கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குழந்தைகள் மிகவும் வெறுக்கப் படக்கூடிய ஒரு இடம் உள்ளது என்றால் அந்த இடம் பள்ளிக் கூடம்தான். அது போன்று குழந்தைகள் மிகவும் பயப்படக்கூடியதும், வெறுக்கப்படக்கூடியதும் எதுவெனில் அது தேர்வுகள்தான். இவ்வாறாக, குழந்தைகளுக்குப் பிடித்தமில்லாத கல்விமுறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு நாம் குழந்தைகளை அனுப்புவதை தோழர் லெனின், “சவுக்கால் அடித்து சொர்க்கத்துக்கு அனுப்புகிறோம்” என்று சொல்கிறார். “இக்கல்விமுறை பக்தியையும் மூட நம்பிக்கையையும் போதிப்பதாக உள்ளது. மேலும் கல்வி பெறுவதன் மூலம் பகுத்தறிவும் சுயமரியா தையும் பெறவேண்டும். மாணவப் பருவத்தில் படித்து பரீட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முனைப்புக் காட்ட வேண்டும்” என தோழர் பெரியார் வலியுறுத்துகிறார்.

மேலும் அறிவின் உச்சமாக, கற்றலின் உச்சமாக பகுத்தறிவு நிலையை முழுமையாக எய்த வேண்டும் எனவும் பெரியார் கூறுகிறார். மேலும் மாணவர்கள் அரசியலில் இருந்து விலகி, பொதுக் காரியங்களில் இருந்து விலகி, முழுக் கவனத்தையும் செலுத்தச் சொல்கிறார் பெரியார். நமது குழந்தைகள் ஏன் அவ்விதம் இருக்க வேண்டுமென்றால், பல காலங்களாக கல்வி மறுக்கப்பட்டு, தற்போதுதான் சமூகநீதி மூலம் கல்வி கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், பயனடைய வேண்டும் என்ற சமூகப் பொறுப்போடு கூறுகிறார் பெரியார்.

போராட்டங்கள் பலகண்டு, பல அரசியல் மாற்றங்கள் மூலமாக கல்வியில் சமூக சமத்துவம் நோக்கி நாம் பயணித்து வருகிறோம். கல்வி குறித்து நாம் பேசும் போது குறிப்பாக இரண்டு விசயங்களைப் பேசியாகவேண்டும். 1. ஆரம்பக்கல்வி, 2. அருகாமைப் பள்ளி ஆகிய இரண்டும் முக்கியமானவை.

ஒரு குழந்தைக்கு ஆரம்பக் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதுவும் அரசே தனது குடிமக்களுக்கு வழங்கும் கல்வி மிகவும் சரியானதாக அமையவேண்டும். இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு பலவகை இனங்களில் இருந்து, வருவாயினை ஈட்டுகிறது. அதன் வருவாய் மூலம், அதாவது நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களிலும் வரி விதிக்கப் படுகிறது. அந்த வரியில் கல்விக்கென ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தத் தொகையினைக் கண்டிப்பாக அரசானது மக்களுக்குக் கல்வியாகக் கொடுக்கவேண்டும். அதனை நுகர்வது குடிமக்களின் உரிமையாகும்.

இதனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 41-வது பிரிவு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இப்படியாக அரசியல் சாசனம் மக்களுக்கு கொடுத்துள்ள உரிமையை முறையாக வழங்காதது மிகப் பெரியகுற்றமே. ‘சுதந்திரம்’ என்பதை பெற்றதாகச் சொல்லி 71 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பலவேறுபாடுகள் உள்ளன. ஒரே மாதிரியான கல்விமுறை இல்லை இப்படியாக பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான கல்விமுறையே இங்கு உள்ளது. இந்த நிலையில் ‘நிதிஆயோக்’ ஒரு அறிவிப்பினை வெளியிடுகிறது.

