இன்று சிங்காரவேலர் நினைவு நாள், சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மறைந்தார், தமிழ் நாட்டின் முதலாவது கம்யூனிஸ்ட்!

தமிழர்களில் அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு (நான் உள்பட) கம்யூனிச அரிச்சுவடியை சொல்லிக் கொடுத்தவர் இவர்தான்!

தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட்கள் இவரை மறந்து விட்டார்களே என்று நான் அடிக்கடி வருந்துவதுண்டு, பழைய நிகழ்ச்சி யொன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெமோரியல் மண்டபத்தில் சோவியத் யூனியன் நண்பர்கள் சங்கம் என்ற ஒரு கூட்டத்தார் சோவியத் கலைக்காட்சியொன்றை நடத்தினார்கள். அந்த சோவியத் நண்பர்கள் குழுவில் இந்து ஆசிரியர் போன்றவர்களும் இருந்தார்கள்!

அந்தக் காட்சியை நீண்ட நேரம் பார்த்துப் பல புள்ளிவிவரங்களையும் குறித்துக் கொண்டோம். உள்ளே நுழைந்தவுடன் பாரதியாரின் பெரிய படமிருந்தது. எங்கு திரும்பினாலும் பாரதியாரின் வாக்கியங்களே தென்பட்டன! பாரதி கலைக் காட்சி என்றே அதைக் கூற வேண்டும்! காட்சி முழுவதையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம், நானும் என் மனைவியாரும்!

காட்சியைப் பற்றிய கருத்தை எழுதுவதற்காக வெளி வாயிலில் ஒரு நோட் புக் வைக்கப்பட்டிருந்தது. சோவியத் கொள்கைக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்ட பாரதியாருக்கே இங்கு முழு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.

ஆனால் தென்னாட்டில் பொது உடைமை குருவான ம. சிங்காரவேலரின் படமோ அவரது பொன் மொழியோ ஒரு இடத்திலும் காணோம்! இங்கும் அக்கிர காரத்துக்குதான் ஆதிக்கமா? - என்று அந்த நோட்டில் எழுதி, திரு. குஞ்சிதம் அம்மையாரும் நானும் கையெழுத் திட்டு வந்தோம். அன்று எங்களைப் போன்று நினைத்த வர்கள் பல்லாயிரம் பேர் இருந்திருக்கலாம்!

போகட்டும்! இப்போதாவது சிங்கார வேலர் என்ற ஒரு ஆசாமி வாழ்ந்தார் என்ற நினைவு நமக்கு வந்ததே அதுவே போதும்! சிங்காரவேலரைப் பற்றி நினைக்கும் போது இரண்டொரு சங்கதிகள் என் நினைவுக்கு வரு கின்றன. பேச்சில் அவர் ஒரு முரடர்! ஆனால் இயற்கையில் மிக மிக நல்லவர்.

யாராவது அவரைக் கும்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தால், இது என்ன கூழைக் கும்பிடு? பூர்ஷ்வா மெண்டாலிட்டி! என்று திடீரென்று பாய்வார்!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் தோழர் ஜீவானந்தமும் மற்றொரு தோழரும் அவரைக் காணச் சென்றிருந்தார்கள். அப்போது அவர் கடற்கரைக் குப்பத்தில் லேடி வெலிங்டன் பள்ளிக்கு அருகில் வசித்துக் கொண்டிருந்தார்! ஜீவானந்தத்தின் நண்பர் ஒரு புஸ்தகம் வைத்துக் கொண்டிருந்தார்! புஸ்தகம் என்றால் சிங்காரவேலருக்கு ரொம்பப் பைத்தியம்! இடைவிடாது படிப்பார்! ஏராளமாக படிப்பார்! அவரது நூல் நிலை யத்தில் சுமார் இருபதாயிரம் நூல்களுக்கு மேல் இருந்தன. இவைகளில் ஆயிரமாவது கம்யூனிசம் பற்றிய நூல்கள்!

அது என்ன புஸ்தகம்? என்று கேட்டதும் அந்த நண்பர், பகவத் கீதை என்று பதில் சொன்னார். நெருப்பிலே போடு! பகவத்கீதையாம்! ஏனப்பா, ஜீவானந்தம், யார் இந்த ஆசாமி? இவனை ஏன் இங்கே அழைத்து வந்தாய்?- என்று உடனே கேட்டுவிட்டார்!

அக்காலத்தில் சிங்காரவேலரிடம் நெருங்கிப் பழகியவர்களில் நானும் ஒருவன்! அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வோம், அவரும் எங்கள் வீட்டிற்கு வருவார், கண்டவுடனே முதலில் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?

நேற்று எத்தனை புஸ்தகம் படித்தாய்? -என்பது தான்! சதா படிப்பு! படிப்பு!! படிப்பு!!! படிக்காமல் சோம்பித் திரிகிறவர்களை அவர் மனிதரென்றே மதிப்பதில்லை! அவரைப் பற்றிய கதைகள் எவ்வளவோ கூறலாம்! பொதுக்கூட்டத்தில் அவருக்கு மாலை போட்டாலோ, அல்லது அவர் பேசும்போது கை தட்டினாலோ ஒரே கோபம் வந்துவிடும்! இது பூர்ஷ்வா மெண்டாலிட்டி என அறிக! - என்று பெருங் கூச்சல் போடுவார்!

இந்தா, குருசாமி! காரில் போகிற போது ஜாக்கிரதையாகப் போ! அதிக வேகத்தில் ஓட்டச் சொல்லாதே! மீறி ஓட்டினால் டிரைவர் தலையில் குட்டு! நம் உயிர்கள் சாதாரணமல்ல! சமதர்மிகள் உயிரப்பா! விலை மதிக்க முடியாத உயிரப்பா! - என்று அடிக்கடி சொல்வார்!

வான நூல் முதல் நில நூல் வரையில் - தத்துவ நூல் முதல் தாவர நூல் வரையில் - பொதுவுடைமை நூல் முதல் - உடற்கூற்று நூல் வரையில் - அவர் படித்து அறிந்திருந்த துறைகள் ஒன்றல்ல, இரண்டல்ல! பலப் பல உண்டு! முதிர்ந்த மூளை! நல்ல அனுபவம்! ஆனாலும் ஒரு சிறு தவறு செய்து விட்டார்! அவர் அக்கிரகாரத்தில் பிறக்கவில்லை! பிறந்திருந்தால் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழும்பியிருக்கும்! அவரை அக்கிரகாரமும் (முதலாளி உலகமும் கூட) தலைமீது வைத்துக் கொண்டாடும்!!

- குத்தூசி குருசாமி (விடுதலை, 11-2-52)

Pin It