21ஆம் நூற்றாண்டிலும் கூட  இந்திய அரசியலில்  மதவாத சக்திகள் வெற்றி பெற்று, சமூக பொருளாதாரச் சரிவுகளை  ஏற்படுத்தி வருவதைக்  கண்டு உலகில் பலர் கவலை தெரிவிக்கின்றனர். அறிவியல் பயன்பாடும் தகவல் தொழில்நுட்பமும் மேலோங்கி நிற்கும் இக்காலக் கட்டத்தில், ஒரு சிறிய கைப்பேசியில் உலகத்தின் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கிற வாய்ப்பு சாதாரணக் குடிமகனுக்கும் கிட்டியுள்ள நிலையில் மதவாதம் ஏன் ஓங்கிவருகிறது என்ற கேள்விக்கு விடை காண்பது காலத்தின் கட்டாயமாகிறது.

பல வரலாற்று ஆய்வாளர்கள் சேஷயங்கார் தொடங்கி கிருத்துவப் பாதிரியார் ஹிராஸ் வரை தங்களின் வரலாற்றுப் படைப்புகளில் ஆரிய திராவிடப் போராட்டம் என்பது தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த தைச் சுட்டியுள்ளனர். இன்றைக்கு தமிழகத்தின் பல பகுதி களில்  கிடைக்கின்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் காணப்படும் தரவுகள் தமிழர் நாகரிகத்தின் தனித் தன்மையை எடுத்து இயம்புகின்றன.

ஆரியர்கள் திராவிடர் போராட்டத்தை எதிரொலிக்கும் வகையிலும் ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகிற வகையிலும் பல இதிகாசங்களும் காப்பியங் களும் தோன்றின. வேத காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கருத்து மோதல்கள்  புத்தர், மகாவீரர் ஆகியோர் காலத்தில் ஓரளவிற்குத் தற்காலிகமாக முடிவுற்றது. பின்பு மௌரி யர்கள் ஆட்சியில் குறிப்பாக அசோகர் காலத்தில் சீனா, தாய்லாந்து, பர்மா, ஜப்பான், இலங்கை  ஆகிய நாடுகளில் பௌத்தத்தின்  செல்வாக்கு தழைத்தோங்கியது. மீண்டும் குப்தர் ஆட்சிக்காலத்தில் சனாதனம் கோலோச்சியது.

இந்தியத் துணைக்கண்டத்தை பல்வேறு இனக்குழுக் களும் மத குழுக்களும் கைப்பற்றி ஆட்சி செய்தன. பாபருக்குப் பின் முகலாயர் ஆட்சி 300 ஆண்டுகளும், கிழக்கிந்தியக் குழுமங்களான பிரெஞ்சு டச்சு போர்ச்சுக் கீசிய ஆங்கிலேயே ஆட்சிகள் ஏறக்குறைய நூறாண்டு களும், பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சி 89 ஆண்டு களும் நடைபெற்றன. இக்காலக்கட்டத்தில்தான் இந்தியா வில் ஆங்கில மொழிக்கல்வியும் நிர்வாகமும் நிலை பெற்றது. ஆங்கில வழிக்கல்வியின் சாதக பாதகங்கள் பற்றிப் பல ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஆங்கில வழிக் கல்வி வந்த பிறகுதான் அறிவியல் வளர்ச்சியும் மதவாத சக்திகளை அடையாளம் காணுகின்ற ஆய்வுகளும் வெளிவரத்தொடங்கின. சனாதனமும் அடக்கு முறை சாதியக் கட்டமைப்பும் மிகச் சிலர் சமுதாய பொருளாதார அரசியலில் ஓங்கியிருந்ததையும் காண முடிந்தது. இன்றைய ஆர்.எஸ்.எஸ். சக்திகளால் மிகவும் கடுமை யாகத் தாக்கப்படுகிற  மெக்காலேதான்  தொடர்ந்து போராடி பார்ப்பனர்களின் கல்வி மேலாதிக்கத்தை முறியடித்தார் என்று பல ஆய்வுகளும் நூல்களும் குறிப்பிடுகின்றன.

