மதம், தத்துவம், சட்ட முறைகள் இலக்கியம், கலை, இசை போன்ற ஆன்மீகச் சிந்தனை, மதிப்புகள் ஒன்றே பண்பாடு என்று சிலர் கருதுகின்றனர். உற்பத்தி சாதன முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு என்று டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்தியாவிலேயே பிறந்து அயல் நாடுகள் எல்லாம் பரவி மிக செல்வாக்குடன் விளங்கியது புத்தசமயம். அசோகமன்னன் காலத்திலிருந்து அரசாங்க சமயமாகவே ஆக்கப்பட்ட புத்தம், அரசியல் சமுதாய பொருளாதார அமைப்புகளை ஆக்கி இந்தியாவின் கலை, பண்பாடு, கலாச்சாரம், ஓவியம், சிற்பம் என்பனவற்றில் இந்நாட்டை ஓங்க வைக்க உதவியது. வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலிருந்து கோசலை நாட்டிற்கு உட்பட்ட பகுதி கபிலவஸ்து அங்கு உள்ள லும்பினி நகரத்தில் ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் மாயாதேவிக்கு மகனாகப் பிறந்தார் சித்தாத்தர். கி.மு.563.இல் பிறந்த செய்திகள் ஜாதக்கதை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தோற்றுவித்த சமயமே புத்த சமயம் ஆகும்.
பழங்காலம் முதல் இக்காலம் வரை தொன்று தொட்டு புத்த சமயம் இந்து சமய சமுதாய அமைப்பையும் சமயக்கோட்பாடுகளையும் எதிர்த்த ஒரு புரட்சிகரமான சிந்தனை, தத்துவங்கள், கோட்பாடுகள் என்பவற்றை நாம் சந்திக்க முடிகிறது. முற்றிலும் அறிவு அடிப்படையிலும், உளவியல் அடிப்படையிலும் ‘உண்மை’ காண முயலுவோருக்கு புத்தம் கூறும் ‘ஹீனயான’ கோட்பாடு வழிகாட்டுகிறது. அதையடுத்து ‘பக்தி’ ‘சடங்கு’ ஆசார அடிப்படையில் அமைதிகான விரும்புவோருக்கு புத்தம் கூறும் ‘மஹாயான’ கோட்பாடு வழிகாட்டுகிறது.
புத்தம் ஒரு சமயம் என்பார் ஒருசிலர். அது ஓர் ‘அறநெறி’ என்பார் சிலர். அது ஒரு ‘வாழ்க்கைவழி’ என்பார் இன்னும் சிலர். எதுவாயினும் புத்தம் காட்டும் ‘வழி’ ஒன்று உண்டு. அதனை அலசி ஆராய்ந்து படிக்கும் போது புத்தசமயத்தின் உண்மைகள் கோட்பாடுகள், முரண்பாடுகள் ஒவ்வாமைகள் என்பவற்றை நாம் அறிந்து கொள்வது மட்டுமின்றி அதன் பின்னணியத்தில் நமது நம்பிக்கைகளையும் அலசிப் பார்க்கவும், நமது பற்றில் உறுதி கொள்ள முடிகின்றது. எம்.ஏ. இரத்தினராஜா அவர்கள் புத்தசமயம் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி குறிப்பிடுவது யாதெனில்: புத்தசமயம் பற்றிய ஆய்வும், அறிவும் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாம்.
அமைதிக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் புத்தரின் எண்ணங்கள் மிகவும் இன்றியமையாதவை என்று கருதப்படுகின்றது. இன்று உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக புத்தசமயம் திகழ்கின்றது.
பவுத்தம், புத்தர் குறித்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நூல்களும், ஆய்வுகளும் பல வெளிவந்து கொண்டே இருக்கின்றன. பவுத்தத்தை புறநிலையில் நின்று விளக்கியவர்களும், அதன்மீது ஆர்வம் கொண்டு பவுத்தர்களாகி எழுதியவர்களும் உண்டு.
