உலகத்தின் ஒட்டுமொத்த கொடுங்கோலர்களும் கூட்டுச் சேர்ந்து ஆட்சி செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கொடுங்கோல் ஆட்சி இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து மக்களை தின்று மகிழ்கிறது.

இப்பொழுது இந்தியா பெயருக்குத்தான் மக்களாட்சி நாடு. ஆனால் நாட்டின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் சிதைந்து தன்னுரு இழந்து சனாதனா வடிவம் கொள்கிறது. இந்துத்துவம் இப்பொழுது அவிழ்த்து விட்ட கோட்டிநாயாக அனைவரையும் கடித்துக் குதறுகிறது. அதன் பேராபத்தையும், வேதனையையும் உணராத இந்துமத வெறியர்களும், சாதி வெறியர்களும் சதைப் பிண்டங்களாக கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக அணிதிரளுகிறார்கள்.

இந்தியாவில் தென்னகம் ஒழித்து வடமொழி தேசிய இனங்கள் பல தங்கள் தாய்மொழி இழந்து இந்திமயம் ஆகிவிட்டன. பொது நோக்கு இழந்து இந்து வெறியர்களாக மாறி விட்டார்கள்; அல்லது மாற்றப்பட்டு விட்டார்கள். இந்த நிலையைத் தமிழ் நாட்டிலேயும் கொண்டுவர இல்லாத கரணமெல்லாம் போட்டுப் பார்க்கிறது ஆர்,எஸ்.எஸ். வன்போக்குக் கும்பல்.

சின்னக் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, காது, கழுத்தில் கிடப்பதை பறித்துச் செல்லும் திருடர்கள் போல தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமாராக வரவேண்டும் என்று புது ஆரியக்கூத்தை அரங்கேற்றுகிறார் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற ஆரிய அடிவருடி அமித்ஷா. பாராளும்மன்றத்தில் எதிர் கட்சியினர் பேசும்போது காடையர்போல் உடல்மொழி பேசும் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் மக்கள் ஆட்சி பேணும் மனிதநேயர் போல நடந்து கொள்கிறார். தமிழ்மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அக்கறையும் அன்பும் அடைமழையாக சுரந்து விடுகிறது.modi and amit shahமோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம், வெளிநாடுகளில் பேசும் போதெல்லாம் திருக்குறளையும் சங்க இலக்கிய வரிகளையும் மேற்கோள் காட்டி பேசாமல் விடுவதில்லை. அவர்களுக்கு தமிழோடும் தமிழரோடும் அப்படி ஒர் அன்பு, பிடிப்பு. ஆனால் ஒன்றிய அரசு அலுவல கங்களில் விளம்பர பலகை முதல் படிவங்கள் வரை ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் பயன்படுத்தப் படுகிறது. இப்பொழுதெல்லாம் மும்பை யிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் கூட ஒன்றிய, மாநில அரசுகள் கொடுக்கும் முழுபக்க விளம்பரம் இந்தி மொழியிலேயும் மராத்திய மொழியிலேயும்தான் வெளிவருகிறது. இதைவிடவும் மானக் குறைவாகவும், கீழ்த்தரமாகவும் தன் வாசகர்களை நடத்த அந்த நாளி தழ்களால் முடியாது. இது ஒருவகை அடிமைத்தனத்தின் உச்சம்.

இந்த ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகளின் உண்மை முகங்களை, குணங்களை பார்க்க வேண்டுமானால் நாம் வடநாட்டில் நடப்பதை உற்றுக் கவனிக்க வேண்டும். குஜராத்தில் இந்தி மொழிக்கான சிறப்பு நாளை துவக்கி வைத்துப் பேசிய உலகமகா உத்தமர் அமித்ஷா “குஜராத்தி மக்களுக்கும், அனைத்து இந்திய மக்களுக்கும் நமது மகாத்மா காந்தி நம் தேசிய மொழி குறித்து தெளிவாக ஒன்றைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

அது என்ன வென்றால் இந்தி மொழி மட்டுமே இந்தியா முழுமைக்கான மொழியாக இருக்கும் என்று தீர்க்க தரிசனமான வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார்கள். நம் நாட்டில் புழங்கும் நூறு மொழிகளுக்கும் ஒருவகை விளக்கம் கொடுத்து மக்கள் மன்றத்தில் வைத்தார். இந்தி நமது மனதுக்கு பிடித்தமான மொழி, இந்தி இந்தியாவைக் காக்கக்கூடிய மொழி, இந்தி நம்மோடு பிறந்த மொழி எனவே நாம் அதை முன்னெடுக்க வேண்டும். நாம் இந்தி மொழியை தழைக்க வைப்பதற்கான போரை விட்டு, விட்டு வெகுதூரம் வந்து விட்டோம். இப்பொழுது அதைத் தொடர வேண்டிய வேளை வந்து விட்டது.” என்று தமிழ் நாட்டில் வேறுமாதிரி பேசுகிறார்.

