அறிவியல் புரட்சி கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக மானுட வளர்ச்சியில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி வருகிறது. தொழில் புரட்சித் தொடங்கி இன்று தகவல் தொழில்நுட்பப் புரட்சியாக மாறி எண்ணுரு புரட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய அறிவியல் புரட்சி எப்படி வடிவம் கொண்டது என்பதை ஆய்வது தேவையாகிறது.
15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சிதான் புதிய அறிவியல் வளர்ச்சியின் தொடக்க மாகும். இதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் மதத்தின் செல்வாக்கு அனைத்துத் துறைகளிலும் ஓங்கியிருந்தது. கிறித்தவத் திருக்கோயில்கள் சொல்லும் கருத்தே உண்மை எனப் பெரும்பான்மையான மக்கள் நம்பினர். உலகம் உருண்டை அல்ல. தட்டை என்பதையும் ஏற்றுக் கொண்டனர். சிந்தனையாளர் புருனோ ரோம் நாட்டில் உயிருடன் மதவாதிகளால் எரிக்கப்பட்டார். அறிவியல் உண்மையைக் கூறியதற்காக ஐரோப்பாவில் உயிரிழந்த முதல் தியாகியாகக் கருதப்படுகிறார். 2000ஆம் ஆண்டில் புருனோவின் 400ஆம் மறைவு நாளில் போப் ஜான்பால் புருனோவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மன்னிப்பு கோரினார்.
இதுபோன்று தான் கலிலியோ துன்புறுத்தப்பட்டார். இருப்பினும் அறிவியல் துறையில் பல மாற்றங்கள் தொடங்கின. இதற்கு காரணம் 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சிதான் முதன்மை காரணமாக அமைந்தது. கலிலியோவின் தொலைநோக்கி கருவி கண்டுபிடிப்பு அறிவியல் துறையில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது.
17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆன்டனி பிலிப்சு வான் லிவன்ஹோக் என்ற அறிவியல் அறிஞர் நுண் கருவியைக் கண்டுபிடித்தார். நோய்க் கிருமிகளைக் கண்டறிவதற்கு இக்கருவிதான் முதன்முதலில் வழி வகுத்தது.
18ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பிறந்த ஜேம்ஸ்வாட் அவர்கள் கண்டுபிடித்த நீராவி இயந்திரம் போக்குவரத்துத் துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இங்கிலாந்தில் தொழில் புரட்சி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் பிறந்த அறிவியல் அறிஞர் பென்சமின் பிராங்களின் கண்டுபிடித்த மின்சாரம் ஒரு சமூக பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டது. இவர் பன்முக அறிஞர். சிறந்த அரசியல் மேதை. இதே காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் பிறந்த அறிவியலாளர் சார்லஸ் பாபாஜ்தான் இன்று உலகையே ஒன்றிணைக்கும் மாபெரும் அறிவியல் கருவியாக வலம் வரும் கணினியை வடிவமைத்தவர். இங்கிலாந்தில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் எனும் அறிவியலாளர் கண்டுபிடித்த தடுப்பூசிதான் உலகில் கோடிக்கணக்கான மக்களின் இறப்பைத் தடுத்தது. குறிப்பாக 17 முதல் 19 நூற்றாண்டு வரை அம்மை நோய் பாதிக்கப்பட்டுப் பல கோடி மக்கள் மாண்டனர். எட்வர்ட் ஜென்னரின் கண்டுபிடிப்பு அம்மை நோயை அறவே ஒழித்தது.
இங்கிலாந்தில் பிறந்த மைக்கேல் பாரடே மின்காந்த வியல் பயன்பாட்டை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மின்காந்த கண்டுபிடிப்பு தான் மின்சார மருத்துவ இயற்பியல் துறைகளில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது.
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அறிவியல் அறிஞர் மின்விளக் கைக் கண்டுபிடித்தார். இரவில் கூட இருள் நீங்கி ஒளி பிறந்தது. இதே காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் பிறந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைப்பேசியின் முழு வடிவை அமைத்தார். தொலைத்தொடர்புத் துறையில் இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த மருந்தியல் நிபுணர் பெலிக்சு ஹாப்மென் கண்டுபிடித்த ஆஸ்பிரின் மருந்துதான் மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தியது. பெருமளவில் மனித இறப்பையும் தடுத்தது. போலந்து நாட்டில் பிறந்த மேரி கியுரி அறிவியலுக்கான நோபல் பரிசுப் பெற்ற முதல் பெண். ஊடுகதிர் அறிவியல் கண்டுபிடிப்புதான் மருத்துவ ஆய்வுகளுக்கும் புதிய புதிய தொழில்களுக்கும் வழி கண்டது.
