இந்திய அரசமைப்புச் சட்டத்தில் “கல்வியும், மதச்சார்பின்மையும்” என்பதைப் பற்றி உள்ளதை விளக்கமாகக் காண்போம்.

“கல்வி நிலையங்கள்”, “மதபோதனை” என்ற இரண்டு அம்சங்களைப் பற்றி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 28, பின்வருமாறு குறிப்பிடுகிறது.

விதி 28 :

1.         “முழுவதுமாக அரசாங்க நிதியினைக் கொண்டு நடத்தப்படும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மதபோதனை அளிக்கப்படுதல் கூடாது.”

2.         “அரசாங்க நிர்வாகத்தின்கீழ் உள்ளதும், ஆனால் அதே சமயத்தில் மதபோதனை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஒர் அறக்கட்டளை யின் மூலம் நிறுவப்பட்டதுமான ஒரு கல்வி நிலை யத்தைப் பொறுத்தவரையில், மேலே விதி 28(1)இல் காணப்பட்டது பொருந்தாது.”

3.         “அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசாங்க நிதி உதவியைப் பெறுகிற ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் எவருக்கும்-அவர் விரும்பி னாலன்றி அல்லது அவர் மைனராக இருந்தால் அவருடைய பாதுகாவலர் ஒப்புதல் கொடுத்தா லன்றி - அந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் மத போதனையில் பங்குகொள்ளும்படிக்கோ, அல்லது அங்கு நடைபெறும் ஒரு மதவழிபாட்டுக்கு வர வேண்டும் என்றோ அக்கல்வி நிறுவனம் கட்டளை இடக்கூடாது.”

Article 28 :
1. No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds.

2. Nothing in clause (1) shall apply to an educational institution which is administrated by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution.

3. No person attending any educational institution recognised by the State or receiving aid out of State funds shall be required to take part in any religious instruction that may be imparted in such institution or to attend any religious  worship that may be conducted in such institution or in any premises attached thereto unless such person or if such person is a minor, his guardian has given his consent thereto.

இங்கு விதி 28(1)இல் சொல்லப்பட்டுள்ளவற்றைக் கொண்டு “இந்தியாவில் மதச்சார்பற்ற கல்வி” அளிக் கப்பட வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் இலட்சியம் என்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

இவ்வாறு கொள்ளப்படுவது சரிதானா என்பதை இங்கு நாம் ஆராய வேண்டும்.

இதற்கு, “கல்வி நிறுவனங்கள்” என்றால் என்ன, என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு - முழுவதுமாக அல்லது பகுதி அளவில் அரசாங்க நிதியைப் பெற்றுக் கொண்டு-அரசாங்கப் பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடைபெற்று வருகின்ற தொடக்கப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் முதலானவைதாம் மேலே குறிக்கப்பட்ட “கல்வி நிறுவனங்கள்” என்ப வையாகும்.

விதி 28(1), (2), (3) ஆகியவற்றில் குறிப்பிடப்படும் கல்வி நிறுவனங்கள் இவையேயாகும்.

இந்த விதியின்படி பூரணமாக அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு நடத்தப்படுகிற பள்ளிகளில் மத போதனை கூடாது என்பதாகவும், அறக்கட்டளைகள் மூலம் நிறுவப்பட்ட - ஆனால் அரசாங்க அங்கீகார மும், நிதி உதவியும் பெற்று வருகிற தனியார் பள்ளி களில் மதபோதனை செய்யப்பட எந்தத் தடையும் இல்லை என்றும் சொல்லப்பட்டிருப்பதை நாம் காண் கிறோம்.

இந்த நிலைமையில், “மதபோதனை” செய்வது என்றால் என்ன? என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மதபோதனை என்பது ஓர் இஸ்லாமிய மௌல் வியை அல்லது ஒரு கிறித்துவப்பாதிரியை அல்லது ஓர் இந்துமத ஆச்சாரியாரை அல்லது மதகுருவை ஆசிரி யராக வைத்துப் பள்ளிகளில் “மதபோதனை” செய் யப்படவில்லை என்பது ஒன்று.

