மக்களாட்சி என்பது தற்கால உலகில் 167-க்கும் குறையாத நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஓர் அரசு முறை.

மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தேவையான சட்டங்களை, நேரடியாகவோ அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமோ, இயற்றிக் கொள்ளும் அதிகாரத்தை பெற்றிருப்பதுடன், பல்வேறு அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதுடன், தங்களுக்கான அரசு முறையையும், புரட்சியின்றி அதை மாற்றி அமைக்கும் முறையையும் ஒரு சட்டமாக வடிவமைத்துக்கொண்டு, பெரும்பான்மையோர் முடிவுக்கு ஏற்ப நடைமுறைப் படுத்தும் அரசு முறையாகும்.

“புரட்சி இல்லாமல் ஆட்சியை மாற்ற வகை செய்யப் பட்டிருக்கும் அரசு முறையே மக்களாட்சி” என்று அரசியல் அறிவியலாளர் கார்ல் பாப்பர் கூறுகிறார். இதில் உச்ச அதிகாரம் மக்களிடமே உள்ளது; அதை நேரடி யாகவோ பிரதிநிதிகள் மூலமாகவோ பயன்படுத்தி மக்களே அரசை நிருவகிக்கிறார்கள்.

‘மக்களாட்சி’ என்ற சொல்லில் வரும் ‘மக்கள்’ என்ற சொல் ஓரினத்தை, ஒரு குடிவழிச் சமூகத்தை, ஒரு தேசிய இனத்தைக் குறிக்கிறது. கி.மு 5ஆம் நூற்றாண்டில், கிரேக்க நகர நாடாகிய ஏதென்ஸில் ‘மக்களின் ஆட்சி’ (Rule of the People) என்ற பொருள் தரக்கூடிய ‘டெமாகிரசி’ (Democracy) என்ற சொல்லால் தங்கள் அரசைக் குறித்தனர்.

‘மக்கள்’ என்ற சொல் ஒரு குறிப்பிட்ட தேசம், சமூகம் அல்லது குடி வழியினரைக் குறிக்கும். ‘மக்கள்’ என்ற சொல் ஒரு தேசிய இனத்தைக் (Nation) குறிக்கும் சொல். நாடு (State) என்பது ஓர்அரசு, இறையாண்மை இவற்றுடன் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் ஒரு மக்கள் அல்லது பல தேசிய இனங்களைக் குறிப்பதாகும்.

‘நாடு’ என்பது எவ்வளவு பெரியதாகவும், எத்துனை மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் அல்லது தேசியஇனம் என்பது ஒரே மொழியைத் பொதுமொழியாகக் கொண்ட ஒரு மக்கள் சமுதாயத்தைக் குறிக்கும்.

ஒரு தேசம் ஒரு நாடாக இருக்கலாம். ஆனால் ஒவ் வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதில்லை. உதாரணமாக, வங்காளதேசம் என்ற ஒரு நாடு, ஒரு தேசம் ஆகும். இந்தியா ஒரு நாடு; தேசமல்ல. வங்காளிகளை ஒரு தேசிய இனம் அல்லது ‘ஒரு மக்கள்’ என்று குறிப்பிடுவது சரியானது.

ஆனால் இந்தியா என்ற நாட்டில் இன்று நன்கு வளர்ச்சியடைந்த தேசங்கள் அல்லது தேசிய இனங்கள் 18-க்குக் குறையாமல் இருக்கின்றன. ஆகவே, இந்தியாவைத் தேசம் என்று குறிப்பிடுவது தவறானது.

‘நேஷன்’ (Nation) என்ற ஆங்கிலச்சொல், தேசம், தேசியஇனம் ஆகிய இரண்டையும் குறிக்கும். ஜோ.வி. ஸ்டாலின், “ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறு களை கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம்” என வரையறுத்தார்.

ஒரு பொதுமொழி, ஒரு தொடர்ச்சியான வரை யறுக்கப்பட்ட நிலப்பகுதி, ஒரு பொதுவான பொருளாதார வாழ்வில் உருவான பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் ‘ஓரினம்’ என்ற உளவியல் - இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ‘தேசம்’ ஆகும். இவர்களைத்தான் ‘ஒரு மக்கள்’ என்று அரசியல் அறிவியல் குறிப்பிடுகிறது.

