indian students in ukraineரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனில் படிக்கச் சென்ற மாணவர்களை பத்திரமாக மீட்பது ஒன்றிய அரசுக்குப் பெரும் சவாலானதாக மாறியது. சில மாணவர்கள் போரால் கொல்லப்பட்டார்கள்.

உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா அம்பலப்பட்டதோ இல்லையோ இந்திய அரசு அம்பலப்பட்டிருக்கின்றது. காரணம் அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள்.

ஏன் அவர்கள் எல்லாம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றார்கள் என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. போரில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவரின் தந்தை கூட இந்தியாவில் நீட் தேர்வும் அதிகப்படியான கட்டணமுமே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடு செல்வதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

அவர் சொன்னது உண்மைதான். இந்திய மருத்துவக் கல்வியை பெருமளவு கட்டுப்படுத்தும் தனியாரும், இந்திய அரசு திணித்திருக்கும் நீட்டும் சேர்ந்துதான் மாணவர்கள் வெளிநாடுகளை நோக்கி விரட்டி அடிக்கின்றது.

இந்தியாவை ஒப்பிடும்போது உக்ரைனில் மருத்துவப் படிப்புக்கான செலவு மிகவும் குறைவாகும். இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை படித்து முடிக்க ரூ.60 லட்சம் முதல் ரூ.1.1 கோடி வரை செலவாகிறது. நீட் இன்றி உக்ரைனில் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு பயில ரூ.15 முதல் ரூ.16 லட்சம் மட்டுமே செலவாகிறது.

மேலும் உக்ரைன் மருத்துவப் படிப்பும் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது. தேசிய மருத்துவக் கமிஷனும் இதை அங்கீகரிக்கிறது. இதனால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் டாக்டராகப் பணியாற்ற முடியும். மேலும் 2021 நிலவரப்படி இந்தியாவில் 84 ஆயிரம் மருத்துவ சீட்டுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

உக்ரைன் தவிர இந்தியர்கள் அதிகமாக சீனா, பிலிப்பைன்ஸ், வங்காள தேசத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொள்கின்றனர். 2021ல் பாராளுமன்றத்தில் இந்திய மாணவர்கள் எந்தெந்த நாடுகளில் படிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது. அதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 930 பேர் அமெரிக்காவிலும், 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 720 பேர் கனடாவிலும் படித்து வருவதாகக் கூறப்பட்டது. இதுதவிர ஆஸ்திரேலியாவில் 92 ஆயிரத்து 383 பேர், இங்கிலாந்தில் 55 ஆயிரத்து 465 பேர், சீனாவில் 23 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 20,810 பேர், உக்ரைனில் 18,000 பேர், ரஷ்யாவில் 16,500 பேர், பிலிப்பைன்சி்ல் 15,000 பேர் படிப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 3500 முதல் 5 ஆயிரம் பேர் வரை படிக்கச் செல்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மொத்த 596 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களைவிட வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அப்படி இருந்தும் கூட இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு கேவலமான நிலையிலேயே உள்ளது.

ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவத் துறை இயங்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது. அதேபோன்று, 483 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவிலோ 10,189 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருக்கின்றது. அதுபோலவே, செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் பற்றாக்குறையாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 84 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது ஒன்றிய அரசால் எப்படி மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பதைத் தடுக்க முடியும்?.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் 50% இடங்களுக்கு அந்த மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.85 லட்சம் முதல் ரூ. 4.15 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.13,610 மட்டுமே ஆகும்.

அதே போல தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்திரவை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏற்குமா என்பதே கேள்விக்குறிதான். அப்படியே ஏற்றுக் கொண்டாலும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை எப்படி தனியார் பள்ளிகள் தங்களின் கொள்ளைக்கு பயன்படுத்திக் கொண்டனவோ அதே போலத்தான் நடக்க வாய்ப்புள்ளது.

135 கோடி மக்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் மாறாக நீட் தேர்வு மையங்கள் நடத்தி தனியார் பயிற்சி நிறுவனங்கள் லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டுவதற்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவுமே திட்டம் தீட்டப்படுகின்றது.

எத்தனை மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்தாலும் ஒன்றிய அரசு கார்ப்ரேட்களை வாழவைக்கும் நீட்டை நீக்க மறுக்கின்றது. அது போன்ற சூழ்நிலையில் வேறு வழியின்றியே மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க படை எடுக்கின்றார்கள்.

அவர்கள் அப்படி செல்லாமல் தடுக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசு இன்னும் பல நூறு மருத்துவக் கல்லூரிகளை திறந்து மிகக் குறைந்த செலவில் மருத்துவப் படிப்பை தர வேண்டும். 'தகுதி - திறமை' என்ற பெயரில் நீட்டைத் திணித்து தனியார் பயிற்சி நிறுவனங்கள் எளிய மக்களை கடன்காரர்களாக மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆனால் கார்ப்ரேட்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி நடத்தும் பாஜக அதை ஒருபோதும் செய்யாது. ஏற்கெனவே கொரோனா தொற்று இந்திய மருத்துவக் கட்டமைப்பின் இழி நிலையை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. இலட்சக்கணக்கான மக்கள் எந்தவித மருத்துவ வசதியும் இன்றி கொத்துக்கொத்தாய் செத்து மடிந்தார்கள். கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்தன.

அப்படி இருந்தும் இன்றுவரை மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. பணக்காரர்கள் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் உயர்தரமான சிசிச்சை பெற்று தங்களை காப்பாற்றிக் கொள்ள எளியே மக்களோ அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்காமல் தினம் தினம் செத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It