இவர்களில் பலரும் பவுத்தம் குறித்து தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அதன் மீதான தங்கள் புரிதல்களை அமைத்துக் கொண்டார்கள். புத்தர் அப்படிப்பட்ட கோட்பாடுகளை எவ்வாறு அணுகினார் என்பது ஆய்வுக்குரியதே ஆகும்.
இந்தியாவில் வீழ்ச்சியடைந்த புத்தசமயம் பெரும் தொண்டினையும் இந்தியப்பண்பாட்டிற்கு வழங்கியுள்ளது. அது அன்பு, அரவணைப்பு, பிற உயிர் இனங்களுக்குத் துன்பம் விளைவிக்காமை ஆகிய உன்னதக் கருத்துக்களை அறிவித்தது. இந்து சமயத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது கடவுளை மனித வடிவில் வணங்கினர். விலங்குளைப் பலியிடும் கொடிய பழக்க வழக்கத்தை நிறுத்தினர். இப்பொழுதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தகுந்ததேயாகும்.
புத்தசமயம் இந்தியாவி;ற்கு சிறந்த நீதிநெறிமுறையினைத் தந்தது. புத்தசமயத்தினால் இந்தியப் பண்பாட்டிற்கு அன்பு அரவணைப்பு, உயிர் வாழ் இனங்களுக்கு மனத்தால், எண்ணத்தால், செயலால் தீங்கு செய்யாமை ஆகிய சிறப்புத் தன்மைகள் கிடைத்தன.
அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்களை விட பரிசுத்தமும் நேர்மையுமே சிறந்ததென்று கூறியது புத்த சமயம். இது போன்ற சிறந்த கருத்துக்களே அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற பேரரசர்களை இந்தியாவிற்குத் தந்தது. அசோகர் பொறுமை, கனிவு, சகிப்புத்தன்மை போன்றவற்றை கடைபிடித்தும் ஆகிய புத்தமதக் கொள்கைகளை உலகில் பரப்பினர்.
அசோகரின் கொள்கையான பொறுமை சகிப்புத்தன்மை ஆகிய இரண்டும் இந்திய சமுதாயத்தின் கலாச்சாரத்திற்கே புத்துயிர் அளித்தன. மேலும் இக்கொள்கையே இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக விளங்குகிறது. பேரா.ஜெ.தர்மராஜ் தனது இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இந்து மதத்தில் சில சிறந்த மாற்றங்கள் ஏற்பட புத்தசமயம் காரணமானது இந்துக்கள் புத்தசமயக் கட்டிடக்கலையைப் பின்பற்றியதுடன் புத்த சமயத்தினரைப் போன்றே கடவுளை மனித வடிவில் வணங்கினர். இந்து சமுதாயத்தில் உயர்பிரிவினர் எனப்படுவோரின் புலால் உண்ணாமை என்ற வழக்கம் புத்த சமயத்திலிருந்து பெறப்பட்ட சிறப்பேயாகும்.
புத்த விகாரங்களில் பிரதிப்பலிப்பே சைவ வைணவ சமயத்தாரின் மடலாயப் பணிகளாகும். அசோகரின் வழியைப் பின்பற்றியே பிற்காலத்தில் சத்திரம், ஓய்வு விடுதி, பிணி நீக்கும் நிலையங்கள், வழிப்போக்கர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை இந்தியாவில் தோன்றின. புத்தரின் போதனையால் தான் இந்து கடவுள்களுக்கு விலங்குகளைப் பலியிடும் கொடிய பழக்கத்தை விட்டொழித்தனர். விலங்கு பலியிடுவதால் விவசாயத் தொழில் நலிவு அடைந்த பதிவுகளும் கிடைக்கின்றன.
புத்த பிட்சுகள் புத்த சமயத்தைத் தாய்மொழி மூலமாகவே பரப்பினார்கள். இதனால் தாய் மொழிக் (பாலி) கல்வியும், தாய்மொழியும் வளர்ச்சியடைந்தன. தாய்மொழி வளர்ச்சிக்கு அடிகோலிய பெருமை புத்த சமயத்தையே சாரும். தாய்மொழிக்கல்வி என்ற முறை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியதே எனலாம்.