உலக அரங்கில் மேல்நாட்டினர் மெச்ச “உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழிதான்; அப்படி ஒரு பழமையான மொழியால் இந்தியாவிற்கே பெருமை” என நாடகமாடி நாடெங்கும் மனித வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் மானிடர் நேயர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிப் பெருமையை அதே இந்தி மொழி சிறப்பு நாள் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது “2020ஆம் ஆண்டில் எடுத்த தேசிய மொழிக் கொள்கையின் படி நாம் வருங்காலங்களில் நம் தேசத்தில் நூறு மொழிகள் இருந்தாலும் அனைத்துத் துறைகளிலும் இனி இந்தியே பயன் படுத்தப் படும். அது சிறு ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை மட்டுமல்லாமல் மருத்துவ துறை, சட்டத்துறை மற்றுமுள்ள அனைத்துத் துறைகளிலும் இந்திதான் பயன்பாட்டு மொழியாக இருக்கும்.” என்று கூறி அவர்களின் திட்டங்களை விரைந்து நிறை வேற்றத் துடிக்கும் அமித்ஷா மீண்டும் சொல்கிறார் “இது நடக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நம்நாடு சுதந்திர தேசம்தான் என்பதை, நாடு முழுக்க இந்தி பயன்படுத்தப் படும் போதுதான் நிறைவேறும். நாம் ஆங்கிலத்தை எடுத்து வீசி விட்டு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வருவதே சரி.” என்று தங்களின் இலக்கு நோக்கி நடக்கும் இவர்களைப் பற்றி இவர்களின் தமிழ்நாட்டு அடிமைகள் என்றுதான் அறிந்து கொள்வார்களோ தெரிய வில்லை.

தில்லிக்கு திருவள்ளுவரைக் கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் போட்டிருக்கும் இவர்கள்தான் தமிழ்நாட்டிலிருந்து செங்கோலைக் கொண்டு போய் பாராளுமன்றத்தில் வைத்து தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ‘யாரும் கொடுத்திராத மரியாதையையும் பெருமையையும் எங்கள் மோடிதான் வழங்கினார்’ என்று தமிழகத்து குரங்கு கூட்டங்கள் ஆர்ப்பரிக்கின்றன. அந்த குரங்கு கூட்டங்களுக்குத் தெரியுமோ சனாதனத்தின் குள்ளநரித் தனம்,

வேத காலம் முதல் இன்றுவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று என நடந்து கொள்ளும் ஆரியப்பார்ப்பனர்களின் அடிமை அமித்ஷா இந்தி மொழி வெறியை வடநாட்டில் பேசும்போது “திலகர் மகா ராஜாவின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால்தான் அவரின் சுதந்திரக் கனவு எப்படிப் பட்டது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். திலகர் மக்களின் விடுதலையை மட்டும் சிந்தித்தவரில்லை. இத்தேசத்தின் மொழி விடுதலையைப் பற்றியும் சிந்தித்தவர். அந்த மகான் கண்ட கனவு வழியில்தான் இனி இந்த நாடு செல்ல வேண்டும்.” என இந்தி மொழி வெறியோடு ஒன்றிப் போகும் அமித்ஷா மீண்டும் பேசுகிறார்

 “நான் தேசிய மொழி நாளான இன்று நம் தேசத்தின் இளைஞர் களையும், பெரியோர்களையும் கேட்டுக் கொள்வது இனிமேல் நீங்கள் நம் தேசிய மொழியான இந்தியிலேயே பேசுங்கள், சிந்தியுங்கள். அதுதான் நமது மனதின் மொழி. உயிரின் மொழி. பெரியோர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இந்தியிலேயே பேசுங்கள். அதுதான் நம் தேசத்தையும் தேசிய மொழியையும் பாதுகாக்கும் வழி. நாம் இந்தியை ஆதரிப்பதால் மற்ற மொழிகளை வெறுக்கிறோம் என்று பொருளல்ல. ஏனெனில் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் இருந்து நாம் இந்தி மொழிக்குச் சொற்களை கொடையாகப் பெற்றுள்ளோம்.” என பரப்புரை செய்கிறார்.

இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை மீண்டும் மீண்டும் வலுக் கட்டாயமாக தமிழ் நாட்டிலும் பிற மொழிவழி தேசங்களிலும் திணிக்கும் முயற்சியில் சனாதன வெறியர்கள் முனைந்துள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சனாதன அடிமைகள் செத்துப்போன, நினைவுகளில் கூட சொற் களாக திரள மறுக்கும் சமசுகிருத மொழியை தூக்கி நிறுத்த முடியா விட்டாலும் அதன் சொற்களையேனும் தாங்கிப் பிடிக்கத்தான் இந்தி மொழியைத் தேசிய மொழியாகத் துடிக்கிறார்கள்.

சமசுகிருதம் என்றுமே குமுக பேச்சு மொழியாக இருந்ததில்லை என்று பாவாணர், அருளியார் போன்ற மொழி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகின் தொன்மையான ஆறு மொழிகளில் சமசுகிருதமும் ஒன்று என்பது கூட ஆரியரின் பித்தலாட்டமாகத்தான் இருக்கும். அவர்களின் அரசதிகாரத்தால் நிலபெற்ற ஒன்று அது.

இன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மக்களால் பேசப்படாத மொழி சமசுகிருதம். இருப்பினும் தங்களுக்கிருக்கும் அதிகாரத்தால் ஆணவத்தோடு புதிதாகக் கட்டியிருக்கும் பாராளும் மன்றக் கட்டிடத்தில் சமசுக்கிருதத்தில்தான் சொலவங்கள் (ஸ்லோகங்கள்) எழுதப்பட்டுள்ளன. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பத் திறனற்றுதான் அனைத்து இந்திய தேசிய மொழியினரும் உள்ளனர். இவ்வாறுதான் வரலாறு முழுக்க தங்கள் மொழியை உயர்வாக்கிக் காட்டு கின்றனர்.

அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சமசுகிருத கல்வெட்டுகளும் இவை போன்றவைதான். மக்களாட்சி முறையிலேயே இவர்கள் இந்த ஆட்டம் போடு கிறார்கள் என்றால் மன்னர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் எப்படி நடந்திருப் பார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்தியை தேசிய மொழி என்றும் சமசுகிருதத்தை தேவ மொழி என்றும் சொல்லும் இவர்கள் செத்துப் போன, செல்லரித்துப் போன, இன்னும் ஆழ்ந்து நோக்கினால் நம்சொற்களை சிதைத்து, திரித்து வைத்துக் கொண்டு வேதச் சொல் என்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக ‘மயில், என்ற சொல்லை ‘மயூர்’ என்றும்,’ தாத்தா’வை ‘தாதாஜீ’ என்றும், பெத்தா என்ற பேச்சு வழக்குச் சொல்லை ‘பிதா’ என மாற்றிக் கொள்வதுமே அவர்கள் வழக்கம். ‘அம்மா’ என்ற சொல்லின் கடைசி எழுத்தையும் ‘தாயே’ என்ற சொல்லின் முதல் எழுத்தையும் சேர்த்து ‘மாதா’ என்ற சொல்லை உருவாக்கியவர்கள். ஒரு சொல்லை முன்னும் பின்னும் சிதைத்து, குறைத்து, கூட்டி ஒரு புது சொல்லை உருவாக்குவதுதான் அவர்கள் வழக்கமும் வரலாறும்.

தமிழ்மொழியின் சொல் வளத்தையும் இந்தி மொழியின் சொல் வளத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தோகை மயிலுக்கும் இறகுதிர்ந்த வான் கோழிக்குமான வேறுபாடுதான்.

கோயிலுக்கு – தேவாலயா, உணவகத்துக்கு – போஜனாலயா, அலுவலகத் துக்கு – காரியாலையா, கழிவறைக்கு – ஸ்வச்சாலயா இப்படித்தான் இருக்கிறது இந்தி மொழி வளம். இருநூறு முன்னூறு ஆண்டுகள் தொடர்ச்சி கூட இல்லாத ஒரு மொழியை இந்த பரந்த இந்திய தேசத்தில் ஒரே நாடு, ஒரே மொழி என்று திணிக்க முயல் கிறார்கள். வேட்டிக் கட்டி, சட்டைப் போட்டுப் பழகிய ஒருவனை தாய்ச்சிலை (கோவணம்) யைக் கட்டு என்று சொல்வது போல உள்ளது இவர்களின் ‘இந்தி திவஸ்’ கோட்டிக்காரச் செயல்.