இவ்வாறு புதிய கண்டுபிடிப்புகள் மத மாயையை வீழ்த்தின. மானுட வாழ்வின் மாண்புகளை உயர்த்தின. ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் சனாதனமும் மூடநம்பிக்கைகளும் மேலோங்கி சமூக அடிமைத்தனம் உறுதிப்பட்டிருந்தது. மனிதர்களில் பெரும்பான்மை யோரைப் பிரித்து மிகச் சிறுபான்மையின பார்ப்பனர்களை வணங்கும்படி இந்த அடுக்குமுறை சாதியம் வழி கோலியது. ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய மறுமலர்ச்சி பற்றிப் பல ஆய்வாளர்கள் குறிப்பிடும்போது கிரேக்க ரோமானிய நாகரிகங்களின் உயர்ந்த நெறிகளை மீட்டெடுப்பதற்கு இந்த இயக்கம் வழி வகுத்தது எனக் கூறுகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் திரும்பிப் பார்த்தால் பல உண்மைகள் வெளிவருகின்றன. சனாதனமும் பழைமைவாதமும் இந்திய மண்ணில் புகுத்தப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. உலகிலேயே முதல் பொருள்முதல்வாதக் கருத்துகள் இந்திய மண் ணில்தான் முகிழ்த்தன.
இந்தியாவின் தொன்மைச் சிந்தனையில் சார்வாகா தத்துவத்தின் சிறப்பு (Uniqueness of Carvaka Philosophy in Traditional Indian Thought, Bhupender Heera, 2020) எனும் நூலை புபேந்தர் ஹீரா எனும் ஆய்வாளர் எழுதியுள்ளார். பௌத்தம், சமணத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே இந்தத் தத்துவப் பள்ளியைச் சேர்ந்த வர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளில் செல்வாக்கோடு இருந்தார்கள். சொர்கம் இல்லை; ஆன்மா இல்லை; நான்கு வர்ண பேதங்கள் இல்லை. இயற்கை தான் மனிதர்களின் வாழ்வியல் தளம்; அறிவுத்தளம். கடைப்பிடிக்கப்படுகிற அனைத்துச் சடங்குகளும் பிராம ணர்களின் வாழ்விற்காக உருவாக்கப்பட்டன. மூன்று வேதங்களைப் படைத்தவர்கள் கோமாளிகள்; நேர்மை யற்ற மோசடிப் பேர்வழிகள்; தீய அரக்கர்கள் என புபேந்தர் குறிப்பிடுகிறார்.
ஏறக்குறைய சார்வாக சிந்தனைகள் தோன்றிய காலத்தில்தான் பௌத்தமும் சமணமும் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்புரை செய்தன. சாதியத்தை எதிர்த்தன. சடங்குகளை முறியடித்தன என்பதை இந்தியர்கள் : ஒரு நாகரிகத்தின் சுருக்கமான வரலாறு (Indians – A Brief History of a Civilization, Namit Arora, 2021) எனும் நூலில் ஆய்வாளர் நமித் அரோரா குறிப்பிடுகிறார். மௌரியர்களின் ஆட்சி வீழ்ந்த பிறகு, குறிப்பாக அசோகர் ஆட்சிக்குப் பிறகு சனாதனத்தின் பிடி மேலோங்கியது. மொகலாயர்களின் ஆட்சிக்காலங்களில் கூட சமுதாயத்தில் சனாதனக் கருத்துகள் புரையோடி யிருந்தன. ஐரோப்பியக் கிழக்கிந்தியக் குழுமங்கள் இந்தியாவில் 17ஆம் நூற் றாண்டில் நுழைந்த பிறகுதான் மேற்குலகில் அறிவியல் கலைப் பண்பாட்டுத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மெல்ல மெல்ல இந்தியாவில் தென்படத் தொடங்கின. 1772இல் பிறந்த இராஜாராம் மோகன் இராய்தான் முதன்முதலில் உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமை யான வழக்கத்திற்கு எதிராகக் களம் கண்டார். இராயின் அண்ணன் மறைந்த போது இராயின் அண்ணியை நெருப்பில் அண்ணன் பிணத்தோடு எரித்தது கண்டு அதிர்வுற்றார். அதற்குப் பிறகுதான் அவர் பல சீர்திருத்தக் கருத்துகளை முன் வைக்கத் தொடங்கினார்.