புத்த சமயத்தால் இந்தியாவின் கட்டிடக் கலையில் பெரும்மாறுதல் ஏற்பட்டது. சாஞ்சி சாரநாத் பர்ஹ_த் அமராவதியில் உள்ள அசோகர் ஸ்தூபிகள் தூண்கள், கனிஷ்கரின் தேர்க்கோயில், கார்லி, நாசிக் ஆகிய இடங்களிலுள்ள கலைச் சிறப்புமிக்க கட்டிடங்கள் இந்தியக் கலையின் உச்ச கட்டமாகும். அஜந்தா ஓவியம், பாக் (Bagh) மற்றும் சிகிவியா (sigevia-ceylon) ஓவியங்கள் உலகப் புகழ்ப் பெற்றவை. இன்று பல மாநிலங்களில் புத்தர் உருவங்கள் உருமாறி வெவ்வேறு கடவுளாக காட்சி அளிக்கிறது.
புத்த கயாவில் புத்தகோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் பௌத்த மதக்கலை வரலாற்றில் முக்கியமானதாகும். புத்தகயா பீகார் மாநிலத்தில் நாளந்தாவிற்கு அருகில் அமைந்த நகரமாகும். யுவாங் சுவாங் தம்முடைய குறிப்புகளில் புத்தகயா பற்றிக் குறிப்பிடுகிறார். புத்தருக்காக இங்கு கோயில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதிலுள்ள தேவ கோட்டங்களில் தங்கத்தாலான புத்தரின் உருவச்சிற்பங்கள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். இங்கு அசோகர் சிறிய விவகாரத்தைக் கட்டினார் என்றும் பின்னர் பெரிய கற்கோவிலாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
புத்தர் தனது 35-ஆம் வயதில் இங்குள்ள போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்றார். அதன் நினைவாகவே போதிமரத்தின் அருகில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவில்களில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்களும் இக்கோவிலில் உள்ளன.
இந்த கோவில் 53மீ உயரம் உள்ளது. இதன் மேல் கூம்பு போன்று எழுப்பப்பட்டுள்ளன. விமானத்தில் ஒன்பது தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் ஆமலகம் என்ற நெல்லிக் கனி அமைப்பு காணப்படுகிறது. இந்த கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த அளவில் உள்ளன. மதிலின் மேல்பகுதியில் மீன்வாலுடன் கூடிய அரக்க உருவங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன.
மேலும் புத்தசமய அறத்தைப் போதிக்கும் சின்னங்களும் உருவங்களும் காணப்படுகின்றன. எருமை மாட்டின் உருவம், ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ள காதல் காட்சி போன்றவை வனப்புடையன “துமுளியாலும்” மற்ற பகுதிகளிலும் தாமரை மலர்களும் பல்வேறு வடிவங்களும் வனப்புடன் வடிக்கப்பட்டுள்ளன. இறகுடன் கூடிய சிங்கம், எருது, குதிரை முகத்துடன் கூடிய பெண், சின்னரர்கள், கந்தவர்கள், பாதிராகமும் பாதிமுதலையுடன் கூடிய உருவம் ஆகியவை வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுதுள்ள பெரும்பாலான சிற்பங்கள் பர்மாவின் கலைப்பாணியைச் சேர்ந்தவை. இந்த கோவிலினால் புத்தகயா பெரும் சிறப்புடன் விளங்குகிறது. மொத்தத்தில் “சமத்துவ கருத்தியல்களுக்கான தத்துவமாக பவுத்தம் விளங்கியதால்” தான் பவுத்த மரபு புதிய திசையில் பயணித்தது.
