திராவிடர் கழகக் கொடியை உருவாக்கியது யார் என்ற ஒரு ‘சூடான சர்ச்சை’ - கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகத்துக்கும், தி.மு.கழகத்துக்கும் இடையே நடந்து வந்ததை திராவிடர் கழகத் தோழர்கள் நன்றாகவே அறிவார்கள். திராவிடர் கழகக் கொடிக்கு நடுவில் உள்ள சிவப்பு வட்டம் - தனது ரத்தத்தில் தெளிக்கப்பட்டது என்று கலைஞர் கருணாநிதி கூறியதற்கு - ‘விடுதலை’ ஆதாரங்களோடு மறுப்பு தெரிவித்தது.

வரலாறுகள் திரிக்கப்படக் கூடாது என்பதே இதன் நோக்கமே தவிர, யாரையும் புண்படுத்துவது அல்ல. திராவிடர் கழகம் தி.மு.க.வோடு பகைமை பாராட்டும்போது ஒரு வரலாறு. அதே திராவிடர் கழகம் - தி.மு.க.வோடு ‘கட்டிப் பிடித்து’ கண்ணீர் சிந்தி பாச மழையில் மூழ்கும்போது ஒரு வரலாறு என்று எழுதிக் கொண்டு போனால், அது வரலாற்றுப் புரட்டு அல்லவா என்பதே நமது கேள்வி!

பெரியாரின் அதிகாரபூர்வ வரலாறு இதுதான் என்ற அறிவிப்போடு வெளி வந்திருக்கும் ‘உலகத் தலைவர் பெரியார் வரலாறு’ - திராவிடர் கழகக் கொடி உருவாக்கம் பற்றி கடந்த காலங்களில் கலைஞர் கருணாநிதிக்கு தெரிவித்து வந்த ‘மறுப்புகளை’ இப்போது திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி கூறியதுதான் ‘உண்மை’ என்பது போல், ஏற்பு வழங்கியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க. தலைமையின் ‘நெருக்கத்துக்காக’ வரலாற்றையே தலைகீழாகத் திருப்பி, தடம் புரளத் தயாராகிவிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இந்த நூலின் 11வது அத்தியாயம் ‘கொடி வரலாறு’ பற்றியதாகும். இப்போது இது தொடர் பாக - சில வரலாற்று நிகழ்வுகளைப் பார்ப்போம்.

நீதிக்கட்சியான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் - திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்ற சேலம் மாநாடு நடந்த நாள் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் நாள்.

• திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டாலும், அப்போது திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்படவில்லை. நீதிக்கட்சியின் கொடியாகிய சிவப்புத் துணியில் வெள்ளை நிறத்தில் தராசு கொடியே தொடர்ந்து கழக மாநாடுகளில் ஏற்றப்பட்டு வந்தது. (‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தயாரித்து வெளிவந்துள்ள ‘பெரியார்’ படத்தில் 1944 சேலம் மாநாட்டு மேடையிலேயே திராவிடர் கழகம் கொடி வந்துவிட்டதாகக் காட்டப்பட்டது வரலாற்றுப் பிழை)

• அதன் பிறகு சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு திருச்சிராப் பள்ளியில் திராவிடர் கழக மாநாட்டில் தோழர் மிராண்டா கஜேந்திரன் பி.ஏ., (இவர் ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி) கழகக் கொடியை அதாவது நீதிக்கட்சிக் கொடியை (சிவப்புத் துணியில் வெள்ளை தராசு) ஏற்றி வைத்துப் பேசினார். அவர் பேசும்போது இந்தக் கொடியை மாற்றியாக வேண்டும் என்ற தனது கருத்தை வலியுறுத்தினார். அவரது உரை:

“நம்முடைய கொடியில் இருக்கும் செங்குருதி யொத்த நிறத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதனிடையே பொறிக்கப்பட்டுள்ள ‘தராசு’ சின்னத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நாம் வேண்டுவது தலைகீழ் மாறுதல் புரட்சி. இன்னல் செய்யும் ஆரியத்தை சின்னாபின்னமாக்க ஓர் சின்னம் தேவை. தராசு புரட்சியைக் குறிக்கும் சின்னமாகாது. தலைகீழ் மாறுதல் வேண்டி நிற்கும் எதிர்கால ஆக்க இளைஞர் உணர்ச்சிக்கு இந்தத் தராசு எந்த விதத்திலும் ஓர் அறிகுறியோ அல்லது வழிகாட்டியோ அல்லது துணையோ ஆகாது.