1815ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்து கல்லூரி தொடங்கப்பட்டது. 1835 வரை சமஸ்கிருத மொழிதான் இக்கல்லூரியில் பயிற்று மொழியாக இருந்தது. அறிவியல், கலை பாடங்கள் எல்லாம் அங்குக் கிடையாது. புராண இதிகாசக் கருத்துகள்தான் கல்லூரியில் முன்னிறுத்தப் பட்டன. 1834ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற வில்லியம் பெண்டிங் தான் சமூக சீர்திருத்தக் கொள்கையில் அக்கறை கொண்டார். இதற்கு முன்பு கவர்னராக இருக்கும் போது 1829ஆம் ஆண்டு சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தைச் சட்ட விரோதம் என அறிவித்தார். 1830 பிப்ரவரித் திங்களில் சென்னை பம்பாய் மாகாணங்களுக்கும் இச்சட்டம் விரிவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக் கணக்கான சனாதன வாதிகள் லண்டனில் பிரிவ்யு கவுன்சில் எனும் நீதி மன்றத்திற்குச் சென்று இந்தத் தடைச்சட்டங்களை நீக்க வேண்டும் என வாதிட்டனர். இராஜாராம் மோகன் இராய் தலைமையில் சிலர் மட்டுமே தடைச்சட்டம் சரியனாது என பிரிவ்யு கவுன்சிலில் வாதிட்டனர். 1832ஆம் ஆண்டு லண்டன் பிரிவியு கவுன்சில் உடன்கட்டை ஏறும் சதி தடுப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு சனாதனவாதிகளின் கோரிக்கையை நிராகரித்தது.
இதன் தொடர்ச்சியாகத்தான் 1835இல் கொல்கத்தா வின் இந்து கல்லூரியில் முதன்முதலாக ஆங்கிலம் பயிற்று மொழியானது. மேலும் அறிவியல் வரலாற்றுப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கும் பல எதிர்ப்புகள் தோன்றின. மெக்காலே தொடர்ந்து வலி யுறுத்தியதன் காரணமாகத்தான் சனாதனவாதிகளின் எதிர்ப்புக்கிடையில் ஆங்கில வழிக்கல்வி ஏற்கப்பட்டது.
சுனாதனவாதிகளின் தொடர் எதிர்ப்பால் இராஜாராம் மோகன் இராயின் நூற்றாண்டு விழா 1882ஆம் ஆண்டில் நடைபெறாமல் போனது. 1933இல்தான் வங்கத்தில் ஒரு விழாக்குழு அமைத்து நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அவ்விழாவில் பங்கேற்ற வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் உரை பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் கோலோச்சிய சனாதனத்தின் கொடுமையையும் சமுதாய இழி நிலையையும் வெளிப்படுத்துகிறது.
புதிய இந்தியாவை உருவாக்கிய சிற்பி இராஜாராம் மோகன் இராய். தனக்கே உரித்தான உண்மையான நிலையை இழந்து தொடர்பற்ற சூழ்நிலையின் காரண மாக இழிவான அடிமையாக இருந்த காலத்தில் குறிப்பாக பகுத்தறிவற்ற தாளமுடியாத நசுக்கும் தன்மைகொண்ட கருத்துகள் மேலோங்கிய காலத்தில் இராஜாராம் மோகன் இராய் பிறந்தார் (Rajaram Mohan Roy inaugurated the modern age in India. He was born at a time whenever country having lost its link with the inmost truths of its being, struggled under a crushing load of unreason, in abject of slavery to circumstances) என்று தாகூர் குறிப்பிடுகிறார்.
