கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பின், பத்து ஆண்டுகளுக்குள் - அதாவது 1960க்குள் 14 அகவைக் குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி அளித்திட அரசு முயல வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அய்ம்பது ஆண்டுகள் கழித்து - 2010இல் தான் இலவய, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடப்புக்கு வந்தது. 2018ஆம் ஆண்டில் ஆறு அகவை எய்திய சிறுவர்களில் 96 விழுக்காட்டினர் பள்ளியில் பயில் கின்றனர். ஆனால் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.

‘பிரதாம்’ என்கிற தொண்டு நிறுவனம் 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது “கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை” (Annual Status of Education Report – ASER - ஆசர்) எனப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளைக் கொண்ட 596 மாவட்டங்களில் 5.5 இலட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 930 ஊர்களில் 15,749 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டிற்கான ஆசர் அறிக்கை 2019 சனவரியில் வெளியிடப்பட்டது. ஒவ்வோராண்டும் இந்த அறிக்கை இந்திய அளவில் கல்வியாளர்கள் மட்டுமல்லாது மற்றவர்களின் கவனத் தையும் ஈர்ப்பதாக அமைந்து. அதன் மீதான விவாதங்கள் நடக்கின்றன.

ஊரகப் பகுதியில் 2018இல் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் 74.6 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான தாய்மொழிப் பாடப் புத்தகத்தைப் படிக்கும் திறன் பெற்றிருந்தனர். இது 2008ஆம் ஆண்டில் 84.8 விழுக்காடாக இருந்தது. அதாவது எட்டாம் வகுப்பை முடிக்கும் மாணவர் களில் நான்கு பேரில் ஒருவருக்குப் படித்தறியும் திறன்கூட இல்லை; எட்டாவது படித்தாலும் கிட்டத்தட்ட எழுத்தறிவற்ற நிலையிலே இருக்கின்றனர் என்கிற கொடிய அவலம் அனைவரும் கவலையுடன் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இதேபோன்று எட்டாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் இரண்டாம் வகுப்புக்குரிய எளிய வகுத்தல் கணக்கையும் செய்ய முடியவில்லை. உலக அளவிலான தரத்தோடு ஒப்பிடுகையில், நமது எட்டாம் வகுப்பு மாண வனின் சராசரி அறிவுத் திறனானது கொரிய நாட்டின் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவரின் அளவுக்குத்தான் உள்ளது.

state educ census 600மூன்றாம் வகுப்புப் பயிலும் மாணவர்களில் 30 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே இரண்டாம் வகுப்புக்கான இரட்டை இலக்கக் கழித்தல் கணக்கைச் செய்தனர்; மொழிப் பாட நூலைப் படித்துக் காட்டினர். கல்வித் தரத் தாழ்ச்சியில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 25 விழுக்காட்டினருக்கு என்ன எழுத்து என்பதைக்கூடக் கண்டறிய முடியவில்லை. 37 விழுக்காடு மாணவர்களுக்கு என்ன எழுத்து என்று தெரிகிறது; ஆனால் எழுத்தைக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை.

2018ஆம் ஆண்டின் ஆசர் அறிக்கையின்படி. ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சில மாணவர்களைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் பயிலும் வகுப்புக்கேற்ற பாடங்களைப் பயிலும் திறனற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பணம் கட்டிப் பயிலும் தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளைவிட சிறிது மேம்பட்ட நிலை இருந்த போதிலும் அவற்றிலும் கல்வித் தரம் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மாணவர்கள் தமிழைப் படிக்கத் தெரியாத - படித்தாலும் புரிந்து கொள்ளாத பெரும் கேடான நிலை இருக்கிறது. 2018இன் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு மாணவர் களில் 10.2 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் வகுப்புக் கான தமிழ்ப் பாடத்தைப் படித்தனர். 2016இல் இது 17.7 விழுக்காடாக இருந்தது. தனியார் பள்ளிகளின் நிலையோ இன்னும் கேடான நிலையில் உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 7.6 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான தமிழ்ப் பாடத்தைப் படித்தனர்.

