மதங்கள் மனிதனுடைய அச்சத்திலும் அறியாமையிலும் தோன்றின. ஆனால் அயோக்கியத்தனத்தினால் தான் செழித்து வளர்ந்தன. அவை என்றைக்குமே சுரண்டல் வர்க்கத்திற்கு ஆதரவான கருத்தியலையே வளர்த்து எடுக்கின்றன. ஆகவே உழைக்கும் மக்களைப் பொறுத்த மட்டில் எந்த மதமும் ஒரு மோசமான நிறுவனமே ஆகும்.

bhagavad gitaமதங்கள் அனைத்தும் மோசமானவை என்றால், இந்து மதம் அதாவது பார்ப்பன மதம் கொடூரமாக மோசமானது. ஏனெனில், வேறு எந்த மதத்திலும் இல்லாத வருண / சாதிப் பிரிவினை இந்து மதத்தில் தான் இருக்கிறது. இப்படிச் சொன்னால் "இந்து மதத்தில் மட்டுமா பிரிவினை இருக்கிறது? கத்தோலிக்க, புராட்டெஸ்டன்ட், பெந்தகொஸ்தே இன்னும் நிறைய பிரிவுகள் கிருத்தவ மதத்தில் உள்ளனவே?, சன்னி, ஷியா, அஹ்மதியா என்று இஸ்லாத்திலும் பிரிவுகள் இல்லையா?" இந்து மதவாதிகள் மிதி பட்ட புலியைப் போலச் சீறிச் சினந்து கேட்கிறார்கள்.

மற்ற மதங்களில் உள்ள பிரிவினைகளுக்கும், இந்து மதத்தில் உள்ள வருண / சாதிப் பிரிவினைக்கும் ஒப்பிட முடியாத / ஒப்பிடக் கூடாத அளவில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. மற்ற மதங்களில் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவிற்கு மாறுவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அது முற்றிலும் தனி நபர் தொடர்பான செய்தியே. ஆனால் இந்து மதத்தில் பறையர் ஒருவர் செட்டியாராகவோ, முதலியாராகவோ மாற முடியாது. ஒருவர் எந்த வருணத்தில் / சாதியில் பிறந்தாரோ அந்த வருணத்தில் / சாதியில் கடைசி வரையிலும் இருக்க வேண்டும்.

இதை விடக் கொடூரமான வேறுபாடு, (உலகில் எங்குமே இல்லாத கொடுமை) இந்து மதத்தில் உள்ளது. அது ஒருவர் பிறந்த வருணத்தை / சாதியை அடிப்படையாக வைத்து அவன் செய்ய வேண்டிய தொழில் நிர்ணயம் ஆவது தான்.

நாட்டின் செல்வங்களையும், மனித வளங்களையும் எவ்விதம் பயன் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தைப் பார்ப்பனர்களுக்கு இந்து மதச் சட்டங்கள் அளித்து உள்ளன. இவர்களுடைய அதிகாரத்தை, அடிபணிந்து நிறைவேற்றி வைக்கும் பணி சத்திரியர்களுக்கும், மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து தரும் பணி சூத்திரர்களுக்கும், சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களைப் பார்ப்பனர்களின் அதிகாரப்படி மக்களிடையே விநியோகம் செய்யும் பணி வைசியர்களுக்கும் இந்து மதச் சட்டங்கள் திணித்து உள்ளன. மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி இன்னும் பிற இந்து மதச் சட்டங்களும், அரசர்களுக்கு வழிகாட்டி என்று சொல்லப்படும் அர்த்த சாஸ்திரமும் இதைத் தான் கூறுகின்றன.

