anna univதகுதி, தரம் என்று மத்திய அரசும், சங்கிகளும் பேச ஆரம்பித்தாலே, நம் மாநிலத்திடம் இருந்து எந்த உரிமையையோ திருடப் போகிறார்கள், உஷாராக வேண்டும், போராட தயாராக வேண்டும் என்று பொருள்.

நீட், புதிய கல்வி கொள்கை என்று தொடங்கி தற்போது IOE சிறப்பு அந்தஸ்து, தன்னாட்சி அதிகாரம், சர்வதேச தரப் பட்டியலில் மேம்படுத்துகிறோம் என கூறிக் கொண்டு அண்ணா பல்கலையை தமிழகத்திடமிருந்து திருடி, சுயநிதி கல்லூரியாக மாற்றி பார்ப்னிய மயம், காவி மயத்தை புகுத்தி, தனியார் மயம் என்ற இறுதி இலக்கு நோக்கி தள்ள தொடங்கி விட்டது மத்திய மோடி அரசு.

தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் வாய்ப்பளிக்கூடிய, பல்தரப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டிய சிறந்த ஆசிரியர்களை, கட்டமைப்பு வசதிகளையும் கொண்டது அண்ணா பல்கலை.

பல்லாயிரக்கணக்கான தொழிற்நுட்ப வல்லுனர்களை, விஞ்ஞானிகளை உருவாக்கி, சர்வதேச அளவிலான தர வரிசையில் முண்ணனியில் இருக்க கூடிய, பொறியியலின் அறிவுக் களஞ்சியமான அண்ணா பல்கலையின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரைவார்க்க தயாராகி விட்டது அடிமை அதிமுக அரசு.

இது குறித்த விவாதங்களும், போராட்டங்களும் போதிய அளவில் நடைபெறவில்லை என்பதும், மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் இதன் ஆபத்து குறித்தும் விழிப்புணர்வடையாதது வருத்தமளிக்கிறது.

தமிழக மாணவர்களின் நலனை காலில் போட்டு மிதித்துவிட்டு, மத்திய மோடி அரசின் திட்டத்தை செயற்படுத்த, அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கும் சட்ட திருத்த மசோதாவை கடந்த செப்டம்பர் - குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றிய எடப்பாடி அரசு, தற்போது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி பதிலுக்கு காத்திருக்கிறது.

மாநில அரசால் மாநில மக்களின் வரியில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயல்பாட்டையே முற்றிலும் மாற்றியமைக்க கூடிய திட்டத்தை, விரைந்து செயல்படுத்த கோரி தன் அதிகாரத்தை மீறி நேரடியாக மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருக்கிறார்.

முடக்கப்படும் அண்ணா பல்கலைகழகம்:

மத்திய அரசு ஒரு திட்டத்தை செயற்படுத்த துடிக்கிறது என்றால், அதற்கு முன்பாகவே தமிழக அரசு அதற்குரிய தடைகளை நீக்கி, சட்டங்களை திருத்தி, அது எதோ மாநில அரசின் நேரடி கொள்கை திட்டத்தைப் போலவே மாற்ற களத்தில் இறங்கி செயற்படுத்தும்.

அந்த வழியில் மத்திய அரசு எதிர்ப்பார்ப்பதை போல எடப்பாடி அரசு அண்ணா பல்கலை சட்டம் 1978 ஐ திருத்தியுள்ளது. இதன் மூலம் தற்போதையை அண்ணா பல்கலையை ”அண்ணா தொழிற் நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்” (Anna Technological and Research University ) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு உயர் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக (Institute of Eminence - IOE) அடையாளப்படுத்தப்படவுள்ளது.

இதில் கிண்டி அண்ணா பொறியில் கல்லூரி (College of Engineering Guindy), மெட்ராஸ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி (MIT), அழகப்பா தொழிற்நுட்ப கல்லூரி (ACT) மற்றும் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் & பிளனிங் (School ofArchiteture and Planning) ஆகியவை அடங்கும்.