மேலும் இராஜாராம் மோகன் இராய் பட்ட துயரங்களால் அவரின் ஆளுமை அளித்த மாற்றத்தை நோக்கிய பயணத்தால் மானுடம் நன்மை பெற்றது. அவருடைய சாகாவரம் பெற்ற உணர்வுகளால் புதிய உலகம் பயன் பெற்றது. இராஜாராம் மோகன் இராய் போற்றிய சமத்துவ மனித உறவுக் கோட்பாட்டை எவ்வித சமரசமுமின்றிப் பின்பற்றாவிட்டால் நாட்டைச் சீரமைக் கும் பணியில் மீண்டும் அவரை நாம் தோல்வியுறச் செய்துவிட்டால் மனிதனை மனிதன் பிரிக்கின்ற எவ்வளவு பெரிய பழமையான பழக்கங்களையும் அனைத்துவிதமான பழமைவாதங்களையும் முறியடிக்க முடியாமல் எதிர்காலத்தில் நாம் பரிதாபமான தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை ஏற்படும். (Building A Free India–Defining Speeches of our Independence Movement that Shaped the Nation, Rakesh Batabyal (ed.), Tiger, Pp.154 & 157, 2022). எனும் எச்சரிக்கையை தாகூர் வெளியிட்டார். இன்றும் இது பொருந்துவதாக உள்ளது அல்லவா?
1835ஆம் ஆண்டில் மெக்காலேவின் முயற்சியால் தான் ஆங்கில வழிக்கல்வி இந்தியாவில் வந்தது. ஆங்கிலவழிக் கல்வியால்தான் அறிவியல் துறையும் மேற்கத்திய நாட்டின் கல்விப் பாடங்களும் இந்தியாவில் நுழைந்தன. மெக்காலே இந்தியர்களைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கலாம் எழுதியிருக்கலாம். ஆனால் உயர் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பெரும் உதவிகளைச் செய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. பல தலைமுறைகளுக்கு மெக்காலே நன்மை அளித் துள்ளார் என்பதையும் மறுக்க முடியாது என்று 189596இல் இந்திய தேசிய காங்கிரசு தலைவராக இருந்த முற்போக்குச் சிந்தனையாளர் சுரேந்தரநாத் பானர்ஜி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். (Building A Free India – Defining Speeches of our Independence Movement that Shaped the Nation, Rakesh Batabyal (ed.),Tiger, Pp.93, 98,99 &101, 2022).).
மேற்கூறிய கருத்துகள் சனாதனமும் பழமைவாத மூடநம்பிக்கைக் கருத்துகளும் சடங்குகளும் இந்தியச் சமுதாயத்தைச் சீரழித்து வந்திருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகின்றன. 1885இல் தொடங்கிய காங்கிரசு பேரியக்கத்தில்கூட சனாதனக் கருத்துகளை எதிர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, பழங்குடியினருக்குக் கல்வி வழங்கும் முறை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் எல்லா மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படவில்லை. மெகாலேயின் ஆங்கிலவழிக் கல்வித்திட்டத்தை எதிர்த்த அதே சனாதனப் பார்ப்பனர்கள்தான் இந்தியா வில் 1857இல் கொல்கத்தா, மும்பாய், சென்னை மாகாணங்களில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகங்களிலும் அதற்கு முன்பு தொடங்கப்பட்ட மாநிலக் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வியைப் பெற்று நீதி நிருவாகத் துறைகளில் சேர்ந்து தங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். மராட்டிய மாநிலத்தில் மகாத்மா புலே போன்றவர்கள்தான் ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் கல்வியில் முதன்முதலாக அக்கறை செலுத்தினர். இருப்பினும் புலேயின் செல்வாக்கு மராட்டிய மாநிலத்தில் சில பகுதிகளில் பரவிப் பார்ப்பனர் அல்லாதார் கல்வியைப் பெறும் சூழலை ஏற்படுத்தியது.
1921இல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி அமைந்த பிறகுதான் சமூக நீதி உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பார்ப்பனர் அல்லாதார் கல்வி பெறும் உணர்வைப் பெற்றனர். நீதிக்கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீடு கொள்கை 1924இல் நடைமுறைக்கு வந்தது. 1920களில் சென்னை மாகாணக் காங்கிரசின் செயலாளராக, அதன் தலைவராகப் பணியாற்றிய தந்தை பெரியார் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தினார். நீதிக்கட்சியின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். இதை காங்கிரசு ஏற்காத காரணத்தினால் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி நீதிக்கட்சி-சுயமரியாதை இயக்கம்-திராவிடர் கழகம் வழியாக மாபெரும் சமூகப் புரட்சிக்கு வழி வகுத்தார். பகுத்தறிவுச் சிந்தனை வழியாக அறிவியல் உணர்வுகள் (Scientific Temper) பரவுவதற்கு வழி வகுத்தார். சான்றாக தந்தை பெரியார் ஒரு திருமணத்தில் ஆற்றிய உரையை அடித்தளமாகக் கொண்டு அறிஞர் அண்ணா ஒரு நூலாக எழுதினார். அந்நூல்தான் இனி வரும் உலகம் என்ற தலைப்பில் வெளியானது. தமிழ் நாட்டில்தான் அறிவியல் கருத்துகளும் பகுத்தறிவுக் கருத்துகளும் கைகோத்து வெற்றிநடைபோட்டன.