மக்களாட்சி என்பது ஒரு தேசிய இனம் ஒரு தேசத்தை அமைக்கும்போது மட்டுமே அதன் முழுமையான இலக்கணத்திற்கு ஏற்ப அந்த அரசு முறை அமைகிறது.

இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற தேசங்களில் மக்க ளாட்சி என்பது அந்த மக்களுக்கான உரிமைகளை உறுதி கூறுவதாக இருக்கிறது. இந்தியா போன்ற பல் தேசிய நாடுகளில், மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தி, தேர்தல் மூலமாக அரசைத் தேர்ந்தெடுத்தாலும், ஓர் இன மக்களின் மேலாண்மை, பிற தேசிய இன மக்கள் மீது சுமத்தப் படுகிறது. ஆகவே பல்தேசிய இன நாடுகளில் மக்களாட்சி என்பது கோளாறுகளைக் கொண்டதாக இருப்பதைக் காணலாம். இதற்குச் சிறந்த உதாரணம் இந்தியா.

தேசங்களின் இருப்பை மறுக்கும் இந்தியா

உலகெங்கும் மக்கள் சமூகங்கள் தேசங்களாக அமைந் துள்ளன. இத் தேசங்கள் விடுதலை பெற்றவையாகவோ அல்லது விடுதலை கோருபவையாகவோ இருக்கின்றன. இவையன்றி, சிறுபான்மைத் தேசிய இனங்களாகவும், மொழிச் சிறுபான்மையராகவும் உலகெங்கும் வாழ்கிறார்கள்.

சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், தேசிய இனங்கள் விடுதலை பெற்ற ஒரு தேசத்தைப் படைத்துக் கொள்வதையே தங்களுடைய உன்னத இலக் காகக் கொண்டுள்ளன. உலகம் முழுவதுமே தாயகம் இல்லாத மக்களே இல்லை. தாயகத்தின் மீதான உறவை ஒரு மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. அவர்கள் வாழும் மண்தான் அவர்களுடைய வாழ்வை வடிவமைக்கிறது.

 நிலம் தரும் சூழலே ஓரினத்தின் பண்பாட்டை உருவாக்குகிறது. ஒரு தேசத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று அதனுடைய வாழ்நிலப்பரப்பு. அதை, “தொடர்ச்சி யான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி” என்று ஜோ.வி. ஸ்டாலின் வரையறுப்பார்.

அரசியல் அறிவியல் பார்வையில், ஒரு தேசிய இனம் அல்லது தேசத்தை “தொடர்ச்சியான நிலப்பரப்பில் வாழக்கூடிய ஒரு குடிவழி மக்கள் தொகுப்பு” (A population of an ethnic unity inhabiting in a territory of geographic unity) என்று பர்கஸ் (Burgess) வரையறுக்கிறார்.

ஒரு தேசிய இனத்தின் இன்றியமையாக் கூறுகளுள் ஒன்று நிலப்பரப்பு. தாயகத்துடன் இருந்தால்தான் அவர்கள் ஒரு தேசிய இனம். இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் யூதர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இஸ்ரேல் என்ற அவர்களுடைய தேசம் வலுவாக அமைக்கப்படும் வரை தேசமற்ற யூதர்கள் ஒரு தேசிய இனமாகவே கருதப் பட்டார்கள்.

ஓர் இனம் விடுதலை பெற்று இருக்கிறதா இல்லையா என்பதை, அந்த இனத்தினுடைய மண் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

இந்தியா விடுதலை பெற்றதாக 1947-இல் அறிவிக்கப் பட்டது. அதுவரை ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறியதைத்தான் ‘இந்திய விடுதலை’ என்று வரலாறு குறிப்பிடுகிறது.

ஓர் இனம், தான் வாழும் மண்மீது இறையாண்மையைப் பெற்றிருக்கிறது. தன் மண்மீதான இறையாண்மையை மீட்டெடுப்பதற்காகவே தேசிய இனங்கள் போராடுகின்றன. இலங்கையில் ஈழ மக்கள் உதிரியான உரிமைகளுக்காகப் போராடவில்லை. அவர்கள் தங்கள் மண்மீது தங்கள் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டுமென்று போராடினார்கள்.

தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற முழக்கத்தின் சாரமும், இந்தியாவில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறுவது என்பதுதான். தங்கள் தாயகத்தை இழந்த மக்கள் அடிமைகளாக அல்லது நாடோடிகளாக அல்லது அகதிகளாகக் கருதப்படுவார்கள். செவ்விந்தியர்கள் மற்றும் நீக்ரோக்கள் தாயகம் இழந்த மக்கள். தங்கள் தேசியஇனத் தகுதியைப் பெற முடியாதவர்கள்.

இன்று உலகில் 195 நாடுகள் உள்ளன. அவை மட்டு மின்றி, மேலும் பல தேசிய இனங்கள் தங்களுக்கான தேசங்களை அமைக்கப் பல்தேசிய இன நாடுகளில் இன்றும் போராடி வருகின்றன.

வரலாறு முழுவதுமே தமிழினத் தாயகம் பற்றியப் பதிவுகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.

தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார்,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து...

என்று தமிழர்களுடைய வாழ்நிலப்பரப்பை பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர்,

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்

என்றும்,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்

என்றும் தமிழர்களுடைய வாழ்நிலப்பரப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளார். காக்கைப் பாடினியார்,

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்

வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று

அந்நான்குஎல்லை...

என்று கூறுகிறார்.

பரிபாடல், ‘தமிழ் நாட்டகம்’ என்றும், பதிற்றுப்பத்து ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்றும், புறநானூறு ‘வையக வரைப்பில் தமிழகம்’ என்றும், அகநானூறு ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎம்’ என்றும், சிலப்பதிகாரம் ‘தமிழ்நாடு’ என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுடைய தொன்மைத் தாயக இருப்பைப் பதிவு செய்துள்ளன.

ஆனால், இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கம் பெற்றுவிட்ட ‘இந்தியா’ என்ற நாட்டில் ஒரு மாநிலமாக உறுப்பு வகிக்கும் தமிழ்நாட்டின் தாயக உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஏற்கவில்லை. எந்தத் தேசிய இனத்தின் தாயகத்தையும் இந்தியா ஏற்கவில்லை. தமிழர்களை ஒரு தேசியஇனம் என்றோ, தமிழகம் தமிழர்களின் தாயகம் என்றோ இந்திய அரசியல் சட்டம் கூறவில்லை. இந்திய அரசியல் சட்டம் இவ்வாறு கூறுகிறது :

“We, the people of India, having solemnly resolved to constitute india into a sovereign socialist secular democratic Republic...”

“இந்திய மக்களாகிய நாம்...” என்று தொடக்கத்திலேயே ஒட்டுமொத்தமாக மொழி இன அடையாளத்தை மறுத்துப் பேசுகிறது. இந்தியாவை ஒரு தேசம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறவில்லை. அதேபோது வேறு பல தேசங்கள் இந்தியாவில் இருப்பதையும் ஏற்கவில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின் முதல் பாகம், “இந்தியா எனப்படும் பாரதம் பல மாநிலங்கள் ஒன்றிணைந்த யூனியன் (ஒன்றியம்)” என்று குறிப்பிடுகிறது.

மேலும் அரசியல் சட்டம் கூறு 3 :

“ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியைப் பிரித்தும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைந்தும், அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைத்தும், அல்லது ஒரு மாநிலத்தின் பிரதேசத்தை இணைத்தும், புதிய மாநிலங்கள் அமைப்பதற்கும், ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பை அதிகரிப்பதற்கும், ஒரு மாநிலத் தின் பரப்பளவைக் குறைப்பதற்கும், ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றி அமைப்பதற்கும், எந்த மாநிலத்தி னுடைய பெயரையும் மாற்றுவதற்கும் உரிய சட்டம் இயற்று வதற்கு நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது” என்று கூறுகிறது.

இந்திய நாடாளுமன்றம் நினைத்தால் தமிழகத்தைப் பங்கிட்டுப் பல மாநிலங்களுக்கு வழங்கிவிடலாம்.

வளர்ச்சியடைந்த, 18-க்குக் குறையாத எண்ணிக்கை யில் இந்தியத் துணைக்கண்டதில் தேசிய இனங்கள் இருந்தாலும், அவற்றின் இருப்பையோ; அவற்றின் தாயக உரிமையையோ இந்திய அரசு ஏற்கவில்லை. நாடாளு மன்றத்தில் ஒரு வாக்கு அதிகம் இருந்தால் போதும், மாநிலங்களை அழித்துவிட முடியும்.