மோடி, அமித்ஷா இவர்களின் தாய் மொழி குஜராத்தி. இருப்பினும் ஏன் இவர்களுக்கு இந்தியின் மீது இவ்வளவு அக்கறை? இருவரும் தங்கள் தாய் மொழியான குஜராத்தி மொழியை குரல் வளையை நெறித்து கொலை செய்து விட்டு இந்தியை தேசிய மொழி என்று கொண்டாடுகிறர்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்?

பெற்ற தாயை கொலை செய்வதும் அவள் கற்றுத்தந்த தாய்மொழியை ஒழித்துக் கட்டுவதும் ஒன்றுதான். இவர்களின் பார்ப்பன முதலாளிகளுக்காகவும், தங்கள் தன்நலத்திற்காகவும் ஒட்டு மொத்த இந்தியாவையுமே ஆரியர்களின் வேள்விக் குண்டலத்தில் தூக்கிப்போட அஞ்சாத தீநெறியாளர்கள் இவர்கள்.

இதுவரை இம்மண்ணில் நடந்த கொடுமைகளுக்கு பார்ப்பனர்கள் மூளையாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதன் மூலம் பெருங்கொடுமைகளை நிகழ்த்தியவர்கள் அன்று இராமன் தொடங்கி இன்று மோடி, அமித்ஷா போன்ற வகள்தான். இந்தக் குடிகேடர்களை மக்கள் வணங்கும் கடவுளாகவும் மாமனிதர் களாகவும் சனாதனிகளால் வரலாற்றில் தூக்கி நிறுத்தப்படுகிறார் கள்.

கழைக்கூத்தாடிகளாக தேசம் முழுவதும் ஒருவாய் சோற்றுக்கு தெருத் தெருவாக அலைந்து திரிந்தவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள் என்றால் இராமன், மோடி, அமித்ஷா போன்றவர்களும் அறியா மக்களும்தான் காரணம். இவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழின் பெருமையையும் தமிழரின் பெருமைகளையும் பேசுகிறார்கள் என்றால் அதில் ஒளிந்திருக்கிம் நுண் அரசியலை தமிழ்நாட்டு சங்கிகளால் ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது.

மோடியின், அமித்ஷாவின் பேச்சுக்கு மூளையைக் காவு கொடுத்தவர்கள் தவிர வேறு யாரும் ஆர்.எஸ்.எஸ்.சையோ, ஆரிய நஞ்சர்களையோ நம்ப மாட்டார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தமிழையும் தமிழகளையும் கருவறுக் கும் வேலைதான். அது தவிர இரண்டாயிரம் ஆண்டுகளாக அணுவளவேனும் பிற இனத்தவருக்கு நன்மை செய்ததாக வரலாற்றில் எங்கும் பதிவில்லை.

1500 பேரிலிருந்து 2500 பேர் வரை பேசும் சமசுகிருத மொழி வளர்ச்சிக்கு 623 கோடி உரூபாயை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு 12 கோடி மக்கள் பேசும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு 28 கோடி கொடுக்கிறது. தமிழுக்கும் தமிழருக்கும் இப்படித்தான் நன்மை செய்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் ஒட்டுமொத்த அமிலக்குணத்தையும் தங்கள் அகத்தில் மறைத்து வைத்திருக்கும் மோடி, அமித்ஷா போன்ற ஆரிய அடிவருடிகளின் உள் வடிவத்தை தமிழ் நாட்டு சங்கிகளால் ஒருநளும் பார்க்க முடியாது.

ஆரிய அடிமைகள் ஆரியர்களை விட கேடானவர்கள். இன்முகம் காட்டி உறவாடிக் கெடுக்கும் கேடர்கள். இதை தமிழகத்தில் சரியாக கணித்துச் சொன்னவர் தந்தை பெரியார் ஒருவர்தான். பெரியார் காட்டிய வழி ஒன்றே தமிழுக்கும் தமிழருக்கும் பேரரண் கொண்ட பாதை. அதிலிருந்து கால் மாற்றினால் பேரழிவே வந்து சேரும்.

- இறை.ச.இராசேந்திரன்

Pin It