ஆனால். அதே சமயத்தில் எல்லா மதங்களின் தத்துவங்களும், எல்லா மதக்கர்த்தாக்களின் வரலாறு களும், எல்லா மத சாஸ்திரங்களிலும் உள்ள அடிப்ப டைக் கொள்கைகளைப் பற்றிய காவியங்களும், கட்டுரை களும், விளக்கங்களும் - எல்லாக் கல்வி நிலையங் களிலும் வேறு பாடப் பெயர்களால் போதிக்கப்பட்டே வருகின்றன என்பது இன்னொன்று.

இப்படிப்பட்ட ‘மதக்கருத்துக்களைப்’ போதிப்பதற்கு என்பதாக ஒரு மதகுரு ஆசிரியராக இல்லை - ஒரு தனிப் பாடவேளை (Period) ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையே ஆனாலும் - இந்தக் காரணங்களைக் கொண்டு நம் நாட்டில் “மதச்சார்பற்றக் கல்வி” அளிக் கப்படுவதாகக் கூறமுடியாது.

ஏனென்றால் நமது கல்வி நிலையங்களுக்கான பாடத் திட்டங்களை (Curriculum) அமைத்துள்ளவர்கள் - கடவுள் வணக்கம், புராண நெறிகள், இதிகாசக் கோட் பாடுகள் முதலானவற்றை - “ஒழுக்க போதனை” அல்லது “இலக்கிய அறிவு வழங்கல்” என்கின்ற பெயர் களால் கல்வித் திட்டத்தில் இணைத்தே அளித்துள்ளனர்.

எனவே மதபோதனை என்பதற்காக ஒரு தனிப் பாடவேளை இல்லை என்றாலும் இவற்றைக் கற்பிப்ப தற்காக ஒரு மதகுருவை ஆசிரியராக நியமிக்கவில்லை என்றாலும், “மதம்” என்பது வேறு பெயர்களில் கல்வி நிலையங்களில் போதிக்கப்பட்டே வருகிறது.

அடுத்து இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது அறக்கட்டளையின்மூலம் தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன; அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியைப் பெறுகின்றன.

இந்த முறையில் எல்லோருடைய வரிப்பணத்தி லிருந்தும் நிதி உதவி (Grand-in-Aid)யைப் பெற்று நடைபெறும் தனியார் பள்ளிகள் என்பவை - அர சாங்கம் நிர்வகிக்கும் பள்ளிகளைப் போலவே பாடத் திட்டங்களைப் பின்பற்றி வருகின்றனவே அல்லாமல் - ஒரு பாதிரியை, ஒரு மௌல்வியை, ஓர் இந்துமத குருவை ஆசிரியராக நியமித்து மதபோதனை செய்வது என்பது அங்குப் பெரும்பாலும் இல்லை.

ஆனால் இந்தத் தனியார் பள்ளிகள் மதகுருமார் களை ஆசிரியராக நியமித்து மதபோதனை செய்ய முழு உரிமை அளிக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி இருந்தும் அவர்கள் எல்லோரும் அவ்வாறு செய்யாமல் இருப்பதற்குக் காரணம், அரசாங்கம் ஏற்று வெளியிடக்கூடிய பாடத் திட்டத்திலேயே மதபோத னைக்குப் போதுமான பாடப் பகுதிகள் அடங்கி இருக் கின்றன என்பதுவே ஆகும்.

இங்கு இன்னொரு நிலைமை பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தத் தனியார் கல்வி நிலையங்கள் சில இடங் களில் மத குருமார்களைக் கொண்டு, ஒழுக்கபோத னை என்கிற பெயரால் சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்வது அல்லது பாடங்களைப் போதிக்கச் செய்வது என்கிற காரியங்களை அரசமைப்புச் சட்டம் அனுமதிக் கிறது என்றால் அதன்பொருள் என்ன?

அரசாங்க நிதி உதவிபெறும் பள்ளிகளில், மத போதனை உண்டு என்பதுதானே அதன்பொருள்?

இதற்கு அப்படி அர்த்தமாகாது என்றால், விதி 28(2) இன்படி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைக்கு வேறு என்ன பொருள்?

