அரசியல் சட்டத்தில் தனியார் பள்ளிகள் என்ற சொல்லே காணப்படாது. சிறுபான்மையோர் நலனிற்காகக் கல்வி நிறுவனங் களை உருவாக்கி நடத்தும் உரிமை மட்டும் வழங்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம்தான் தனியார் பள்ளிகளைக் குறிப்பிடுகின்றது. தனியார் என்றால் சிறப்பு, அரசு என்றால் மட்டம் என்ற எண்ணத்தை மக்களிடம் திட்டமிட்டு விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழல் மிக்கது தனியார்தான் என்பது அறியப்பட வேண்டும். கோடிக்கணக்கில் வங்கிக் கடன்களைத் திருப்பித் தராது ஓடியவர்கள் தனியார்தான். எந்த தனியார் பள்ளியை விடவும் சிறந்த கல்வி அளிக்கும் கேந்திரிய மற்றும் நவோதயாப் பள்ளிகள் அரசால் நிர்வகிக்கப்படுபவைதான். உயர் கல்வியிலும் தலையாய நிறுவனங்கள் அரசால் நடத்தப் பெறுபவையே. இத்துனைச் சிறப்புமிக்கக் கல்வி நிறுவனங்களை நடத்தும் அரசு ஏன் தனது பொது மக்களுக்கான பள்ளிகளில் தரமான கல்வியை உறுதி செய்ய முடியவில்லை என்று வினாவுவதே அவற்றின் தரவீழ்ச்சிக்குக் காரணத்தை கண்டறிய உதவும். மிக ஏழ்மையிலுள்ள குழந்தைகள் நாடிவரும் தம்பள்ளிகளில் அக்கறை ஏன் காட்டவில்லை என்றால் அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட இனத்தவரைச் சார்ந்தவர் என்ற உண்மை வெளிப்படும். அவர்களது வாழ்வில் சிறிது ஒளியூட்டக் கூடியக் கல்வியை மறுப்பது அரசியல் சட்டத்திற்கு முரணாகும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த கால்நடை மருத்துவம் பயின்ற அனந்தகுமார், இ.ஆ.ப. தம் மகளைத் தம் வீட்டருகில் இருந்த அரசுத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தது பெட்டிச் செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டன.

அக்குழந்தை சேர்ந்தவுடன் பள்ளி ஆய்வாளர் தொடர்ந்து அப்பள்ளியைக் கண்காணித்து வந்தார். ஆசிரியரில்லா நாட்களே இல்லை. அவர்கள் கற்பித்தலையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சித் துப்புரவாளர் ஒவ்வொரு நாளும் இருமுறை பள்ளிக்கு வந்து கழிப்பிடத்தைத் தூய்மைப் படுத்தினர். அனைத்துக் குழந்தைகளும் அமர்ந்து படிக்கத் தேவையான அமர்விடங்கள் வந்து சேர்ந்தன. அக்குழந்தையும் பள்ளி சத்துணவுத் திட்டத்தில் பங்கேற்றதால் ருசிமிக்க உணவு அனைத்துக் குழந்தை களும் பெற இயன்றது. ஆக அக்குழந்தையின் சேர்க்கை அனைத்துக் குழந்தைகளும் தூய்மையானச் சூழலில் நல்ல கல்வி பெற முடிந்தது. இதுதரும் பாடத்தினைப் புரிந்து கொண்டால் எல்லாஅரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி மட்டுமல்லாது, கற்றல் சூழ லையும் மேம்படுத்த முடியும். ஏதிலார்க் கான பள்ளி என்ற பெயரை மாற்றுவதே அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும்.

