கடந்த 2019 ஆகஸ்டு 5ஆம் நாள் காசுமீரம் தொடர்பான அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு அத்தேசத்தைக் கூண்டிலடைத்தது.

நவம்பர் 9 ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புசார் ஆயம் வழங்கிய தீர்ப்பு அயோத்தியில் இடம்பெற்ற பாபர் மசூதியை இரண்டாம் தடவை இடித்துப் போட்டது.

supreme court 600முதல் முறை 1992 நவம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி என்ற சற்றொப்ப ஐந்நூறு ஆண்டுகாலக் கட்டமைப்பு இந்துத்துவக் காவிக் கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இரண்டாம் முறை 2019 நவம்பர் 9ஆம் நாள் பாபர் மசூதியை மீளக் கட்டி விடுவோம் என்று இசுலாமியரும் சமயச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டோரும் கண்டு வந்த நற்கனவு கருப்புக் குப்பாயம் அணிந்த நீதியக் கரசேவகர்களால் இடித்து நொறுக்கப்பட்டது.

காசுமீர மக்கள் காலவரையற்ற முறையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். விடுதலைப் போராட்டக்கரர்கள் முன்பே சிறை வைக்கபட்டு விட்டார்கள். ஆசாதி என்பது காசுமீரிகளின் பொது முழக்கம் ஆகி விட்டதால் அவர்களை மொத்தமாகச் சிறையிலடைக்க எண்ணியது இந்தியப் பேரரசு. அவர்களுக்கும் கூட உரிமை மறுப்பு புதிதன்று. உறுப்பு 370 பெயரளவுக்குத்தான் சட்டப் புத்தகத்தில் இருந்தது. இப்போது அதையும் நீக்கியாகி விட்டது. அவர்கள் அரைச் சிறையிலிருந்து முழுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஐம்பது இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்டோரை அடைத்து வைக்கக் காசுமீரத்திலோ இந்தியா முழுவதிலுமோ சிறைகள் போத மாட்டா என்பதால் அவரவர் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். வீட்டுச் சிறை என்ற மங்கல வழக்கின் பின்னால் சிறையுரிமைகள் கூட இல்லாத கொடுஞ்சிறை மறைந்துள்ளது. காசுமீரத்துக்கு இது புதிதன்று. எது புதிதென்றால் தில்லியின் கண்காணிகளாகச் செயல்பட்டு வந்த மெஹ்பூபா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களும் கூட வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுதான். பாஜக ஆதரவு பெற்று சிறிநகர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஜுனைத் அசீம் மட்டு என்பவரும் தில்லியின் நடவடிக்கைகளைக் குறை கூறிய பின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு விட்டார்.

ஊரடங்கும் தொலைப்பேசி, இணையச் சேவைத் துண்டிப்பும் படைக்குவிப்பும் இராணுவத்தின் நரவேட்டையுமாக… அடக்குமுறைகளின் அணிவரிசை நீள்கிறது. இயல்புநிலை மீட்புக்கான ஒடுக்கத்தளர்ச்சி என்பதெல்லாம் காசுமீரப் பள்ளத்தாக்குக்குச் சற்றும் பொருந்தாது.

கண்முன்னே இத்தனைக் கொடுமைகள் நடக்கும் போது இந்திய உச்ச நீதிமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது? உரிமைமறுப்பால் பாதிப்புற்றவர்கள் நீதிமன்றப் படிகளேறி வருவதற்காகக் காத்திராமல் நீதியே அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்று நீதியர் வி.ஆர். கிருஷ்ணய்யர் சொன்னது ரஞ்சன் கோகோய்களுக்குத் தெரியாதா? திகார் சிறை தொடர்பான ஒரு வழக்கில் கிருஷ்ணய்யர் கூறியது திறந்தவெளிச் சிறையாக்கப்பட்டுள்ள காசுமீரத்துக்குப் பொருந்தாதா? யாரும் விண்ணப்பிக்காமலே (suo motu) எடுத்து விசாரிக்கப் பொருத்தமான வழக்கு இஃதென்று ‘நீதிதேவர்கள்’ கருதவில்லையா? காந்தியின் மந்திப் பொம்மைகளைப் போல் கண்ணையும் காதுகளையும் வாயையும் இறுகப் பொத்திக் கொண்டு விட்டார்களா அவர்கள்’? இது ஓர் எச்சரிக்கை!

