சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மய்யமா? இந்த மாதிரியான கோயில்களை இப்போதைய அறிவியலால் கட்ட முடியுமா? என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மத அடிப்படைவாதிகள் எழுதுகிறார்கள். இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் ‘மகா சக்தி’ பெற்று சுற்றி உள்ள ஊர்களில் ‘இடி விழாமல்’ தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் ‘இடிதாங்கி’யாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த ‘அறிவியல் பூர்வமான’ அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் உங்களிடம் சொல்லி இருக்கக் கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர்வீச்சுக் காரணமாகத்தான் ‘சிட்டுக் குருவி’ இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மய்யம் உள்ளதாகவும், அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும்.
மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான். ஏனெனில், உண்மையில் கோயில் கலசங்கள் இடி தாங்கிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
சிட்டுக் குருவிகள் நகர்ப்புறங்களில் குறைந்து வருவதற்குக் காரணம் அவை கூடு கட்டுவதற்கு இலகுவான இடங்கள், மரங்கள் குறைந்து வருவதுதான். பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மய்யம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.
போலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். இந்தியாவை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.
மதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது நம்பிக்கைவாதிகள் ‘அறிவியலால்’ தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்றார்கள். அண்ணா பல்கலைக்கழகம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்பேசிகளைத் தடை செய்து வைத்திருந்தது. ஆங்கில மருந்துகள் ‘பக்க விளைவுகள்’ கொண்டவை என்றனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
இந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும் நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ மூடநம்பிக்கைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத் தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். ஆர்கானிக் உணவுக் கடைகள் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கிலோ வெள்ளரி சாதாரணமாக ரூ.30. ஆனால், ஆர்கானிக் கடைகளில் ரூ.60 முதல் 100 வரை.
இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகள் மேம்போக்கானதும் சக்தி நிலையை உணரும் ஆன்மிக அனுபவம் சார்ந்ததாகவும் இருக்கும்.
இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மிக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மிகத்தை மய்யமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள நாசாவும், நம்மூர் திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிட்டாங்களாம் என்பார்கள். இல்லைன்னா திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வச்சுட்டுப் போயிட்டாரு என்பார்கள்.
தமிழ் ஆசிரியர்களுக்கே புரியாத ஏதாவது ஒரு செய்யுளை எடுத்துப் போடுவார்கள். அதற்கு இதுதான் அர்த்தம் என்பார்கள். இப்ப அறிவியலில் சொல்றாங்களே, ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். முகநூலில் ஒரு முறை ‘நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம்’ என்று ஒருவரிடம் கேட்டதற்கு, ‘நீ இந்தியாவில் இருக்கத் தகுதி இல்லாதவன் என்றும் தேச பக்தி இல்லாதவன் என்றும்’ ஒருவர் என்னைக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகமான வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், எந்திரம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், அனுமன் தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம் நாட்டில் இன்றும் பரவலாகப் பின்பற்றப்படு கின்றன.
மேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக் கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.
எடுத்தக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவ தில்லை.
அதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
இதே லாஜிக்தான் பல்வேறு மூடநம்பிக்கை முறைகளை வைத்துத் தொழில் செய்பவர்களுக்கும், இந்த முறைகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நாள் மருந்தில்லா மருத்துவம் என்பார்கள். அடுத்த நாள் எல்லா மருந்துகளும் ஓலைச்சுவடியில் இருக்கிறது என்பார்கள். நமது மரபு வழிதான் தீர்வு என்று ஒரு நாள் சொல்வார்கள். மறுநாள் ‘வெள்ளைக்காரனின்’ மரபான ஹோமியோபதிதான் அனைத்திற்கும் தீர்வு என்பார்கள். திடீரென தொடு சிகிச்சை முறையே உயர்ந்தது என்பார்கள்.
இவர்களின் பிரசங்க உரைகளில் ஒரு நாளும் மற்ற மூடநம்பிக்கை முறைகளைக் குறை சொல்லு வதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை.
ஆனால், இவர்கள் அனைவரும் அறிவியல் மருத்துவத்தை மட்டும் தவறாமல் குறை சொல்கின்றனர். ஏனெனில், அறிவியலும் மூட நம்பிக்கையும் எதிரெதிரே நிற்கின்றன.
உங்களை நீங்களேதான் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நோய்த் தடுப்பு முறைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாமல், நீங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுமாயின் துன்பத்தை அனுபவிக்கப் போவது நீங்கள்தானே தவிர வேறு யாரும் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும்.
நன்றி: ‘விஞ்ஞானச் சிறகு’