அயல்மொழி அலமாரி - 2

உலக அளவில் மனிதனின் அறிவுத் தேடலுக்கு பெரிய உந்து சக்தியாக இருப்பவை என இரண்டு துறைகளை அடையாளம் காணலாம். ஒன்று உடற்கூறு இயலின் அடிப்படையில் உலகின் உயிர் சாரத்தை அங்குலம் அங்குலமாக (செல் செல்லாக?) புரட்டிப்போடும் உயிரியல். இன்னொன்று பிரபஞ்சத்தின் மூலை முடுக்கு என்று பாக்கி இல்லாமல் துழாவி காலம், பருப்பொருள்... வெளி என நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை குறித்த கோட்பாடுகளை அடையத் துடிக்கும் இயற்பியல். மனித அறிவுத்தேடலின் வரலாற்றில், மிகக் கடினமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு அடிப்படை உண்மைப்பொருளின் சாரத்தை பட்டறிவுக் கடலின் ஆழங்கள் வரை சென்று எடுத்துவந்து அடுக்கியது என்று பார்த்தால் இன்றுவரைக்கும் இந்த இருதுறைகளும்தான்.

அறிவின் பிதாமகரான அரிஸ்டாட்டிலின் எத்திக்ஸ் முதல் இன்றுவரை, புத்தகங்கள் பல அறிவியலின் நடப்பை என்ன என்பதை உலகிற்கு தொடர்ந்து சொல்லியும், அந்தத் தேடலை யார்வேண்டுமானாலும் எங்கிருந்தும் எடுத்துச்செல்ல பெரிய உந்து சக்தியாக இருந்து வந்துள்ளன. ஜான் டால்டன் அணு குறித்த அடிப்படையை அறிவிக்கும் பல்லாண்டுகளுக்கு முன் இத்தாலியிலிருந்து வாட்டிகனுக்கு கால்நடைக் கைதியாக இழுத்துச்செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்ட கலீலியோ முதல் உயிரோடு இருக்கும் போதே மரணச் சான்றிதழ் வழங்கப்பட்ட பரிணாமவியல் தத்துவப் பேராசான் டார்வின் வரை ‘கடவுளின்’ தோல்வியை முன் அறிவித்த பலரை மதவாதிகள் பழிதீர்த்த கதையை எழுதினால் பல ஆயிரம் பக்கங்கள் பிடிக்கும். இந்த முடிவற்ற வானத்தின் கீழே எப்போதும் வற்றாத நதியாய் ஓடும், புத்தக வாசிப்புக்குள் என்னைப் போன்ற ஆர்வலர்கள் நுழைந்த காலகட்டமான 1975களுக்குப் பிறகு அணுவியல் முதல் ஐன்ஸ்டீன்வரை பலவற்றைக் குறித்து சுவையான நூல்களை சோவியத்தின் ‘மீர்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்து குவித்தது. அதன் வழியே அறிவியல் உலகிற்குள் அறிவியலின் வரலாற்றை ஒர் தேடலாக ஆக்கிக் கொண்டு நாங்கள் பயணித்தோம்.

குறிப்பாக இயற்பியல் என்னைப் போன்றவர்களை சுண்டி இழுப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகப்பேரறிவு ஆசான்களாக வரலாறு போற்றும் பலர் இயற்பியல் துறையிலிருந்து இயங்கியது ஒன்று. இரண்டாவது, செயற்கை கோள் முதல், மருத்துவ அறுவைசிகிச்சை கருவி வரை அனைத்திலும் கோலோச்சும் அதன் ஆக்கிரமிப்பு. இந்த பிரபஞ்சம் எதனால் ஆனது.. அதன் தோற்றம்.. மற்றும் எதிர்காலம் குறித்த வளமான கேள்விகளுக்குச் செறிவான பதில் தேடும் நீண்ட பயணத்தில் நாமும் இணைந்திருப்பதற்கான ஒரு மன எழுச்சியை இத்துறை சார்ந்து வாசிப்பவர்கள் இயல்பாகவே பெற்று விட முடியும்.