தமிழ்நாடு ஓர் அடிமை தேசம்

இந்திய அரசியலமைப்பின்படி ஒரு மாநிலத்தைக் கூறுபோட அல்லது காணாமல் ஆக்க, நாடாளுமன்றத்தில் மூன்றில் - இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையில்லை. இராஜ்யசபாவில் ஒரேஒரு வாக்கு அதிகம் இருந்தால் போதும் (Simple Majority) இருந்தால் போதும்.

நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு அந்தந்த மாநிலங் களில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது போலன்றி, மாநிலங்களவையைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாக வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இந்த மேலவையில், ஒரு வாக்கு அதிகம் இருந்தாலே போதும், ஒரு மாநிலத்தைக் கூறு போட்டுவிடலாம்.

இந்தியாவில் எந்த மொழி இனமாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் சிறுபான்மைதான்.

தமிழ்நாட்டிலிருந்து 39 உறுப்பினர்களும், புதுவையிலிருந்து ஒரு உறுப்பினரும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக் கப் படுகிறார்கள். அதுபோலவே, மேலவையில் தமிழ் நாட்டியிருந்து 18 உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆனால், இவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. தமிழ்நாட்டுக் குள் திணிக்கப்படும் எந்தப் பேரழிவுத் திட்டத்தையும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேண்டுகோள் வைப்பதையும், கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்வதை யும் மட்டுமே செய்யமுடியும்.

இந்தி உறுப்பினர்களுக்கே நிரந்தரப் பெரும்பான்மை

நாடாளுமன்றத்தில் இந்தி பேசுகிற மாநிலங்களின் உறுப்பினர்களே நிரந்தரப் பெரும்பான்மை வகிக்கிறார்கள்.

மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் (2 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து) இந்தி பேசுகிற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 255 பேர்.

இராஜ்ய சபை என்ற மாநிலங்களவையில் 245 உறுப் பினர்கள் உள்ளனர். இவர்களில் இந்தி பேசுகிற மாநிலங் களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை (12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து) 114. இந்தி உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி சமற்கிருத மேலாண்மையைப் பாதுகாப்பதிலும் இந்திய மேலாண்மை என்ற பெயரில் பார்ப்பன - பனியா குசராத்தி பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் ஒரே நிலைபாட்டில் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். ஆகவே, இரண்டு அவைகளிலும் இந்திக்காரர்களின் மேலாண்மை நிரந்தரமாக நிலவுகிறது.

ஆகவே, சனநாயக நாடு என்று கருதப்படுகிற இந்தியா வில், தமிழ்நாடு என்றென்றும் நிரந்தரச் சிறுபான்மையாகவே நாடாளுமன்றத்தில் இருக்கும். அதனாலேயே, அதன் தோல்விகள் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு தன் நிலப்பகுதியின் மீது உரிமை கொண்டாட முடியவில்லை. தமிழர்கள், தமிழ்நாட்டில் இந்திய அரசு அனுமதிக்கும் வரைதான் குடியிருக்கலாம். ஆகவே, தேசிய இனத்தினுடைய அடிப்படை உரிமை யாகிய தாயக உரிமை என்பது இந்தியாவில் அனுமதிக்கப் படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

குடியேற்றத்தால் உருவாக்கப்பட்ட நாடுகளான கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்கூட மக்களின் ஒப்புதல் இல்லாமல் மாகாணங்களை எதுவுமே செய்ய முடியாது என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 19 : துணைப் பிரிவு 1-ன்படி “இந்திய ஆட்சிப் பரப்புப் பகுதி எதிலும் தங்கு தடையின்றி நடமாடுவதற்கும் குடியேறவும் இந்தியக் குடிமக்கள் அனைவரும் உரிமை உடையவர்கள்” என்று கூறுகிறது. ஆகவே, பிற மாநிலத்தவர்கள் தமிழகத்துக்குள் குடியேறும்போது அவர்களைத் தடைசெய்யத் தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது.

தேசிய இனங்களின் உரிமையை மறுக்கும் இந்திய அரசியல் சட்டம்

இந்திய அரசியல் சட்டம் ஒரு பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமையை அடியோடு மறுக்கிறது. தோற்றத்தில் கூட்டாட்சி அரசியல் அமைப்பாக இருந்தாலும் முழுமையான ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாகவே அது இருக்கிறது.