எனவே நீங்களனை வரும் இது விஷயமாய் நெடிது விவாதித்து விசாரணை செய்து, புத்துலகிற்கும் புதுவாழ்விற்கும் வழிகாட்டக்கூடிய தீவிரமான ஒரு புரட்சிகர சின்னத்தை ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டு, “நாம் திராவிடர், நம் நாடு திராவிட நாடு; இன்றேல் சுடுகாடு” என்ற உணர்ச்சிகளைத் திருவாரூரில் தோன்றச் செய்து, சேலத்தில் பெருகச் செய்த இக்கொடியை உயர்த்தி வைக்கிறேன்” என்று முழங்கினார். (ஆதாரம்: ‘குடிஅரசு’ 6.10.1945)

• 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி - தவிட்டுப் பாளையத்தில் ‘கரூர் தாலுக்கா திராவிடர் கழக மாநாடு’ நடந்தது. மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்தவர் கரூர் என். ரத்தினம்.

கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கரூர் என். ரத்தினம் - “இன்று உயர்த்தியிருக்கும் கொடி, இன்று நமது மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் எனது நண்பர் தோழர் பி. சண்முக வேலாயுதம் அவர்களால் சித்தரிக்கப்பட்டதும், பல தோழர்களால் ஆமோதிக்கப்பட்டதும் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

இந்த உரையை வெளியிட்ட, டாக்டர் வீரமணியின் ‘உலகத் தலைவர் பெரியார் வரலாறு’ நூலில் கரூர் ரத்தினம் உரையினிடையே அடைப்புக் குறியிட்டு, தடித்த எழுத்தில், “அப்போது ஈரோடு குருகுலத்திலே சண்முக வேலாயுதம், தவமணி ராசன், மு. கருணாநிதி, கருணானந்தம் முதலியோர் வாசம் புரிந்தனர். கொடிக்குச் சிவப்பு நிறம் தேவைப் பட்டபோது முதல்வர் கலைஞர் (அன்றைக்கே முதல்வரோ) தம் விரலைக் குண்டூசியால் குத்திரத்தத்தைப் பூசினார்” என்று இடைச்செருகல் செய்துள்ளார். இதுவே ‘அதிகார பூர்வ வரலாறு’ என்று அறிவிக்கிறார்.

இந்த அடைப்புக்குறி இடைச் செருகலுக்குப் பிறகு கரூர் என் ரத்தினத்தின் உரை தொடருகிறது. கரூர் என். ரத்தினம் கலைஞர் கருணாநிதி பெயரை ஏதோ திட்டமிட்டு இருட்டடித்து, கொடியின் வரலாற்றைப் பேசிவிட்டது போலவும், அந்த வரலாற்றை சரி செய்வதற்காக இடையில் புகுந்து திருவாளர் வீரமணி, உண்மையை பதிவு செய்வது போலவும், கரூர் ரத்தினம் உரையில் இப்பகுதி சொருகப்பட்டுள்ளது.

கரூர் என். ரத்தினமோ, தனது உரையில் - கொடியை உருவாக்கியது, ஈரோடு சண்முக வேலாயுதம் தான் என்பதை ‘குடி அரசு’ அலுவலகத்திலேயே விசாரித்துத் தெரிந்துக் கொண்டப் பிறகே இதைக் கூறுகிறேன் என்று குறிப்பிடுகிறார். “பல தோழர்கள் கொடி சம்பந்தமாகத் தங்களது அபிப் பிராயங்களைக் ‘குடி அரசு’ காரியாலயத்துக்குத் தெரிவித்திருப்பார்கள் என்று கருதி விசாரித்தேன். ஏனென்றால் கொடி சம்பந்தமான அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கு, நிர்வாகக் கமிட்டியாரால் அளிக்கப்பட்ட கெடு ஜன. 31 ஆம் தேதியோடு முடிவடைவதாலும், அதற்கப் புறம் திராவிட நாட்டிலேயே முதன்முதலாக நடக்கப் போகும் மாநாடு இதுவே.