‘நிதிஆயோக்’ NITI-National Institution for  Transforming India-Aryog) என்ற அமைப்பு மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக பி.ஜே.பி.அரசு கொணர்ந்துள்ள ஒரு அமைப்பாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக 1950 ஆம் ஆண்டு அன்றைய நேருவின் அரசால் மத்தியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. அதனைக் கலைத்துவிட்டு பி.ஜே.பி.அரசு ‘நிதிஆயோக்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி பிரதமர் நரேந்திரமோடி தலைவராகவும், அதில் 6 உறுப்பினர்களில் 4 பேர் பார்ப்பனர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இத்தகைய பின்னணி கொண்ட நிதிஆயோக் கல்வி தொடர்பான ஒரு அறிவிப்பினை வெளியிடுகிறது. அது என்னவெனில்,

“மாணவர்கள் போதுமான அளவு இல்லாத பள்ளிகள், ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லாத பள்ளிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைத் தனியார் வசம் கொடுக்கலாம்” எனப் பரிந்துரைக்கின்றது. அதன் விளைவாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பின்வரும் உத்தரவை வெளியிட்டுள்ளது.

“மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடவேண்டும். மேல்நிலைப் பள்ளி களில் 15 பேருக்குக் குறைவாக இருக்கும் பிரிவை (GROUP)) மூடவேண்டும். 30 பேருக்குக் குறைவாக இருக்கும் பிரிவு மாணாக்கர்களை அருகிலுள்ள பள்ளியில் இணைக்க வேண்டும். அந்தப் பிரிவில் பாடம் எடுக்கும்  முதுநிலை ஆசிரியர்கள் அப்பள்ளியில் இருக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிப்பிரிவில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருப்பின் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும்” .இவ்வாறாகப் பள்ளிக் கல்வித்துறை ஆரசு ஆணை வந்துள்ளது.

இது கல்வி பரவலாக அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தப்படவேண்டும் என்ற சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகும். இது தற்போது தமிழகத்தில் காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கூட்டுறவுத் தேர்தல், குட்கா வழக்கு....இப்படியாக நகரும் அரசியல் அரங்கில் மேற்கண்ட ஆணை மிகவும் சத்தமில்லாமல் வெளி வந்துள்ளது. கல்வி, மருத்துவம், உணவு, நீர், இருப்பிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகளாகும். மேலும் இவை அத்தியாவசிய உரிமைகளும் ஆகும் .இதனை ஒரு அரசு தனது குடிமக்களுக்கு குறைவின்றிக் கொடுக்க வேண்டும். இது லாபம் ஈட்டும் தொழில்துறை போன்றதல்ல. அறிவுத்துறை என்பது அனைத்துத் துறைகளுக்கும் முன்னோடி யானதுமாகும். மேற்கண்ட அரசு ஆணை மூலம் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.

தமிழ்நாட்டில் 29 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் இன்மையால் 1000 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும்.

20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் எனக் கணக்கிட்டால் 12,000 பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் 7,500 ஆசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போகும். இப்போது பணியிலுள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யப்பட்டாலும் 5000 ஆசிரியர்களின் நிலை கேள்விக் குறியாகும்.

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையுள்ள பள்ளிகளும் அல்லது 1 - 8 வகுப்புகள் உள்ள நடுநிலைப் பள்ளிகளும் இணைந்து முதற்கட்டமாக 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் 1,200 பள்ளிகளை மூட அரசு உத்தேசித்துள்ளது.

ஆரம்பக்கல்வி மூலமாக மாணவர்களின் ஆரம்ப அறிவைப் புகட்டி மிகச் சரியான அறிவு இருப்பினை உறுதிப்படுத்தும் முகாம் ஆரம்பப் பள்ளிக் கூடங்களே. ஒரு காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மை தான். அதே போல் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன்வருவதில்லை. அரசுப் பள்ளிகளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படுவது நமக்கு மிகவும் வருத்தமான உண்மையாகும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தமிழக அரசு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை விதைக்கப் பட்டது.

மேலும் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி (தூய்மையான கழிவறை உட்பட) இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இதன் காரணமாக அனைத்து ஊர்களிலும் ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்ற தவறான நம்பிக்கை பெற்றோர் மனதில் விதைக்கப்பட்டது. இத்தகைய முறையில் மாணவர் இருப்பிடத்திற்கே வந்து அழைத்துச் சென்று விடும் பேருந்துகள் என பெற்றோர் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கி ஆட்டு மந்தையாகச் செல்கின்றனர்.

