ஐரோப்பியர்கள் பலரின் ஆர்வத்தின் காரண மாக தமிழுக்குச் செய்த நற்பணி மூலம் தமிழ் மொழி வளமுற்றது. அவர்களுடைய கூரிய பார் வையும், விழிப்புடன் கூடிய அறிவும் எதனையும் விட்டு வைக்கவில்லை. சான்றாக, சார்லஸ் ஈகோவர் நாட்டுப்புறப் பாடல்களுக்குக் குறிப்பெழுதினார். பெர்சிவல் பழமொழிகளைத் தொகுத்தார். எல்லிஸ் கடினமாக உழைத்து, அச்சு வடிவம் பெறாத சுவடிகளைத் தேடிப் பிடித்தார்.

கால்டுவெல் வரலாற்று உண்மைகளைக் கண்டறிய புதை பொருளைத் தோண்டி ஆய்ந்து வரலாற்றுக்கு உரிய சான்றுகளைத் தேடினார். ஜான் முர்டாக் அதுவரை அரங்கேறியுள்ள தமிழ் நூல்களைத் தொகுத்து, பகுத்து நூற்பட்டியல் தயாரித்தார். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் எதிர்காலச் சந்ததியர்க்கு ஆய்ந்து அளவற்ற அறிவுச் செல் வத்தைத் தேடிக் கண்டுபிடித்து வளம் சேர்த்துக் கொடுத்துப் போயினர். இவர்களின் நூலடைவு தயாரித்த ஜான் முர்டாக்கை அறிவோம்.

முர்டாக் தொகுத்தளிக்கக் காரணமும், பங்களிப்பும்:

1819ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் பிறந்த ஜான் முர்டாக் கடவுளின் வாக்கினை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்னும் எண்ணத்தில் முதலில் இலங்கைக்கு மிஷனரியாக 1844ஆம் ஆண்டு வந்தடைந்தார். கண்டி பகுதியில் ஆசிரியராகவும், நூலாசிரியராகவும் பணியாற்றினார். இலங்கையின் வட்டார மொழியில், பாடநூல் களின் தேவையை உணர்ந்தார்.

இதன் தொடர்ச்சி யாக நோயற்றவர்களுக்கு அறிவுரை முதலிய தலைப்பு களில் சிறு நூல்களை வெளியிட்டார். வட்டார மொழிகளில் கிறிஸ்தவ இலக்கியம் பரப்பும் நோக்கத்துடன் தமிழகத்திலுள்ள மிஷனரிகளுடன், முக்கியமாக சென்னையில் வின்சுலோ ரெவலாஸ் என்பாருடன் இணைந்து நூல் வெளியிடுவதற்கான திட்டம் தயாரித்தார். இதன் தொடர்ச்சியே தென்னிந்திய கிறிஸ்தவ பள்ளிப் பாடநூல் சங்கம் ஆகும்.

காலப்போக்கில் மாற்றங்களின் காரணமாகப் பள்ளிப் பாடநூல்கள் என்பதில் கவனம் என்ற நிலை மாறியதன் தொடர்ச்சியாக 1891இல் இச்சங்கத்தின் செயல் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் என மாற்றப்பட்டது.

ஜான் முர்டாக், கவர்னர் ஜெனரலாக இருந்த நார்த் புரூக் பிரபுவால் ஊக்குவிக்கப்பட்டு கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் மூலமாக 240 பாடப் புத்தகங் களையும், பிற புத்தகங்களையும் 14 இந்திய மொழி களில் 30 லட்சம் பிரதிகளை வெளியிட்டார். இப் பாட நூல்கள் மிஷனரி பள்ளிகளில் மட்டுமல்லாது ஏனையோர் நடத்தும் பள்ளிகளிலும் பாட நூல் களாகப் பயன்பட்டன.

