காக்க வேண்டிய கைகளே கழுத்தை நெரிப்பது போல் கடந்த பிப்பிரவரி 13 அன்று உச்சநீதிமன்றம், இருபது இலட்சம் மலைவாழ் மக்களை அவர்களின் வாழ்விடங் களிலிருந்து சூலை 24-க்குள் வெளியேற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணையிட்டது. அரசமைப்புச் சட்டமும், 2006-ஆம் ஆண்டின் காடுகள் மீதான உரிமைச் சட்டமும் பழங்குடியினருக்கு வழங்கியுள்ள பாதுகாப்புக் கூறுகளைக் கருத்தில் கொள்ளாமல், மேட்டிமை மனப்போக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா. நவீன் சின்கா. இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த ஆணையைப் பிறப்பித்தது. சூலை 24-க்குள் வெளியேற்றாவிட்டால் தலைமைச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் வர்க்கத்தின் குரலாக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

2008ஆம் ஆண்டு “வொயில்டுலைப் பஸ்ட்” (Wildlife First), இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், புலிகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது அமைப்புகள் 2006ஆம் ஆண்டின் காடுகள் மீதான உரிமைச் சட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கில்தான் பிப்பிரவரி 13 அன்று உச்சநீதிமன்றம் பழங்குடிகளை வெளியேற்ற வேண்டும் என்கிற ஆணையைப் பிறப்பித்தது.

மன்னர் ஆட்சிக்காலம் வரையில் பழங்குடியினர் அரசினர் தலையீடு இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வந்தனர். காலங்காலமாகப் பழங்குடியினரின் உடைமை யாக இருந்த மலைகளும் காடுகளும் பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின் அரசின் உடைமையாகக் கருதப்பட்டன. பிரித்தானியருடன் வந்த முதலாளிய உற்பத்தி முறையின் தேவைக்காக, பெரும் பரப்பில் காடுகள் அழிக்கப்பட்டன; நிலக்கரி, இரும்பு போன்றவற்றுக்காகச் சுரங்கங்கள் தோண் டப்பட்டன. ஆயினும் பழங்குடியினரின் மரபான வாழ்க்கை முறைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை.

ஆனால் சுதந்தர இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடாக இருக்க வேண்டும் என்ற கொள்கை வகுக்கப்பட்டதால், பழங்குடியினர் தொன்றுதொட்டுப் பயன் படுத்தி வந்த நிலப் பகுதிகளை அரசு கையகப்படுத்தியது. மரங்களே இல்லாத நிலப்பகுதிகளும் காடுகள் என்று அரசால் வகைப்படுத்தப்பட்டன. இவ்வாறு பல்லாயிரம் கிலோ மீட்டர் பழங்குடியினர் நிலம் அரசால் கைப்பற்றப்பட்டது. மேலும் 1972-ஆம் ஆண்டின் வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம், 1980-இல் காடுகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் பெயரால் மலைவாழ் மக்களின் நிலங்கள் அரசால் கையகப்படுத் தப்பட்டன. பல நூற்றாண்டுகளாக-தலைமுறை தலைமுறை யாக காடுகளில் வாழ்ந்த பழங்குடியினரிடம் அவர்கள் பயன் படுத்தி வந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானது என்பதற் கான எந்த ஆவணமும் இல்லை என்பதால் அரசின் நிலப் பறிப்பைத் தடுக்க முடியவில்லை; ஆனால் பல இடங்களில் நிலப்பறிப்புக்கு எதிராகப் பழங்குடிகள் போராட்டங்கள் நடத்தினர்.

மேலும் சுதந்தரம் பெற்ற பின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கனிம வளங்களுக்காகச் சுரங்கங்கள் தோண்டப் பட்டன; பலவகையான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன; பெரிய அணைகள் கட்டப்பட்டன; மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றால் பெரும் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன. அதனால் பழங்குடியினரும் பிற மலைவாழ் மக்களும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அரசின் காவல்துறையால் பல இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். தங்களின் வாழ்விடத்தையும், நிலத்தையும் வாழ்வாதாரத் தையும் இழந்த மலைவாழ் மக்களுக்கு மாற்று நிலமோ, வாழ்வாதாரமோ உரிய முறையில் வழங்காமல் அரசுகள் வஞ்சித்தன.

குறிப்பாக 1990 முதல் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் எனும் கொள்கையை அரசுகள் செயல்படுத்தத் தொடங்கிய பின் காடுகளும், மலைகளும், அவற்றின் நிலங் களும் அரசின் உதவியுடன் வளர்ச்சி என்கிற பெயரால் பன்னாட்டு நிறுவனங்களாலும் இந்திய முதலாளியப் பெருங் குழுமங்களாலும் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் இலக்காகி வருகின்றன. இதை எதிர்த்துப் பல பகுதிகளில் பழங்குடியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். சில இடங்களில் மாவோயிஸ்டுகளின் துணையுடன் போராடுகின்றனர்.