தமிழ்மொழியைக் கற்றலில் மட்டும் இந்த இழிநிலை இல்லை; இந்தி உள்ளிட்ட எல்லாத் தாய்மொழிகளையும் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதில் இதே அவல நிலைதான் இருக்கிறது. தாய்மொழியைக் கற்பதில் ஏன் இந்தத் தடுமாற்றம் -வீழ்ச்சி? பிறந்து வளரும் குழந்தை தன் தாயின் வாய் மொழி மூலம் ஒரு மொழியைக் கற்பதால்தான் தாய்மொழி எனப்படுகிறது. ஆனால் குழந்தைக்கு அம்மா-அப்பா என்ப தற்கு மாறாக, ‘மம்மி’ - ‘டாடி’ என்று சொல்லித் தரப்படுகிறது. இயல்பான முறையில் தாய்மொழியை அறிகின்ற - கற்கின்ற வாய்ப்பு குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது. மழலையர் பள்ளிகளில் தமிழ்ப் பாட்டுக்குப் பதிலாக ஆங்கிலப் பாடல்கள் பொருள் புரியாமலேயே கிளிப்பிள்ளை போல் சொல்லித் தரப்படுகின்றன. தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக முதலில் ஆங்கில எழுத்துகள் கற்பிக்கப்படுகின்றன. மழலையர் பள்ளி யில் சேரும்போதே தன் குழந்தைக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற மோகத்தால் பெற்றோர் தம் குழந்தைகளிடம் ஆங்கிலச் சொற்கள் மிகுதியும் கலந்த தமிழில் பேசுகின்றனர்.

பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்களின் ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கு நடுவண் அரசும், மாநில அரசுகளும் கைக்கூலிகளாக மாறி, ஆங்கில வழிக் கல்வியைக் கடந்த முப்பது ஆண்டுகளில் ஊக்குவித்ததால் தாய்மொழியைப் படிக்கத் தெரியாத தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக் கின்றன. 2018ஆம் ஆண்டின் ஆசர் அறிக்கை விடுக்கும் இந்த எச்சரிக்கையை உணர்ந்து, ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்து, தாய்மொழிவழிக் கல்வியை மீட்டெடுக்காவிட்டால், இந்தியத் தாய்மொழிகளின் அழிவைத் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளையும் சேர்த்து ஆங்கில வழியில் 60 விழுக்காடு மாணவர்கள் படிக்கின்றனர். ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு மொழிப் பாடமாகப் படித்த போதிலும் ‘தினத்தந்தி’ நாளேட்டைக்கூட படித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் அவர்களின் தமிழறிவு இருக்கிறது. ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் தலைமுறையால் பழந்தமிழ் இலக்கி யத்தை மட்டுமல்லாது, தற்கால இலக்கியத்தையும் படிக்க முடியாது.

நோபல் பரிசு பெற்ற தமிழரான வெங்கடராமன் இராம கிருட்டிணன் சென்னையில் 13-1-19 அன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, “இளம்பிள்ளைகள் தங்கள் தாய்மொழியில் கற்பதன் மூலமே அறிவியலில் முன்னேற முடியும். 95 விழுக்காடு மக்களுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில் அறிவியலை ஆங்கில மொழிக்குள் அடக்குவது சரியா? நீங்கள் பிறந்து வளர்ந்து வாழும் சூழலுடன் பொருந்தியதாக உங்கள் கல்வி மொழி இருத்தல் வேண்டும். சில பேர் விதி விலக்காக ஆங்கிலத்தில் திறமை பெற்றிருக்கலாம். ஆனால் தாய்மொழி வழியில் கல்வி கற்பதே எல்லா வகையிலும் சிறந்தது” என்று வலியுறுத்தினார்.

