இதுவும் உளவுத் துறையின் வேலைதானா?

காஷ்மீரில் மக்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில், காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை அங்கு மேலும் பதட்டத்தை அதிகரிக்கவே பயன்படுகிறது.

வெறும் பேச்சு வார்த்தை என்று மாய்மாலம் செய்யும் மத்திய அரசு, ராணுவம், துணை ராணுவப் படையினர் குறித்த காஷ்மீர் மக்களின் எதிர்ப்பையோ, கோரிக்கைகளையோ கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல காஷ்மீரில் மேலும் பதட்டத்தை அதிகப்படுத்தும் வகையிலும், சிறுபான்மை சீக்கியர்களுக்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் இடையில் பகைமையை மூட்டி, மோதலை உருவாக்கும் வேலையிலும் மத்திய அரசின் உளவுத்துறை ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு சீக்கியர்கள் ஆளாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் இல்லையென்றால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் காஷ்மீர் போராளிகள் சீக்கிய மக்களை மிரட்டி வருவதாக செய்திகள் பரப்பப்பட்டு அது நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கிறது.

அகாலிதள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ரத்தன் சிங் அஞ்சலா, பாராளுமன்றத்தில் பேசியபோது, "இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து காஷ்மீர் சீக்கியர்களுக்கு மர்ம மிரட்டல், கடிதங்கள் வருகின்றன. அவர்களை மதம் மாறுமாறு வலியுறுத்துகின்றனர். எங்கள் சமூகத்தவர்கள் மரணத்தைத் தழுவுவார்களே தவிர, வேறு மதத்தைத் தழுவ மாட்டார்கள்'' என ஆவேசம் பொங்க பேசியுள்ளார்.

காஷ்மீரில் என்ன நடக்கிறது? இந்திய ராணுவம் அங்கே செய்து வரும் அட்டூழியங்கள் என்னென்ன? மத்திய அரசின் மீது காஷ்மீர் மக்கள் வெறுப்புக் கொண்டிருப்பது ஏன்? இது போன்ற கேள்விகளுக்கான உண்மையான காரணங்களை மறைத்து காஷ்மீர் மக்களின் போராட்டத்தைத் தீவிரவாதமாக - பயங்கரவாதமாக மதக் கலவரமாக சித்தரிக்க மத்திய அரசின் உளவுத் துறை முனைப்புக் காட்டி வருகிறது.

காஷ்மீர் கலவரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையிலேயே, கலவரத்திற்கு காரணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளே என்றும், அங்கிருந்து கொண்டு தொலைபேசி மூலம் காஷ்மீரில் வன்முறை தூண்டி விடப்படுகிறது என்றும் கதை விட்டது உளவுத்துறை. இந்த கதைக்கு வலு சேர்க்கும் வகையில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் பேசியதாகக் கூறி தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்திருப்பதாக ஆதாரமும் காட்டியது  உளவுத் துறை.

இது பெரிய அளவில் மக்களால் நம்பப்படவில்லை. நாம் கூட ரிப்போர்ட் இதழில், பாக் ஆதரவுத் தீவிரவாதிகள் தான் காஷ்மீர் கலவரத்தைத் தூண்டி விடுகிறார்கள் என்றால்... சோபியானில் இரண்டு முஸ்லிம் பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்யுங்கள், வன்முறையைத் தூண்டி விடுங்கள் என துணை ராணுவப் படையினருக்கு கட்டளை பிறப்பித்ததும் பாக் தீவிரவாதிகள்தான் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று விமர்சித்திருந்தோம்.

தற்போது சீக்கியர்களை காஷ்மீர் போராளிகள் மிரட்டி வருவதாகச் புதுச் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முதலில் மதமாற்றம் செய்யவோ, அதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான சூழலோ காஷ்மீரத்தில் இல்லை என்பது அனைவரும் தெரிந்த உண்மை.

காஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி சீக்கியர்கள் மிரட்டப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? 

