கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தப் பிரச்சினையில் அரசின் பங்கு பற்றியும், காவல்துறையின் பங்கு பற்றியும் பேசாத ஊடகங்களும், திமுக மற்றும் திமுகவின் கொத்தடிமைகளும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றியும், ஒரு முதலாளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையும் தாங்க முடியாமல் ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்.

 அத்தோடு நிற்காமல் கேடுகெட்ட அயோக்கியத்தனமான அவதூறுகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி போராடியவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போல சித்தரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

kallakurichi schoolஒரு மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட தங்களுக்கு படியளக்கும் எஜமானனுக்கு எந்த இழுக்கும் வந்து விடக்கூடாது என்ற அடிமைப் புத்திதான் இவர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

போராட்டம், போராட்டக்காரர்கள் என்ற வார்த்தையை அநேகமாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் எந்தப் பத்திரிகைகளும் பயன்படுத்தவில்லை. மாறாக கலவரக் கும்பல், வன்முறைக் கும்பல் போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. அதே போல எந்த ஊடக ஓநாய்களும் சக்தி மெட்ரிக் பள்ளி என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் மிகத் தந்திரமாக தனியார் பள்ளி என்றே பயன்படுத்தின.

இப்படி பள்ளியின் பெயரைக்கூட குறிப்பிடாமல் ஊடக அறத்தைக் காப்பாற்றிய அந்தப் பத்திரிகையாளர்களையும், பத்திரிகை முதலாளிகளையும் ஊடக விபச்சாரிகள் என்று ஏன் நாம் அழைக்கக் கூடாது?.

இந்தப் பிரச்சினையில் திட்டமிட்டு கலவரம் நடந்ததாக அரசு, காவல்துறை, நீதிமன்றம் என அனைத்துமே ஒரே குரலில் சொல்கின்றன. ஆனால் நான்கு நாட்களாக மகளின் மரணத்திற்கு நீதிகேட்டு அலைந்த அந்த பெற்றோருக்கும், ஊர்ப்பொது மக்களுக்கும் காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் கொடுத்த மரியாதை என்ன?

சக்தி மெட்ரிக் பள்ளியின் பண பலமும், அரசியல் பலமும் காவல்துறையை மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்வதில் இருந்து காப்பாற்றவும், பள்ளியின் முன்னால் நாயைப் போல காவல் காக்கவும் செய்தன.

பள்ளியின் தாளாளரான ரவிக்குமார் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதப் பயிற்சிகள் மேற்கொள்ள பல முறை இடமளித்தவர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்தாலும் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளோடும் நட்பு பாராட்டுபவராகவும், அவர்களுக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கொடை வள்ளலாகவும் இருந்துள்ளார்.

அதனால்தான் இந்தப் பிரச்சினையில் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அந்தப் பள்ளியில் இதற்கு முன்பே சில மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அப்போதும் காவல்துறையும், அரசு நிர்வாகமும் பள்ளிக்குச் சாதகமாகவே செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 வருடங்களுக்கு முன்பே அந்தப் பள்ளியை இழுத்து மூடச் சொல்லி போராட்டம் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்த போராட்டமானது பல ஆண்டுகளாக மக்களின் மனங்களின் கனன்று கொண்டிருந்த அந்தப் பள்ளிக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாகும்.

தற்போது இறந்த மாணவியின் மரணத்தையும் மிக அலட்சியமாகவும், திமிரோடும் தன்னுடைய அரசியல் அதிகார பலத்தால் மூடி மறைத்து விடலாம் என்ற நோக்கத்தில்தான் பள்ளி நிர்வாகம் அணுகியுள்ளது. அதற்கு மாணவியின் அம்மா கொடுத்த பேட்டிகளே சாட்சி. அதில்

 “எனது மகள் அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்தாள். பதினொன்றாம் வகுப்பு வெளியே சென்று படிப்பதற்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டோம் ஆனால் தர மறுத்தனர். இதையடுத்து எனது மகள் அங்கேயே படிப்பைத் தொடர்ந்தாள். பின்னர்‌ அவள் 12ஆம் வகுப்பு சென்ற பிறகு கடந்த ஜூலை 1ஆம் தேதி தான் பள்ளி விடுதியில் சேர்த்தேன். ஆனால் 13ஆம் தேதி எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் உங்கள்‌ மகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று."

 “அவள் உயிருடன் இருப்பதாகக் கூறினர். ஆனால், அடுத்த அரை மணி‌நேரத்தில் எங்களை மீண்டும் அழைத்து உங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்”.

 “இதையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தபோது எங்களது மகள் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாகக் கூறினர். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த எனது மகளின் உடலைச் சென்று பார்த்தபோது தலை மற்றும் மார்புப் பகுதிகளில் மட்டுமே அடிபட்டு இருந்தது. பள்ளிக்குச் சென்று, எங்கள் மகள் உயிரிழந்த இடத்தைப் பார்த்தபோது அங்கு இரத்த அடையாளம் இல்லை,".

“பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ பதிவைக் காட்ட வலியுறுத்தினோம் ஆனால் மறுத்து விட்டனர்”.