இது இயற்கை நியதியோடு ஒத்திசைந்த கருத்தியலா? நிச்சயமாக இல்லை. இயற்கை நியதிப்படி, அறிவுத் திறன் மிகுந்தோரும், குறைந்தோரும், நன்னடத்தை உளளோரும், தீய நடத்தை உள்ளோரும் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கின்றனர். ஆகவே நன்னடத்தையும், மிகுந்த அறிவுத் திறனும் தேவைப்படும் உயர்நிலை / நிர்வாக / அதிகாரம் செலுத்தும் வேலைகளில் அனைத்து வகுப்பு மக்களும் விரவி இருக்க வேண்டும். அதே போல் அடுத்த நிலை வேலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களும் விரவி இருக்க வேண்டும். ஆனால் இந்து மதம் கோலோச்சும் இடங்களில் உள்ள நிலைமை என்ன? பார்ப்பனர்கள் உயர்நிலை / நிர்வாக / அதிகாரம் செலுத்தும் வேலைகளில் நிரம்பி வழிகின்றனர். அதாவது பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களுக்கும் அவ்வேலைகள் கிடைக்கின்றன. அதனால் மற்ற வகுப்பு மக்களில் உள்ள திறமை மிகுந்தோரும் கீழ் நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இது மிகக் கொடூரமான கொடுமை அல்லவா? இக்கொடுமையை எதிர்த்து மகாத்மா ஃபுலேயும், தந்தை பெரியாரும், அண்ணல் அமபேத்கரும் தான் கொதித்து எழுந்தார்களா? அந்தக் கால மக்கள் வாய் மூடி மெளனிகளாக ஏற்றுக் கொண்டார்களா? இல்லை அந்தக் காலத்திலும் இதற்கு எதிராக மக்கள், கலகம் செய்து இருக்கின்றனர். இந்தக் கலகக் குரல்கள் எல்லாம் வரலாற்றில் பதிவு ஆகாமல் இருட்டடிப்பு செய்ய அவாளால் முடிந்து இருக்கிறது. ஆனால் இக்கலகக் குரல்களுக்கு எதிராக எடுத்த அதிரடி முடிவுகளைப் பதிவு செய்து வைத்து இருக்கின்றனர்.

இதை

"பிராமணன் இழி தொழிலினனாகவே இருக்கட்டும்; அப்போதும் அவன் வழிபடத்தக்கவன். சூத்திரன் உயரிய நற்குணங்களே உருவெடுத்தவனாயினும் சரி! அவனை வழிபடலாகாது. கன்று போட்ட பசு ஒன்று துஷ்டத்தனம் பண்ணுகிறது. குட்டி போட்ட கழுதை ஒன்று சாதுவாக வீட்டில் இருக்கிறது. இவ்விரண்டில் அறிஞர் பசுவை விட்டுக் கழுதையைக் கறந்து பாலைக் கிரஹிப்பார்களா?" என்று பராசர ஸ்மிருதியில் 8வது அத்தியாயம் 25வது செய்யுளில் எழுதி வைத்ததன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

இது மட்டுமா? அறிவுத் திறன் இருக்கிறது என்பதற்காகச் சூத்திரர்கள் உயர்நிலை / நிர்வாக / அதிகாரம் செய்யும் வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்றும், அறிவுத் திறன் இல்லை என்பதற்காகப் பார்ப்பனர்களுக்கு உயர்நிலை வேலைகளை மறுக்கக் கூடாது என்றும் பகவத் கீதை கூறுகிறது. அப்படிச் செய்வதனால் மனித வளங்கள் வீணாவதைப் பற்றியும், நாட்டு நிர்வாகம் நாசமாவதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது என்றும் பகவத் கீதை தெளிவாகக் கூறுகிறது.

இதை

"பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தர்மத்தைக் குணமின்றிச் செய்தாலும் நன்று. இயற்கையில் ஏற்பட்டதொழிலைச் செய்வதினால் ஒருவன் பாவமடைய மாட்டான்." (பகவத் கீதை 18:47)

"குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்திருக்கின்றன." (பகவத் கீதை 18:48)

என்ற செய்யுள்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

இவ்வாறு இந்து மதப் புனித நுல்கள் / இந்து மதச் சட்டங்கள் யாவும் பார்ப்பனர்களுக்கு உயர்நிலையையும், சூத்திரர்களுக்குத் தாழ்நிலையையும் உறுதி செய்தன. இக்கொடுமைகளை எதிர்த்த கலகங்கள் வன்மையாக ஒடுக்கப்பட்டதோடு, மறைக்கவும் பட்டன.