இவற்றையெல்லாம் தமிழக அரசு கணக்கில் கொள்ளாமல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையைக் கொண்டு வந்தது. அடித்தளத்தை வலிமையானதாக அமைக்காமல் அதன் மேல் தளங்களை அமைத்து என்ன பயன்? அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதும், போதிய ஆசிரியர்களை நியமிப்பதும் சாலச் சிறந்ததாகும். இவ்வாறான வழிமுறைகளில்தான் அரசு தரமான கல்வியைத் தரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்த முடியும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தமிழகத்தில் கிராமங்களில் 48 சதம் தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு வகுப்பறைகள் மட்டுமே இருப்பதாகவும், இரு ஆசிரியர்கள் மட்டுமே அனைவருக்கும் பாடம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7 ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் விகிதம் 1:24 ஆக குறைந்திருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை ஆவணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் நியமனம்கூட நகர்புறப் பள்ளிகளில்தான் அதிகமாக நியமிக்கப்படுகின்றனர். கிராமப்புறப் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களே உள்ளனர். 5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள், கழிப் பறை, குடிநீர் வசதியின்மை, போன்ற காரணங்களே பெற்றோர்களைத் தனியார் பள்ளிகளை நோக்கி இட்டுச் செல்கிறது.

இத்தகைய அவலங்களை நீக்காமல், பள்ளிகளை மூடுவது, அதுவும் ஆரம்ப - நடுநிலைப் பள்ளிகளை மூடுவது என்பது அவலமான செயலாகும். பொறுப்பற்ற செயல்பாடாகும். ஆரம்பக்கல்வி என்பது அறிவின் ஆரம்பமாகும். எனவேதான் தோழர் பெரியார் தனது கல்விப் பணியாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை முதன் முதலாகத் தொடங்கினார். ஆசிரியர்களை பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றிவிட்டால், மாணவர்கள் எளிதில் உரிய சிந்தனை அறிவை பெறுவார்கள் என நம்பினார்.

மேலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 300 குடியிருப்புகளுடைய ஊரில் 1 கிலோ மீட்டர் இடைவெளியில் தொடக்கப் பள்ளியும், 2 கி.மீட்டர் இடைவெளியில் நடுநிலைப்பள்ளியும், 3 கி.மீட்டர் இடைவெளியில் உயர்நிலைப்பள்ளியும், 5 கி.மீட்டர் இடைவெளியில் மேல்நிலைப்பள்ளியும் இருக்க வேண்டும். இவ்வாறாக கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அருகாமைப் பள்ளிகளை (Neighbor schools) வலியுறுத்துகிறது. அப்போதுதான் மாணவர்கள் சரியானக் நேரக் கட்டுப்பாடுடனும், எளிமையாகப் பயன்படுத்த ஏதுவாக பள்ளிகள் அமையும். கல்வித்தரம் உயரும், கல்வி கற்போர் எண்ணிக்கை கூடும். தூரம் என்பது மாணவர்களைச் சோர் வடையச் செய்யும், கற்றல் குறைபாடு ஏற்படும்.

இத்தகைய பொதுக்கல்வி முறையை அருகாமைப் பள்ளிகளை நடைமுறைப்படுத்த 1966-ஆம் ஆண்டே கோத்தாரிக் கல்விக்குழு பரிந்துரைத் துள்ளது. 1968 ஆம் ஆண்டு இக்கருத்தை - பரிந்து ரையை இந்தியக் கல்விக் கொள்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப்பள்ளிமுறை என்பது குழந்தைகளைப் பாகுபாடில்லாமல் கல்வி வழங்கக் கூடிய முறைமையாகும். அது இன்னும் நடைமுறைப்படுத்தாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனைக் கல்வியாளர்கள் அனைவரும் வலியுறுத்தியே வருகின்றனர். கல்வி என்ற அடிப்படை உரிமையானது ஆளும் அரசு செயல்படுத்தினால்தான், அதனுடைய ஆளுகைக்குள் இருந்தால்தான் அதற்குரிய உரிமைகளைக் கோரிப் பெறமுடியும். தனியார் வசமானால் நாம் எந்த உரிமைகளும் பெறமுடியாது.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள கூறுகள் தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, தனியார் பள்ளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

எனவே மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டிப் பள்ளிகளை மூடும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், கட்டமைப்பைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமும், அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பயில்வதைக் கட்டாயமாக்குவதும் மட்டுமே அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடையும். குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் ஒரு நாட்டின் மூலாதாரமாகும். அவற்றைப் பேணிக் காப்பதும், வளர்த்தெடுப்பதும் நம் முன் உள்ள முக்கியமான கடமையாகும்.