சரி, காசுமீரம் குறித்து வந்துள்ள நீதிப்பேராணை விண்ணப்பங்கள் மீது உச்ச நீதிமன்றம் என்ன செய்துள்ளது? ஆட்சியாளர்களின் சட்டத்தகுநிலை மாற்றத்தைக் கேள்விக்குள்ளாக்கும் உரிமை நிலைநிறுத்த (Writ of mandamus) வழக்குகளை மட்டுமன்று, உடனடி நடவடிக்கைக்குரிய ஆட்கொணர்வு வழக்குகளையும் (Writ of habeas corpus) பதறாமல் தள்ளிப் போட்டுள்ளது. முன்னாள் முதல்வர், முன்னாள் நடுவண் அமைச்சர், வெளிப்படையான இந்திய விசுவாசி பரூக் அப்துல்லா குறித்து ”அவர் தாமாகவே வீட்டுக்குள் இருக்கிறார், அவரை நாங்கள் காவலில் வைக்கவில்லை” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திலேயே விளக்குகிறார். இது உண்மையில்லை என்று பரூக் அப்துல்லாவே மறுக்கிறார். ”அவரைச் சென்னை மறுமலர்ச்சி திமுக மாநாட்டுக்கு அழைத்துள்ளோம்” என்று சொல்லி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை வழக்குத் தொடுக்கிறார். இதற்கென்ன அவசரம் என்பது போல் வழக்கைத் தள்ளிப்போடுகிறது தலைமை நீதியர் இரஞ்சன் கோகோய் தலைமையிலான ஆயம். அரசோ உடனே பரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act) என்ற கொடுஞ்சட்டத்தை ஏவுகிறது. இது ஓர் எச்சரிக்கை!

மார்க்சியக் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி தன் கட்சியை சேர்ந்த முகமது யூசுஃப் தாரிகாமியைப் பார்க்க காசுமீரத்துக்குச் செல்ல இந்திய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்கிறார். இந்தியக் குடிமகன் இந்திய ஆட்சிப்புலத்தின் எந்தப் பகுதிக்கும் செல்வது அடிப்படை உரிமை என்று திறந்த நீதிமன்றத்தில் நீதியர் கருத்துரைக்கின்றனர். (இப்படியெல்லாம் ’கமெண்ட்’ அடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் உள்துறை அமைச்சர்). முடிவில் அவர் காசுமீரம் சென்று தாரிகாமியை (தாரிகாமியை மட்டும்) பார்த்து வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. சிறை நேர்காணலைப் போலவே நேரம், மற்ற கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தான்! காசுமீரம் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதிதான் என்று செங்கொடி மேல் ஆணையிட்டுச் சொல்லும் கட்சியின் தலைவருக்கே இந்நிலை! இது ஓர் எச்சரிக்கை!.

இத்தனை எச்சரிக்கையும் யாருக்குத் தெரியுமா? நீதிமன்றத்தை நம்பியிருக்கும் நண்பர்களுக்குத்தான்! அரசமைப்புச் சட்டத்தை முதலில் திருத்தாமல், உறுப்புகள் 370, 35A ஆகியவற்றைச் சாகடித்ததும், சம்மு-காசுமீர மாநிலத்தை இரண்டாக உடைத்து ஒன்றிய ஆட்சிப் புலங்களாகத் தகுநிலை தாழ்த்தியதும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என்பதால் நீதிமன்றத்தில் அடிபட்டு விடும் என்று இலவுகாத்த கிளி போல் நம்பிக் காத்திருக்கும் நண்பர்களுக்குத்தான்!