அம்பேத்கர் மராட்டியத்தில் பிறந்த 1891ஆம் ஆண்டு சென்னையில் பௌத்தம் குறித்த செயல்பாடுகள் தொடங்கி உள்ளன. கர்னல் ஹால்காட் அனாகரிக தர்மபலர் ஆகியோர் தொடர்போடு ம.சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமி நரசு பௌத்த சமயம் தொடர்பான தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அயோத்திதாசர் இந்துக்கள் அல்லாத பஞ்சமர்களுக்கான நிரந்தர நிறுவன ரீதியில் நிறுவிட அவர் ஓயாமல் உழைத்தார்.
வழிபாட்டு மையம், வழிபாட்டுமுறைகள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சடங்குகள், பள்ளிகள், சுடுகாடு, தனியான சமயநூல் என்று அவர் அதற்கான வழிமுறைகளை அவர் மரபான பவுத்ததிலிருந்து எடுக்கவில்லை. ஏற்கனவே தமிழத்தில் புழக்கத்திலிந்த நடைமுறைகளை புணரமைத்தார் தமிழ் ஏட்டு இலக்கியங்களையும் வாய்மொழி வழக்குகளையும் சார்ந்து அமைந்த இவ்விளக்கங்களை முற்றிலும் தமிழ்த்தன்மையோடு பவுத்ததின் தொடர்பில் பிறந்த ஒன்றாகவே தமிழ் மொழியை விளக்கினர்.
தமிழத்தில் பௌத்தம்
தமிழிலக்கியங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றிலேயே பௌத்த ஏடுகளும், புலவர்களும் கணிசமான அளவில் குறிக்கப்பட்டுள்ளனர். சங்கமித்திரர், புத்தகத்தர், புத்தமித்திரர், தருமபாலர், போதிதர்மர், சாக்கிய நாயனார், திக்நாகர் ஆகிய புலவர்களும் அறநூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள் ஆகியவைகளில் பௌத்த நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழிலக்கிய தளத்தில் பவுத்தம் குறித்த புதிய செய்திகள் புலப்படும் என்பதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் மூலம் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கிடைப்பதில் சமண – பௌத்த சமயங்களால் பங்கு உணரப்பட்டுள்ளது. சங்க இலக்கிய பதிவுகளில் பாதிப்பு அவ்வையாரின் நாடா கொன்றா, காடா கொன்றா என்ற புறப்பாடல் தம்மபத பாடல் ஒன்றின் நேரடி தழுவளாக இருக்கிறதென கன்னடத்திலிருந்து சில நிகாயங்களை தமிழாக்கியுள்ள மு.கு.ஜகந்நாத ராஜா கூறியுள்ளார். கபிலர் என்னும் பெயர் புத்தமரபோடு தொடர்புடைய பெயர் வடபகுதியில் கபிலர் என்னும் பௌத்த தத்துவஞானி இருந்தார் என கூறப்படுகின்றன.
சைவ-வைணவ இலக்கிய மரபுகள் பலவும் பவுத்த இலக்கிய மரபிலிருந்து பெறப்பட்டவையாகும். வடஇந்தியாவில் வழங்கிவந்த பவுத்ததிலே தென்னிந்திய முறை எனும் மரபு பின்பற்றப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. திக்நகர், தருமபாலர் போன்ற தமிழ்நாட்டு அறிவாளிகள் அங்கு புகழ்பெற்று இருந்ததாக அறிகிறோம். இத்தமிழர்களால் எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாக கொண்டு உலகமெங்கும் பௌத்த தத்துவ நூல்கள் எழுதப்பட்டன.
சங்க இலக்கியம் அச்சில் பதிக்கும் வரை அம்மரபு குறித்த பதிவுகள் தமிழில் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் நீதி நூல் மரபு தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இலக்கண நூல்கள், நிகண்டுகள் மரபும் உண்டு. பவுத்தம் போன்ற சமயங்கள் நடைமுறையில் இல்லாமல் அவைகளின் எழுத்து மரபு இருந்திருக்க முடியாது. அதுவும் தமிழ் பவுத்தர்களாக இருந்தமையால்தான் இத்தொடர்ச்சி இருந்தது என்றும் அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.