இந்து தர்மத்தின் சாதியத் தாக்கம் கொடுமையானது.  கொடைத்தன்மையை சாதி தகர்த்துவிட்டது. சாதி பொதுக்கருத்து ஒன்று தேவையில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டது.  இந்துவினுடைய பொதுத்தன்மை என்பதே அவனது சாதிதான். அவனுடைய பொறுப்பும் சாதியைச் சார்ந்தது. அவனுடைய பற்றும் சாதியைச் சார்ந்ததே. ஒழுக்கமும் நன்மையும் சாதியைச் சார்ந்ததாக மாறிவிட்டது. தகுதிக்கும் திறமைக்கும் சாதி இரக்கத் தையும் பாராட்டையும் அளிக்காது. தேவையானவர் களுககு அருளிரக்கம் சாதியில் கிடையாது. இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் தனது “சாதியை முற்றிலும் ஒழித்துக்கட்டு (Annihilation of Caste)” நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக, புரையோடிய சாதியையும் சாதியைப் பாதுகாக்கின்ற மதத்தையும் தந்தை பெரி யாரும் டாக்டர் அம்பேத்கரும்தான் சரியான வகையில் இனம் கண்டு தங்கள் வாழ்நாள் இறுதிவரை போராடினர். ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகக் களம் கண்ட காங்கிரசு பேரரியக்கம் சனாதனவாதிகளின்  ஆதிக்கத்தில் இருந்ததால்தான் தந்தை பெரியார் காந்தியிடம் இருந்து வேறுபட்டு விலகினார். காந்தியிடமே சனாதனத்தின் கொடும் விளைவுகளை நேருக்கு நேர் சுட்டினார். ஆனால் எந்த அரசியல் கட்சியும் விடுதலைக் குப் பிறகு இதனை முழுமையாக ஆய்ந்து தெளிந்து அரசியல் களத்தை அமைக்கவில்லை. இதன் காரணமாகத்தான்  இன்றைக்கு பாஜகவின் தனித்த ஆட்சி ஒன்றிய அரசில் இடம் பெற்று இந்துமத சர்வாதிகாரமாக மாறிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில்தான் அறிஞர்கள் எழுத்தா ளர்கள் சிந்தனையாளர்கள் ஏட்டாளர்களான 2013இல் நநேரந்திர தபோல்கர், 2015இல் பன்சாரே, கல்புர்கி, 2017இல் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலை களைப் பற்றி ஆய்தல் அவசியமாகிறது.

இந்திய மண்ணில் மதவாதமும் சாதியவாதமும் மனுதர்மும் முற்றிய நோயாக இருந்ததால்தான்  நூற்றாண்டிற்கு நூற்றாண்டு பல வடிவங்களில் மானுடம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றது. நெறிகள் சிதைக் கப்படுகின்றன. நீதி வளைக்கப்படுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமணர்கள் கழுவேற்றப் பட்டனர்.  பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில்  வலிமை பெற்ற பசவர் இயக்கம் வீரசைவத்தைப் போற்றி னாலும் சனாதன தர்மத்தை ஏற்காத காரணத்தினால்  17ஆம் நூற்றாண்டில் நஞ்சன்கோடு பகுதியில் பல்லா யிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சமூக ஆய்வாளர் மேக்சு வெப்பர் பசவர் இயக்கத்தினரை சமத்துவப் பிரிவினர் பார்ப்பனியத்திற்கு எதிராகக் கொள்கை அடிப்படையில் புரட்சி செய்தவர்கள் என்று குறிப்பிட்டுள் ளார். இது போன்ற அடிப்படை உண்மைகளை கல்புர்கி, கௌரி லங்கே போன்ற சிந்தனையாளர்கள் தங்களின் கட்டுரைகளிலும் உரைகளிலும் வெளியிட்டு வந்தனர். சிலர் மேலோட்டமாக நினைப்பது போல பின்னிப் பிணைந்த சாதியமும் மதவாதமும் பிரித்தானிய ஏகாதி பத்திய காலத்தில் கடுமையான கொடுமையான நிர்வாக அமைப்பு முறை இருந்த போதும் மதவாத்தின் அடிப்படை யில்தான் சிப்பாய் கலகம் 1857இல் வெடித்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இந்தியா விடுதலை பெற்ற விறகு 1948இல் காந்தியின் படுகொலை 1993இல் பாபர் மசூதி இடிப்பு, 2002இல் குஜராத் கோத்ரா கலவரம் எனப் பல்வேறு வடிவங்களில் இந்த சனாதன அமைப்புகள் இந்து மதம் என்கிற பெயரால் முற்போக்கு எண்ணத்தையும் சமூகத்தின் அமைதியையும் கெடுத்து மக்களைப் பிளவுப்படுத்தி அரசியல் வெற்றிகளையும் ஈட்டி வருவதை முழுமையான முறையில் இந்திய அரசியல் கட்சிகள் காணத் தவறிவிட்டன.