மற்றோரு திருத்தம் தற்போதை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 550க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளை நிர்வகிக்க, புதிதாக ஒரு அண்ணா பல்கலை உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு பல்கலையிலிருந்து புதியதாக ஒரு பல்கலை உருவாக்கப்பட்டால் அதற்கு புதிய பெயரை வைப்பதும், பழைய பல்கலை பழைய பெயரில் இயங்குவது தான் வழக்கம். ஆனால் இங்கு புதிய கல்லூரிக்கு பழைய பெயரும், பழைய கல்லூரிக்கு புதிய பெயரும் என இத்தனை நாள் கட்டியெழுப்பபட்ட அண்ணா பல்கலையின் தர மதீப்பிடு மாணவர்களுக்கு கிடைக்காமல் காலி செய்ய முயற்சி செய்கிறது மத்திய அரசு.

இதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு. ஆக, அண்ணா பல்கலை என்பது இரண்டாக பிரிக்கப்படவில்லை. நேரிடையாக எந்த கல்லூரியையும் இந்த புதிய அண்ணா பல்கலை நடத்தாது. 550க்கு மேற்பட்ட இணைப்பு கல்லூரிகள் தொடர்பான விடயங்களை நிர்வகிப்பது, தேர்வுகளை நடத்துவது போன்றவை மட்டுமே புதிய பல்கலையின் செயல்பாடாகும்.

பறிபோகும் சர்வதேச அங்கீகாரம்:

உயர்புகழ் நிறுவனம் (Institute of Eminence) என்று பெயர் மாற்றுவதாலயே ஒரு பல்கலைக்கழகத்தின் தரம் உயர்ந்துவிடாது. அதற்கான உள்கட்டமைப்பு, அதிஉயர் தொழிற்கூடங்கள், ஆய்வகங்கள், ஆய்வுகளின் எண்ணிக்கை, அதன் தன்மை போன்றவையே சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை எடைபோடும் அளவுகோல்களாக இருக்கின்றன.

2019 ஆண்டு தேசிய தரமதிப்பீட்டு நிறுவனமான NIRF தர வரிசைப்படி, தேசிய தரப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது அண்ணா பல்கலை. சர்வதே தர மதிப்பீட்டு நிறுவனங்களான THE, QS போன்றவற்றின் தரமதிப்பிட்டில் முதல் 800 அல்லது 1000 இடங்களுக்குள் இருக்கிறது.அதிலும் பெட்ரோலியம் என்ஞினியரிங் போன்ற சில துறைகளில் உலகின் தலைசிறந்த 50 பல்கலையில் ஒன்றாக இருக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணா பல்கலையின் பெயரை மாற்றிவிட்டு, புதிய அண்ணா பல்கலையை உருவாக்கினால் படித்து முடித்த மாணவர்களின் சான்றிதழ்களிலும், வருங்காலங்களில் படித்து வெளிவர இருக்கும் மாணவர்களின் சான்றிதழ் மதிப்பிலும் பாதிப்பு ஏற்படும். மேலும் வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அண்ணா பல்கலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பல்லாயிரக்கணக்கான ஆய்வு கட்டுரைகள், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் மீதான மதிப்பும், நம்பகத்தன்மையும் கேள்விக்குரியாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகள், காப்புரிமைகளுக்கான பதிவுகளில் பாதிப்பு ஏற்படும்.

புதிய அண்ணா பல்கலைக்கு கீழ் படித்து சர்வதேச கல்லூரிகளில் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் சான்றிதழ் தர மதிப்பீட்டில் பின் தங்கியிருப்பதால் வாய்ப்பு பறிபோகும். சமிபத்தில் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலை ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

https://www.deccanherald.com/national/south/professors-oppose-renaming-of-anna-university-890454.html

சிறப்பு அங்கீகாரம் எனும் மோசடி:  

அண்ணா பல்கலையை பொறுத்தவரை நிதியளிப்பது மாநில அரசு தான். தற்போது மாநில மக்களின் வரிப்பணத்திலிருந்து ஆண்டுக்கு 40 கோடி நிதியாக அளிக்கப்படுகிறது. இவையல்லாமல் மாணவர்களின் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், தனியார் நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் என 2018-19 ஆண்டில் மட்டும் 587 கோடி வரை வருவாய் ஈட்டிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் IOE அந்தஸ்து மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் தருவதாக கூறி மத்திய அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்ற 2019ஆம் வருடம் இது முன்னெடுக்கப்பட்ட போது தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு பறிபோகும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழக அரசு கைவிரித்துவிட்டது.