இதில் முக்கியமானது நூல் தொகுப்புப் பட்டியலானதால் இவர் தன்னை ‘இலக்கியப் பிரச்சாரகர்’ என்று அழைத்துக் கொண்டார். அதற்கான அடிப்படைக் கொள் கையை சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய கிறிஸ்தவப் பள்ளிப் பாடநூல் சங்கத்தைத் தோற்று வித்தபோது அதன் அறிக்கையில், “அரசு நிதி யுதவியினை எதிர்நோக்கும் கிராமப் பள்ளிகளில் தற்பொழுது பயன்பாட்டிலுள்ள நூல்கள் ஒதுக்கப் பட்டு, புவியியல், வரலாறு மற்றும் அறிவியல் நூல்கள் புகுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ள அவரது அறிவியல் நோக்கை இங்கு நினைவுகூர வேண்டியவர்களாக உள்ளோம்.

முர்டாக் சென்னை இராஜதானியில் இருந்த பள்ளி நூல்களைச் சீரமைக்கும் குழுவில் அங்கத்தி னராக இருந்தபோது, பாடநூல்களைத் திருத்தி யமைக்கப் பெரும்பாடுபட்டார்.

இந்திய சமூக சீர்திருத்தம், இந்திய அரசியல், கல்வி வளர்ச்சி, அறிவியல் பரப்புதல் என்பனவும் முர்டாக்கின் ஆர்வத்தில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத் தோடு அமைந்திருந்தன.

இவர் இந்திய இலக்கியங்கள், புனைவுக் கதைகள் முதலியவை நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதில் தீய நெறிகளை வலியுறுத்துவதாகக் கருதினார். இந்திய மரபுவழி அறிவு முற்றிலும் பயனற்றது, தவறானது, மூட நம்பிக்கை உடையது என்ற கருத்தை முர்டாக் கொண்டிருந்தார். தாம் தொகுத்த நூலடைவில் அதுவரை வெளியான தமிழ் நூல்கள் குறித்துக் குறிப்பிடுகையில்,

“... மத மற்றும் மாண்புகள் அடிப்படையில் நோக்கினால் உள்நாட்டு இலக்கியங்கள் பலவும், அலெக்சாண்டிரியாவின் நூலகத்திற்கு ஏற்பட்ட அதே கதி அடைவதுதான் இந்தியாவிற்கும் நன்மை” என்றே இந்நூலடைவைத் தொகுத்தவர் கருது கிறார்.  அலெக்சாண்டிரியாவின் பழைய நூலகம் எரிக்கப்பட்டது. இதன் நூலகராக இருந்த பெண் சிந்தனையாளர் ஹைபேஷிபா என்பார் நிர்வாண மாக இழுத்துச் செல்லப்பட்டு எரித்துக் கொல்லப் பட்டார் என்பதோடு முர்டாக்கின் கருத்தை ஒத்துப் பார்க்க வேண்டும்.”

நூலடைவு (catalogue)

ஜான் முர்டாக் தமிழ் மற்றும் சிங்கள மொழி களில் 1706இல் டேனிஷ் மிஷனரிகளின் வெளி யீடுகள் முதற்கொண்டு 1818 வரையில் சற்றேறக் குறைய 4200 வெளியீடுகள் பற்றித் தகவல் திரட்டி யுள்ளார். தமிழ் நூல்களை முர்டாக் பத்து வகை களாகப் பகுத்துள்ளார். ஒவ்வொரு வகையிலும் அச்சான நூல்களைத் தனித்தனியே சேர்த்துள்ளார். இறுதியில் நூல்கள் அனைத்தையும் சேர்த்துக் கூறி யுள்ளார். அப்பட்டியல் அன்று வரையில் வெளி வந்த நூல்களை உள்ளடக்கியதாக இருந்தது.

ஜான் முர்டாக் தமிழ் மற்றும் சிங்கள மொழி களில் அதுவரை வெளியான நூல்களில் தகவல் களைத் திரட்டி, இரண்டு நூலடைவுகளை 1868இல் தயாரித்தார். முர்டாக் தன் நூலடைவில் வகுப்பு டி (Class - D) என்னும் பிரிவில் இயற்கை அறிவியல் என்னும் தலைப்பில் அறிவியல் நூல்களைத் தொகுத் துள்ளார். பொதுவாகத் தமிழில் அறிவியல் நூல் வெளியீடு பற்றி மதிப்பிடும்போது, “தமிழர்களை மட்டும் நோக்கினால் அறிவியல் செய்திகளைத் தாங்கிய நூல்கள் எதுவுமில்லை” என்று குறிப்பிடு கிறார்.