காஷ்மீர் மட்டுமல்ல... பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தானில் நடப்பது கூட இஸ்லாத்திற்கான போராட்டமல்ல. அது ஆக்கிரமிப்புக்கு எதிரான சொந்த மண்ணுக்கான போராட்டம்.

இவர்களின் வாதப்படி காஷ்மீர் போராளிகள் மதமாற்றம் செய்கிறார்கள் என்றால் - அங்குள்ள ஹிந்துக்களை விட்டு விட்டு சீக்கியர்களை மட்டும் மதம் மாறச் சொல்வது ஏன்? மதமாற்றம் தான் காஷ்மீர் போராளிகளின் இலக்கு என்றால் அங்குள்ள ஹிந்து மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை எழாததேன்?

இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து காஷ்மீர் சீக்கியர்களுக்கு மதம் மாறச் சொல்லி மர்ம மிரட்டல் கடிதங்கள் வருகின்றன என்று அகாலி தள எம்.பி. ரத்தன் சிங் அஞ்சலா கூறுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. உளவுத் துறை அதிகாரி எவரோ கொளுத்திப் போட்டதை அப்படியே நம்பி நாடாளுமன்றத்தில் கொந்தளித்திருக்கிறார் அஞ்சலா.

சீக்கியர்களை மதம் மாறச் சொல்லி மிரட்டல் கடிதங்கள் வந்தது என்ற பொருத்தமற்ற செய்தியே - இது உளவுத்துறை புனைந்த கதை என்பதைத் தெளிவாக்குகிறது. ஏனெனில், தீவிரவாதிகளின் மிரட்டல்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தோ, வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி பீதியை ஏற்படுத்துவதாகத்தான் தான் இருக்குமே தவிர, கடிதங்கள் அனுப்பும் வேலையை தீவிரவாத - பயங்கரவாத அமைப்புகள் செய்வதில்லை என்பதைக் கூட யோசிக்காமல் நாடாளுமன்றத்தில் சீக்கிய எம்.பிக்களும், பிஜேபியினரும் கொந்தளித்திருக்கிறார்கள்.

காலங்காலமாக இருந்து வரும் காஷ்மீர் சீக்கிய - முஸ்லிம் உறவு, இன்று நேற்று உருவானதல்ல... வரலாற்றுப்பூர்வமான நட்புறவு இந்த இரு சமூகத்தவர்களுக்கு இடையில் இருந்து வருகிறது. சீக்கிய அரசன் ஹரிசிங் காஷ்மீரத்தை ஆட்சி செய்து வந்த சமயத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருந்ததும், எவ்விதப் பிரச்சினையுமின்றி ராஜ ஹரிசிங் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

காஷ்மீர் சீக்கியர்களேயானாலும் அவர்கள் தங்களை காஷ்மீரிகளாகத்தான் பார்க்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் ஹிந்துக்களும் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்வதை விட காஷ்மீரிகள் என்று சொல்லிக் கொள்வதைத் தான் முதன்மைப்படுத்த விரும்புகிறார்கள். காஷ்மீர் போராளிகளும் ஹிந்துக்களை ஒரே இனமாகப் பார்ப்பதால் தான் அவர்களுக்கு எதிராக நடந்து கொள்வதில்லை.

காஷ்மீர், வைஷ்ணவா தேவி கோயிலுக்கும், பனிலிங்கத்தைத் தரிசிக்கவும் லட்சக்கணக்கான இந்துக்கள் பாதுகாப்புடன் சென்று வருகிறார்கள். அவர்களைத் தாக்கும் வேளையில் போராளிகள் ஈடுபடுவதில்லை.

உண்மை நிலை இதுதான் என்பது உளவுத் துறைக்கும் தெரியும். தெரிந்திருந்தும் காஷ்மீர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, ராணுவ துஷ்பிரயோகங்களை நடத்தி - காஷ்மீரை ராணுவ மயப்படுத்துவதற்காக உளவுத்துறை அவிழ்த்து விடும் பொய்யான பரப்புரைகள் இவை என்பதைத் தவிர இதில் எள்ளளவும் உண்மை இல்லை.

- ஃபைஸல்

Pin It