psbb school issue

மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டார் என்ற குற்றச் சாட்டின் கீழ் சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தர கொடுத்ததையும் இச்சம்பவத்தில் பள்ளியில் பலருக்கும் தொடர்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.

மேலும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது அவர்களின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்வது போன்றவற்றையும் செய்துள்ளார். 

இது பற்றி மாணவிகளின் பெற்றோர் ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்திருக்கின்றது.

அப்படி பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்த மாணவிகளை பாஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்லியும் தொடர்ந்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளான்.  

இன்று அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறியிருக்கும் இந்தச் சம்பவம் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ நடைபெறுவதோ அல்லது அதை ஊடகங்கள் விவாதிப்பதோ புதிதான ஒன்றல்ல.

இதற்கு முன்பும் நாம் பல பாலியல் அத்து மீறல்களை பார்த்தும் பதை பதைத்தும் கடந்தும் சென்றிருக்கின்றோம்.

ஒவ்வொரு முறையும் இது போன்று பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெறும் போதும் அது ஒரு சம்பவமாக, தினம் தினம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடி  போன்ற நிகழ்வுகளைப் போலவே நாம் கடந்துச் சென்று விடுகின்றோம்.

அதைத்தாண்டி அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று நாம் உளப்பூர்வமாக நினைப்பதில்லை.

அதற்குக் காரணம் நம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக வேறுன்றி உள்ள ஆணாதிக்க சிந்தனை. ஆணாதிக்க சிந்தனை என்பது ஆண் சார்ந்தது மட்டுமல்ல அது பெண் சார்ந்ததும்தான்.

இன்னும் சொல்லப் போனால் ஆணாதிக்க சிந்தனையைக் கட்டமைப்பதில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் நிற்கின்றார்கள்.

பொதுவாகவே பாலியல் பிரச்சினைகளை நம் சமூகம் அணுகும் விதம் கவலைக்குரியது. சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள பிற்போக்கு ஆணாதிக்க சிந்தனையே அதை வழிநடத்துகின்றது.

தனிச் சொத்தை காப்பதற்காக பெண் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள கற்பு போன்ற ஒழுக்க விழுமியங்கள் அவர்களை சமூகத்தில் கீழ் நிலையில் இருத்தி வைத்து கடும் ஒடுக்கு முறையான ஒருதலை பட்சமான நீதி போதனைகளை வழங்குகின்றது.

சமூகம் எவ்வளவுதான் தன்னை அறிவியல் ரீதியாக புணரமைப்பு செய்துக் கொண்டு முன்னேற முயன்றாலும் பழமையின் கரங்கள் ஓங்கி இருக்கும் வரை பெண்களுக்கான முழு விடுதலை என்பது சாதியமில்லை.

பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறை என்பது சாதிய மனோபவத்திலும், மத வெறியிலும் வேர் கொண்டு இருந்தாலும் அதை தாண்டி அதன் வீச்சு வியாபித்து இருக்கின்றது.

காரணம் எல்லா சாதியிலும் மதங்களிலும் பாலியல் ஒடுக்கு முறை என்பது, அந்த சாதியும் மதமும் இருக்கு சமூகத்தின் ஓர் அங்கமாக மாறிய பின் அது சாதியையும் மதத்தையும் கடந்து சமூகத்தின் ஒரு பொது அங்கமான சிந்தனா முறையாக மாறிப்போகின்றது.

அப்படி பொதுச்சிந்தனா முறையாக மாறிப் போன ஒன்றை நாம் திரும்பத் திரும்ப சாதியோடும் மதத்தோடும் இணைத்து தொடர்பு படுத்தி பார்ப்பது பிரச்சினையை குறுகிய வட்டத்திற்குள் நின்று பார்ப்பது போல ஆக்கி விடும்.

இன்று பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றத்தையும் அவன் ஒரு பார்ப்பனன் அதனால் தான் அதை செய்தான் என பார்ப்பதும் பிரச்சினையின் மீதான தீவிரத்தைக் கடந்துச் செல்லவே உதவும்.

உண்மையில் ராஜகோபாலன் பார்ப்பனனாக இல்லாமல் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பான். பள்ளி நிர்வாகம் பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்பட்டாலும் இது போன்ற சம்பவங்கள் பள்ளியின் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்திருந்தாலும் இதில் சாதி முக்கிய பங்காற்றி இருக்க வாய்ப்பில்லை.

ஒரு வேலை ராஜகோபாலன் சூத்திரதாரியாக இருந்து பள்ளி நிர்வாகம் குற்றவாளியின் சாதியை சேர்ந்ததாக இருந்தாலும் அதையேதான் செய்திருக்கும்.