ஆனால் தமிழ்நாட்டு அரசு அங்கன்பாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற் கட்டமாக 2381 மையங்களில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளை 2019 சனவரியில் தொடங்கியுள்ளது. ஆங்கில வழியிலான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேருவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, 3400 பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழலையர் பள்ளிகளைத் தமிழ்நாட்டு அரசு தொடங்குவது என்பது தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகும்.

கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரத்தின் வீழ்ச்சி என்பது நேரடியாகத் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத் தப்பட்ட வகுப்புகளின் மாணவர்களின் கல்வியின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறது. கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக 5ஆம் வகுப்பு வரையிலும் 8ஆம் வகுப்பு வரையிலும் எந்தவொரு மாணவனையும் ‘பெயில்’ ஆக்கக் கூடாது என்று 2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தில் இருந்த விதியை மோடி அரசு 2018இல் நீக்கி விட்டது. தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் மேலும் ஓராண்டு படிக்கச் செய்வதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்தலாம் என்று அரசு கருதுகிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிமை மாநிலங்களின் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் ‘பெயில்’ ஆக்கும் திட்டத்தை எதிர்க்கின்றனர். பள்ளிகளில் மாணவர் களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குரிய வழிமுறை களைக் கண்டறிந்து செயல்படுத்தாமல், மாணவர்களைப் ‘பெயில்’ ஆக்குவது என்பது செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது போன்றதாகும் என்று கூறுகின்றனர்.

எட்டாம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி முறை தற்போதுள்ள நிலையிலேயே சாதி காரணமாகவும் வறுமை காரணமாகவும் மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையி லேயே கைவிடும் நிலை இருக்கிறது. முதல் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 5ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடிக்கும் முன பள்ளிகளிலிருந்து நின்று விடுகின்ற வர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே தடையற்ற தேர்ச்சி என்ற நிலையை நீக்கி விட்டால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக மாகும். இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்கள் தொடக்கக் கல்வியும் பெற முடியாத நிலை ஏற்படும். கல்வி உரிமைச் சட்டத்தில் இலவயக் கல்வி என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 விழுக்காடு மாணவர் கள் தனியார் பள்ளிகளில் பணம் கட்டிப் படிக்கும் அளவுக்குக் கல்வியில் தனியார் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தனி யார் பள்ளிகளின் பெருக்கம் இடை நிற்றல் அதிகமாவதற்கு வழிகோலும்.

பள்ளிகளில் கல்வியின் தரம் சீரழிந்ததற்கு முதன்மை யான காரணம் தாராளமயம், தனியார் மயம் என்ற பெயரில் அரசுகள் கல்வி அளிக்கும் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்ததே ஆகும். கல்வி தனியார்க்குத் திறந்துவிடப்பட்டதால் கிராமப் புறங்களிலும் ஆங்கிலவழிப் பள்ளிகள் புற்றீசல் போல் தோன்றி யுள்ளன. ஆசிரியர் பயிற்சியும் தனியார் மயமாக்கப்பட்டதால் கடந்த முப்பது ஆண்டுகளில் முறையான பயிற்சி பெறாத வர்களே அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களானார்கள். கல்வி வணிகமயமானதால் கை யூட்டும் ஊழலும் பெருகி கல்வியின் தரம் சீர்கெட்டது. நகரங்களில் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே சிறந்த பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. நடுத்தர - ஏழைக் குடுமபங்களின் பிள்ளை கள் தரமற்ற பள்ளிகளில் தான் படிக்க முடியும்.

முப்பது ஆண்டுகளுக்குமுன் ஏழை-பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமமான கல்வி வழங்கப்பட்டது. இந்நிலையை மீண்டும் அடைவதற்கு முதலில் முன்பு இருந்தது போல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வி மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சி பெற்ற அய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போல் பள்ளிக்கல்வி முழுவதும் அரசுப் பள்ளிகள் மூலம் என்று ஆக்கிட வேண்டும். பள்ளிகளில் கல்வியின் தரத்தை மீட்டெடுப்பதற்கான முதற்படி இதுவே யாகும்.