தனியார் பள்ளிகள் நிர்வாகியின் நேரடிப் பார்வையில் இயங்குகின்றன. பல பள்ளி களிலும் ஓய்வுபெற்ற அரசு உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளித் தலைமை யாசிரியரோ கல்வி அதிகாரியோ கல்வி ஆலோசகர் என்ற பெயரில் முழுநேரப் பணியாளராக இருக்கின்றார்கள். தனியார் பள்ளிகளில் பல ஆசிரியர்களும் ஆசிரியர் கல்வியை முடித்தவரல்லர். ஆனால் அவர் களுக்கு வழிகாட்டுபவராக அனுபவமிக்க ஆலோசகர்கள் இருக்கின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகள் சென்னையிலிருந்து நிர்வகிக் கப்படுகின்றது. ஆசிரியர் நியமனம், மாறுதல் ஆகியவையே தலையாய செயல்களாயிற்று. வகுப்பறைக் கற்பித்தலில் கவனமில்லை. கல்வி உரிமைச் சட்டம் விதித்துள்ள பள்ளி மேலாண்மைக்குழு பல்லும், சொல்லும் இல்லாத அமைப்பு. ஆண்டிற்கு நான்கு, ஐந்து முறை கூடினாலே சிறப்பு. அக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் தலைமை யாசிரியர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படு பவர்கள்.

கோத்தாரிக் கல்விக் குழுவின் தலைசிறந்த பரிந்துரை அருகமைப் பொதுப்பள்ளி முறை யாகும். இதன்படி ஒவ்வொரு குழந்தையும் தன் வீட்டருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கும் உரிமை பெற்றவர். அருகிலுள்ள குழந்தைகள் அனைவரையும் சேர்ப்பது பள்ளியின் கடமையுமாகும். குறிப்பிட்ட எல்லைக்குள் பள்ளியை நிறுவுவது அரசின் கடமையும் பொறுப்புமாகும். இதனை முழுமையாகச் செயல்படுத்தியிருந்தாலே ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியினை அளித்திருக்க முடியும்.

தற்சமயம் இக்கொள்கையினின்று வெகு விலகிச் சென்றுவிட்டோம். வீட்டருகில் உள்ள பள்ளியைப் புறக்கணித்து தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் சிற்றுந்தில் பயணித்துக் கற்பது என்ற நிலை உருவாகி விட்டது. குழந்தையின் உடல் மற்றும் மனநலம் பற்றிக் கவலைப்படாது பெற்றோர் தனியார் பள்ளியை நாடுகின்றனர்.

இன்று நாட்டளவில் தனியார் மையம் என்பது அரசின் விருப்பச் செயலாக மாறி விட்டது. தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்களும் தனியாரால் பெரும் அளவில் தொடங்கப் பெற ஊக்கமளித்து உள்ளனர். உச்சநீதிமன்றமும் கல்வி சேவை அல்ல, அது ஒரு வணிகமே, ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கி நிர்வகிக்கும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு என்று அறிவிற்குப் பொருந்தாதத் தீர்ப்பினை வழங்கி மழலையர் கல்வி முதல் மருத்துவக் கல்வி ஈறாகத் தனியார் நிறுவனங்கள் பட்டி தொட்டியெல்லாம் தொடங்க வித்திட்டது மாபெரும் அநீதி.

அத்தீர்ப்பினைத் திரும்பப்பெற உச்சநீதி மன்றமே தாமாக முன்வர வேண்டும். அத்தீர்ப்பு உள்ளவரை கல்வியில் தனியாரது நுழைவைக் கட்டுப்படுத்தவோ, மறுக்கவோ இயலாது. பூனைக்கு மணி கட்டுவது யார்? அரசு உதவியோ, வரிச் சலுகையோ பெறும் மருத்துவமனை களில் 40 இடங்கள் இலவச மருத்துவ சேவைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஏறக்குறைய அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களும் வரிச்சலுகை பெற்றோ, பெற வேண்டுமென்றோ தொடங்கப்பட்டவை. அவையும் இலவசக்கல்வி அளிக்க இடங்கள் ஒதுக்க வேண்டுமென்று விதி இயற்ற அரசு தயங்குவதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.

தரமான கல்வி அளிப்பது தம் கடமை யென்று அரசுகள் உணராத வரையில் அரசுப் பள்ளியா, தனியார் பள்ளியா என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

ச.சீ.இராஜகோபாலன்

Pin It