இஸ்லாமியர்களின், ஆங்கிலேயர்களின் வருகை இந்து மதத்தின் மீது, அதாவது பார்ப்பன ஆதிக்கத்தின் மீது அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்தது. ஆனால் ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களின் வசமும், சூத்திரர்கள் உழைப்புக் கல்வியை மட்டுமே பெற்றிருந்த சூழ்நிலையிலும், இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் நிர்வாகத்தை நடத்தப் பார்ப்பனர்களையே சார்ந்து இருக்க வேண்டி இருந்தது. இதனால் பார்பனர்கள் "இந்து தர்மத்தை" வலுவாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் தோன்றிய மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அமபேத்கரின் இயக்கங்களின் போராட்டங்களினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் ஆட்சி அதிகாரக் கல்வியிலும், வேலைகளிலும் சிறிதளவு வாய்ப்புகளைப் பெற்றனர். இவ்வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் கதிகலங்கிப் போன பார்ப்பன அதிகார வர்க்கததினர் இதற்கு எதிராகத் தன் முழு வலிமையுடன் போராடிக் கொண்டு இருக்கின்றனர். அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் கால் பங்கு கூட நிரப்பாமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றனர். இதை ஒவ்வொரு ஆய்வின் போதும் தாழத்தப்பட்டோர் ஆணையம் சுட்டிக் காட்டினாலும் அதை வேண்டுமென்றே கவனிக்க மறுக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருந்தாலும் 40 அண்டுகளுக்கும் மேலாக அதைச் செயலபடுத்தாதமல் அலைக்கழித்தனர்.

வி.பி.சிங் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்து ஆணை பிறப்பித்த உடன், அதைச் செயலற்றதாக்கும் நோக்கத்துடன் அரசுத் துறைகளை எல்லாம் தனியார் மயமாக்கத் தொடங்கினர்.

இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (I.I.T) போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உள்ளே நுழைய முடியாதவாறு நுழைவுத் தேர்வு வழியைக் கையாண்டனர். இந்த நுழைவுத் தேர்வுகளின் நுணுக்கங்களை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் புரிந்து கொண்டு வெற்றி பெறத் தொடங்கிய உடன், நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒருவனுடைய அறிவுத் திறனை எடை போட முடியாது என்ற கருத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். அவாளைப் பொறுத்த மட்டும் அவாள் மட்டுமே உயர் கல்வியைப் பயில முடியும் படியான வழிமுறைகளில் தான் அறிவுத் திறனை எடை போட முடியும்.

மருத்துவத்தைப் பொறுத்த மட்டில், ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் மிகுந்துள்ள தமிழ் நாடு முன்னிலையில் இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக மக்கள் தமிழ் நாட்டிற்கு வருகின்றனர். இதைக் கண்டு கிலி பிடித்துப் போன உயர் சாதிக் கும்பலினர் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மருத்துவர்களாக உருவாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வருகின்றனர்.

இவை மட்டும் அல்ல. ஒடுககப்பட்ட வகுப்பு மக்கள் எந்த விதத்திலும் முன்னேறி விடக் கூடாது என்று அனைத்து வழிகளிலும் மூர்க்கமாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். உலகில் எந்த ஒரு மதத்தினரும் தங்கள் மதப் பிரிவில் இருப்பவர்களுக்கு எதிராகச் செயல்படுவது இல்லை. ஆனால் இந்த மதத்தில் மட்டுமே இக்கொடுங்கோன்மை நிலவுகிறது.

காலம் காலமாகச் சொந்த மக்களின் குருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறதே? இதற்குத் தீர்வே இல்லையா? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நிச்சயமாகத் தீர்வு இருக்கிறது. அது தான் விகிதாச்சாரப் பங்கீடு.

இந்து மதச் சட்டங்கள் பிறப்பை வைத்துத் தொழிலை நிர்ணயம் செய்கின்றன. இந்த இந்த வகுப்பில் பிறந்தவர்கள் இந்த இந்தத் தொழில்களைச் செய்ய வேண்டும் என்று அவை கூறுகின்றன. அதற்கு நேர் எதிராக அனைத்து வகுப்பு மக்களும் அனைத்துத் தொழில்களிலும் இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டைச் செய்து விட்டால், அதாவது விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தி விட்டால், இந்து மதக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டி விடலாம்.

இப்பணிக்கு யார் யார் அணியமாக வேண்டும்? விடுதலை விரும்பிகள் அனைவரும் இதற்காகப் போராட வேண்டும். இந்து மதத்தின் மேல் பற்று கொண்டுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இந்து மதத்தைத் துய்மைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவாவது இப்போராட்டதில் பங்கு கொள்ளலாம்.

- இராமியா