இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வரு கின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக் கின்றன. இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள்.

மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன.

பண்டிகைக் கொண்டாடும் நம்பிக்கையாளர்களில் 60 சதவீதம் பேர் வாங்கு வதற்கு திட்டமிட்டுள்ள பொருள்களுக்கான பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர் என்றும், கடைகளில் வரிசையில் நிற்பதை விட ‘ஆன்லைன்’ வழியாக வாங்குவதற்கே முன்னுரை தர விரும்புவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. வணிக நிறுவனங்கள் ‘தள்ளுபடி’ அறிவிப்புகளை இப்போதே அறிவிக்கத் தொடங்கிவிட்டன.

இந்து பார்ப்பனியப் பண்டிகைகள் மத சடங்குகளுடன் வணிகப் பண்பாடுகளை இணைத்துக் கொள்கின்றன. ‘புனிதமான மதத்தில் வர்த்தகத்தைப் புகுத்தாதே’ என்று இந்து மதத்தைக் காப்பதற்கு அமைப்புகள் நடத்தும் எந்த ‘முன்னணி’யும் ஏன் கண்டிக்கவில்லை? காரணம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த கோரிக்கையை முன் வைத்தால் மக்களே இந்த அமைப்புகளை புறந்தள்ளி தனிமைப்படுத்தி விடுவார்கள். மதப் பண்டிகைகள் வழக்கத்தால் ‘செக்கு சுற்றும்’ நிகழ்வுகளாக மாறி, ‘புனிதப் பெருமை’ நீர்த்துப் போய்விட்டது என்பதே உண்மை.

பண்டிகைக்காக வாங்கும் கணிப் பொறியில் சரசுவதி கதையை காட்சிகளாக சித்தரிக்க முடியாது. அது ‘ஆபாச வீடியோ’ வாக கருதப்பட்டு, ‘சைபர் கிரைம்’ பிரிவு கைது செய்து விடும்! (சரசுவதியின் அந்த கதையை விளக்கும் பெரியார் கட்டுரையை வேறு பக்கத்தில் வெளியிட்டிருக் கிறோம்)

கல்வியை வணிகமாக்கி மக்களை ‘சுரண்டி கொழுக்கும்’ ‘கல்வி தந்தைகளும்’ சரசுவதிக்கு பூஜை போடுகிற கூத்துகளும் ‘இப்படி கொள்ளையடிக்கிறார்களே’ என்று கொதிக்கும் பெற்றோர்களும் ‘சரசுவதி’க்கு பூஜை போடுவதையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னே விசித்திர முரண்!

‘சரசுவதி’யை உண்மையான கடவுள் என்றும், அவர் ‘கல்விக் கண்ணை’த் திறந்து விட்டவர் என்றும் உண்மை யிலேயே இவர்கள் நம்பவில்லை என்பதைத்தான் இவை உணர்த்துகின்றன!

‘பார்ப்பனியத்தை நிலைநாட்டும் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்’ என்று பெரியார் மக்களை சந்தித்துப் பேசினார்; எழுதினார்.

அதற்காக ‘இந்து மத விரோதி’ என்று பார்ப்பனர்களும் பார்ப்பனிய அடிமைகளும் கூக்குரலிட்டனர்.

தமிழ்நாட்டில் பல இலட்சம் ‘சரசுவதிகள்’ பெண்களுக்கான பெயர்களில் மட்டும் இருந்தார்கள். ஆனால், ‘அடுப்பூதும் பெண் களுக்கு படிப்பு எதற்கு?’ என்று “சரசுவதி”களையே தற்குறிகளாக வைத்திருந்த நாடு இது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே ‘பெண்கள்’, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களுக்கான கல்விக் கதவு திறந்தது.

இதைத் திறந்தது சரசுவதிக்காக நடந்த பூஜைகள் அல்ல; சரசுவதியை கொண்டாடச் சொன்ன பார்ப்பனர்களும் அல்ல; அந்த நம்பிக்கைகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களும் சமூக நீதிக் களங்களும் தான்! இந்த வரலாற்றைப் புரிந்த மான உணர்வாளர்கள் ‘சரசுவதி’யை கொண்டாட மாட்டார்கள்.

சரசுவதிக்கு விழா கொண்டாடுகிறவர்கள், உண்மையாகவே கல்விக் கண் திறந்த காமராசருக்கு விழா நடத்தலாமே!

அந்த விழாவில் ஒருவருக்கொருவர் அறிவார்ந்த நூல்களை பரிசுகளாக வழங்கலாமே!

கல்விக்கு செலவிட இயலாத ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வரலாமே!

சிந்தியுங்கள்!