"இரவு 10.30 மணிக்குப் பதிவான வீடியோ ஒன்றைக் காட்டினர். அதில் எதுவும் தெரியவில்லை. அவர்கள் பள்ளி முழுவதும் வைத்திருந்த எந்தவொரு கண்காணிப்பு கேமிராவிலுமா பதிவாகாமல் இருந்திருக்கும்? ஆனால் எந்த வீடியோ காட்சிகளையும் காட்ட‌ மறுத்துவிட்டனர்"

"மேலும் எனது மகள் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்ததாகப் பொய் சொல்கின்றனர். விடுதியில் படிக்கின்ற மாணவி பள்ளி நிறைவடைந்ததும் சீருடை கூட மாற்றாமல் அதே உடையில் உயிரிழந்து இருக்கிறார். எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எங்கள் மகளின்‌‌ மரணம் தொடர்பாக காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை செய்ய வேண்டும்," என்று தெரிவித்திருக்கின்றார்.

மாணவியின் தாயார் சொல்லும் செய்திகளை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்பதும், பள்ளி நிர்வாகத்தின் அடாவடித்தமான போக்கும் பொதுமக்களை கோபம் கொள்ளச் செய்துள்ளன.

அரசு, காவல்துறை, நீதிமன்றம் என அனைத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் கூட்டம் இனியும் இந்தப் பள்ளியை விட்டு வைத்தால் இன்னும் பல மாணவிகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்தப் பள்ளிக்கு புத்தி புகட்டியுள்ளனர்.

ஆனால் தனது கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் பாதிக்கப்பட்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதைச் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் அடாவடித்தனத்தை செய்து கொண்டு இருக்கின்றது.

மக்கள் அதிகாரம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் உட்பட இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அதில் 128 பேரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளது. அவர்களில் 20 பேர் சிறார்கள் என்பதால் அவர்கள் கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தனியார் பள்ளியின் சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டதற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை நாசம் செய்யப் பார்க்கின்றது திமுக அரசு.

தமிழ்நாடு முழுக்க மாணவியின் மரணத்தால் கொந்தளித்து இருக்கும் சூழலில்கூட தனது கார்ப்ரேட் விசுவாசத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றது திமுக.

உயிரிழந்த மாணவின் தாயாரை நேரில் சந்திக்காத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவியின் மரணத்தைப் பற்றி கவலைப்படாமல், 'தனியார் பள்ளிகளை அனைத்தையும் மூடுவோம்' என மிரட்டியதோடு, அதைச் செய்தும் காட்டிய தனியார் பள்ளி கொள்ளையர்களிடம் குழைந்துகொண்டு இருக்கின்றார்.

பள்ளி முதல்வர் சிவசங்கரன் அறையில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதையும், படுக்கைகள் இருந்ததையும், இவை எல்லாம் எதற்காக யோக்கியமான பள்ளி முதல்வர் அறையில் இருக்க வேண்டும் என்பதையும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் மகன்கள் பாலியல் வெறி பிடித்தவர்கள் என்ற மக்களின் கூற்றையும் பொருட்படுத்தாமல், அந்தப் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எந்தக் கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் கூறுகின்றார்.

இதனால் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருபக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை எல்லாம் வண்டி எண்ணை வைத்தும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் காவல்துறை வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் தங்கள் மகளின் மறு உடற்கூறாய்வில் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதி மன்றம்வரை நிராகரிக்கின்றது. அரசோ மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு உயிரிழந்த மாணவியின் வீட்டில் அடாவடித்தனமாக நோட்டீஸ் ஒட்டுகின்றது.

மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொண்டு போராட்டம் வெடிக்காமல் இருக்க பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

கடந்த ஆண்டு கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக்‌ பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பல்வேறு அமைப்புகள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு உடலை வாங்காமல் போராடிய பின்னர்தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவன் கைது செய்யப்பட்டான்.

 மேலும் மாணவி புகார் கொடுத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக்‌ பள்ளி முதல்வர்‌ மீரா ஜாக்சனை கைது செய்யாமல் போக்கு காட்டிய காவல்துறை, மக்கள் போராட்டத்திற்குப் பயந்து 14.11.2021 அன்று இரவு பெங்களூருவில் கைது செய்ததாக நாடகம் நடத்தியது. ஆனால் கைதான பத்தே நாளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போதும் அதுதான் நடக்கப் போகின்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, சாத்தான்குளம் படுகொலை வழக்கு, நிர்மலாதேவி வழக்கு என அனைத்திலும் நீதி கிடைக்கச் செய்வோம் என சூளுரைத்ததும், ஆளும் கட்சியாக ஆன பின்னால் அந்தர்பல்டி அடித்ததும்தான் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திமுக நீதியை பெற்றுத் தரும் என்ற எந்த நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒராண்டுக்குள் அதன் பார்ப்பன அடிமைத்தனமும், முதலாளித்துவ அடிமைத்தனமும் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றது.

அதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் திராணியற்ற, அரசு ஆதரவு முதலாளித்துவ அடிமைகள் போராட வந்தவர்களின் சாதியையும், மரணமடைந்த மாணவியின் சாதியையும் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தனியார் பள்ளி முதலாளியின் மலத்தில் மொய்க்கும் ஈக்களான இவர்கள்தான் சமூகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், சிந்தனைவாதிகளாகவும் அறியப்படுகின்றார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் இன்றைய துயர நிலை.

- செ.கார்கி