பழங்குடியினரின் இத்தகைய தீவிரமான தொடர் போராட்டங்களின் விளைவாக, இந்திய அரசு 2006ஆம் ஆண்டு “பட்டியல் பழங்குடியினர் மற்றும் மரபாக மலைவாழ் மக்களின் காடுகள் மீதான உரிமைச் சட்டத்தை” (Scheduled Tribes and other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights Act, 2006)) இயற்றியது. இச்சட்டம் காலங் காலமாகப் பழங்குடியினருக்கும் மலைவாழ் மக்களுக்கும் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைக் களைவதாக அமைந் துள்ளது. வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் பழங்குடியினர் மீது நிகழ்த்தி வந்த கொடுமை களுக்கு ஒரு முடிவு காண்பதற்கான வழிவகை இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக வனத்தில் வாழ்ப வர்கள் வனச்சிறு மகசூலான சீமார்புல், தேன், நெல்லி, கடுக்காய், பூச்சக்காய், புளி, மூங்கில் (ஒருமுறை அறுவடை செய்தால் மீண்டும் வளரக் கூடியவை) போன்ற பொருள்களை அறுவடை செய்து பயன் படுத்திக் கொள்ளும் உரிமையை இச்சட்டம் வழங்கு கிறது. வேளாண்மை செய்து வந்த வனநிலத்துக்கான நிலப்பட்டாவைத் தனிநபர் பெறும் உரிமையையும், சமூக நிலையில் காட்டின் மீதான கூட்டு உரிமை பெறும் உரிமையையும் இச்சட்டம் அளிக்கிறது.

இச்சட்டம் வழங்கும் உரிமைகளைப் பட்டியல் பழங்குடி யினர் மற்றும் 2005 திசம்பர் 13-க்குமுன் 75 ஆண்டுகள் தொடர்ந்து மலைப்பகுதியில் நிலத்தைச் சொந்தமாக வைத் திருந்தவர்கள் ஆகியோர் மட்டுமே பெற முடியும். இவர்கள் தங்கள் நிலத்துக்குத் தனிப்பட்டாவாகவும், குழுப் பட்டாவாக வும் பெறலாம். இதற்கான வழிமுறைகள் 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியைப் பயன்படுத்தி வாழ்ந்து வருகின்ற பழங்குடி ஆண்கள், பெண்கள் அனை வரையும் உறுப்பினராகக் கொண்ட கிராம சபை அமைக்கப் பட வேண்டும். அக்கிராம சபை 15 பேரை உறுப்பினராகக் கொண்ட தலைவர், செயலாளர் உள்ளடக்கிய வன உரிமைக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவில் 5 பெண்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கிராம சபை உறுப்பினர்கள் தங்களது நிலத்துக்கான பட்டா வழங்கக் கோரும் விண்ணப்பங்களை வன உரிமைக் குழுவிடம் அளிக்க வேண்டும். வன உரிமைக்குழு அவற்றை ஆய்வு செய்து கிராம சபைக்கு அனுப்ப வேண்டும். கிராம சபை கூடி அவை குறித்து விவாதித்து, தீர்மானம் நிறை வேற்றி, அவற்றை உட்கோட்டக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். உட்கோட்டக் குழுவில் கோட்டாட்சியர், வனத்துறை அலுவலர், பழங்குடி நலத்துறை வட்டாட்சியர், பழங்குடி பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூன்று பேர் இடம் பெற்றிருப்பார்கள். பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூவரில் ஒரு பெண் இருக்க வேண்டும். கிராம சபை அனுப்பிய தீர்மானத்தை உட்கோட்டக் குழு ஆய்வு செய்ய வேண்டும். கிராம சபையின் தீர்மானத் தில் குறைபாடுகள் இருப்பின் அதைச் சரி செய்யுமாறு கிராம சபைக்கு அனுப்ப வேண்டுமே தவிர, உடனடியாக நிரா கரிக்கக் கூடாது. உட்கோட்டக் குழு தன் பரிந்துரையை மாவட்டக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மாவட்டக் குழு ஒப்புதல் அளித்த பின் தனிநபர் பட்டா, குழுவிற்கான பட்டா வழங்கப்படும்.

இத்தன்மையில் 16 மாநிலங்களில் 23 இலட்சம் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன; அதே சமயம் நிலப்பட்டா கோரும் 20 இலட்சம் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டவர்களை மலையகப் பகுதிகளிலிருந்து சூலை 24-க்குள் வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிப்பிரவரி 13 அன்று ஆணையிட்டுள்ளது. இதற்குமுன் 2016 சனவரி 29 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேசுவரர், ஏ.எம். சாப்ரே, அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு, நிலப்பட்டா கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஆணை யிட்டது. 2018 மார்ச்சு 7 அன்று உச்சநீதிமன்ற நீதி பதிகள் மதன் பி. வோகூர், கூரியன் ஜோசப், தீபக் குப்தா ஆகியோரும் இந்த கருத்தை வலியுறுத்தினர். இம்மூன்று அமர்வுகளில் இருந்த நீதிபதிகள், 2006 ஆம் ஆண்டின் காடுகள் மீதான உரிமைச் சட்டப்படி கடையருள் கடையராக வாழும் மலையக மக்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தருவதற்கு மாறாக, மேட்டுக் குடி மனப்போக்குடன், மாநில அரசுகள் அளித்த புள்ளிவிவரத்தை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெளியேற்ற ஆணைகளைப் பிறப்பித்தது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதியாகும்.