‘ஆதிசினேந்திரன் அளவையிரண்டே
யேதமில பிரத்தியங் கருத்தள வென்ன”
(காண்டல் கருதல்) பிரத்தியட்சம், அநுமானம் இரண்டு அளவைகளையே அறிவுக்கு பிரமான ஆதாரமாக போதித்தது. மானுட இயற்கைக்கு மீறியிருக்கிறதென்னுங் காரணத்தால் தேவனால் என்றும் நீ பாவனை செய்த எப்பொருளிலேனும் நம்பிக்கை வைக்க வேண்டாம். நன்றாய் சோதித்துப் பார்த்து யுக்திக்கும் ஒத்து, எல்லாருடைய நன்மைக்கும், உதவிக்கும் அனுகூலமாயிருந்தால் அதை அங்கீகாரம் செய். அதே பிரகாரம் நட, பொன்னைப் புடத்திலிட்டுப் பரிச்சிப்பது போல என் தருமத்தை பரீட்சை செய்யவேண்டும். இக்கருத்து கிறிஸ்தவ விவிலியத்திலும் இடம் பெற்றுள்ளது. சரியானதை பிரசித்தம், உபதேசம் செய்ய வேண்டும் என தத்துவார்த்தமான செய்திகளை பௌத்தம் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியப் பண்பாட்டிற்கு இந்திய தத்துவத்திற்கு பௌத்தம் தந்தது மிக முக்கியமானது அகிம்சைக் கோட்பாடாகும்.
***
பவுத்தம் இந்தியப் பண்பாட்டிற்கு மட்டுமல்லாது. தத்துவம், அறம், இலக்கியம், மொழி, சமூகம், சமுதாயம் கலை மற்றும் பண்பாடு நாகரீகம் என்ற எண்ணற்ற அடையாளங்களை இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படையாக தந்துள்ளன. கலை, கட்டிடக்கலை, மொழி, வழிபாடு ஆட்சியாளர்களுக்கான நெறி, கலை மற்றும் சிற்பம், கட்டிடக்கலைகளால் தனக்கென மரபுகளை உள்வாங்கி இந்தியாவில் தோன்றி இமயமென வளர்ந்து கோலோச்சும் சமயங்களில் ஒன்றாக விரவி நிற்கின்றது. இந்தியப் பண்பாடு தமிழ்ப்பண்பாட்டின் அடையாளத்தையும் ஒருங்கே பெற்று இன்று தென்கிழக்கு ஆசியநாடுகள் வரை பர்மா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், சீனா, தைவான், இந்தியா, பாகீஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் மற்றும் கம்போடியா, லாவோஸ், திபெத், பூடான் ஆகிய நாடுகள் புத்தசமய நாடுகளாகவே பரவி நிற்கின்றது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் 85மூ பேர் இம்மதத்தை பின்பற்றி வருகின்றனர். இன்று உலக முழுவதும் மக்களுக்கு புத்துணர்வை ஊட்டிக் கொண்டிருக்கிறது புத்த சமயம். பல்வேறு பட்ட மக்களின் மனங்களில் மறைமுகமாக வளர்ந்து வருகின்ற சமயங்களில் ஒன்றாக எளிமையான சமயமாக பௌத்தம் பரவிக் கொண்டு இருக்கின்றது.
பயன்பட்ட நூல்கள்
1. புத்தசமயம் - எம்.ஏ.இரத்தினராஜா, தமிழ்நாடு இறையல் நூலோர் குழு வெளியீடு
2. புத்தர் அருள் அறம் - ஜி. அப்பாதுரையார்
3. இந்திய வரலாறு – ஏழட.ஐ பேரா.ஜே.தர்மராஜ், டென்சி பப்ளிகேஷன்ஸ்
4. பௌத்த புத்தரின் வாழ்வும் போதனையும் - டாக்டர் வீரஷத்திரியன்
5. பண்டைய இந்தியா - டி.டி.கோசாம்பி
- மா.மாணிக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர், சைவ சித்தாந்த தத்துவத்துறை, சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேய சிந்தனைப்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021