ஆதலாலும், அதிலும் கொடியேற்றி வைக்கும் பொறுப்பை வரவேற்புக் கழகத்தார் எனக்கு ஒப்படைத்திருப்பதாலும் நான் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டி ஏற்பட்டது. அம்முறையில் பார்க்கும்பொழுது இன்று நாம் உயர்த்தியிருக்கும் கொடி, இன்று நமது மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் எனது நண்பர் தோழர் பி. சண்முக வேலாயுதம் அவர்களால் சித்தரிக்கப்பட்டதும், பல தோழர்களால் ஆமோதிக்கப் பட்டதும் ஆகும்” என்று குறிப்பிடுகிறார்.

ஆக, குடி அரசு அலுவலகத்திலேயே தோழர்களை விசாரித்து, கொடியை உருவாக்கியது யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கரூர் ரத்தினம் பேசியுள்ளார். அவரது உரைக்குள்ளே, ‘கலைஞர் ரத்தம் வைத்த கதையை’ சொருகுவது நியாயம் தானா?

கொடியை சித்தரித்தது ஈரோடு சண்முக வேலாயுதம் என்பதை வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் - தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியோ கொடியை உருவாக்கியதே தாம் தான் என்று கூறத் தொடங்கினார். இதுகூட - அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரம் தான்! கலைஞரே எழுதிய தனது வரலாறான ‘நெஞ்சுக்கு நீதி’யில்கூட திராவிடர் கழகக் கொடியைத் தாம் உருவாக்கியது பற்றியோ, குண்டூசியில் விரலைக் குத்தி ரத்தம் எடுத்து - சிவப்பு வட்டமாக வைத்தது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்தக் கதைகள் எப்போது தொடங்கின?

‘முரசொலி’ ஏட்டில் 1993 இறுதியில் வட அனந்தல் க.பெ. நெடுமாறன் என்ற ஒரு பழம்பெரும் தி.மு.க. தொண்டர் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கழகங்களின் கொடிகளையும் உருவாக்கியவர் கலைஞர் தான் என எழுதிய கட்டுரை (கடிதம்) வெளியானது. (இலட்சியப் பாதை 22.4.1994)

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி - தி.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டு வந்த ‘விடுதலை’ என்.எஸ் சம்பந்தம் அப்போது ‘கலைஞர் களஞ்சியம்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் திராவிடர் கழகமும், கலைஞரும் என்ற கட்டுரையில் ‘கலைஞரும் சண்முக வேலாயுதமும் சேர்ந்து திராவிடர் கழகக் கொடியை அமைத்தார்கள் என்பது வரலாறு’ என எழுதினார். (இலட்சியப் பாதை 22.4.1994)

கவிஞர் கருணானந்தம் எழுதிய ‘தந்தை பெரியார்’ என்ற பெரியார் வரலாற்று நூலில், “தராசுக் கொடி தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தந்த கொடி, அது புரட்சியின் சின்னமல்ல, மாற்ற வேண்டும் என்பதாக ஒரு கருத்து திருச்சியில் உதயமாயிற்று. பின்னர் பெரியார் கேட்டுக் கொண்ட வண்ணம் பலரும் டிசைன் அமைக்க முயன்றனர்.

‘குடி அரசு’ உதவி ஆசிரியராக அப்போது ஈரோடு வந்திருந்த மு. கருணாநிதி கருப்பு மையையும் தன் விரலின் நுனியிலிருந்து எடுத்த இரத்தமும் கொண்டு இப்போதுள்ள திராவிடர் கழகக் கொடிக்கு வடிவமைப்பு தந்தார்.

அதுதான் பின்னர் 27.4.1946 இல் பெரியாரால் அங்கீகாரம் பெற்றது” என (பக்கம் 172 இல்) எழுதினார்.

இந்நிலையில் தான் திருப்பூர் அருகே உள்ள சோமனூரில் தி.மு.க கொடியை ஏற்றி வைத்து கலைஞர் கருணாநிதி ஆற்றிய உரை 11.7.1994 ‘முரசொலி’யில் வெளிவந்தது. அதில் :

“நானும் கருணானந்தமும், தவமணி ராஜனும், சண்முக வேலாயுதம் என்ற நண்பரும், ஆர்.டி. முத்து என்பவரும் இவர்களெல்லாம் கலந்து ஆலோசித் தோம். கடைசியாக நான்சொன்னேன். ஏன் தமிழகத்திலே இருக்கின்ற இழிவைக் காட்டுகின்ற வகையிலே கருப்பு வண்ணமும் அதை நீக்குகிற வகையிலே புரட்சிகரமாக சிவப்பு வண்ணமும் பொதிந்த ஒரு கொடி அமைந்தால் என்ன? என்று கேட்டேன்.

