையங்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவர், “திருநெல்வேலியில் இது மிகவும் இயல்பானது” என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதி அடிப்படையில் பிரிந்து நின்று, சின்னச் சின்ன பிரச்சினைகளுக்குக் கூட சண்டை போடுகிறார்கள்” என்கிறார். இம்மாவட்டத்தில் நடைபெற்ற மிக மோசமான மோதல்களில் (2009 இல் மட்டும் 60 கொலைகள் நடந்திருக்கின்றன) பெரும்பாலானவை சாதி ரீதியாக நடைபெற்றவையே. ஜாதி கவுரவம் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. ஒரு படித்த பெண்மணி, தன்னுடைய பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்த ஒருவர் காதலித்து விட்டார் என்ற ‘குற்ற'த்திற்காகவே – அவரை கொலை செய்து விட்டார். திருநெல்வேலி அஞ்சல் அலுவலகத் தலைவராகப் பணியாற்றி வந்தவர் நாடார் சாதியைச் சேர்ந்த சித்திரா தேவி (45). தேவர் சாதியைச் சேர்ந்த முத்து கணேஷ் என்ற இளைஞர், தன்னுடைய மகள் கலைராணியை காதலித்ததால், ஏப்ரல் 14, 2009 அன்று, அவரை நண்பகல் உணவிற்கு வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு அளித்த பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டார். மனித உயிரைவிட அவருடைய ஜாதி கவுரவம்தான் அவருக்கு முக்கியமாகிப் போனது!

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இம்மாவட்டத்தில் அய்ந்து சாதி மோதல்கள் நடந்திருக்கின்றன. இம்மோதல்களில் அய்ந்திற்கும் மேற்பட்ட தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். திருநெல்வேலியின் வரலாறே சாதி வன்முறை வரலாறாக இருக்கும் நிலையில், மேற்கூறிய குற்றங்களை எல்லாம் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவே கருதி அவற்றை அலட்சியப்படுத்துவது தவறு என்கிறார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் வரலாற்றுத் துறை பேராசிரியர் அ. மணிக்குமார், “ஆழமான சமூக வன்மத்தின் வெளிப்பாடே இது” என்கிறார் அவர். ‘திருநெல்வேலியில் சமூக வன்முறை' என்ற ஆய்வு நூலில் மணிக்குமார் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : “மிக முக்கியமாக, படித்த வேலையில்லா இளைஞர்கள்தான் சாதி மோதல்களில் பெரும் பங்காற்றுகின்றனர்.” அடுத்த ஆண்டு 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் தமிழறிஞர்கள் தங்களின் மூளையை கசக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், தமிழனைக் கொல்லும் ஜாதியை அழித்தொழிக்க, இம்மாநாட்டில் சிறப்பு அரங்கம் அமைக்கப்படுமா?       

ஜாதி நுட்பம்

தமிழ்நாட்டில் இரட்டை தம்ளர் முறை ஒழிந்து விட்டதா? இல்லை என்பதற்கு, மதுரை அருகில் உள்ள வடிவேல்கரை கிராமமே சான்று. இங்கு இரட்டை தம்ளருக்குப் பதில் தலித்துகளுக்கு கொட்டாங்கச்சியில் தேநீர் அளிக்கப்படுகிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளரே (31.8.2009) இதை நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். தலித்துகளுக்கு ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் தம்ளர்களிலும்; சாதி இந்துக்களுக்கு எவர்சில்வர் தம்ளர்களிலும் தேநீர் வழங்கப்படுகிறது. “இந்தப் பாகுபாடு குறித்து யாரும் பேசவில்லை என்றாலும், உண்மையில் இது இன்றளவும் நுட்பமான முறையில் தொடர்கிறது” என்கிறார், இக்கிராமத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்ற தலித். “நாங்கள் அனுபவிக்கும் பாகுபாட்டுக் கொடுமைகளை உணர, நீங்கள் இங்கு வந்து வாழ வேண்டும்” என்கிறார்.

பெரியார் மண்ணில் அசைவத்திற்குத் தடை!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்ற உணவகங்களில் அசைவ உணவு வழங்கப்படுவதில்லை என்பதைக் கண்டித்து, வழக்குரைஞர் பொ. ரத்தினம் தலைமையில், அசைவம் பரிமாறும் கண்டன நண்பகலுணவு நடைபெற்றது. 8.9.2009 அன்று மதுரை உயர் நீதிமன்ற உணவகத்தில், கோழிக் கறியையும், முட்டை போண்டா வையும் வழக்குரைஞர் ரத்தினம் இலவசமாக வழங்கினார். மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் முட்டை போண்டா விற்றவரை நீதிமன்ற அதிகாரிகள் கண்டித்து, தடை செய்ததை ரத்தினம் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் அசைவ உணவுக்குத் தடை இல்லாதபோது, தமிழ் நாட்டில் மட்டும் அதைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன? அசைவ உணவு உட்கொள்கின்றவர்களை ஏன் கீழாகப் பார்க்க வேண்டும்?

அசைவ உணவு உட்கொள்வது அவரவருடைய உரிமை. நாம் சைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்லர். எனவே, இது தொடர்பாக 164 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்றை ஏப்ரல் 29 அன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகலே அவர்களிடம் அளித்திருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அமைதி காக்கிறார்கள்” என்கிறார் ரத்தினம். இக்கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கியக் கோரிக்கை : அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் படம் இடம் பெற வேண்டும்; மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆளுயர காந்தி சிலைக்கு அருகில் அம்பேத்கரின் ஆளுயர நிலை நிறுவப்பட வேண்டும்.

திராவிட இயக்கப் பாசறையைச் சேர்ந்த எண்ணற்றோர் நீதிமன்றங்களை அடைத்துக் கொண்டிருந்தாலும், பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரின்றிதான் கிடக்கிறது. அசைவம் உண்பதற்கு தொடர் போராட்டங்கள் நடத்தி, ஒருவேளை நீதிமன்ற உணவகங்களில் அசைவம் பரிமாற ஒப்புக் கொண்டாலும், மாட்டுக் கறியைப் பரிமாற ஒப்புக் கொள்வார்களா?