கீற்றில் தேட...

மார்க்சியத்திற்கு இசைந்த கொள்கையே பெரியாரியல் என்பதை நிறுவியதில் தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு

பெரியார் சிந்தனைகளை - பெரியார் கொள்கைகளை - பெரியாரியலை தமிழ்ச் சமுதாயத்தில் நிலைக்கச் செய்வதைத் தன் வாழ்நாள் பணியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகவே உழைப்பது, எவ்வளவு இன்னல் வரினும் ஏற்பது என்ற பாதையில் பயணித்தவர் தோழர் வே. ஆனைமுத்து.

பற்பல ஏடுகளில் பல்லாயிரக்கணக்கானப் பக்கங்களில் பரவி, விரவிக் கிடந்த பெரியாரின் எழுத்துகளை, உரைகளைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்து, பகுத்துத் தொகுத்தளித்ததோடு அல்லாமல், எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காகக் கூறப் பட்ட கருத்துகள் அவை என விளக்கமளிப்பது என்பதோடு நில்லாமல் காலத்திற்கு ஏற்ப பெரியாரியலை செழுமையாக்குவது என்பதையும் தம் தோள் மேல் போட்டுப் பாடாற்றியவர் தோழர் வே.ஆனைமுத்து.

“கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு

நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்

தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?

..........

மக்கள் தொகுதி எக்குறை யாலே

மிக்க துன்பம் மேவு கின்றதோ

அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனை

சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.

ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்

ஏகுற வெனினை ஈன்றே தீரும்!”

என்று புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எடுத்துக்காட்டியது போல பிரித்தானிய அரசினுடைய அரவணைப்புடன் கோலோச்சிக் கொண்டிருந்த பார்ப்பன வல்லாதிக்கத்தினால் வெகுமக்க ளுக்குக் கல்வி பயிலும் உரிமை மறுக்கப்பட் டிருந்தது; அரசு வேலை வாய்ப்பு பெறும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. உரிமை மறுப்புகளால் அமுக்கப்பட்டுக் கிடந்த சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாத மக்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்பி நிமிரச் செய்த உரிமை மீட்பராக எழுந்த மாமனிதர் பெரியார் ஈ.வெ.இரா.

“வரலாற்றில் புத்தருக்கு

வாய்த்திட்ட தொண்டர் போலப்

பெரியாருக்குச் சரியாய் வாய்த்த

பெருந்தொண்டர் ஆனை முத்து

சரியான முறையில் அய்யா

தத்துவம் தனைஉள் வாங்கி

விரிவாக்கி செழுமையான

வீச்சோடு வழங்கும் வீரர்”

என எழுச்சிப் பாவலர் தமிழேந்தி எடுத்தியம்பியது போல் பல ஏடுகளிலும் இருந்த பெரியாரின் எழுத்துகளைத் தேடித் திரட்டி, படித்து, ஆய்ந்து, தெரிவு செய்து, தலைப்பு முறையில் காலவரிசையில் நிரல்படுத்தித் தொகுத்து ஒப்பரியக் கொடையாக “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற பெயரில் நூல்களாக்கித் தமிழர்களுக்குத் தந்தார். (1974-இல் 2100 பக்கங்களில் (இராயல் அளவு) 3 தொகுதிகள்; 2010இல் 9300 பக்கங்களில் 20 தொகுதிகள்).

பெரியாரியல்

பெரியாரின் கொள்கைகளை உள் வாங்கி, பிழிவாகப் ‘பெரியாரியல்’ என்பதை ஒரு மெய்யியலாக நிறுவியவர் அறிஞர் வே. ஆனைமுத்து.

வே.ஆனைமுத்து பிழிவாகத் தந்துள்ள பெரியாரின் கொள்கைகள் :

1. பிறவியில் மேல்தன்மை - கீழ்த்தன்மை, உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வருண-சாதி வேறுபாடு அழிக்கப்பட வேண்டும். இதனை மக்களுக்கு உணர்த்த, சுயமரியாதை மக்கள் பிறப்புரிமை என்ற அறிவிப்பு.

2. நாட்டின் செல்வப் பெருக்குக்கும், வளர்ச் சிக்கும் அடித்தளமாக விளங்குகிற உழைக்கும் மக்களை அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்து விடுதலை அடையச் செய்து சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் (சோசலிச அமைப்பு நிறுவுதல்).

3.            தாம் பிறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் இன்னொரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ கட்டுப்பட்ட அடிமை களாக இருப்பதிலிருந்து விடுதலை பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் உலகில் பிற நாடுகளில் உள்ள மக்களின் நிலைக்கொத்த மேலான நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும்.