அதற்கு அவர்களும் அப்படியே இருக்கலாம் என்று சொன்னார்கள்.... அந்த சிவப்பு வண்ணத்தை அப்பொழுது வட்ட வடிவமாக நாங்கள் எண்ணவில்லை. இரத்தம் தெறிப்பதுபோல, அதாவது புரட்சித் தெறிப்பது போல இருக்க வேண்டும் என்று கருதினோம்” என்று கூறிவிட்டு, ‘குடி அரசு’ அலுவலகத்திலே கருப்பு மை இருந்தது, சிவப்பு மை இல்லாததால் குண்டூசியில் விரலில் குத்தி இரத்தத்தை எடுத்து வரைந்தேன் என்று பேசியிருந்தார்.

(சிக்கனக்கார மேனேஜர் கரிவரத சாமி இவர்கள் ஊற்றிக் கொள்வார்கள் என்று சிவப்பு மை புட்டியை வெளியே வைக்க மாட்டார் என்று கூறும் கலைஞர், கருப்பு மை மட்டும் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் வெளியே இருந்ததாக கூறியிருப்பது நல்ல வேடிக்கைதான்) அடுத்த நாள் காலை பெரியாரிடம் காட்டியபோது நன்றாயிருக்கிறது என்று ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

அப்போதே - இதை திராவிடர் கழகம் மறுத்தது. (23.7.1995 ‘விடுதலை’) பெரியார் “பிறந்த நாள் மலரில் கழகம் பிறந்ததும் கொடி பறந்ததும்” என்ற தலைப்பில் - கொடி பறந்த உண்மை வரலாறு பதிவு செய்யப்பட்டது.

தோழர் தவமணிராசனை - கலைஞர் கருணாநிதி சாட்சிக்கு அழைத்ததால் அப்போது உயிருடன் இருந்த, அவரது கருத்தையே கேட்டு வாங்கி ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிட்டது. அப்போது சிவகாசியில் இருந்த தோழர் தவமணி ராசன் 17.7.1995 இல் எழுதிய கடிதத்தை ‘விடுதலை’ ஏடும் 23.7.1995 இல் வெளியிட்டது. அதில் தவமணிராசன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“கரூர் பொதுக் கூட்டத்தில் கொடி எப்படி இருந்தால் நலம் என தான் கருதியாகக் கருப்பு சிவப்பு நிறங்களைப் பொருத்தமெனக் கூறி, (அய்யா அவர்கள்) மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி தெரிவித்தார்கள். மறு நாள் காலைப் பத்திரிகைகளில் அச் செய்தியைப் படித்தவுடன் நண்பர் ஈரோடு திரு. சண்முக வேலாயுதம் கையில் கருப்புக்கொடி “மாதிரி பிளாக்” செய்து கொண்டு வந்து என்னிடம் காட்டி அய்யாவுக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார். உடனே, “குடிஅரசு” அச்சகத்தில் ஒரு சிறிய அட்டையில் அச்சிடச் செய்தேன். உடனிருந்த கவிஞர் கருணானந்தம் அவர்கள் உத்தரவு பெற்று, கவிஞர் அவர்களையே கலைஞரை அழைக்கும்படி நான் கூறியிருந்ததால் எங்களுடன் கலைஞர் குடி அரசில் குடி இருந்தார்.