இவ்விதத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் தாமஸ். எஸ். குன் (Thomas.s.Kuhn) எழுதி சிக்காக்கோ பல்கலைக் கழகம் 1962ல் வெளியிட்ட அறிவியல் புரட்சிகளின் அமைப்பு (The Structure of Scientific Revolutions) எனும் 647 பக்க அற்புதம்! அன்று முதல் தொடங்கிய தேடலின் வழியில் எங்கோ ஏற்கனவே ‘கடவுளின்’ இறுதிச் சடங்கில் நான் கலந்து கொண்டிருக்கவேண்டும். கார்ல்சாகன், ஜாவோ மகாய்ஜோ, விலாடிமிர்ஃபோக், பிரியான் கிரீன் என்ற நீண்ட வரிசையில் 1989ல் எனது வாசிப்பு மேசைக்கு வந்து சேர்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். அவரது புதிய நூலான தி கிராண்ட் டிசைன் (The Grand Design) பற்றியும் அதே போக்கில் எழுதப்பட்டுள்ள, லீ ஸ்மோலின் எழுதிய தி டிரபிள் வித் பிசிக்ஸ் (The Trouble with Physics) பற்றியும் யாரிடமாவது பேசித்தீர்க்க மாட்டோமா என மனம் பதறுகிறது.

stephen hawkins1988ல் வெளிவந்து இன்றுவரை பெரிதும் பேசப்படும் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் காலம் குறித்த சுருக்கமான வரலாறு (The Brief History of Time). உலக அளவில் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு இயற்பியலில் அடிக்கடி அடிபடும் பெயராக ஸ்டீபன் ஹாக்கின்ஸின் பெயர் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஒன்று இளம்பிராயத்திலேயே மோட்டார் நியூரான் நோய் (Motor Neurone Disease) எனப்படும் நரம்புமண்டல முடிச்சு நோய்க்கு ஆளாகி மூளையைத் தவிர வேறெதுவுமே சரியாக இயங்காத நிலை அடைந்து சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்தும் 1980ல் கருந்துளைகளின் கதிர்வீச்சைக் கண்டறிந்து கணக்கிட்டு வெளியிட்ட இயற்பியல் பங்களிப்பு. அத்தோடு சிம்ப்ஸன்ஸ், ஸ்டார் டிரக் போன்ற பிரபல டி.வி. தொடர்களில் நடிப்பதும் கூட அவருக்கு உலகஅளவில் அறியப்பட்ட முகமாவதற் கான அந்தஸ்தை தந்திருக்கலாம். 1989ல் காலம் குறித்த வரலாறு வெளிவந்து ஒருவருடம் கழித்து அது என் கைக்குக் கிடைத்தது. சற்றேறக்குறைய பத்தாண்டுகள் கழித்து காலம் நூலுக்கு ஒரு தொடர்ச்சியான இணைப்பை (Sequal) ஹாக்கின்ஸ் வெளியிட்டது பலருக்குத் தெரியாது. அது ஒரு 470 பக்க புத்தகம். தி தியரி ஆஃப் எவ்ரி திங். இந்நூல் பத்தாண்டுகள் கழித்து வந்தது.

ஆனால் தி கிராண்ட் டிசைன் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கலிபோர்னிய பேராசிரியர் லியோனார்டு முலோடினோவுடன் இணைந்து எழுதியுள்ள புத்தகம். இக்கட்டுரையில் பேசப்படும் மற்றொரு நூலான தி டிரபுள் வித் பிசிக்ஸ் நூலின் ஆசிரியர் லீஸ்மோலின் பற்றி இங்கே நிறையத் தெரியாது. 1997-ல் இவருடைய தி லைப் ஆஃப் காஸ்மாஸ் (The Life of Cosmos) எனும் நூல் இயற்பியலின் மற்றுமொரு பரிமாணத்தை சிறப்பாகப் பொது அரங்கில் வைத்து உரையாடியது.