இராஜாராம் மோகன் இராய் அரும்பாடுபட்டுப் பெற்ற கல்வி உரிமை கொல்கத்தாவில் அனைத்துத் தரப்பின ருக்கும் சென்றடையவில்லை என்பதை இன்றைய கல்வித்துறை புள்ளிவிவரங்களும் மானுட மேம்பாட்டு அறிக்கைகளில் காணப்படுகின்ற புள்ளி விவரங்களும் எடுத்துரைக்கின்றன.
காங்கிரசு ஆட்சியில்தான் குறிப்பாக நேரு காலத்தில்தான் பல அறிவியல் ஆய்வு மையங்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உருவாக்கப் பட்டன. அன்றைய பிரதமர் நேரு ஒருவர்தான் அறிவியல் வளர்ச்சிப் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படும் எனும் உணர்வைப் பெற்றிருந்தார். பல காலக்கட்டங்களில் அவரது உரைகளில் நேரு பகுத்தறிவுக் கருத்துகளை வலியுறுத்தினார். நேரு காலத்தில் அறிஞர் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து திருமணச் சட்டத் திருத்தங்கள் தோல்வியுற்றன. அதற்கு படேல் உட்பட சனாதனத்தை நம்பிய பல காங்கிரசு தலைவர்கள்தான் காரணமாக இருந்தனர். 1957க்குப் பிறகுதான் மீண்டும் நேருவால் பெண்களுக்கு உரிமையளிக்கும் அம்பேத்கர் விரும்பிய இந்து திருமணச் சட்டங்கள் பல பிரிவுகளாகக் கொண்டு வரப்பட்டன. மேலும் நேரு காலத்தில் அறிவியல் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. இந்திய வேளாண் ஆய்வு மையம் (Indian Council of Scientific Research), தொழில் அறிவியல் ஆய்வு மையம் (Council for Scientific Industrial Research), அறிவியல் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology), உயிர் தொழில்நுட்ப ஆய்வுத் துறை (Department of Biotechnology), புவியியல் அறிவியல் ஆய்வுத் துறை (Department of Earth Sciences), இந்திய மருத்துவ ஆய்வு மையம் (Indian Council of Medical Research), இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation) போன்ற பல ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டன.
ஆனால் இந்த எல்லா ஆய்வுத் துறைகளும் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. மாநில அளவில் வேளாண் பல்கலைக்கழகம், பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. உலகில் அறிவியல் துறையில் முன்னிலை வகிக்கின்ற அமெரிக்கா, இரசியா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற ஆசிய நாடுகள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஆய்வு நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்து வருவதால் இந்நாடுகளில் அறிவியல் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி முன்னணி யில் இருக்கிறது. இதற்கு காரணம் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஆய்வு வளர்ச்சிக்காக ஏறக்குறைய 6 விழுக்காடு அளவில் மேற்கூறிய நாடுகள் நிதியை ஒதுக்குகின்றன. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி நாட்டின் ஒட்டு மொத்த பொருள் உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்குக் குறைவே நிதி ஒதுக்கப்படுகிறது (0.6 வடி 0.8 Gross Domestic Product) குறைந்து வருகிற இந்த நிதி ஒதுக்கீட்டி லும் அணுசக்தித் துறை விண்வெளி ஆய்வுப் பயணத் திற்காக 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு அளவிற்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள நிதிதான் மற்ற அறிவியல் துறைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