அச்சிட்டு வந்த கொடியில் நடுவில் வட்டம் சிவப்புக் கலர் இல்லாது இருந்தது. கலைஞர் தயங்காமல் தன் விரலில் குண்டூசியால் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து அவ்வட்டத்தில் பொட்டிட்டார். அந்த அட்டையை அன்றே அய்யா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அய்யா அவர்கள் அடுத்து ஈரோடு வந்தபோது அக்கொடிக்கு ஒப்புதல் தந்து திரு. சண்முக வேலாயுதம் அவர்களைப் பாராட்டினார்கள்” - என்று தெளிவுபடுத்தினார். கொடியை உருவாக்கியது சண்முகவேலாயுதம் தான் என்பதை கலைஞர் சாட்சிக்கு அழைத்த தவமணிராசன் அவர்களே வெளிப்படுத்தி விட்டாரே” என்று எழுதியது ‘விடுதலை’ பெரியார் மலர். தொடர்ந்து ‘விடுதலை’ மலர் இவ்வாறு கேட்டது:

“குண்டூசியால் குத்தி தன் விரலிலிருந்து ரத்தத்தை நடுவில் கலைஞர் வைத்திருந்தாலும், அது அந்த வாலிப வயதின் துடிப்பு என்று பாராட்டலாமே தவிர, அவர் அவ்வாறு செய்யாவிட்டால் சிவப்பு என்கிற நிறமே கழகக் கொடிக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்றோ, அதன் காரணமாக திராவிடர் கழகக் கொடியே உருவாகியிருக்காது என்றோ கூற முடியுமா? அப்படியே இரவில் அவர் வைத்த அந்த சிவப்பு நிறம் காலை வரை அப்படியே சிவப்பாகவா இருந்திருக்கும்? பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டாமா?

கொடிக்கான கரு கொடுத்தவர் தந்தை பெரியார்; உருகொடுத்தவர் தோழர் சண்முக வேலாயுதம். கருவும் உருவும் கொடுத்தவர்கள்தான் மூல கர்த்தாக்களாக இருக்க முடியுமே தவிர அதற்கு வர்ணம் தீட்டியவர்கள் எல்லாம் உரிமை கொண்டாட முடியாது. வீட்டைக் கட்டி குடிபோகும் போது ரிப்பன் எடுத்துக் கொடுத்தவர்கள் எல்லாம் வீட்டைக் கட்டிய மேஷனாக முடியாது. ஆனால், சோமனூர் உரையில் கருணாநிதி அவர்கள் என்ன சொல்லுகிறார்?

“நானும் கருணானந்த மும், தவமணிராசனும், சண்முக வேலாயுதம் என்ற நண்பரும், ஆர்.டி. முத்து என்பவரும் இவர்களெல்லாம் கலந்து ஆலோசித்தோம். ஏன் தமிழகத் திலே இருக்கின்ற இழிவைக் காட்டுகின்ற வகையிலே கருப்பு வண்ணமும் அதை நீக்குகிற வகையிலே புரட்சிகரமாக சிவப்பு வண்ணமும் பொதிந்த ஒரு கொடி அமைந்தால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்களும் அப்படி இருக்கலாம்” என்று சொன்னார்களாம்.

கதை எப்படி போகிறது? இவர் சொன்னாராம். மற்றவர்கள் ஆமாம் சாமி போட்டார்களாம். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? கொடிக்குக் கரு, கருத்து, வடிவம் முதன்முதலாக கொடுத்ததெல் லாமே தான்தான் என்றல்லவா சாதிக்கப் பார்க்கிறார்.

சாட்சிக்கழைத்த தவமணிராசனும் கூறுகிறார். அதற்கு முன்பாகவே தவிட்டுப் பாளையத்தில் கொடியை ஏற்றி வைத்த (3.2.1946) தோழர் கரூர் என். ரத்னமும் தந்தை பெரியார் அவர்களின் முன்னிலை யிலேயே தெளிவுபடுத்திவிட்டார். தோழர் பி. சண்முக வேலாயுதம் அவர்களால்தான் திராவிடர் கழகக் கொடி சித்திரிக்கப்பட்டது என்று, ‘குடிஅரசி’லும் பதிவாகியுள்ளது.

இந்த இடத்தில் இன்னொரு ஆதாரம் அந்த ஆதாரம் கூட கலைஞர் கொடுத்ததுதான். அதுவும் அவர் எழுதிய தன் வரலாற்று நூலான “நெஞ்சுக்கு நீதி” தான்.