இந்த நூலடைவில் வகுப்பு ஈ (Class - E) இயந்திரவியல் கலை என்னும் பகுதியில் 1. புலவு நூல் 2. பாண முறை 3. இண்டிகே விவசாயம் ஆகிய நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நூல்களின் நோக்கம் என்ன?

சான்றாக - தத்துவ சாஸ்திரம் அல்லது ஜகத்தில் பல வகைத் தோற்றங்களுடைய பிரக்ருதிப் பிரமாணங்களை விளக்கிய நூல்.

பாளையங்கோட்டையிலிருந்து கி.சார்ஜென் றையராலே செய்யப்பட்டது என்ற விளக்கத் துடன் வெளியிடப்பட்ட நூல் அன்று தத்துவ சாஸ்திரம் என்று அறியப்பட்ட இயற்கை அறிவியல் செய்திகளைத் தமிழில் விளக்கியது. இயற்பியல், வானவியல் கருத்துக்கள் மற்றும் மின்னியல், காந்த வியல் கருத்துக்களையும் விளக்கிக் கூறுகிறது.

கல்வியை இந்நூல் போற்றுகிறது. கல்வியின் தொடர்ச்சியாக மனிதர்கள் அடையும் அறிவு முதிர்ச்சியே மனிதனை மேன்மையாக்குகிறது என வாதிடுகிறது. மேன்மை என்பது பிறப்பினால் ஏற் படும் தகைமை என்ற நிலைமாறி கல்வி வளர்ச்சியினால் அடையும் நிலையே சமூக மேன்மை என்ற கருத்தாக்கத்திற்கு இட்டுச் சென்றது. அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சிலருக்கு இது ஒரு வாய்ப் பாகவும், சிலருக்கு இது சவாலாகவும் அமைந்தது.

இயற்கை பற்றிய அறிவு என்பது கடவுளின் மேன்மையை அறிவது மட்டுமின்றி மெய் மதத்தை இனம் காணும் ஒரு வழிமுறையாகவும் கிறிஸ்தவ மத போதகர்கள் கண்டனர் என்பதற்கும் இந்நூல் சான்று. ஆயினும் மெய்யறிவு என்பது அறிவியல் மட்டுமல்ல, அறிவியலுக்கு அப்பால், தேவன் பற்றிய சிந்தனையும் அவசியம் என்பதைத் தவறாது வலியுறுத்தப்படுவதும் இங்கு உற்றுநோக்க வேண்டும்.

நூலடைவும் - அறிவியல் நூல்களும்

இத்தகைய நூலடைவு மூலம் மறுவெளி யீடுக்கும், மொழிபெயர்ப்புக்கும் ஏற்ற நூல்களையும் வாசகர்கள் விரும்பும் நூல்களையும் கண்டறிவது அவரது நோக்கமாக அமைந்தது. தமிழில் முதன்முதல் தொகுத்த இந்நூலட்ட வணையை 1865இல் வெளியிட்டார்.

இந்த நூலடைவைப் பற்றிக் குறிப்பிடும் போது, அறிவியல் செய்திகளைத் தாங்கி வெளி யான தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஐரோப்பியர் அல்லது அவர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப் பட்டது எனவும் குறிப்பிடுகிறார்.

இதற்குக் காரணமானது என்ன என்பதை அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

“மருத்துவம், கணிதம், இலக்கணம், நிகண்டு எழுதிய அனைத்து நூல்களும் செய்யுளிலேயே இயற்றப்பட்டிருக்கின்றன. உரைநடையில் நூல் இயற்றும் வழக்கம் ஐரோப்பியரின் தொடர்பால் ஏற்பட்டதாகும்” என்று முர்டாக் கூறுகிறார்.