பல நாடுகளில் இரட்டைக் குடியுரிமை ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழகக் குடியுரிமையும் இந்தியக் குடியுரிமையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. அதிகாரப் பிரிவினை என்பது ஒட்டுமொத்த அதிகாரங்களும் இந்திய அரசிடம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அதிகாரங்களே மாநிலங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தின் 11-ஆவது பகுதியில் ‘மத்திய - மாநில அதிகாரப் பிரிவினை’ பேசப் படுகிறது. 7-ஆவது அட்டவணையில் ‘அதிகாரப் பட்டியல்கள்’ தரப்பட்டுள்ளன. இந்திய ஒன்றியத்தின் அதிகாரப் பட்டியலில் 97 இனங்களும் மாநிலப் பட்டியலில் 66 இனங்களும் பொதுப் பட்டியலில் 47 இனங்களும் தரப்பட்டுள்ளன.

ஆனால், பொதுப் பட்டியலிலும் இந்திய ஒன்றியப் பட்டியலிலும் இந்திய அரசு அதிகாரம் செலுத்து கிறது. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் அவ்வப்போது ‘தேசநலன்’ என்ற பெயரில் களவாடிக் கொள்கிறது.

இந்திய மக்களாட்சி என்பது ஒரு பொய்மை

இந்திய மக்களாட்சி என்பது ஒரு பொய்மை மக்க ளாட்சியாகக் காட்சியளிக்கிறது. முன்னமே குறைவான அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அதிகாரங்களும் காலவோட்டத்தில் மத்திய அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசை நிலைகுலைய வைக்கும் அதிகாரத்தை மய்ய அரசு எனப்படும் இந்திய அரசு பெற்றிருக்கிறது.

மாநில ஆட்சியைக் கலைக்கும் மய்ய அரசின் அதிகாரம் குறித்து அம்பேத்கர்,

“ஏட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு விதிமுறையாக இருக்குமே தவிர நடை முறையில் பயன்படுத்த வேண்டிய நிலைமை வராது”

என்றார். ஆனால், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் மாநிலச் சட்டமன்றங்கள் முடக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 திசம்பர் 9ஆம் நாள் கூடியது. தற்காலிகத் தலைவரான சச்சிதானந்த சின்கா,

“உயர்தர மேதைகளின் சீரிய திறமையால் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம்; இலட்சியங்களும் அறிந்த விதிமுறைகளும் அதில் மிகுதியாக இடம் பெற்று இருக்கலாம்; ஆனால், ஆட்சியாளர்கள் செய்கிற குற்றங்களின் ஆளும் அரசியல் களத்தில் குவிந்துவிடும்; ஊழலாலும் அதைவிட மக்கள் காட்டுகிற அக்கறையின்மை யாலும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்திற்கு அழிவு ஏற்படலாம்; மக்கள்தான் ஒரு மக்களாட்சியின் உண்மையான காப்பாளர்களாக இருக்கமுடியும்.” என்றார்.

1949 நவம்பர் 26-ஆம் நாள் கடைசிக் கூட்டத்தில் முழுமைபெற்ற அரசியலமைப்பை சமர்ப்பித்து மாமேதை அம்பேத்கர் பேசினார். சமூக பொருளாதார வளர்ச்சி பற்றி வலியுறுத்திய அவர்,

“தற்போது வெள்ளையர் அரசாங்கம் வெளியேறி விட்ட நிலைமையில் நம் மக்களாட்சியின் குறைபாடு களுக்கு வேறு யார் மீதும் குற்றம் சுமத்தமுடியாது. நம் குறைபாடுகளுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண் டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

தேசிய இனம் தன் இயற்கை வளத்தை, கனிமவளத்தைக் காக்க வழியில்லை

இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையில் 40 தமிழர் களும், மேலவையில் 18 தமிழர்களும் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் நலன் எதையுமே சாதிக்க முடிய வில்லை. தமிழகத்தின் உரிமைகளைக் கேட்டுப் பெறவும் முடியவில்லை. உரிமைப் பறிப்பைத் தடுக்கவோ, அல்லது பறிக்கப்பட்ட உரிமையை மீட்கவோ இயலவில்லை.