இதைப் பற்றிப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டாலும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிதியை அதிகரிக்கவில்லை. மேலும் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் பங்கு இரண்டு விழுக்காடு அளவில் இருக்கிறது. 2020இல் ஆய்வு முன்னேற்ற வளர்ச்சிக்கு தனி ஒதுக்கீடாக ரூபாய் பத்தாயிரம் கோடியை அறிவித்தது ஒன்றிய அரசு. ஆனால் ஒன்றிய அரசின் 2022-23 நிதி நிலை அறிக்கையில் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் மக்களிடம் ஏற்றத்தாழ்வை உருவாக்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்த்தி வரும் சூழலில் பாஜக அரசின் நிதி ஒதுக்கீடுகள் இந்து மதச் சின்னங்களை உருவாக்கப் பயன்படுகிறது. மக்களின் வாழ்வியலில் முற்றிலுமாக வழக்கொழிந்த சமற்கிருத மொழிக்குப் பல ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. பட்டேல் சிலைக்கு மூவாயிரம் கோடி, துறவி இராமானுசருக்குப் பல கோடி ரூபாய் செலவிட்டு சீனா நாட்டில் இச்சிலைகள் உரு வாக்கப்பட்டன. சிலைகள் செய்யக்கூட இந்தியாவில் பரந்துபட்ட பல துறைகளுக்கான தொழில்நுட்பம் வளர்த் தெடுக்கப்படவில்லை என்பதை இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பதிலாக சிறிதும் வெட்கமின்றி கூச்சமின்றி சனாதனத்தைப் போற்றுவதற்கும் மத மாயையை வளர்ப்பதற்கும் ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவாரங்களும் தொடர்ந்து பல வழிகளில் செயல்பட்டு வருகின்றன.
அண்டை நாடான சீனாவில் மதச் சார்பே இல்லை. உலகின் எல்லா நாடுகளைவிட 2021ஆம் ஆண்டு எல்லாத் துறைகளிலும் 7 விழுக்காட்டு வளர்ச்சியை சீனா எட்டியுள்ளது. இந்தியா சீனாவிலிருந்து சிலைகள் மட்டுமல்ல. இந்திய தேசியக் கொடி உட்படப் பல முதன் மையான பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. விளைவுகள் என்ன? 2022ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு இரண்டு விழுக்காடுதான். உலக ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 15 விழுக்காடு. சீனாவிலிருந்து அதிக இறக்குமதிகள் செய்வதால் இந்திய வர்த்தகக் கணக்கில் ஒரு இலட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வு. எல்லா நிலைகளிலும் பற்றாக்குறை உள்ளது. வறுமையில், பட்டினியில், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா 121 உலக நாடுகளின் வரிசைப் பட்டியலில் பட்டினியில் 107ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் பணமதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் ரூ.84 அளவிற்குத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்குப் புதிய யோசனையை வழங்குகிறார் தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். ரூபாய்த் தாளில் லட்சுமி விநாயகர் படங்களை அச்சிட்டால் பணமதிப்பு உயர்ந்துவிடும் என அஞ்சாமல் பொய் கூறுகிறார் கெஜ்ரிவால். உலகமே சிரிக்கிறது-நகைக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் வலியுறுத்தப்படுகின்றன. 51ஏ(எச்) பிரிவில் அறிவியல் மனப்பான்மை போற்றி வளர்க்கப்பட வேண்டும் என்று சுட்டப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவி பிரமாணம் ஏற்ற ஒரு முதலமைச்சர் இதைக் கூட தெரியாமல் இருக்கிறார். அறிவியல் படித்தவர் களிடமும் ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானிகளும்கூட சங்கிகளின் வழி களைதானே பின்பற்றுகின்றனர். ஏவுகணை செலுத்து வற்கு முன்பு திருப்பதிக்குச் சென்று சாமிக்கு முன்பு பூசை செய்வது அறிவியலைப் புறந்தள்ளும் ஒரு செயல் அல்லவா? அறிவியல் புறந்தள்ளப்படுவதால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் கைகோத்து நடப்பதனால்தான் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. சனாதனம் எப்போது சாய்கிறதோ அறிவியல் உணர்வு எப்போது ஓங்குகிறதோ பொதுவு டைமைக் கருத்துகள் எப்போது பூத்துக் குலுங்கு கின்றனவோ அப்போதுதான் இந்தியாவிற்கு விடிவுகாலம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சனாதனம் சாயட்டும். மத மாயை விலகட்டும். அறிவியல் புரட்சி ஓங்கட்டும்.
- பேராசிரியர் மு.நாகநாதன்