நூலடைவில், இயற்கை அறிவியல் நூல்கள் 11, இயந்திரவியல் கலை - 3, மருத்துவ நூல்கள் பிரிவில் டி-11வில் 44 நூல்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்களில் பெரும்பான்மை சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த தாகவும், சிறுபான்மை அலோபதி மருத்துவம் சார்ந்ததாகவும் உள்ளன. இந்நூலில், இந்திய மருத்துவத்தை முர்டாக், “ஹிப்பாக்ரடீஸ் கிரீசில் வாழ்ந்த நாளை ஒத்த மருத்துவம்,” என்று கேலி செய்கிறார்.

உடல்கூறு வளராது இருக்கக் காரணம்

மேலும் தமிழர்களைப் பற்றிக் கூறும்போது, “உடலைக் கூறு போட்டு அறிந்து கொள்வதைத் தீங்கு என்று நினைப்பதினால் உடற்கூற்றைப் பற்றி இவர்கள் அறியாதவர்கள்,” என்றும் கூறுகிறார். இதற்கு வெப் என்பவரின் கூற்றை மேற்கோளாகக் காட்டுகிறார். “தொப்புளே எல்லா இரத்த நாளங் களின் பிறப்பிடம், வாழ்க்கைக்கு அதுவே மூலா தாரம்” என்று சொல்வதைச் சுட்டிக்காட்டி, மறு படி கேலி செய்கிறார். மேலும், தமிழ் மருத்துவம் முழுமையும் மூடநம்பிக்கைக்கு உட்பட்டது என்றும் சாடுகிறார்.

முர்டாக் நூலடைவைப் பார்த்தால் சமய நூல்கள் பெரும்பான்மையாக இருப்பதைக் காணலாம். அவற்றில் கிறித்தவ நூல்களே மிகுதியாக உள்ளன. இதற்குரிய காரணம் வெளிப்படையானது.

அச்ச கங்கள் பெரும்பாலும் சமயப் பாதிரியார்களால் நடத்தப்பட்டது. அல்லது நடைமுறையில் இருந்த அச்சகச் சட்டம் கிறித்தவ சமய நூல்கள் எண்ணிக் கையில் மிகுந்திருப்பதற்குக் காரணமாகலாம். முர்டாக்கின் இப்பட்டியல் வேறொரு மறைமுகப் பயனையும் தந்தது.

தமிழர்களுக்கு அச்சான நூல்களை வெளியிடுவதில் ஐரோப்பியரைவிடப் பின் தங்கியுள்ளதை உணர்கின்றவர்க்கு மேலும் நூல் களை வெளியிட ஊக்கம் தந்தது.

ஜான் முர்டாக் தமது பட்டியலில் ஒவ்வொரு நூலின் சுருக்கமும், ஆசிரியர் பெயரும், அதன் விலையும், அச்சான ஆண்டும், பக்க எண்ணிக் கையும், வெளியிட்டவர் பெயரும் கொடுத்துள்ளார். இலக்கிய வரலாறு எழுதுகிறவர்களுக்கு அவருடைய குறிப்புகள் முடிவில்லாத பயனைத் தருவதாக உள்ளன.

சில ஆசிரியர்களின் காலத்தை நிர்ணயம் செய்ய அவர் முயன்றுள்ளார். தம்மைப் போலவே தமிழரும், பட்டியல் செய்ய முயன்றதாகக் கூட கூறியுள்ளார். அதைச் செய்தவர் இலங்கையைச் சேர்ந்த எஸ்.காசிச் செட்டி என்பவர் ஆவார்.

கலை சம்பந்தப்பட்ட நூல்கள் மிகச் சிலவே உள்ளதை முர்டாக் காட்டியுள்ளார். ஆயினும், ஓவியம், சிற்பம், கட்டடக்கலை தொடர்பாக எந்த நூலும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளார். இவை குறித்து நூல்கள் பல எழுதத் தமிழர்க்கு ஊக்கம் தரும் வகையில் முர்டாக்கின் இக்கருத்து வெளியீடு தமிழருக்கு ஒரு மறைமுக அறிவுரையாகக் கருதத்தக்கது.

Pin It