குழந்தைகளுக்கான படக்கதைகள் 10 புத்தகங்கள்

குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்ற பெயரில் லாரி லாரியாக நீதிக்கதைகளை வாரி வழங்கி வந்த தமிழ்ச்சமூகத்தில் சமீப காலமாக சில அர்த்தமுள்ள முயற்சிகள் நடைபெற்று வருவது ஆறுதல் அளிக்கிறது.

தம் தம் தம்பி புத்தகங்கள் என்கிற இவ்வரிசை அந்தக் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது. கட்டைவிரலைப் பதித்து அதில் ஒரு தம்பியையும் உருவாக்கி பத்துப் புத்தகங்களும் பத்துக்கதைகள் சொல்கின்றன. அதில் நீதி என்கிற அயோக்கியத்தனம் புகுத்தப்படவில்லை. கதை என்ற பேரில் பெரிய பிலாக்கணமும் இல்லை. மாதிரிக்கு ஒரு புத்தகத்தை பற்றி...

முதல் புத்தகமான 9 லிருந்து 1 வரையில் என்ன கதை இருக்கிறது? 9 சுவர்க்கோழிகள் பேசுகின்றன, 8 எறும்புகள் நடக்கின்றன, 7 குருவிகள் பாடுகின்றன, 6 சிலந்திகள் ஏறுகின்றன, 5 மீன்கள் குதிக்கின்றன, 4 தவளைகள் சிரிக்கின்றன, 3 மலர்கள் தூங்குகின்றன, 2 மாடுகள் அசை போடுகின்றன, 1 பூனை கத்துகிறது 9 சுவர்க்கோழிகள், 8 எறும்புகள், 7 குருவிகள், 6 சிலந்திகள், 5 மீன்கள், 4 தவளைகள், 3 மலர்கள், 2 மாடுகள், 1 பூனை ஆகிய இவர்கள் எல்லோரும் தம்பியும் மழைக்காகக் காத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் 12 பக்கங்களில் நடக்கிறது. அப்புறம் இரண்டு பக்கங்கள் குழந்தைகள் தங்கள் கட்டை விரலைப் பதித்து படம் வரைவதற்காக விடப்பட்டுள்ளன.

எவ்வளவு முற்போக்கான குழந்தைக்கதை இது என்கிற வரிதான் என் மனதில் முதலில் ஓடியது. எண்களின் வரிசையைக் கதையோடு நினைவில் வைப்பதற்கான சிறந்த புத்தகமாக இது வந்துள்ளது.

Pin It