இயற்பியலின் கஷ்டகாலத்தை முன்மொழியும் இரண்டு புத்தகங்களுமே இப்பிரபஞ்ச படைப்பு இயல்பாக நடந்திருக்க வேண்டும். ஒரு படைப்பு ‘கடவுள்’ திட்டமிட்டு இதை ஆறுநாளிலோ அல்லது புனித யாத்திரையிலோ அல்லது தனது சதை கிடுக்கிலிருந்தோ வரவழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆணித்தரமாக பறைசாற்றுகின்றன. ஒளி அலையா அல்லது துகளா என்று கண்டறியும் பெரிய ஆய்வு ஒன்றை 1890களின் முடிவில் தொடங்கி 1901 வரை நடத்திய மைக்கல்சன் மற்றும் மார்லே ஆகியோர் ஒளி ஊடுருவதற்கு ஈத்தர் எனும் ஊடகம் (அது இருப்பதாக நம்பப்பட்டது) இருப்பதாக நிரூபிக்க முடியாமல் தோற்றார்கள். ஒரு ஆய்வு தோல்வி அடைதலும் அறிவியலின் முக்கிய திருப்பு முனையாக அமையலாம். அந்த இடத்திலிருந்து தனது அறிவியல் தேடலை அமைத்துக்கொண்ட ஐன்ஸ்டீன் சார்பியல் தத்துவத்தை வந்தடைந்தார். இது 1950 வரையிலான கதை. அதன் பிறகான இயற்பியல் இரு குழுக்களை பொதுவில் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒன்று துகளியலாளர்கள் (Particle Physists) மற்றொன்று அலையாளர்கள் (Wave physists) இப்பிரபஞ்சத்தை இழைகளால் ஆன பல்முனை பல பரிமாண அமைப்பாக கருதி இழைக்கோட்பாட்டின் வழியே தேடலைத் தொடர்ந்தார்கள். துகளியலாளர்களோ ஒவ்வொரு அணுக்கரு துகளமைப்பிற்கும் இணை தேடி ஈர்ப்பு விசையோடு ஏனைய விசைகளையும் கோட்பாடுகளையும் ஒன்றிணைத்து பிரபஞ்சத்தின் பருப்பொருளை துரத்திச் சென்றார்கள். பிரான்சில் (CERN) நடந்த பெருவெடி சோதனை வரை இருவருக்குமான இயற்பியல் தேடல் கடும் போட்டிகளுடனும், கறாரான, காரசாரமான விவாதங்களுடனும் தொடர்கின்றன.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஒரு அலைவாதி. இழைக் கோட்பாட்டாளர். ஸ்மோலின் ஒரு துகள்வாதி. போஸான் எனும் அணுத்துகள்களைத் தேடி ஆய்வுகளைத் தொடர்பவர். எனவே இருவரது அணுகுமுறையையும் தனித்தனியே வாசிக்கும் நாம் இயற்பியலின் செயல்பாடுகளைத் தூர நின்று பைனாகுலரில் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறுகிறோம்.

மான்ஸா நகரில் ஒரு வட்டக்கண்ணாடிக் குவளையில் மீன் வளர்க்கத் தடைகொண்டு வரப்பட்டதை முன்மொழிந்தபடி தொடங்குகிறது தி கிராண்ட் டிசைன் எனும் புத்தகம். அக்குவளை மீன் உள்ளிருந்து வெளி உலகைக் காணும் போது எல்லாமே கோணலாகவே தெரியும். அருகில் நின்று பார்க்கும் ஒரு குழந்தையின் முகம் கோரமாக மீனிற்கு தெரிகிறது. அது உண்மையென மீன் நம்புகிறது. குவளை ஒரு வளை கண்ணாடி என்றோ, வெளியே அனைத்தும் வேறுமாதிரி இருக்கிறது என்றோ மீன் அறிய வாய்ப்பில்லை. யாருக்குத் தெரியும்... நமது இயற்பியல் கோட்பாடுகளும் அப்படியான ஆபத்தோடு கட்டப்பட்டிருக்கலாம் அல்லவா.. என்றபடி தொடங்கும் இந்த நூல் நியூட்டன் முதல் இன்று வரையிலான கோட்பாடுகளை இணைத்துப் புரிந்துகொள்ளும் பெரிய முயற்சியை முன்வைக்கும் மிகவும் சீரிய அறிவியல் நூலாகும். கடவுளின் இருப்பு குறித்தும் இப்-பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் ‘காலம்’ நூலில் விரிவாகப் பேசிய ஸ்டீபன் ஹாக்கின்ஸ், விரைவில் கடவுளின் திட்டம் என்ன என்பது தெரிந்துவிடும் என நூலை முடித்திருந்தார். ‘தி கிராண்ட் டிசைன்’ நூலில் அவர் இப்பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் வருங்காலம் குறித்து உரையாடவும் விளங்கிக் கொள்ளவும் கடவுள் என்கிற எதுவும் தேவையில்லை என்று நேரடியாக குறிப்பிடுகிறார். 1992ல் பல ஆயிரம் கோடி ஒளியாண்டு தொலைவில் ஒரு நட்சத்திரம் கண்டறியப்பட்டு அதனை சுற்றும் ஒரு கோளையும் சேர்த்து வானில் சுற்றி வரும் ஹபுள் (Hubble) என்ற தொலைநோக்கி படம் பிடித்த போது.. உலக கோட்பாடுகள் சரிந்ததையும்.. ஒருவித எதேச்சையான நிகழ்வுகளின் வழியே புவி தோன்றியிருக்க முடியும் என்பதே இறுதி முடிவாக ஆனதையும் நூல் முன்வைக்கிறது.