இதற்கு மற்றொரு காரணம் இந்த சிறப்பு அந்தஸ்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க தேவைப்படும் 2750 கோடி ரூபாயில் மத்திய அரசு தரும் 1000 கோடி போக மிதமுள்ள 1750 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து டிசம்பர் 2019ல் இந்த அந்தஸ்து உயர்வின் கீழ் அளிக்கப்படவிருக்கும் முழு நிதியையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டால் பல்கலையை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கொண்டு வர தயார் என்று கூறி ஐந்து அமைச்சர்களை கொண்ட குழுவை அமைத்தது எடப்பாடி அரசு.

இந்த நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்ட இந்த IOE அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில், மாநில அரசின் நிதி இல்லாமலே ஆண்டுக்கு 314 கோடி வருவாய் ஈட்ட முடியுமென ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் நேரிடையாக முன்வைத்திருக்கிறார் துணைவேந்தர் சூரப்பா..

இந்த 314 கோடி வருவாயை மாணவர்களின் கல்வி கட்டணம் தேர்வு கட்டணம், இணைப்பு கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான கட்டணத்தின் மூலம் உருவாக்க போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வருவாயை ஈட்ட நிலுவையில் இருக்கும் கல்வி மற்றும் தேர்வு கட்டணங்கள் எத்தனை மடங்கு உயரப்போகிறது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

(https://timesofindia.indiatimes.com/city/chennai/ioe-tag-anna-univ-vc-moves-centre-directly/articleshow/78582744.cms)

இப்படி மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலையின் துணைவேந்தர் ஒருவர் மாநில அரசை மீறி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார். எந்த திட்டதையாவது முன் வைத்து இந்த அந்தஸ்ததை பெற முயற்சிக்கும் இந்த சூரப்பா தான் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகவத்கீதையை பாடமாக திணிக்க முயற்சித்து, கடும் எதிர்ப்புகளை கண்டு பின்வாங்கினார்.

(https://indianexpress.com/article/education/anna-university-row-students-teachers-condemn-bhagavad-gita-for-engineering-students-vc-assures-to-amend-regulations-annauniv-edu-6031940/)

2018 ஆம் ஆண்டு அண்ணாபல்கலை துணை வேந்தராக சூரப்பா என்பவரை கர்நாடகத்திலிருந்து இறக்குமதி செய்து நியமித்தார் ஆளுநர். தமிழகத்தில் தகுதியான பலர் இருந்தும் மத்திய அரசின் காவிமயமாக்கல் கொள்கைக்கு ஏதுவாகவே இந்த நியமனம் என கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆயினும் பாஜகவின் அடிமை அரசு, இதுவரை தேர்வுக்குழுவின் பரிந்துரையிலிருந்து ஒருவரை துணை வேந்தராக தேர்வு செய்யும் வழக்கத்தை ஆளுநரிடம் விட்டுகொடுத்தது. இது போன்று சட்ட கல்லூரி, இசைக்கல்லூரி என அனைத்திலும் துணைவேந்தரை ஆளுநர் நியமித்த போது மெளனம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நியமனங்கள் அனைத்துமே மாநில கல்வி நிறுவனங்களை மத்திய அரசிடம் அடகுவைத்து, தனியார்மயத்தை நோக்கி நகர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னாட்சி அதிகாரம் என்ற பெயரில் காவிமயமாக்கல்.. 

அண்ணா பல்கலையை இவ்வளவு அவசரமாக உயர் புகழ் அங்கீகாரம் (Institute of Eminence) பெற்ற நிறுவனமாக மாற்ற துடிப்பது இந்த அங்கீகாரத்தின் கீழ் வகைப்படுத்திவிட்டால் அடுத்த 5 வருடங்களுக்கு மத்திய அரசின் 1000 கோடி நிதி கிடைக்கும் என்பதற்காக மட்டும் அல்ல..