3.            (அ) வருண-சாதி வேறுபாட்டைக் காக்கும் நோக்குடன் சாத்திர, புராண அடிப்படைகளில் கற்பனையாகச் செய்யப்பட்ட சடங்குகளையும் பார்ப்பன புரோகிதத் தையும் அடியோடு ஒழிக்க வேண்டும்.

3. (ஆ) ஸ்மிருதிகளின் அடிப்படையிலும், இதிகாசங்கள், புராணங்களின் அடிப்படையிலும் கற்பனையாக செய்யப் பட்ட பெண் அடிமைத்தனத்தை அடியோடு நீக்க வேண்டும்.

3.            (இ) வருணாசிரம - சாதி அமைப்புத் தகர்க்கப்படாமல் இருக்கின்ற வரையில் அரசுக் கல்வியிலும் வேலை களிலும் அனைத்து வகுப்பு மக்களுக்கும் பெரியார் சிந்தனைகளை - பெரியார் கொள்கைகளை - பெரியாரியலை தமிழ்ச் சமுதாயத்தில் நிலைக்கச் செய்வதைத் தன் வாழ்நாள் பணியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகவே உழைப்பது, எவ்வளவு இன்னல் வரினும் ஏற்பது என்ற பாதையில் பயணித்தவர் தோழர் வே. ஆனைமுத்து.

marksiya periyaariyam 3231924-இல் பெரியார் தலைமை ஏற்று நடத்திய வைக்கம் கிளர்ச்சி, அந்த நகரத்தின் நடுவில் இருந்த சிவன் கோவிலின் நான்கு பக்கங்களிலும் இருந்த சாலைகளில் நடந்து செல்ல தடைசெய்யப்பட்டிருந்த அவர்ணஸ்தர் எனும் பத்து சாதிகளைச் சார்ந்த மக்கள் நடந்து செல்லும் உரிமைக்காக நடத்தப்பட்டதாகும். அனைத்து இந்தியாவிலும் பொது இடங்களைப் பயன்படுத்திட மக்கள் அனைவருக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டு, வெற்றி ஈட்டிய முன்னோடியானதொரு வரலாற்று நிகழ்வு ஆகும். பின்னர் நடத்தப்பட்ட பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இராமன் பட எரிப்புப் போராட்டம், கம்ப இராமாயண எரிப்புப் போராட்டம், சாதியமைப்பைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் எரிப்புப் போராட்டம் என பெரியார் முன்னெடுத்தப் போராட்டங்கள் அனைத்தும் சாதி இழிவு நீக்கம் அல்லது சம உரிமைக்கான போராட்டம் என மேலே சொல்லப்பட்ட கொள்கைகள் அடிப்படையில் புரிந்து கொள்வோம்.

மார்க்சியப் பெரியாரியம்

“சுயமரியாதை இயக்கம்” என்பதே மார்க்சியப் பெரியாரியம் தான். அது பழைய சொல்லாட்சி - வழக்கு; அவ்வளவே. சுயமரியாதை என்பது வருணாசிரம - சாதி ஒழிப்பு; பிறவி அடிப்படையிலான உயர்வு-தாழ்வுக்குக் காரணமான ஸ்மிருதி கள், சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள், விதிக்கோட் பாடுகள், மதம், கடவுள் ஆகியவற்றை மறுத்தது என்பதன் திரட்சி எனக் கொள்ளலாம்.

பெரியார் 1928 முதலே “சமதர்மம் என்றால் என்ன? இது ஒரு சமுதாய அமைப்புத் திட்டம். அதற்கேற்ற ஆட்சி முறை வகுக்க வேண்டும்; அதற்கேற்றவர்கள் ஆட்சி பீடத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்றார். 07.11.1928-இல் Revolt -ரிவோல்ட் எனும் ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி நடத்தினார். பெரியாருக்கு பொதுவுடைமைக் கொள்கையின் பால் ஏற்பட்ட பற்றுறுதி காரணமாகவே 14.02.1932 முதல் 17.05.1932 முடிய 94 நாள்கள் உருசியா - சோவியத்து சோசலிசக் குடியரசுகள் ஒன்றியத் (U.S.S.R.)தில் பல இடங் களுக்கும் விரிவாகப் பயணம் செய்து பல செயல்பாடுகளை உற்றுநோக்கிக் கவனித்து வந்தார்.