இது போன்ற பாலியல் குற்றவாளிகளை பள்ளி நிர்வாகம் காப்பாற்றுவதற்கு முதன்மையான காரணம் பள்ளியின் பெயரும், அதன் மூலம் கிடைக்கும் கொழுத்த லாபத்தையும் இழக்கக் கூடாது என்பதும் தான்.

அதைத் தாண்டி காப்பாற்றுவதற்கு சாதி சிறிது காரணமாக இருக்கலாம். ஆனால் பிரச்சினை வெளிப்பட்டு விட்டால் சொந்த சாதி பச்சாதாபமெல்லாம் காணாமல் போய்விடும்.

தற்போது ராஜகோபாலன் பிரச்சினையிலும் அதுதான் நடந்திருக்கின்றது. இதுகுறித்து நடிகரும் பள்ளியின் டிரஸ்டியுமான ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில் “பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை” என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.

மேலும் “முழுக்க முழுக்க இந்தப் பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது எனது தம்பியும் அவரது மனைவியும்தான்” என சொந்த ரத்த உறவுகளையே காட்டிக் கொடுத்திருக்கின்றார்.

அதனால் சாதி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது. பிரச்சினை கைமீறி போகும்போது சாதியோ மதமோ நிச்சயம் துணைக்கு வராது.

ஆனால் பல பேர் இது போன்ற பாலியல் குற்றவாளிகளை சாதியோடும் மதத்தோடும் இணைத்தே தொடர்ந்து அடையாளம் காண முற்படுகின்றார்கள். இதன் மூலம் மற்ற சாதிகளிலோ மதத்திலோ அது போன்ற பாலியல் வக்கிரம் பிடித்த குற்றவாளிகள் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றார்கள்.

நமக்குத் தெரியும் சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியிடம் 17 பேர் 7 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டது.

அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் லிப்ட் ஆபரேட்டர், காவலாளி, பிளம்பர், வீட்டு வேலைக்காரர், எலக்ட்ரீஷியன்கள், தோட்ட வேலை செய்பவர்கள் என அனைவரும் மிக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். மேலும் இவர்கள் யாரும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.

இவர்கள் அனைவரிடமும் பாலியல் வல்லுறவுக்கு ஆதரவான ஒரு கூட்டு மனநிலை செயல்பட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதைப் பற்றி தெரிந்த ஒருவர் கூட அதை அந்தச் சிறுமியின் பெற்றோருக்கோ, இல்லை காவல் நிலையத்துக்கோ சொல்லாமல் பல மாதங்களாக மூடி மறைத்தது மட்டும் அல்லாமல், வாய்ப்பு கிடைத்த போது தங்கள் பங்கிற்கு அந்தச் சிறுமியை வன்புணர்வு செய்தார்கள்.

இவர்கள் அனைவரும் மனு தர்மத்தையோ, பகவத் கீதையோ படித்துவிட்டு வந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடவில்லை. பெண்கள் மீதான பாலியல் ஒடுக்கு முறை என்பது சமூகத்தின் பொதுப் புத்தியாக மாறியிருக்கின்றது.

நாம் கண்டிக்க வேண்டியதும் கேள்வி எழுப்ப வேண்டியதும் அந்தப் பொதுப்புத்தியை நோக்கித்தானே ஒழிய ஒரு குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ அல்ல.

நிர்பயா என்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது ஒட்டு மொத்த நாடே அதற்காக கொந்தளித்தது. ஆனால் எந்த ஒரு தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதும் சமூகம் அப்படி கொதித்தது கிடையாது. இதுதான் இங்கே பிரச்சினை.

பாலியல் குற்றங்கள் எல்லா சாதியிலும் மதத்திலும் நடந்தாலும் அதை கண்டிப்பதில்  அதற்கு எதிராக போராடுவதில் சாதியும் மதமும் குறுக்கே வந்து சமூகத்தின் பொதுப்புத்தியை கட்டுப்படுத்துகின்றது.

அப்படியான அருவருப்பான குறுகிய புத்தியை உடைப்பது ஒன்றுதான் ஒட்டுமொத்தமாக பாலியல் பயங்கரவாதிகளையும் ஒழிக்க உதவும்.

ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியை வன்புணர்ந்து தலையில் கல்லைப்போட்டு பிஜேபியை சேர்ந்த காம வெறியர்கள் கொன்றபோது, “கதவே இல்லாத கோயிலில் எப்படி அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்க முடியும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த எச்சை ராஜா கேள்வி கேட்டான்.