குறிப்பாக 1947இல் நேரு காலத்திலேயே இந்து சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் முற்போக்கான வடிவில்  அரசமைப்புச் சட்ட அவையில் முன்மொழிந்த போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரும் புரி சங்கராச்சாரியரும் புதுதில்லியில் தொடர்ந்து நேரு அம்பேத்கர்ன் உருவ பொம்மைகளை பல நாட்கள் எரித்தனர். இந்து சட்டத்தை எழுத ஒரு பஞ்சமனுக்கு உரிமையும் தகுதியும் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். இவற்றை வரலாற்று ஆய்வாளர் இராமசந்திர குகா தனது ( Makers of Modern India ) ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். மீண்டும்  1951இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்து சட்டத்தை முற்போக்கான வடிவில் சட்ட அமைச்சராக இருந்து மீண்டும் முன்மொழிந்தார். துணைப் பிரத மராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த வல்லபாய் பட்டேல் இந்த சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சட்டவடிவை முன்மொழிந்த போது பட்டேல் உட்பட பல காங்கிரசு தலைவர்கள் எதிர்த்த காரணத்தினால்தான் டாக்டர் அம்பேத்கார் நேரு அமைச்சரவையில் இருந்து 1951இல் விலகினார். இதுவும் சாதியமும் சனாதனமும் மதவாத மும் ஒன்றாக இணைந்து கைகோர்த்ததனால் தான் பின்பு டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலகி பௌத்தத்தைத் தழுவினார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து விலகிய காலத்திலிருந்து தொடர்ந்து பல களங்களை அமைத்து சாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக போராடியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் இந்த மதவாத சக்திகள் தனது வாலை முழுமையாக நீட்ட முடியவில்லை.  பொருளாதார நூல்களில் விளம்பர நட வடிக்கையின் விளைவு (Demonstration Effect) என்ற கருத்துரு முன்மொழியப்படுகிறது. ஒரு புதிய கண்டு பிடிப்பு வழியாக புதிய பொருள் சந்தையில் வந்தால் அதை ஒருவர் வாங்கினால் அதனைப் பின்பற்றி அந்த பொருளை பல ஆயிரக்கணக்கான பேர் வாங்கிப் பயன் படுத்துவார்கள். சான்றாக, கைப்பேசி ஒருவரின் பணிக்கு முழுமையாகப் பயன்படுகிறதோ இல்லையோ அதை விலை கொடுத்து வாங்கி  கையில் வைத்திருப்பது மனிதர் களின் இயல்பாகிவிட்டது. இதுதான் விளப்பர நடவடிக் கையின் விளைவு என்று சுட்டப்படுகிறது.  சமூகத்திலும் ஒருவர் பின்பற்றியதை மற்றவர் பின்பற்றுகின்ற சூழல் இருந்த நேரத்தில் பெரியார் இதே கருத்துரையைப் பயன் படுத்தி தன்னுடைய நடவடிக்கைகளின் வழியாக சமுதாய சீர்த்திருத்தத்திற்கு வழிகண்டார்.