ஸ்மோலின் தனது நூலில் இன்று இயற்பியல் பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதை முன்மொழிகிறார். அடுத்த சில பத்தாண்டுகள் கழித்து கண்டுபிடிக்க எதுவுமே மிச்சமிருக்காது. இழைக்கோட்பாடு தோல்வி அடைந்து விட்டது.. அணுவின் சீர் அமைப்பு (Standard Model) மற்றும் இப்பிரபஞ்சத்தின் பெரிய அமைப்பு இரண்டையும் இணைக்கும் அந்த முயற்சி சிக்கல்களோடு அப்படியே நின்றுவிட்டது. காரணம் இந்தப் பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டே இருப்பதை நிறுத்தியபாடு இல்லை. மேலும் மேலும் விரிவாகிக் கொண்டே போகும். இந்த வானவெளியில் புதிய புதிய நெடிலாக்கள் பெருவெடி மூலம் நட்சத்திரக் கூட்டங்களை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. இயற்பியல் தனது எல்லைகளை விரிவாக்க தயார்தான். ஆனால் இனி பெரிய திருப்பு முனை எதையும் முன் அறிவிக்க அது எதையும் பாக்கி வைக்கவில்லை. ஸ்மோலின் கடவுளைப் பற்றி நேரடியாகப் பேசவில்லை. ஆனால் இதுவரை இயற்பியலில் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

திடீர் பரபரப்போடு, ஆண்டவரின் அற்புதத்தையும் கிருஷ்ணரின் லீலையையும், இறைபொருளின் மகிமையையும் தேடி இறைத்தூதர்கள் பதறுவதைப் பார்க்கிறோம். வாட்டிகன் ‘தி கிராண்ட் டிசைனை’ தடை செய்கிறது. ஒரு முட்டாளின் வாக்கு மூலம் என்று கிறித்துவ குரலாளர் ஸ்டீபன் கிரீன் தொலைக்காட்சி காமிராவைப் பார்த்து பற்களை கடிக்கிறார். இஸ்லாமிய யுகே-4 அமைப்பு ஹாக்கின்ஸ் தலைக்கு பரிசு அறிவிக்கும் வரை போகிறது. ‘நாத்திகர்களை இறைவன் என்ன செய்ய வேண்டுமென சொல்லி இருக்கிறாரோ... அதை செய்வோம்’ இனியாத் புஸ்கலாவாலா தனது உறைவிடத்திலிருந்து அறிக்கை விடுகிறார்.

பண்டன் புக்ஸ் வெளியிட்டுள்ள ‘தி கிராண்ட் டிசைன்’... மெல்ல உலக டாப்டென் புத்தக அந்தஸ்திற்கு உயர்ந்து வருகிறது. ஸ்மோலின் அனைத்தையும் குறித்த கோட்பாடு தோல்வி அடைந்ததற்கும் கடவுள் மறுப்பு கோட்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை வெளியிட மறுக்கிறார். விரைவில் தனது எம்.கோட்பாடு நூல் வெளிவரும் என்று அறிவித்தபடி அடுத்த வேலையில் இறங்கி விட்டார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.. தொட்டி மீன்கள் பதறுகின்றன.

Pin It