‘குடி அரசு’ அலுவலகத்தில் அவர் பணியாற்றியது குறித்து 18 ஆவது பகுதியில் (பக்கம் 89 முதல் 93 வரை) “குளிப்பது குற்றமா?” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அந்தக் கால கட்டத்தில்தான் கழகக் கொடியைத் தாம் உருவாக்கியதாகக் கூறும் கலைஞர் அவ்வளவு பெரிய சாதனையை ஏன் “நெஞ்சுக்கு நீதியில்” எழுதவில்லை? துரும்பைத் தூணாக்கிக் காட்டி அதற்குத் தங்கப் பூணும் போட்டுக் காட்டுவதில் வல்லவரான கலைஞர், கொடியை உருவாக்கியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விட்டு வைத்திருப்பாரா? கலைஞரைப் பற்றி அறிந்தவர்கள் இந்த இடத்தை ஆழமாகவே எண்ணுவார்கள் என்பதில் அய்யமில்லை.

ஏன் அப்பொழுது அவர் எழுதவில்லை? அது உண்மையில்லை. அதனால் எழுதவில்லை. இப்பொழுது ஏன் எழுதுகிறார்? இது பிற்காலத்தில் அவரால் தீட்டப்பட்ட புதிய தல புராணம். அதனால் எழுதுகிறார் பேசி வருகிறார் - என்று எழுதியது விடுதலை பெரியார் 125வது பிறந்த நாள் மலர். (இக்கட்டுரையை எழுதியவர், அப்போது அக்கழகத்தின் உதவிப் பொதுச் செயலாளராக இருந்த கவிஞர் கலி.பூங்குன்றன்)

இப்படி வாதங்களை மறுத்து வினாக்களை அடுக்கி, வரலாற்றுப் புரட்டு என்று எழுதிய அதே திராவிடர் கழகம் - “அதிகாரபூர்வ பெரியார் வரலாறு” என்று அறிவித்துக் கொள்ளும் வரலாற்றில் தாங்கள் எழுதிய மறுப்புகளையே புறந்தள்ளிவிட்டு - பொய்மைக்கு உயிரூட்டத் துடிப்பது வரலாற்று நியாயமா? வரலாற்று துரோகமா என்று கேட்கிறோம்! குழப்பங்களையும், புரட்டுகளையும் தெளிவுபடுத்தும் கடமையைச் செய்ய வேண்டியது தானே ‘அதிகாரபூர்வ வரலாறு’ எழுதுவோரின் கடமை. அதைச் செய்யாமல், ஏற்கனவே பக்கம் பக்கமாக மறுத்தவைகளை, ஓரம் கட்டிவிட்டு, ‘ஆட்சி அதிகாரம் அரவணைக்கிறது’ என்ற சுகத்தில் மயங்கி வரலாற்றுத் துரோகம் இழைக்கலாமா? இரண்டு முறை ஆட்சி அமைக்கும் பொறுப்பு தன்னைத் தேடி வந்தபோதும், பதவி பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று உதறித் தள்ளியவர் பெரியார். அந்தத் தலைவரின் ‘வரலாறு’ - ‘அதிகாரச் சுவைக்காக’ திரிக்கப்படலாமா?

தமிழக அரசு அப்போது தயாரித்த ‘பெரியார்’ எனும் குறும்படத்திலும், திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சாரப் பாடல் ஒலி நாடாவிலும் - திராவிடர் கழகக் கொடியை உருவாக்கியது கலைஞர் தான் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘இது அரசு செலவில் அதிகாரத்தைப் பயன்படுத்திய குற்றம்’ என்று அப்போது விடுதலை மலர் எழுதியது. அதே குற்றத்தை கழகத் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்டுத்தி, வீரமணி இப்போது செய்கிறார் என்று தானே கூற வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, கொடிக்கான வரலாற்றை எழுதும்போது கொடி பற்றிய பெரியரின் கருத்தைப் பதிவு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசிய மல்லவா? “உலகத் தலைவர் பெரியார்” நூலில் (பக்.199) “கறுப்புத் துணியின் மத்தியில் வட்டமாக சிவப்புத் துணி தைத்தக் கொடியை இனி திராவிடர் கழகக் கொடியாகக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரியார் 109 ஆவது (1987) பிறந்த நாள் ‘விடுதலை’ மலரில் திருவத்திபுரத்தில் 9.12.1945 அன்று ஆற்றிய உரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