1933-இல் “இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரையை குடிஅரசு ஏட்டில் எழுதியதற் காக பெரியார் பிரித்தானிய அரசால் தண்டிக்கப்பட்டார். அவரது தங்கை கண்ணம்மா அவ்வேட்டின் பதிப்பாளர் என்பதற்காகத் தண்டிக்கப்பட்டார். பெரியாருக்கு கோவையில் இராச நிந்தனை வழக்கில் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 21.02.1934 முதல் இராசமகேந்திரபுரம் சிறையில் அடைக்கப்பட்டு 15.5.1934-இல் விடுதலை செய்யப்பட்டார்.

மேற்சொன்ன விவரங்களைத் திரட்டி நிரல்படுத்தி மக்களுக்கு விளங்க வைத்தவர் வே. ஆனைமுத்து அவர்கள் ஆவார்.

“காட்டுமிராண்டித்தனமான - தற்பெருமை குணம் கொண்டவர்களாகவும் இந்திய மக்கள் இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது... சிறிய சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமைத்தனத்தினாலும் பீடிக்கப்பட்டிருந்தன என்பதையும், அதனால் சூழல்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அளவுக்கு மனிதனை உயர்த்துவதை விட்டுவிட்டு, புறச்சூழல்களுக்கு மனிதன் அடிமையாவதை ஏற்றிருந்தனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது... இயற்கையை வென்றிருக்க வேண்டிய மனிதனின் நிலையைத் தாழ்த்திக் கொண்டு மண்டியிட்டு அனுமான் என்கின்ற குரங்கையும், பசுவையும் கடவுளாக மதித்து வணங்குகின்ற நிலைக்கு மக்கள் ஆளாகிவிட்ட தையும் நாம் மறந்துவிடக் கூடாது.” (Marx - Engels - The First Indian War of Independence 1857-1858, நூல் பதிப்பு 1978, g.16, 17, 18)

இப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொண்ட இந்தியாவில், சமுதாயத்தில் தலைகீழ் மாற்றத்தையும் மக்களின் சிந்தனை யில் ஒரு பெரும் புரட்சியையும் தம் வாழ்நாள் காலத்திலேயே கண்டுவிட வேண்டும் என்கிற மானிடப் பற்றோடும், கவலையோடும், பற்றுறுதியோடும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 50 ஆண்டுக்காலம் இடையீடும் ஓய்வும் இன்றி முழு நேரமும் பணியாற்றிய பெரியார் ஈ.வெ.இரா. அவர்களின் கொள்கைகள் பேராசான் காரல் மார்க்சு உரைத்த விஞ்ஞான சோசலிசப் பாதைக்கு இசைவானது என்பதைத் தமிழ் மக்களுக்கு விளங்க வைத்திடத் தன் எண்ணத்தாலும், எழுத்தாலும், பேச்சாலும், செயல்களாலும் இடையறாது உறுதியோடு பாடுபட்டவர் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் ஆவார்.

“உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மை களில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்சாதியார் - கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையான தாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத் திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது.” (குடிஅரசு 4-10-1931)

பெரியாரின் இந்தக் கருத்து இந்தியாவில் சமதர்மம் (சோசலிசம்) மலர வேண்டும் என்பதையும் இந்திய சமுதாய அமைப்பில் சோசலிசம் வரச் செயற்கையாக உள்ள முதன் மையான தடை சாதியக் கட்டமைப்பு என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாகும்.

“சோசலிசவாதிகள் ஒருங்கிணைந்த புரட்சிகர வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்கள், தாங்கள் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ள சூழல்களைக் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். விஞ்ஞான சோசலிசம் என்பது எல்லாவிதமான சூழல்களுக்கும் ஏற்றதான அனைத்து நோய்களுக்குமான தீர்வு போன்ற ரெடிமேடு மருந்துச் சரக்கு என சோசலிசவாதிகள் கருதிவிடலாகாது. ஒரு சோசலிசவாதி, தான் செயல்படும் சூழ்நிலையில், அந்தச் சூழ்நிலை உருவானதற்கான வரலாற்று நிலைமையிலான காரணங்களை முற்றிலும் தழுவியதாகவே அவர் மேற் கொள்ளும் சோசலிச வேலைத் திட்டம் அமைந்திருக்க வேண்டும்.”(Karl Marx - A Biography - Progress Publishers - Moscow 1973, P.557 & Marx and Engels Selected Correspondences, P.337).