சான்றாக திராவிடர் கழக ஊர்வலங்களில் தீச்சட்டியை ஏந்திச் செல்லும் போது இது கடவுளின் சக்தியாலோ அல்லது மதத்தின் சக்தியாலோ அல்ல என்று  மெய்ப்பிக்கப்பட்டது. இதே நிலையில்தான் தந்தை பெரியார் 1953இல்  பிள்ளையார் சிலை உடைப்பை நிகழ்த்தினார். அப்போது பலர் கடுமையான விமர்சனங்களை திராவிடர் கழகத்தின் மீதும் பெரியார் மீதும் வைத்தனர். இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து சில தலைவர்கள் பெரியாரின் பிள்ளை யார் சிலை உடைப்பை எதிர்மறையாக எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்தனர். ஆனால் சில ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை கட்சியிலிருந்து இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒரு கருத்துரை வந்தது. அதில் உங்களுடன் பயணம் செய்யும் சக பயணி (Fellow Traveller) ஒருவரை உணர முடியவில்லையா? என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கருத்தை இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கட்டுரையாசிரியரிடம் ஒரு உரையாடலில் தெரிவித்தார். இன்றைய நிலைமை என்ன? இதே பாஜகவும், சங் பரிவாரங்களும், இந்து முன்னணியிரும் பிள்ளையார் சிலைகளை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலேயே அரசியல் சமூகச் சூழலை மாற்ற முயலுகிறார்கள்.  ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

அரசியலில் மதவாதத்தை பிள்ளையார் வழியாக வடநாட்டிலும் குறிப்பாக மராட்டிய மண்ணிலும் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். 1973இல் தந்தை பெரியார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பசுக் கறி பன்றிக் கறி போன்ற உணவுகள்  சமைத்து பல மதத்தினரும் பகுத்தறிவாளர்களும் பங்கேற்ற உணவுத் திருவிழா தந்தை பெரியார் ஆந்திர நாத்தீகச் சங்கத் தலைவர் கோரா முன்னிலையில் நடைபெற்றது. இன்றைக்கு இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில், ஒடுக்கப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் தாக்கப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். அண்மையில் உச்சநீதிமன்றம் இந்த பசுப் பாதுகாவ லர்கள் எல்லை மீறும் போது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மாநில அரசுகள்தான் என்று கூறி ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் சுட்டப்படுகிற விளம்பர நடவடிக்கை விளைவை தனக்கு சாதகமாக பயன் படுத்திய மாபெரும் புரட்சியாளராக, மறைந்தும் மறை யாமல் கொள்கை உருவில் இன்றும் இளைஞர்கள் இடத்தில் வலம் வருகிறார்.

தமிழ்நாட்டில்தான் பகுத்தறிவுக் கருத்துகளையும் நாத்திக கருத்துகளையும் சமதர்ம கருத்துகளையும் ஊரெங்கும் நகரெங்கும் எடுத்துச் சொல்ல முடிகிறது. ஆனால்  மராட்டிய மண்ணிலும் கர்நாடக மண்ணிலும் இந்து மத சக்திகள் எதிர்ப்பாளர்களை துப்பாக்கி முனையில் படுகொலை செய்கிறது; மிரட்டிவருகின்றன. கௌரி லங்கேஷ் ஒரு பெரும் சமூகப் போராளியாக- பகுத்தறிவுவாதியாக எதிர்ப்புக்கு அஞ்சாத வீராங்கனை யாக  வலம் வந்துள்ளார். அவரைப் பற்றிய குறிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. கௌரியின்  தந்தை லங்கேஷ் ஆரம்ப காலத்தில் ஆங்கில விரிவுரையாள ராகப் பணிபுரிந்துள்ளார். பெங்களுரில் காந்தி வணிகத் தெருவிற்கு அருகே ஒரு சாதாரணக்  குடியிருப்பில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இரண்டு மகன்கள் மகள்களை படிக்க வைக்கப் போதிய வருமானம் இல்லாததால் கன்னட பத்திரிக்கைகளிலும் கட்டுரைகளை எழுதினார்.  பின்பு அவரது கட்டுரைகளில் முன்மொழிந்த கருத்துகள் பெருமளவில் இளைஞர்களிடையே தாக்கத் தை ஏற்படுத்தின. அரசிற்கு எதிராக கட்டுரை எழுதக் கூடாது என்று கூறப்பட்டதால் லங்கே‘ ஏடு என்று ஒன்றை, தொடங்கி சமூக முற்போக்கான கருத்துகளை எழுதி ஒரு சிறந்த பத்திரிக்கையாளராகவும் வலம் வந்தார். கௌரி லங்கேஷ் கல்லுரி படிப்பை தேசியக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது சித்தானந்த் ராஜ்கட்டாவை சந்தித்து காதலிக்க தொடங்கினார்.