“கொடி விஞ்ஞான அறிவோடு, நம் லட்சியத்தைக் கிளப்பும், உணர்ச்சியூட்டும் முறையிலும் இருக்க வேண்டும்” என்ற அளவோடு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த முழு உரை கொடி பற்றிய பெரியாரின் பார்வையை விளக்குவதால் மிகவும் முக்கியத்துவமானது. ஏனோ, அவை இந்த வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. பெரியார் தொடர்ந்து பேசுகிறார்:

“அப்படி இன்று ஒரு கட்சிக் கொடியும் இல்லை என்று கூறி கம்யூனிஸ்டு கொடி, ராட்டினக் காலத்தை நினைவூட்டும்படி, மின்சாரக் கருவி எந்திரக் காலத்தில் பழைமையான அரிவாளும், சுத்தியலும் கொண்டிருப்பதையும், தமிழ்க்கொடி - தின்னப்பட வேண்டிய மீனையும், கொல்லப்பட வேண்டிய புலியையும், கண்காட்சிக்கு அனுப்பப்பட வேண்டிய வில்லையும் கொண்டிருப்பது பீரங்கி, வெடிகுண்டு, துப்பாக்கி, அணுகுண்டு காலத்தில் பொருத்த மில்லாமல் இருப்பதைப் போலின்றி, ‘கொடி நம் குறைகளை விளக்கும் தன்மையில், நமக்கு அறிவும், ஆத்திரமும், மானமும், கட்டுப்பாடும் ஏற்படும் தன்மையில் இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

மேலும் காங்கிரஸ் கொடி நான்கு வர்ணத்தை நினைவூட்டுவதுபோல் மூன்று வர்ணத்தில் (நிறத்தில்) காந்தி ஆக்கியிருப்பதாகக் கூறி, ‘இதை ஒழித்து நாசப்படுத்தி, நாம் ஒரு வருணமாக்கி, அதைத் துக்க வருணமாக்க (நிறம்) வேண்டும். வெறும் கருப்பு தான்அது’ என்று கொடியில் கருப்பு நிறம் இருக்க வேண்டியதை முன் மொழிகிறார்.

மேலும், அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த நீதிக்கட்சியின் தராசுக் கொடியும், ‘அர்த்தமில்லாததும், காலத்திற் கேற்றபடியும் இல்லாதிருக்கிறது. தராசுக்கு விளக்கம் கூறுகிறவர்கள் இது நீதியை விளக்கும் சின்னம் என்று கூறுகிறார்கள்.

அது எப்படிப் பொருந்தும்? இன்றைய நிலையில் ஏதாவது ஒரு வகுப்புக்கு (பார்ப்பனர்களுக்கு) அநீதி விளைந்து தானே ஆகும். அதிகமாய் இருப்பவனிடமிருந்து பிடுங்கியாக வேண்டும். பாடுபடாதவனுக்கு சமபங்கு கொடுக்க முடியாது. தேவையும் இருக்காது.

ஆதலால் சமத்துவமாய்க் கொடுப்பதைவிட, தேவை-தகுதி பார்த்து அளிக்க வேண்டும்’ என்று பெரியார் கூறுகிறார். தனித்துவமாய் சமத்துவத்துக்கு நல் விளக்கம் கொடுத்து, புதிய கொடி காலத்துக்கு தக்கவாறும், உணர்ச்சி ஏற்படுத்துமாறும் இருக்க வேண்டும் என்று விளக்கமாக திசை வழிகாட்டி பெரியார் பேசியிருப்பதை வரலாற்று நூல் குறிப்பிடவில்லை.

‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலர் கலைஞர் கருணாநிதிக்கான மறுப்புக் கட்டுரையை இவ்வாறு முடித்திருந்தது.

“வரலாற்றைத் திரிக்கலாம் என்று நினைப்பவர்கள் வரலாற்றால் வெறுக்கப்படுவார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்க வேண்டாம் என்பதே நமது கருத்து”.

நாமும் அதையே திராவிடர் கழகத் தலைவருக்கு கூறி, முடிக்கிறோம். “வரலாற்றைத் திரிக்கலாம் என்று நினைப்பவர்கள் வரலாற்றால் வெறுக்கப்படுவார்கள். தி.க. தலைவர் கி. வீரமணி இந்த நிலையை அடைந்திருக்க வேண்டாம் என்பதே நம் கருத்து.”

Pin It