காசுமீரத்துக்கான உறுப்பு 370 இந்துத்துவக் கும்பலின் உயிர்க் கொள்கை! பாபர் மசூதியை இடித்து விட்டு அதே இடத்தில் இராமர் கோயில் கட்டுவது இந்துத்துவக் கும்பலின் மற்றோர் உயிர்க் கொள்கை! இந்த இரு உயிர்க் கொள்கைகளுக்காகவும் எத்தனை உயிர்களைப் பலியெடுக்கவும் தயங்க மாட்டார்கள். இந்த அக்கிரமங்களை நீதிமன்ற வழக்குகளால் தடுத்து விட முடியும், என்று நம்புவது மூடத்தனம். சீறிப் பாயும் தோட்டாவை உள்ளங்கையால் தடுக்க முடியுமா?

இந்துத்துவ நச்சாற்றல்களின் கொடுந்தாக்கைத் தடுக்கவோ எதிர்க்கவோ முறியடிக்கவோ ’சமயச் சார்பற்ற’ எதிர்க்கட்சிகளால் என்ன செய்ய முடிந்தது? பாபர் மசூதி இடிப்பு என்றாலும் சரி, காசுமீரச் சிறையடைப்பு என்றாலும் சரி, பாசகவுக்கு நிகராகக் காங்கிரசும் கேடு செய்ததை மறக்கவோ மறுக்கவோ முடியுமா? காசுமீர மக்களை வஞ்சிக்க சவகர்லால் நேரு அடித்த கூத்துகளின் தொடர்ச்சிதான் நரேந்திர மோதி - அமித் ஷா – அஜித் தோவல் கும்பலின் இப்போதைய அடக்குமுறை என்பதும் வெள்ளிடை மலை.

பாபர் மசூதியில் 1949ஆம் ஆண்டு இராமர் சிலையைத் திருட்டுத்தனமாக உள்ளே கொண்டுபோய் வைத்தது சட்டப் புறம்பானது என்று உச்ச நீதின்மன்றம் சொல்கிறது. அப்போது இந்திய அளவிலும் உத்தரப் பிரதேச அளவிலும் ஆட்சி புரிந்தது காங்கிரஸ்தான். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் இராமபக்தர்கள் உள்ளே நுழைந்து வழிபட அனுமதி தந்தவர் காங்கிரஸ் தலைமையமைச்சர் இராசிவ் காந்திதான். 1992 திசம்பர் 6ஆம் நாள் அயோத்தியில் அத்வானி கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய போது தில்லியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் காங்கிரஸ் தலமையமைச்சர் நரசிம்ம ராவு. உடனே அவர் ஒரு சத்திய வாக்குக் கொடுத்தார். அதே இடத்தில் பாபர் மசூதியை மீளக் கட்டிக் கொடுப்போம் என! இதில் ஏதாவது சோனியாவுக்கும் ராகுலுக்கும் திக்விஜய் சிங்குக்கும் நினைவிருக்கிறதா?

காசுமீரத்தில் இந்தியத் தேசிய இடதுசாரிகளின் நிலைப்பாடு எப்போதுமே இந்தியப் பேரரசியத்துக்கு வால்பிடிப்பதுதான். இப்போதும் கூட காசுமீரத்தின் மீதான இராணுவ முற்றுகை என்றெல்லாம் வாயளக்கிறார்களே தவிர, காசுமீர மக்களின் தன்தீர்வுரிமைக்குக் குரல்கொடுக்கவோ, குடியாட்சியத் தீர்வை வலியுறுத்தவோ, சிறுமக் கோரிக்கையாகப் படைவிலக்கம் கோரவோ கூட அவர்களுக்கு மனம் வரவில்லை.

பாபர் மசூதி இருந்த இடம் முழுவதையும் இராமர் கோயில் கட்டுவதற்குத் தந்து விட வேண்டும் என்ற அடாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடனே அதற்குத் துள்ளிக் குதித்து வக்காலத்து வாங்கியவர் செந்துண்டு அணிந்த தா. பாண்டியன். வெட்கம்! வெட்கம்! கடந்த காலத்தில் பாபர் மசூதியை இடிக்க விட மாட்டோம் என்று முழங்கியவர்கள், இடித்த பின் வன்மையாகக் கண்டித்தவர்கள், இடித்த இடத்தில் மீளவும் மசூதி கட்டப்படுவதற்கு வலுத்த எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்… இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ’மதிப்பு’ அளிப்பதும், கோப்பை மூடச் சொல்வதும் எப்படி ஞாயமாகும்?

தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் என்று தன்விருது பூண்ட திக, திமுக போன்ற கட்சிகள் இந்தத் தீர்ப்பை மதிக்கச் சொல்வதும், ஒத்துப் போகும் படி அறிவுரை சொல்வதும் நமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. இவர்கள் எப்போதும் இப்படித்தான் என்பதை நாமறிவோம். இவர்களின் இந்தச் சரணாகதி நிலைப்பாட்டைக் காசுமீர் தொடர்பாகவும் பார்த்தோம்.

காசுமீரம் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாட்டையும், இராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்துப் பயனில்லை என்ற எண்ணம் பொதுமக்களிடம், குறிப்பாகச் சிறுபான்மை மக்களிடம் பரவியிருப்பதுதான் கவலைக்குரியது.

நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்துப் பயனில்லை என்ற கருத்தை ஏற்படுத்தியது போல், இப்போது ஆர்எஸ்எஸ் நினைத்ததை முடிக்கும், நம்மால் தடுக்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். சட்டப்படி பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு நம்மால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி எழுப்பபடுகிறது.

சல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகுதான் மெரினாவில் தமிழ் வசந்தம் கூடித் தமிழக அரசைப் புதிய சட்டம் இயற்றச் செய்தோம். சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவு தொடர்பான இறுதித் தீர்ப்பை இன்னும் பெரிய ஆயத்தின் மீளாய்வுக்கு அனுப்பவில்லையா? இராமர் கோயில் தீர்ப்பு முரண்பாடுகளின் மொத்தக் கலவையாக இருப்பதால் இன்னும் பெரிய ஆயத்தின் மீளாய்வுக்கு விடும் படி நீதிமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் போராடலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முரண்பாடுகளைத் தோலுரிப்பதற்கான இயக்கத்தை விரிவாக நடத்த வேண்டும். இந்தப் பரப்புரை இயக்கம் பன்னாட்டரங்கிலும் நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் சமயச் சார்பின்மை, குடியாட்சியம், நீதித்துறைத் தற்சார்பு ஒவ்வொன்றுமே கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில் இந்திய ஆட்சியாளர்களின் நிலை ஆட்டங்காணும். இது காசுமீரச் சிக்கலுக்கும் பொருந்தும்.

காசுமீரம், பாபர் மசூதி - இராமர் கோயில் போன்ற உண்மையிலேயே எளிய சிக்கல்களுக்கு (குடியாட்சிய நோக்கில் தீர்க்க முனைந்தால் இவை எளிய சிக்கல்களே) இவ்வளவு நீண்ட காலமாகியும் இந்தியாவால் அமைதியான, இணக்கமான தீர்வு காண முடியவில்லை என்பது ஆளும்கட்சியின் தோல்வி மட்டுமன்று, நீதிமன்றத்தின் தோல்வி மட்டுமன்று. இது இந்தியா எனும் அரசியல் கட்டமைப்பின் தோல்வியாகும். தேசிய இனங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட ஒடுக்குண்ட மக்களுக்கும் பெண்களுக்கும் இந்தியா பாதுகாப்பான கட்டமைப்பு இல்லை என்பதுதான் எழுபதாண்டுப் பட்டறிவு.

ஜாராட்சியை ஐரோப்பியப் பிற்போக்கின் அரண் என்றார் புரட்சித் தலைவர் இலெனின். இந்தியப் பேரரசு தெற்காசியப் பிற்போக்கின் அரண். குடியாட்சியப் போர்வையால் இது மேலும் வலுக்கூடியதாகிறது. மேலும் ஆபத்தானதாகிறது. நம் பணி மேலும் கடினமாகிறது.

- தியாகு

Pin It