2009-இல், ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் படு கொலை செய்யப்பட்டபோது, தமிழ்நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் டெல்லியில்தான் இருந்தனர். இன அழிப்பைத் தடுக்கமுடியவில்லை. ஈழப்போரை இந்திய அரசுதான் நடத்தியது. ஈழத் தமிழினம் அழிக்கப்பட்ட பிறகு, அது ‘இனஅழிப்பு’ (Genocide) என்று இந்திய அரசை ஏற்கச் செய்யவும் இயலவில்லை.

தமிழக மீனவர்கள் 575 பேர் கடலில் வைத்து, இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசை உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய முடிய வில்லை.

இலங்கைக் கடற்படையை இந்தியக் கடற்படை விரட்டவும் இல்லை; இலங்கை அரசுக்குக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. தமிழக மீனவர்களுடைய படகுகளை மீட்டுவரவும் முடியவில்லை. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.

காவிரி நடுவர்மன்றமும் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்த பிறகும் கூட, காவிரி நீரைப் பெறமுடியவில்லை. காவிரித் தீர்ப்பை காங்கிரசு, பாஜக அரசு நடைமுறைப்படுத்த மறுத்திருக்கின்றன. தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கருநாடகம் மறுப்பதை இந்தியா வரவேற்கிறது. கருநாடகத்தின் அடா வடிப் போக்கை ஆதரிக்கிறது.

முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்துவிட்ட பிறகும் கூட, 142 அடி நீரைத் தேக்க கேரளா அனுமதிக்கவில்லை. சிற்றணையைச் செப்பனிடப் பொருட்களைக் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த இந்திய அரசு முன்வரவில்லை.

பாலாற்று நீரை ஆந்திர அரசு தடுப்பணை கட்டித் தடுத்திருக்கும் நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுகிறது. இந்திய அரசு இதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

தடுத்து நிறுத்தச் செய்யும் வலிமை தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு இல்லை.

எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை சகட்டுமேனிக்கு காவிரிப் படுகையில் நடைமுறைப்படுத்தி, காவிரிப் படுகையே இந்திய அரசு அழிக்க இருக்கிறது. தமிழகத்தை அழித்தொழிக்கும் அனைத்து திட்டங்களையும் நடைமுறைப் படுத்த இந்திய அரசு முயற்சிக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலையைத் தன் திட்டமாக அறிவித்தாலும் அது இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளி களின் நலனுக்காக இந்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்பது நாடறிந்த ஒன்று. எட்டு மலைகள் அடித்து நொறுக்கப்பட இருக்கின்றன.

சேர்வராயன் மலையில் 53 இலட்சம் பாக்சைட், கஞ்சமலையில் 7.5 கோடி டன் இரும்பு, அரூர் மலையில் மாலிப்டினம், திருவண்ணாமலையில் இரும்பு, ஹேம டைட், மேக்னடைட், கவுத்தி - வேடியப்பன் மலைகளில் 47 விழுக்காடு இரும்புத்தாது என்று மிகப்பெரிய அளவில் இயற்கை வளம் சூறையாடப்பட இருக்கிறது.

இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய வலிமை தமிழக அரசுக்கோ, அல்லது தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ இல்லை.

வீடும், காடும் காணாமல் போக இருக்கின்றன. வயலும், வளமும் சூறையாடப்படுகின்றன. ஜிண்டால், அதானி, வேதாந்தா நிறுவனங்கள், ஜப்பான், தென் கொரியா நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வரு கின்றன. தமிழக மக்கள் அடையாள எதிர்ப்பு மட்டுமே காட்டமுடியும். அவர்களை ஒடுக்குகின்ற வேலையை இந்திய அரசின் ஏவல் அரசாக இருக்கும் தமிழக அரசு செய்துவருகிறது.

தூத்துக்குடியில் தாமிர உருக்கு ஆலை அப் பகுதி யையே மரணபூமி ஆக்கும் நிலையில், மக்கள் ஆலையை மூடக்கோரி போராடினர். தமிழக அரசே 14 பேரைச் சுட்டுக் கொன்றது.

இந்திய அரசின் கட்டளையை நிறைவேற்று வதைத் தவிர தமிழக ஆட்சியாளர்களுக்கு வேறு வழியில்லை. ஆட்சி அதிகாரத்தைக் காத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கின்றன தமிழகத் தலைமைகள்.

(தொடரும்)

- பேராசிரியர் த.செயராமன்

தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

Pin It