காரல் மார்க்சு மேற்சுட்டியதைத் தான் பெரியார் இங்கு மேற்கொண்டு பிறவி வருண-சாதி ஏற்றத்தாழ்வு ஒழிப்புக்கு முதன்மை தந்து பணியாற்றினார் என்பதை எடுத்துக்காட்டி பெரியாரின் சமதர்மப் பாதை என்பது விஞ்ஞான சோசலிசமே என்பதைத் தெளிவுபடுத்தியதில் வே. ஆனைமுத்து முன்னோடி ஆவார்.

மார்க்சிய மெய்யியலின்படி சமூகத்தின் அடித்தளமாக விளங்குபவை உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள் ஆகும். இவற்றின் அமைப்புக் காரண மாக அந்தந்தக் காலத்தில் தோன்றிய மேல் கட்டுமானங்கள் என்பவை-மதம், சாதி, அரசியல் கொள்கைகள், நீதித்துறை, சட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் இவற்றைச் சார்ந்தே வளர்ந்துவிட்ட கருத்துகள், தேற்றங்கள், சமுதாய உணர்ச்சி கள், இயல்புகள் முதலியவைகளாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம் கற்பிப்பது இதுதான். இந்தியாவில் உள்ள சமுதாய அமைப்பில் சாதி பெற்றுள்ள உண்மையான இடத்தைக் கொண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

“சாதி அமைப்பு என்பது இங்கு மேல்கட்டுமானமாக மட்டும் இல்லாமல், சமுதாய அடித்தளத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக ஆகிவிட்டது. இன்றும் அது அப்படியே இருக் கிறது” என்று பெரியார் திடமாகக் கருதினார்.

“சாதி அமைப்பு இங்கு மேல் கட்டுமானங்களுள் ஒன்றாக மட்டும் இல்லை. சாதியானது உற்பத்திச் சாதனங் கள், உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள் என்கிற சமூகப் பொருளாதார அடித்தளத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இன்றும் இருக்கிறது” என்பது தோழர் வே. ஆனைமுத்துவின் விளக்கம் ஆகும்.

பெரியார் 29.9.1945-இல் திருச்சியில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில்,

“திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்தரமும் ஆதிக்கமும் பெற வேண்டும்.

திராவிட நாடும், திராவிட மக்களும், திராவிட நாட்டவ ரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிட மிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு காப்பாற்றப்பட வேண்டும்.

திராவிட நாட்டில் உள்ள மக்கள் யாருவம் சாதி, வகுப்பு, அவை சம்மந்தப்பட்ட உயர்வு-தாழ்வு இல்லாமல் சமுதாயத் திலும் சட்டத்திலும் சமஉரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சமவாழ்வு வாழச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

1956-இல் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் திராவிட நாடு கோருவது தமிழர்களுக்குத் தொடர்பில்லாதது என அறிவித்து சுதந்தரத் தமிழ்நாடு என்ற கோரிக்கையை பெரியார் முன்வைத்தார்.

“எல்லாத் தேசிய இனங்களுக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எல்லாத் தேசிய இனங் களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். எல்லாத் தேசிய இனங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்... மார்க்சியம் தொழிலாளர் களுக்குக் கற்பிக்கும் தேசியம் பற்றிய வேலைத் திட்டம் இதுவே ஆகும்” என்று இலெனின் அறிவித்தார். (V.I. Lenin selected works in 3 volumes, Vol.I, P.616)

இதையே,

“ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே ஒன்று சேருங்கள்!” எனத் தோழர் வே. ஆனைமுத்துவின் தலைமையில் இயங்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மூன்று இலட்சிய முழக்கங்களுள் ஒன்றாக 1984 முதல் கொள்ளச் செய்தார்.

மேலும் மார்க்சியத்துடன் பெரியாரியத்தை இணைத்தது போலவே அம்பேத்கரியத்தையும் இணைத்ததில் வே. ஆனைமுத்து அவர்களே முதல் முன்னோடி. இதைப் பற்றித் தனியானதொரு கட்டுரையில் காண்போம்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இசைவான தன்மைகளை எடுத்துக்காட்டியதில் முதல் முன்னோடி வே.ஆனைத்து அவர்களே! இன்று தமிழ்நாட்டில் முற்போக்குக் கட்சிகள், இயக்கங்கள் மேற்காணும் மூன் றையும் ஏற்றுள்ளதற்குக் காரணர் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களே!

தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் வழியில் கொள்கைப் பயணத்தைத் தொடர அவரது கருத்துக் கருவூலத்தைக் கற்று உந்தாற்றல் பெறுவோம்!

- சா.குப்பன்