ஆனால் அது அப்பட்டமான பார்ப்பனப் பொய் என்பது நிரூபிக்கப் பட்டது. கேரளாவில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்த ஓர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி “அந்தப் பெண் கொல்லப்பட்டது நல்லது, ஏனெனில் அவள் கொல்லப் படவில்லை என்றால் நாளைக்கு இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக உருவாகியிருப்பாள்” என்றான்.

அது மட்டுமல்லாம் ஆசிஃபாவின் கொலையை நியாயப்படுத்தி ஊர்வலமும் போனார்கள்.

ஒரு குறிப்பிட்ட கருத்தியலை கடைபிடிக்கும் நபர்கள் பாலியல் வன்புணர்வை ஆதரிக்கும் முடிவை எடுப்பதும் அதை அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரிப்பதும் நடக்கத்தான் செய்கின்றது.

நிர்பயா சம்பவத்திற்கு கருத்துச் சொன்ன சில பேரின் கருத்துக்களை பார்த்தாலே இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

“இந்தியாவில் தான் (நகர்ப்புறங்களில்) இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பாரதத்தின் கிராமப் புறங்களில் அல்ல. மற்றும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வது பெண்ணின் வேலை,வெளியே சென்று பணம் ஈட்டுவது ஆணின் வேலை என்பதே திருமண ஒப்பந்தம்” - மோகன் பகவத்.

“பாதிக்கப்பட்ட பெண் கடவுள் பெயரை உச்சரித்து, அந்த ஆண்களின் காலில் விழுந்து நீங்கள் எனக்குச் சகோதரர்கள் போல், என்னிடம் கருணை காட்டுங்கள் என்று மன்றாடியிருந்தால் இது நடந்திருக்காது” - ஆஸாராம் பாபு.

“பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இத்தகைய குற்றங்கள் இந்தியாவில் மிகக் குறைவு என்ற போதிலும் இந்த நிகழ்ச்சியைத் தங்களுடைய பரபரப்புப் பசிக்குத் தீனியாக்கி இந்தியர்களே கற்பழிப்பை வழக்கமாகக் கொண்டு விட்ட காமாந்தகர்கள் என்பது போல மிகைப்படுத்தித் தொலைக் காட்சிகளும் பத்திரிக்கைகளும் சித்தரிப்பது நெறி தவறிய செயல், நமக்கு நாமே இழைத்துக் கொள்ளும் அநீதி”- துக்ளக் சோ.

“லட்சுமணன் கோட்டைத் தாண்டுவது பெண்களுக்கு நல்லதல்ல” – மத்திய பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜய் வார்கியா.

இப்படித்தான் பாலியல் குற்றவாளிகள் சாதியின் பின்னாலும் மதத்தின் பின்னாலும் நின்று தப்பித்துக் கொள்ளவோ இல்லை நியாயத்தை உருவாக்கிக் கொள்ளவோ முயல்வார்கள். ஆனால் அதை கடந்துதான் நாம் பிரச்சினையின் உண்மையான வேர்களை அடையாளம் கண்டு கருக்க வேண்டி இருக்கின்றது.

அரியலூர் நந்தினியை கருவறுத்துக் கொன்றவர்களும், ஹாசினியை கொலை செய்தவனுக்கும், பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்களுக்கும், நிர்மலா தேவி மூலம் தமிழ்நாட்டு பெண்களை தாத்தாக்களுக்கு கூட்டிக் கொடுத்தவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அவர்கள் அனைவருள்ளும் செயல்படும் பெண்களை பாலியல் பண்டங்களாக பார்க்கும் ஆணாதிக்க சிந்தனைதான்.

ஆனால் சாதியாலும் மதத்தாலும் கட்டுண்டு கிடக்கும் சமூகம் சிலவற்றுக்கு தீவிரமாக எதிர்வினை ஆற்றுவதும் சிலவற்றுக்கு மெளனத்தை மட்டுமோ இல்லை அனுதாபத்தை மட்டுமோ தருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றது. அதற்காக அது வெட்கப் படுவதும் இல்லை, குற்றவுணர்வு கொள்வதும் இல்லை.

ஆனால் பிரச்சினை மிக தீவிரமானது. நாம் எப்போது அதை உணர்ந்து சாதியையும் மதத்தையும் கடந்து பாலியல் குற்றவாளிகளை எதிர்க்கின்றோமோ அப்போதுதான் உண்மையில் பெண்களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்ய முடியும். எனவே  ராஜகோபாலன்கள் தனி மனிதர்கள் அல்ல, அவர்கள் சமூகத்தின் பொதுப்புத்தியின் பிரதிநிதிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- செ.கார்கி