இந்திய அரசு 2017ல் வெளியிட்ட இந்த IOE ஆணை குறித்து இந்த அங்கீகாரத்திற்கு ஏற்ற பல்கலையை தேர்வு செய்யும் EEC(Empowered Expert Committee) குழுவின் தலைவரும்,முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், RSS ஆதரவாளரான என்.கோபாலாசுவாமி, பல்கலை கழகங்களை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பதே இந்த IOE அங்கீகாரத்தின் நோக்கம் என்கிறார்.

அதாவது இது போன்று மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளை விடுவித்து, மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து தனியார்மயத்தை நோக்கி நகர்த்துவதே நோக்கம் என சூசகமாக சொல்கிறார். இதனை ஆர்.எஸ்.எஸ்-ன் swarajya இணையதளத்திக்கு அளித்த பேட்டியின் போது இதைதெளிவாக கூறுகிறார்.

One of the key initiatives as part of the Narendra Modi government’s plan to liberalise higher education has been to create “Institutes of Eminence” (IOE). Educational institutes that carry the IOE tag

https://swarajyamag.com/politics/swarajya-interview-with-n-gopalaswami-on-institutes-of-eminence

இந்த அங்கீகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும் பல்கலைகழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதாவது

1) இந்தியாவிலிருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் எங்கிருந்தும் வேண்டுமானாலும் ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலைகழகத்திற்கு தரப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் நியமனம், பணிஉயர்வு பற்றி பல்கலைக்கழகமே முடிவெடுத்துக்கொள்ளலாம். வேறு எவரும் தலையிட முடியாது.

 ஏற்கெனவே மத்திய அரசின் தபால் துறை, இரயில்வே துறை என தமிழகத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழரல்லாதாருக்கு தான் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் TNPSC வரை இது தான் நிலை.இதன் மூலம் இனி ஐஐடியில் இருப்பது போன்றும் பார்ப்பனர்களையும், வட இந்திய இந்தி பேசும் ஆசிரியர்களையும் அண்ணா பல்கலையில் நியமித்துக் கொள்ளலாம்.

பணி நியமனத்திலும், பணி உயர்விலும் இட ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பில்லை. 42 ஆண்டுகாலமாக தமிழக அரசின் நிதியில் தமிழக ஆசிரியர்களின் உழைப்பில் ஆய்வு மாணவர்களின் பங்களிப்போடு உலகத் தரத்தில் கட்டியெழுப்பட்ட கல்வி நிறுவனத்தில் அவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டு, பணி உயர்வு மறுக்கப்பட்டு காவி பல்கலையாக உருமாற்றப்படவிருக்கிறது.

2) புதிய படிப்புகளை சேர்ப்பது, பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே முடிவு எடுக்கலாம்..

கடந்த செப் 2019, 3வது செமஸ்டரில் தத்துவயியல் பாடம் என்ற பெயரில் பகவத்கீதை போன்ற சனாதன புராண குப்பைகளை திணிக்க முயற்சித்ததை, இனி செயற்படுத்த உதவும். IOE அந்தஸ்து மூலம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பின் இனி மகாபாரதமும் , கம்பராமாயணங்களும் தத்துவம் என்ற பெயரில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவர்கள் மீது திணிக்கப்படும். இது குறித்த புதிய படிப்புகள் உருவாக்கப்பட்டால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை

3) கட்டண நிர்ணயம் மற்றும் கட்டணத்தை உயர்த்துவதற்கான உரிமையையும் பல்கலைக்கே வழங்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என்றும்.. கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், இனணப்பு கல்லூரிக்கான கட்டணங்களை உயர்த்தி வருடத்திற்கு 314 கோடி வருவாயை பெருக்க போவதாக சூரப்பா மத்திய அரசிறக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றால் .. ஐஐடி சில ஆண்டுகளுக்கு முன் தன் கட்டணத்தை 90,000 லிருந்து 2 இலட்சமாக உயர்த்தியது போன்று பன்மடங்காக கட்டணம் உயரும்.. ஏழை எளிய நடுத்தர தமிழக மாணவர்களுக்கு சிறந்த பொறியல் கல்வியை மறுக்கவே இந்த ஏற்பாடு. 