நிலப்பட்டா கோரிக்கை விண்ணப்பங்களை நிராகரித்த தில் 2006ஆம் ஆண்டின் காடுகள் மீதான உரிமைச் சட்டத்தின் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்கிற கேள்வியை நீதிபதிகள் எழுப்பவில்லை. நிலப்பட்டா கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு மறுக்கப் பட்டது. மேலும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப் படவில்லை. பெரும்பாலான இடங்களில் கிராம சபை, உட்கோட்டக் குழு, மாவட்டக் குழு ஆகியவை முறையாக அமைக்கப்படவில்லை; அமைக்கப்பட்ட இடங்களிலும் அவை முறையாக இயங்கவில்லை. இந்த உண்மைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்தில் கொள்ளாமல் வெளியேற்ற ஆணையைப் பிறப்பித்தது, பல இலட்சம் மலையக மக்களின் மனித உரிமையை மீறிய செயலாகும்.

பிப்பிரவரி 13 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய வெளியேற்ற ஆணையை எதிர்த்து மலைவாழ் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். நாடாளுமன்றத்துக்கு ஏப்பிரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மலையக மக்களின் போராட்டம் தனக்கு எதிராக அமையும் என்ற அச்சத் தால் பா.ச.க. அரசு பிப்பிரவரி 28 அன்று உச்சநீதி மன்றத்தில் இந்த ஆணையை நிறுத்தி வைக்குமாறு விண்ணப்பித்தது. பிப்பிரவரியில் முதல் கிழமையில் நடந்த இறுதி விசாரணையின் போது நடுவண் அரசின் வழக்குரைஞர்கள் எவரும் உச்சநீதிமன்றத்திற்கே வராமல் ஓடி ஒளிந்து கொண்டது ஏன்?

பிப்பிரவரி 28 அன்று உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் துசார்மேத்தா, “மலையகப் பகுதியிலிருந்து எவரையும் வெளியேற்றுவதற்கு முன் நிலப்பட்டா கோரிய விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன என்கிற நடைமுறையை மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். விண் ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த தகவலும், ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்கிற காரணமும் விண்ணப்பித்த வர்களுக்குத் தெரிவிக்காமல் - அவர்கள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்காமல் - அவர்களை வெளி யேற்றுவது அநீதியாகும்” என்று வாதிட்டார். அப்போது நீதிபதி மிஸ்ரா நடுவண் அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டதா? என்று கேட்டார்.

நடுவண் அரசு, நிலப்பட்டா கோரிக்கை விண்ணப் பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பழியை மாநில அரசுகள்மீது போட்டது. அதையே ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம், விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற் காகப் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து சூலை 12-க்குள் மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி பிப்பிரவரி 13 அன்று பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

2006-இன் வன உரிமைச் சட்டம் கிராம சபை களுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கி யுள்ளது. அவர்களின் நிலவுரிமைக்கும் காடுகள் மீதான உரி மைக்கும் அவர்களையே பொறுப்பா ளர்களாக ஆக்கி யுள்ளது. எனவேதான் ஒடிசாவில் நியாம்கிரி மலைப் பகுதியில் பாக்சைட் கனிமத்தைத் தோண்டி எடுத்து அலுமினியத் தொழிற்சாலை அமைப்பதற்கான வேதாந்தா நிறுவனத் தின் 170 பில்லியன் டாலர் திட்டத்தை எதிர்த்துப் பழங்குடிகள் தீரமுடன் போராடிய போது, 2013-இல் உச்சநீதிமன்றம் இத்திட்டம் குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை கிராம சபைகளிடம் ஒப்படைத் தது. நியாமகிரி மலைப் பகுதியையொட்டி யிருந்த 12 கிராம சபைகளிலும் வேதாந்தா திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டது. அதனால் அத்திட்டம் கை விடப்பட்டது.

எனவே 2006ஆம் ஆண்டின் காடுகள் மீதான உரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, உரிமைகளைப் பழங்குடியினர் பெறுகின்ற வகையில் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும். காடுகள் மீதான உரிமைச் சட்டம் பிரிவு 4(5) முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் எவரையும் வெளியேற்றக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. மலையகத்தில் வாழும் ஒருவர் தன் துண்டு நிலத்திற்காக பல இலட்சம் உருபா செலவு செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது, இவர் களுக்கான நியாயத்தை உச்சநீதிமன்றம் வழங்கக் கடமைப் பட்டுள்ளது.

மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் களைந்திட மாநில அரசுகளும் நடுவண் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் பொது மக்களும் அழுத்தம் தர வேண்டும். வெளியேற்றப்படுவோம் என்கிற பழங்குடிகளின் அச்சத் தைப் போக்கிட நடுவண் அரசு உடனடியாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும்.

Pin It