அடுதிது விதி 28(3)இல் கண்டுள்ளதானது, ஒரு பள்ளியில் இந்து மதபோதனை செய்யப்பட்டால், அதற்கு அங்குப் படிக்கும் ஓர் இஸ்லாமியக் குழந்தை அல்லது ஒரு கிறித்துவக் குழந்தை வரவேண்டும் என்று கட்டளை இடமுடியாது என்பதே ஆகும்.

“மதபோதனை அளிக்கப்படவில்லை” என்பதா இதற்குப் பெயர்?

அதற்குப் பதிலாக ஒரு கல்வி நிலையம் எந்த மதத்தைச் சார்ந்தவர்களுடையதோ, அந்த மதத்தை அந்தப் பள்ளியில் தாராளமாகப் போதிக்கலாம்; அந்த மதவழிபாட்டை அங்கே நடத்தலாம், ஆனால் அந்தப் போதனை வகுப்புக்கு அல்லது வழிபாட்டுக்கு இன் னொரு மதத்தைச் சார்ந்த குழந்தையை அழைக்கக் கூடாது - அத்தகைய பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீ காரமும், நிதி உதவியும் உண்டு என்பதுதானே பொருள்?

இந்தியாவில், அரசமைப்புச் சட்டப்படி உள்ள இந்தத் தன்மைக்கு, “மதச்சார்பற்றக் கல்வி” என்பது எப்படிப் பொருந்தும்?

“கல்வி என்பது வேறு; மதம் என்பது வேறு; பொதுக் கல்வித் திட்டத்தில் - பொதுக் கல்வி நிலையங்களில் மதம் என்பதற்கு இடமே இல்லை” என்பதாக ஆகும்.

அந்தத் தன்மை விதி 28(1)இல் இருப்பதாக மேல் தோற்றத்தில் காணப்பட்டாலும், நடைமுறையில் இந்தியா வில் பின்பற்றப்பட்டுவரும் பாடத்திட்ட முறைகளின் படியும், அரசமைப்புச் சட்டவிதி 28(2), (3)இன்படியும் - எல்லாக் கல்வி நிலையங்களிலும் மதபோதனை தடையின்றி அளிக்கப்பட்டே வருகிறது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

கடைசியாக இன்னொரு நிலைமை இருப்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும், தங்கள், தங்கள் மதத்திற்கு உரிய மதக்கல்வியை அளிப்பதற்காகவும் மதகுருமார்களை உருவாக்குவதற்கான பயிற்சியை அளிப்பதற்காகவும் தனித்தனிக் கல்வி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி வருகின்றனர்.

அப்பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் தேவை இல்லை; அரசாங்க நிதி உதவி அளிக்கப்படுவதில்லை; அரசாங்கப் பாடத்திட்டம் அங்கு அமல்படுத்தப்பட வேண்டியதில்லை.

இந்த நிறுவனங்கள் எல்லாம் அறக்கட்டளைகள் மூலம் நிறுவப்பட்டு, முழுவதும் அறக்கட்டளையின் நிதிகளைக் கொண்டு, முற்றிலும் அறக்கட்டளையின் நேரடி நிருவாகத்தில் நடைபெற்று வருகிற தனியார் கல்வி நிறுவனங்களே ஆகும்.

இத்தகைய கல்வி நிறுவனங்கள் உலகெங்கும் அந்தந்த நாட்டுச் சட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள உரிமையின்படி நடைபெற்றே வருகின்றன.

ஆனால் தனியுடைமை நாடுகளில் இத்தகைய நிறுவனங்களுக்கு, அளவுகடந்த மதிப்புள்ள சொத்துக்கள் இருக்க சட்டப்படி உரிமை வழங்கப்பட்டிருப்பதுபோல் சமதர்ம நாடுகளில் உரிமை வழங்கப்படவில்லை.

அத்துடன் சமதர்ம நாடுகளில், பொதுக்கல்வி நிறு வனங்களில் மதஎதிர்ப்புக் கோட்பாடுகள் கல்வித் திட்டத் தின் ஓர் அங்கமாக அமைக்கப்பட்டுக் கற்பிக்கப்படு கின்றன.