இருவரும் தேசியக் கல்லூரியின் முதல்வரான-சிறந்த பகுத்தறிவாளரான நரசிம்மையாவின் நாத்தீகக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்கள். இலங்கையைச் சேர்ந்த பகுத்தறிவாளரான அப்ரகாம் கோவூரும் இவர்களுக்கு பகுத்தறிவு நெறியை ஊட்டினார். இந்த இரு சிறந்த பகுத்தறிவாளர்களால் வடிவமைகப்பட்ட கௌரி லங்கேஷ் சித்தானந்த் ராஜ்கட்டாவை சாதி மறுப்புத் திருமணம் செய்தார். சில ஆண்டு காலத்தில் இவர்கள் திருமண உறவிலிருந்து விலகிவிட்டாலும் இறுதி வரை நண்பர் களாகவே இருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சித்தானந்த் ராஜ்கட்டாவை சந்தித்த போது கௌரி தனது கொள்கையைப் பற்றி  விளக்கி யிருக்கிறார். அவரது தந்தை 2000இல் மறைந்த பிறகு லங்கேஷ் நடத்திய பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து முற்போக்கான கருத்துகளை முன்மொழிந்தார். சாதிய மதவாதக் கருத்துகளுக்கு எதிராகப் பல கட்டுரைகளைத் தீட்டினார். மறைந்த வீரப்பனை வேட்டையாடுவதாகக் கூறி பழங்குடியினரைத் தாக்குவதைக் கண்டித்தார்.  தனது முன்னாள் கணவரிடம் இனிமேல் இந்தியாவில் வலதுசாரி சக்திகளுக்கு எதிராகவும் மூட நம்பிக்கை களுக்கு எதிராகவும் இடது சாரிகளை ஒன்றிணைத்து கருத்துகளை வெளியிடுவேன். தேவையென்றால் களம் அமைத்துப் போராடுவேன் என்றும் குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மூட நம்பிக்கையின் காரணமாக தனது மகிழுந்தை மாற்றினார் என்ற செய்தி வெளி வந்தவுடன், கௌரி அவர்கள் உடனடியாக  முதல்வரைச் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்.

சித்தராமைய்யா தான் அது போன்று எந்த மகிழுந்தையும் மாற்றவில்லை-தனக்கு பகுத்தறிவின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று கூறிய போது. உடனே கௌரி எதிரிகளின் விஷம பிரச்சாரத்தை எதிர்த்து சித்தராமைய்யாவை ஆதரித்துக் கட்டுரை வெளியிட்டார். இது போன்ற  எண்ணற்ற பகுத்தறிவு சார்ந்த பணிகளை மேற்கொண்ட காரணத்தினால் மதவாத சக்திகள் இவரைச் சுட்டு வீழ்த்தினர். இந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் ஒரு அதிர்ச்சி அலை உருவாகியது. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கரின் தன்னலமற்ற  பணிகளை தொண்டினை மீண்டும் புதிய எழுச்சியோடு இளைஞர்கள்  ஏற்றுக்கொண்டு வலைதளங்களில் சனாதனத்திற்கு  எதிராக களம் கண்டு வருகின்றனர். தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாளில், காங்கிரசு தலைவர் ராகுல் பீகாரின் லாலு பிரசாத், சரத் யாதவ், சித்தராமைய்யா போன்ற தலைவர்கள் தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து பெரியாரின் கருத்துகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.