4) மாணவர் சேர்க்கையில் இட ஓதுக்கீடு குறித்தோ , இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகத்தில் நிலவி வரும் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுவது குறித்தான எந்த உறுதியும் உத்திரவாதமும் ஆணையில் இல்லை...

 மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மத்திய தொகுப்புக்கு அளித்த மாநிலத்தின் இடங்களில் கூட, குறைந்தபட்சம் 27% OBC இடஒதுக்கீட்டை நிறைவேற்றாத மத்திய மோடி அரசா… அண்ணா பல்கலையில் இட ஒதுக்கீட்டை நீறைவேற்ற போகிறது???. சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் ஆய்வுகளுக்கும் அண்ணா பல்கலையில், இனி இடமில்லை.

(https://www.ugc.ac.in/pdfnews/5403862_Gazette-Institutions-of-Eminence-Deemed-to-be-Universities.pdf )

தனியார்மயத்தை நோக்கி நகர்த்தப்படும் அண்ணாபல்கலை:

சரி, சொன்னபடி 1000 கோடியை மத்திய அரசு கொடுக்க போகிறதா என்றால், அதுவும் இல்லை.. பல்கலை கழகத்திற்கு தேவையான தொகையில் 50-75% தொகையே தரப்படும் என்றும், வருடந்தோறும் பல்கலையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தான் இந்த நிதியின் அளவு நிர்ணயிக்கப்படும் என்றும் UGC வழிமுறைகள் -2017 ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 கோடி நிதி என்பது இவர்கள் காட்டும் பம்மாத்து வேலை என புரிகிறது.

(https://www.ugc.ac.in/pdfnews/2170800_Guidelines-for-Educational-lnstitutions-as-lnstitutions-of-Eminence-2017.pdf)

முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே நிதி அளிக்கப்படும். இந்த முதல் ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள், அதற்கான ஆண்டு செலவீனங்களை அதன்பிறகு அந்த பல்கலையே திரட்டிக்கொள்ள வேண்டும். அதாவது மாணவர் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் போன்றவை ஐந்தாண்டுகளுக்கு பின் பல மடங்கு உயர்த்தப்படும். அல்லது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு பற்றாக்குறையாக இருக்கும் தொகையை திரட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்படும் சூழல் உருவாகும்.

சிறப்பு அந்தஸ்து பல்கலைகளை நிர்வகிக்கும் குழுவில், அதற்கு நிதியளிக்கும் நிறுவனங்களிலிருந்தும் ஆட்களை நியமித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மத்திய அரசோ தனியார் நிறுவனமோ பல்கலை நிர்வாக குழுவில் இடம்பெறும்.

இந்த ஐந்து ஆண்டுகளில் செயற்படுத்துவதாக ஒப்புக்கொண்ட திட்டத்தை முழுமையாக செயற்படுத்தாவிட்டால், அதற்குரிய தண்டனையயும் வழங்கப்படும். சிறப்பு அங்கீகாரம் பறிக்கப்படுவது, நிதிகள் திரும்பப்பெறப்படுவதில் தொடங்கி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிற்கு செல்கிறது.

இதன் மூலம் மாநில அரசின் பிடியில் இருந்த கல்லூரிக்கு அந்தஸ்து கொடுக்கிறோம் என அதனை நிலையற்ற நிர்வாக சூழலுக்குள் இழுத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமென கூறி தனியாமயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயற்படுத்துவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதற்குரிய விவாதங்களையும், போராட்டங்களையும் உடனடியாக முன்னெடுக்காவிட்டால், தமிழ்சமூகத்தின் அறிவுக்களஞ்சியம் திருடப்பட்டுவிடும்.

- த.ஆனந்த்

Pin It