இந்தியா ஒரு தனியுடைமை நாடு என்கிற தன்மையில் அமைந்துவிட்டதால், இங்குள்ள எல்லா மதங்களைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் சொத்துக்கள் வைத்துக்கொள்ள சட்டப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எனவேதான் இந்தியாவில் எந்தத் துறையிலும் மத ஆதிக்கம் குலைவதற்கு இடமில்லாமல் நல்ல வலிமையோடு அது திகழ்கிறது.

இந்த ஆதிக்கம் கல்வித் துறையிலும் பெரிய அளவில் பரவியுள்ளது.

வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குகின்ற பல்லாயிரக்கணக்கான கல்வி நிலையங்களில் பயிலும் கோடிக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் அவர்கள் கல்வி கற்கும் காலமான சுமார் 20 ஆண்டு களுக்கு அதிகமாக, அவர்களுக்கு மதபோதனை அளிக் கக்கூடிய கல்வித்திட்டத்தின் ஆதிக்கத்தின்கீழ் விடப் பட்டுக் கொண்டே வந்தால் - ஒவ்வொரு தலைமுறை யும் அந்தப்படியே மதபோதனை தோய்ந்த கல்வி யையே பெற்று, அதன் காரணமாக மதநம்பிக்கை உள்ள மக்களாகவே அவர்கள் உருவாக முடியும். இதில் அய்யம் இல்லை.

ஒவ்வொரு “20 ஆண்டுக்காலக் கட்டத்திலும்” இப்படி உருவாக்கப்படும் இளந்தலைமுறையினர் மத நம்பிக்கை காரணமாக சமூக முன்னேற்றத்திற்குப் பெருந்தடைச்சுவர்களாக உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.

இப்படிப்பட்ட ஒரு மூடநம்பிக்கைச் சமுதாய வட்டம் வளர்ந்து விரிந்துகொண்டே செல்லுவதை ஒரு பக்கம் அனுமதித்துக் கொண்டு, அதேசமயம் மதஎதிர்ப்புப் பிரச்சாரத்தை மேடைகளிலும், ஏடுகளிலும் இன்னொரு பக்கம் எவ்வளவு தீவிரமாக முடுக்கிவிட்டாலும் அதனால் கிடைக்கிற பயன் மிகக் கொஞ்சமாகவே இருக்கும்.

விஞ்ஞான வளர்ச்சியில் - புதிய பொருளாதாரக் கோட்பாடுகளால்-வளரும் உலகத்தோடு நாமும் போட்டி போட்டுக் கொண்டு வளர வேண்டும் என்ற இயல்பான மனித உணர்ச்சியால் உந்தப்பட்டு, அவற்றின் காரண மாக மனித சமுதாயம் நாள்தோறும் முன்னேறி வருவது உண்மைதான்.

ஆனால் பெரும்பாலான மக்கள் எந்த வேகத்தில் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமோ, அந்த வேகத்தில் செல்லாமல் இருப்பதற்குக் காரணங்கள் இரண்டேயாம்.

ஒன்று முதிய தலைமுறையினர் மூடநம்பிக்கை, பழக்கவழக்கங்கள் காரணமாக பழமையைக் கைவிட மறுப்பதாகும்.

இரண்டு, இளைய தலைமுறையினர் அவர்கள் உருவாக்கப்படும் குடும்பப் பழக்கம், கல்வித் திட்டம் ஆகிய சூழல்களால் பழைய எண்ணங்கள் தோய்ந் தவர்களாகவே தொடர்ந்து உருவாக்கப்படுவதாகும்.

எனவே, வருங்கால சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்பும் எவரும், மற்றெந்தத் துறைகளில் அறிவுப் பிரச்சாரம் மேற் கொண்டாலும் கல்வித் துறையில் உள்ள மத ஆதிக்கம் பூரணமாக ஒழிக்கப்படாத வரையில், அவர்கள் கோரிய பலன் விளையாது என்பது உறுதி.

(“இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி” என்ற நூலிலிருந்து)

Pin It