மயிலாடுதுறையில் (1971) பிரபல ஆபரண நிறுவனம் வெள்ளியில் பிள்ளையார் சிலை செய்வதற்காக தயாரித்த மோல்டை கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் வழிபாட்டுக்காக பொதுமக்கள் பார்வையில் படும்படி சிலர் வைத்துவிட்டனர்.

மக்கள் நெருக்கடி நிறைந்த அந்த இடத்தில் அரசு அனுமதி பெறாமலேயே சில நாட்களில் திடீர் பிள்ளையார் கோவில் ஒன்றும் எழுப்பப்பட்டது. இது பேருந்து வந்து போவதற்கும், பொதுமக்களுக்கும் பெறும் இடையூறாக இருந்ததால் உடனடியாக அகற்றக் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட வில்லை.

எனவே அதற்கு எதிர்வினை ஆற்ற நினைத்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், பிள்ளையார் தன் துதிக்கையால் பெண்ணின் பிறப்புறுப்பில் கை வைத்து அரக்கர்களின் பிறப்பை நிறுத்தியதாக கூறப்படும் ஆபாசப் புராணக் கதையை "வல்லபை கணபதியின் சல்லாப வேட்டை!" என தலைப்பிட்டு சீர்காழி கழகத் தோழர் பெல் ஆர்ட்ஸ் மணி அவர்களை கொண்டு ஓவியமாக வரையச் செய்து, பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.

dk cadres

(படம்: தோழர்கள் புடைசூழ மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப் பட்ட வல்லபை கணபதி. இந்த படத்தில் எனது தந்தையார் மா.க.கிருட்டிணமூர்த்தி, அவரது இளைய சகோதரர்கள் கலி.பூங்குன்றன்,மற்றும் விடுதலை இராஜேந்திரன் மூவருமே இருக்கிறார்கள். கவிஞர் அருகில் கழகப் பேச்சாளர் திருத்துறைப்பூண்டி சாந்தன்)

மயிலாடுதுறையில் பெறும் சர்ச்சையை கிளப்பிய அந்த தட்டி இரவோடு இரவாக சில காலிகளால் கிழிக்கப்பட்டது. கழகத் தோழர்கள் ஆத்திரமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி, தீமிதி, என மயிலாடுதுறையே அமர்க்களப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்தார்.

பேருந்து வந்து போக சிரமமான இடத்தில் இப்படி ஒரு கோவில் எழுப்பப்பட்ட செய்தியை கழகத் தோழர்கள், தந்தை பெரியார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பினர்.

எனது தந்தையார் நடந்த சம்பவத்தை ஒரு துண்டு சீட்டில் எழுதி அதை கழகப் பொறுப்பாளர்கள் மூலம் மேடையில் இருந்த அய்யாவின் பார்வைக்கு அனுப்பினார்.

பெரியார் அவர்கள் அதைப் படித்து விட்டு 'இது என்ன அனுமதி வாங்கி கட்டியதா?' எனக் கேட்க, அருகில் இருந்த தோழர்கள் "இல்லை! இல்லை!!" என்று மறுத்தனர்.

பெரியார் அவர்கள் அந்த தோழர்களை ஏறிட்டு பார்த்து, கடிதாசியை தூக்கிப் போட்டு விட்டு எதுவும் பதிலுரைக்காமல் உரையாற்றி விட்டு, அடுத்து மயிலாடுதுறை அருகே நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்று விட்டார்.

பெரியார் அவர்கள் தோழர்களை ஏறிட்டுப் பார்த்ததையும், காகிதத்தை அவர் தூக்கிப்போட்ட விதத்தையும் கண்ட சில இளைஞர்கள் அய்யா சித்தர்க்காட்டை அடைவதற்குள் அந்தக் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.

இந்த நிகழ்வை கேட்கும் பொழுது

"வெண்தாடி அசைந்தால் போதும்;
கண்ஜாடை தெரிந்தால் போதும்;
கறுப்புடை தரித்தோர் உண்டு!
நறுக்கியே திரும்பும் வாட்கள்!!"

என்ற கலைஞரின் வரிகள் தான் நினைவில் வந்து போகிறது.

பிள்ளையார் கோவிலை பெரியாரே இடித்ததாகக் கூறி அய்யா அவர்களை முதல் குற்றவாளியாக சேர்த்து மயிலாடுதுறை கழகத்தோழர்கள் மீது பின்னர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

விசாரனைக்குப் பின் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இளைஞர்கள் பிற்காலத்தில் அரசு உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றது நினைவில் கொள்ள வேண்டிய செய்தி.

- கி.தளபதிராஜ்

Pin It